|
|
செய்யுள்
33
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
இருளொடு
தாரகை யிரண்டினை மயக்கி
குழலென மலரென மயல்வரச் சுமந்து
வில்லினைக் குனித்துக் கணையினை வாங்கிப்
புருவங் கண்ணென வுயிர்விடப் பயிற்றி
மலையினைத் தாங்கி யமுதினைக் கடைந்து |
10
|
|
முலையெனச்
சொல்லென வரவர வைத்து
மெய்யினைப் பரப்பி பொய்யினைக் காட்டி
யல்குலிடை யெனனெஞ் சுழலக் கொடுத்து
முண்டக மலர்த்தி மாந்தளிர் மூடி
யடியென வுடலென வலமற நிறீஇய |
15
|
|
மூரி
வீழ்ந்த நெறிச்சடை முனிவர்
சருக்கங் காட்டு மருமறை சொல்லி
யுள்ளங் கருத்துக் கண்சிவந் திட்ட
மந்திரத் தழற்குழி தொட்டுவயிறு வருந்தி
முன்பி னீன்ற பேழ்வாய்ப் புலியினைக் |
20
|
|
கைதைமுட்
செறித்த கூரெயிற் றரவினைக்
காருடல் பெற்ற தீவிழிக் குறளினை
யுரிசெய் துடுத்துச் செங்கரந் தரித்துச்
செம்மலர் பழித்த தாட்கீழ்க் கிடத்தி
யருணடம் புரிந்த தேவர் நாயக |
25
|
|
னொருநாண்
மூன்று புரந்தீக் கொளுவப்
பொன்மலை பிடுங்கிக் கார்முக மென்ன
வளைத்த ஞான்று நெடுவிண் டடையக்
கால்கொடுத் தன்ன கந்திக ணிமிர்ந்து
நெருக்குபொழிற் கூட லன்னசெம் மகளிர் |
30
|
|
கண்ணெனுந்
தெய்வக் காட்சியுட் பட்டோர்
வெண்பொடி யெருக்க மென்புபனை கிழியினைப்
பூசி யணிந்து பூண்டுபரி கடவிக் கரத்த
தாக்கி யந்தோ
வருத்தி மீட்பர் நிலைவல் லோரே. |
(உரை)
கைகோள்; களவு, தலைவன் கூற்று
துறை: உலகின்மேல்
வைத்துரைத்தல்.
(இ-ம்.)
இதற்கு, மெய்தொட்டுப் பயிறல் (தொல். கள. 11) எனவரும் நூற்பாவின்கண் தோழி
நீக்கலினாகிய நிலைமையு நோக்கி மடன்மா கூறும் இடனுமாருண்டே எனவரும் விதிகொள்க.
1-2:
இருள்..............................சுமந்து
(இ-ள்)
மயல்வர இருளொடு தாரகை இரண்டினை மயக்கி-காண்போர்க்கு மயக்கமுண்டாகும்படி இருளும்
விண்மீன்களும் ஆகிய இருவகைப் பொருளையும் கூட்டி; குழல்என மலர்என சுமந்து-தந்தலையிலே
சேர்த்துக் கூந்தல் என்றும் மலர் என்றும் சுமந்துகொண்டு என்க.
(வி-ம்.)
இருளொடு என்புழி ஓடு எண்ணொடு. தாரகை-விண்மீங் இரண்டினையும் என்புழி முற்றும்மையும்
குழலெனவும் மலரெனவும் எனல்வேண்டிய எண்ணும்மைகளும் தொக்கன. மயக்குதல்-சேர்த்துதல்.
மயல்-மயக்கம். காண்போர்க்கு மயல்வர என்க. இருள் கூந்தலுக்கும் தாரகை மலருக்கும்
உவமை.
3-4:
வில்............................பயிற்றி
(இ-ள்)
உயிர்விட வில்லினைக் குனித்துப் புருவம் என கணையினை வாங்கி கண்என-காணப்படுவோர்தம்
உயிரை விடும்படி வில்லை வளைத்துப் புருவம் என்றும் அம்பினை ஏறிட்டுக் கண் எனவும்;
பயிற்றி-பயிலச் செய்து என்க.
(வி-ம்.)
காண்போர்-காணப்படுவோர்தம் உயிர்விட என்க. வில்லினைக் குனித்தும் கணையினை வாங்கியும்
கண்ணெனவும் எனல் வேண்டிய உம்மைகள் தொக்கன. எனவும் என்பதனைப் புருவத்தோடும் ஒட்டுக.
பயிற்றுதல்-இயங்குவித்தல். வில் புருவத்திற்கும் கணை கண்ணிற்கும் உவமை.
5-6:
மலை.....................வைத்து
(இ-ள்)
முலை எனவர-முலை என்று சொல்லவரும்படி; மலையினைத் தாங்கி-மலகளைச் சுமந்தும்; சொல்
என வர-சொல்லென்று சொல்லவரும்படி; அமுதினைக் கடைந்து வைத்து-அமிழ்தத்தைக் கடைந்தெடுத்துத்
தம்வாயில் வைத்துக்கொண்டும் என்க.
(வி-ம்.)
தாங்கியும் வைத்துமெனல்வேண்டிய உம்மைகள் தொக்கன. முலையெனவர எனப் பிரித்துக் கூட்டுக.
மலை முலைக்கும் அமுது சொல்லிற்கும் உவமை.
7-8:
மெய்.................................கொடுத்து
(இ-ள்)
நெஞ்சு உழல-காண்போர் மனம் சுழலும்படி; மெய்யினை அல்குல் என பரப்பி-உண்மையினை
அல்குல் என்று கருதும்படி பரப்பிவைத்தும்; பொய்யினை இடை எனக்காட்டி-பொய்யை இடை
என்னும் ஓர் உள்பொருள்போலக் காட்டியும்; கொடுத்து-வழங்கியும் என்க.
(வி-ம்.)
மெய்-உண்மை. இஃது எப்பொருளினும் பெரிதாகலின் அல்குலுக்கு உவமை கூறினார். பொய்-இல்பொருள்.
இடை-இல்லை என்னும்படி நொய்தாயிருத்தலின் இல்லாததொன்றினையே உள் பொருளாகக் காட்டினார்
என்றபடி. காட்டுதல்-புலப்படச்செய்தல்.
9-10:
முண்டகம்.........................நிறீஇய
(இ-ள்)
முண்டகம் மலர்த்தி-தாமரை மலரை மலர்வித்து; அடிஎன-காண்போர் அடிகள் என்று கருதும்படி
செய்தும்; மாந்தளிர் மூடி-மாந்தர்களால் மறைத்து; உடல் என-திருமேனி என்று கருதும்படி
செய்தும்; அலமரல் நிறீஇய-அவர் மனத்தின்கண் சுழற்சியை நிறுத்திய என்க.
(வி-ம்.)
மலர்த்தியும் மூடியும் அடி எனவும் உடலெனவும் நிறீஇயும் எனல வேண்டிய உம்மைகள் தொக்கன.
அலமரல்-சுழலல். நிறீஇ-நிறுத்தி. (1-10) இருள்போன்ற கூந்தலையும் அதன்மேற் சூட்டிய
விண்மீன் போன்ற மலர்களையும் வில்லையொத்த கண்களையும் மலைபோன்ற முலைகளையும்
அமிழ்தம்போன்ற மொழிகளையும் அகன்ற அல்குலினையும் இல்லையோ என்னும்படி ஐயுறுதற்குக்
காரணமான இடையினையும் செந்தாமரை மலர்போன்ற அடியினையும் மாந்தளிர் போன்ற மேனியினையும்
உடையராகக் காண்போரை மயக்கி மனம் சுழலச்செய்யும் மகளிர் என்பது கருத்து. இவையெல்லாம்
விகாரம் வேறுபட வந்த உவமத்தோற்றம் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். நிறுத்திய
(25) மகளிர் என இயையும்.
11-17:
மூரி..............................குறளினை
(இ-ள்)
மூரிவீழ்ந்த நெறிச்சடை முனிவர்-நெரிந்து திரண்ட அறலுடைய சடையினையுடைய தாருக வனத்து
இருடிகள்; கண் சிவந்து உள்ளங்கறுத்து தழல் குழிதொட்டு-பகைமையாலே கண்சிவந்து உளம்
வெகுண்டு தீக்குழி தோண்டி; சருக்கங்காட்டும் அருமறை மந்திரம் சொல்லி இட்ட-சருக்கம்
என்னும் உறுப்பினையுடைய உணர்தற்கரிய வேதமந்திரத்தை ஓதி
நெய் முதலியன பெய்யப்பட்ட அவ்வேள்விக் குழி; வயிறு வருந்தி முன்பின் ஈன்ற-வயிறுளைந்து
தன் வலிமையினாலே ஈன்றுவிட்ட; பேழ்வாய் புலியினை-பெரிய வாயினையுடைய புலியையும்;
கைதைமுள் செறித்த கூர் எயிற்று அரவினை-தாழையின் முட்களைச் செறித்து வைத்தாற் போன்ற
கூர்த்த பற்களையுடைய பாம்பினையும்; கார் உடல் பெற்ற தீவிழிக் குறளினை-கரிய உடம்பினையும்
தீக்காலும் விழிகலையும் படைத்துள்ள முயலகன் என்னும் பூதத்தினை என்க.
(வி-ம்.)
மூரி-நெரிவு; பருமையுமாம். வீழ்தல்-ஈண்டுத் திரளுதல். நெறி-அறல். முனிவர்-தாருகவனத்து
இருடிகள். தழல்குழி-ஓமகுண்டம். சருக்கம்-ஒரு நூலுறுப்பு. முன்பு-வலிமை. தாருகவனத்து இருடிகள்
சிவபெருமானிடத்துப் பகைத்துக்கொண்டு அவரை அழித்தற்பொருட்டு அபிசாரயாகம் செய்து
அவ்வேள்வித் தீயினின்றும் புலி, பாம்பு, பூதம் முதலியவற்றைத் தோற்றுவித்து விடுப்ப
என்பது கருத்து.
18-20:
உரி...............................நாயகன்
(இ-ள்)
உரிசெய்து உடுத்து-உரித்துத் தோலைப்போர்த்தும்; செங்கரம் தரித்து-சிவந்த கையிலே
அணிந்தும் செம்மலர் பழித்த தாள்கீழ் கிடத்தி-செந்தாமரை மலரைப் பழித்தற்குக்
காரணமான திருவடிகளின் கீழே கிடத்தியும்; அரும் நடம் புரிந்த தேவர் நாயகன்-திருவருட்கூத்தியற்றிய
தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் என்க.
(வி-ம்.)
புலியினை உரித்து உடுத்தும், அரவினைக் கரத்திற்றரித்தும் குறளினைத் தாள்கீழ் கிடத்தியும்
நடம்புரிந்த நாயகன் என்க.
21-25:
ஒருநாள்..........................மகளிர்
(இ-ள்)
ஒருநாள் மூன்றுபுரம் தீக்கொளுவ-பண்டொரு காலத்தே முப்புரத்தைத் தீயிட்டெரித்தற்
பொருட்டு; பொன்மலை பிடுங்கிக் கார்முகம் என்ன வளைத்த ஞான்று-வானத்தைத் தாங்கும்
பொன்மலையாகிய மேருவினைப் பறித்தெடுத்து வில்லாக வளைத்தபொழுது முன்னம் அம்மலையாற்
றாங்கப்பட்ட; நெடுவிண் தடை- நெடிய வானம் வீழ்ந்துவிடாமல் தடுத்தற் பொருட்டு; கால்
கொடுத்தன்ன-தூண்களை நாட்டினாற்போல; கந்திகள் நிமிர்ந்து நெருக்கு பொழில்-கமுகுகள்
வான்முட்ட வளர்ந்து நெருங்கி நிற்றலையுடைய சோலையையுடைய; கூடல் அன்ன செம்மகளிர்-
மதுரைமா நகரத்தை யொத்த சிறப்பினையுடைய செவ்விய மகளிர்களுடைய என்க.
(வி-ம்.)
ஒருநாள் என்றது பண்டொரு காலத்தே என்பதுபட நின்றது. அண்டத்தை தாங்கி நின்ற பொன்மலையைப்
பிடுங்கி விட்டமையால் அவ்வானம்
வீழ்ந்துவிடாதபடி கால் கொடுத்தாற்போலக் கமுகுகள் வளர்ந்து அவ்வானத்தைத் தீண்டி
நின்றன என்பது கருத்து.கந்திகள்-கமுகுகள். நெருக்கு பொழில் என்புழி நெருக்கு: வலித்தல்
விகாரம். செம்மகளிர்-செம்மையான கற்பொழுக்கமுடைய மகளிர்.
26-30: கண்................................வல்லோரே
(இ-ள்)
கண் எனும் தெய்வக் காட்சியுள்பட்டோர்-கண்ணாகிய தெய்வத்தினது நோக்கின்கண் அகப்பட்டோர்;
நிலை வல்லோர்-தம் நிலையின்கண் நிற்கமாட்டாராய் அந்நோக்கத்தால் கவரப்பட்ட
தம் நெஞ்சினை மீட்கும் பொருட்டு; வெண் பொடி பூசி-திருநீற்றைப் பூசிக்கொண்டு; எருக்கம்
அணிந்து-எருக்க மலர்மாலையை அணிந்துகொண்டு; என்பு பூண்டு-என்பு மாலையும் அணிந்து; பனைபரி
கடவி-பனைமடலால் இயற்றிய குதிரையில் ஊர்ந்து; கிழியினைக் கரத்த தாக்கி-தம்முள்ளங்கவர்ந்த
நங்கையின் உருவம் தீட்டப்பட்ட கிழியினையும் பலருங்காணக் கையிற்பிடித்து; அந்நோ
அருத்தி-அக்காம நோய்க்குக் காரணமான வேட்கையினையுடைய நெஞ்சினை; மீட்பர்-தம்பலதாக
மீட்டுக்கொள்வர்! இஃது உலகியல்பு காண் என்க.
(வி-ம்.)
காட்சி-நோக்கு. நிலைவல்லோர் என்புழி நிலைத்தல் வன்மை இல்லார் என எதிர்மறைப்
பொருளாகக் கொள்க. இனி, தம் வயமன்றி மடல் வயத்தராய் நிற்கும் நிலையின்கண்
வல்லமையுடையோர் எனக் கோடலுமாம். வெண்பொடி-திருநீறு. எருக்கம்: ஆகுபெயர். பனைபரி-பனைமடலால்
இயற்றிய குதிரை. அருத்தி: ஆகுபெயர். நெஞ்சு என்க. இஃது உலகியல்புகாண் என்பது குறிப்பெச்சம்.
எனவே யானும் அங்ஙனமே மடலேறுவேன் என்று உணர்த்தினுமாம். இனி, தோழீ! உலகின்கண்
மகளிர் காட்சியுட்பட்டோர் நிலை வல்லோராயவிடத்து வெண்பொடி பூசி எருக்கம் அணிந்து
என்பு பூண்டு கிழியினைக் கரத்ததாக்கிப் பனைபரி கடவித் தம் நெஞ்சினை மீட்பர்காண்.
ஆதலால்யானும் அது செய்வல் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|