பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 34

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வற்றிய நரம்பி னெடுங்குரற் பேழ்வாய்க்
குழிவிழிப் பிறழ்பற் றெற்றற் கருங்காற்
றாளிப் போந்தின் றருமயிர்ப் பெருந்தலை
விண்புடைத் தப்புறம் விளங்குடற் குணங்கினங்
கானம் பாடிச் சுற்றிநின் றாடச்
10
  சுழல்விழிச் சிறுநகைக் குடவயிற் றிருகுழைச்
சங்கக் குறுந்தாட் பாரிடங் குனிப்பத்
தேவர்கண் பனிப்ப முனிவர்வாய் குழறக்
கல்லவ டத்திரண் மணிவாய்த் தண்ணுமை
மொந்தைகல் லலகு துத்திரி யேங்கக்
15
  கட்செவி சுழலத் தாழ்சடை நெறிப்ப
விதழிதா துதிர்ப்பப் பிறையமு துகுக்க
வெள்ளியம் பலத்துட் டுள்ளிய பெருமான்
கூடன் மாநக ரன்ன பொற்கொடி
யிரவிக் கண்ணிய வைகறை காறு
20
  மலமர லென்னைகொ லறிந்திலம் யாமே
வெண்முத் தரும்பிப் பசும்பொன் மலர்ந்து
கடைந்தசெம் பவளத் தொத்துடன் காட்டு
மிரும்புகவைத் தன்ன கருங்கோட்டுப் புன்னைச்
சினைமுக மேந்திய விணர்கொள்வாய்க் குடம்பையி
25
  னெக்கர்ப் புளினம் வெண்மையிட மறைக்குஞ்
சிறைவிரி தூவிச் செங்கா லன்னங்
குறும்பார்ப் பணைக்கும் பெடையொடு வெரீஇச்
சேவலு மினமுஞ் சூழுங்
காவின் மாறித் துயிலழுங் குதற்கே.

(உரை)
கைகோள்: களவு, தோழி கூற்று.

துறை: அல்லகுறியறிவித்தல்.

     (இ-ம்) இதற்கு “நாற்றமுந் தோற்றமும்” (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண், “அவன் விலங்குறினும்” எனவரும் விதி கொள்க.

1-5: வற்றிய.................................நின்றாட

     (இ-ள்) நெடுங்குரல் பேழ்வாய் குழிவிழி பிறழ்பல்-மிக்க ஒலியினையும் பெரிய வாயினையும் குழிந்த கண்ணினையும் நிரை ஒவ்வாப்பல்லினையும்; வற்றிய நரம்பின் தெற்றல் கருங்கால்-வற்றிய நரம்பினையும் ஒன்றனோடு ஒன்று தெற்றுதலையுடைய கரிய காலினையும்; தாளிப்போந்தின் தருமயிர்-தாளிப்பனையினது தலைவிரிந்தாற்போல விரிந்த மயிரினையுடைய; பெருந்தலை-பெரிய தலையினையும்; விண்புடைத்து அப்புறம் விளங்கு உடல்- விண்ணைமுட்டி அப்பாலும் விளங்குகின்ற உடலினையும் உடைய; குணங்கு இனம்-பேய்க்கூட்டங்கள்; கானம்பாடிச் சுற்றி நின்று ஆட-காட்டினைப் பாடிச் சூழ்ந்து நின்று கூத்தாடாநிற்பவும் என்க.

     (வி-ம்.) குரல்-ஒலி. பேழ் வாய்-பெரிய வாய். தெற்றல்- ஒற்றனோடு ஒன்று தட்டுதல். தாளிப்போந்து-தாளிப்பனை என்னும் ஒருவகைப் புல். குணங்கு-பேய். கானம்-காடு.

6-7: சுழல்............................குனிப்ப

     (இ-ள்) சுழல்விழி சிறுநகை குடவயிறு இருகுழைச் சங்கம்-சுழல்கின்ற கண்களையும் சிறிய நகையினையும் குடம் போன்ற வயிற்றினையும் இரண்டு சங்கக் குழைகளையும்; குறுந்தாள்பாரிடம் குனிப்ப-குறிய கால்களையும் உடைய பூதங்கள் ஆடாநிற்பவும் என்க.

     (வி-ம்.) சுழல்விழி; வினைத்தொகை. சங்காலியன்ற குழை என்பது கருத்து. பாரிடம்-புதம். குனித்தல்-ஆடுதல்.

8: தேவர்..........................குழற

     (இ-ள்) தேவர்கண் பனிப்ப-தேவர்களெல்லோரும் இன்பக் கண்ணீர் சொரியாநிற்பவும்; முனிவர் வாய்குழற- இருடிகளெல்லோரும் மகிழ்ச்சி மிகுதியாலே வாய்குழறா நிற்பவும் என்க.

     (வி-ம்.) கண்: ஆகுபெயர். பனிப்பவெனச் சினைவினை முதலோடு முடிந்தது. குழறலும் அது.

9-10: கல்லவடத்திரள்................................ஏங்க

     (இ-ள்) கல்லவடத்திரள்-கல்லவடத்திரள் என்னும் இசைக் கருவியும்; மணிவாய் தண்ணுமை-அழகிய வாயினையுடைய தண்ணுமை என்னும் இசைக்கருவியும்; மொந்தை-ஒருகட் பறையாகிய மொந்தை என்னும் இசைக்கருவியும்; கல்லலசு-கல்லலசு என்னும் இசைக்கருவியும்; ஏங்க-முழங்கவும் என்க.

     (வி-ம்.) இவையெல்லாம் தோலாலியன்ற இசைக்கருவி. இவைகள் கருவியாயினும் கருத்தாவாய் நின்றன. ஏங்குதல்: முழங்குதல்.

11-14: கட்செவி...........................பொற்கொடி

     (இ-ள்) கட்செவி சுழல-தான் அணிந்துள்ள பாம்புகள் சுழலாநிற்பவும்; இதழி தாது உதிர்ப்ப-கொன்றைமாலை பூந்துகளினை உதிர்ப்பவும்; பிறை அமுது உகுக்க-பிறைத் திங்கள் அமுதத்தைத் துளியா நிற்பவும்; தாழ்சடை நெறிப்ப-தூங்குகின்ற சடை நிமிராநிற்பவும்; வெள்ளியம்பலத்துள்- வெள்ளியாலியன்ற திருவம்பலத்தின்கண்; துள்ளிய பெருமான்-திருக்கூத்தாடிய சிவபெருமானுடைய; கூடல்மாநகர் அன்ன பொற்கொடி-மதுரை மாநகரத்தை ஒத்த நலமுடைய காமவல்லிபோல்வாய் கேள்! என்க.

     (வி-ம்.) கட்செவி: அன்மொழித் தொகை. பாம்பு என்க. இகழி-கொன்றை. தாழ்சடை: வினைத்தொகை. துள்ளுதல்-ஆடுதல். கூடல் நகர் நகர்க்குரிய சிரந்த பண்புகளெல்லாம் உடைத்தாதல்போல மகளிர்க்கமைந்த மாண்பெல்லாம் உடையோய் என்பாள் கூடல் நகரன்ன பொற்கொடி என்றாள். பொற்கொடி: அன்மொழித்தொகையாய் விளியேற்று நின்றது. பேய்கள் சுற்றி நின்றாடவும் பாரிட்சம் குனிப்பவும் தேவர்கள் பனிப்பவும் முனிவர்வாய் குழறவும் கல்லவடத்திரள் முதலிய இசைக்கருவிகள் ஏங்கவும் பாம்பு முதலியன சுழலவும் நிமிரவும் உதிர்க்கவும் உகுக்கவும் அம்பலத்துள் துள்ளிய பெருமான் என்க.

17-20: வெண்முத்து...........................குடம்பையின்

     (இ-ள்) வெண்முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து கடைந்த செம்பவலத் தொத்து உடன்காட்டும்-வெள்ளிய முத்துக்களைப்போல அரும்பிய பசிய பொற்றுகள் போலத் தாது தோன்ற மலர்ந்து மட்டம் செய்யப்பட்ட செம்பவளத் திரள்போன்ற பூங்கொத்துக்களைஒருசேரக் காட்டாநின்ற; இரும்பு கதவைத்தன்ன கருங்கோட்டுப் புன்னைசினைமுகம் ஏந்திய-இரும்பு கிளைத்தாற்போன்ற கரிய கிளையினையுடைய புன்னை மரத்தினது கிளைகளிடத்தே தம் அலகால் எடுத்த; இணர் கொள்வாய்க் குடம்பையின்-பூங்கொத்துக்கலைக் கொண்ட வாயிலையுடைய தம்முடைய கூட்டினிடத்தே என்க.

     (வி-ம்.) புன்னையின் அரும்பிற்கு முத்தும், பூந்துகளுக்குப் பொற்றுகளும், புன்னையினது கரிய கொம்புகளுக்குக் கவைத்த இரும்பும் உவமை. அன்னங்கள் ஏந்திய இணர்கொள்வாய்க்குடம்பை என்க.

“சேவலன்னந் தாமரையின் றோடவிழ்ந்த செவ்விப்பூக்
 காவிற்கூ டெடுக்கிய கவ்விக்கொண் டிருந்தன”   (சிந்தா. 65)

எனவரும் சிந்தாமணியால் அன்னங்கள் பூவாற் கூடியற்றுதல் பெற்றாம்.

21-24: எக்கர்...........................இனமும்

     (இ-ள்) எக்கர்புள்ளினம் வெண்மை இடம் மறைக்கும் சிறைவிரி தூவிச் செங்கால் அன்னச் சேவலும்-இடுமணலாகிய மணற்குன்றினது வெள்ளிய இடத்தினை நிறந்தெறியாது மறைக்கும் வெள்ளிய சிறகினையும் விரித்த சூட்ட்னையும் சிவந்த கால்களையுமுடைய அன்னச் சேவலும்; இனமும்-அவற்றின் இனமும்; குறும்பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ-குறிய குஞ்சுகளைச் சிறகில் அணைத்துக் கொள்ளும் தம்பெடை அன்னங்களோடே பெரிதும் அஞ்சி என்க.

     (வி-ம்.) புளினம்-மணற்குன்று. சிறை-சிறகு. தூவி-சூட்டு. பார்ப்பு-குஞ்சு. அன்னச்சேவலும் என ஒட்டுக. இனம் என்றது குருகு முதலியவற்றை எனினுமாம்.

15: இரவி..........................வைகறைகாறும்

     (இ-ள்) இரவிக்கு அண்ணிய-ஞாயிறு தோன்றுதற்கு அணித்தாகிய; வைகறைகாறும்-வைகறைப்பொழுது முடியுந் துணையும் என்க.

     (வி-ம்.) இரவி-ஞாயிறு. வைகறைப்பொழுதை அடுத்து ஞாயிறு தோன்றுதலின் அவ்வைகறை அதன் அண்ணியது எனப்பட்டது. அண்ணுதல்-அணித்தாதல்.

14-15: சூழும்.....................அழுங்குதற்கே

     (இ-ள்) சூழுங்காவில்-யாம்சூழ்ந்து விலையாடுதற்கிடமான சோலையினிடத்தே; துயில்மாறி அழுங்குதற்கு-துயில் கொள்ளாது ஆரவாரித்தற்கு என்க.

     (வி-ம்.) அன்னம் குடம்பையில் பெடையொடு வெரீஇ வைகறைகாறும் துயில்மாறி அழுங்குதற்கு என்க. யாம்சுழுங்கா என்க. துயில்மாறி அழுங்குதற்கு என மாறுக. அழுங்குதல்-ஆரவாரித்தல்.

16: அலமரல்...............யாமே

     (இ-ள்) அலமரல் என்னைகொல்-அவற்றிற்கு அவ்விடத்தே எய்திய சுழற்சிதான் யாதோ; யாம் அறிந்திலம்-யாம் அறிகின்றிலேமே என்க.

     (வி-ம்.) அலமரல்-சுழற்சி. ஈண்டு அதற்கு காரணமாகிய துன்பத்தைக் குறித்து நின்றது. கொல்: அசை. இதனால் அன்னப் பறவை இடையறாது ஆரவாரித்தலால் அவ்வாரவாரம் நின்னால் எழுப்பப்பட்டது என்று கருதி யாங்கள் குறியிடத்தே வந்து ஆங்கு நின்னைக் காணாமல் வறிதே மீள்வேமாயினேம் என்று தோழி தலைவனுக் குணர்த்தினாள் என்க. வைகறைகாறும் அன்னங்கள் இடையறாது ஆரவாரித்தன என்றமையால் நின் வரவினை எதிர்பார்த்து யாங்களும் வைகறைகாறும் துயிலாதிருந்தோம் என்றாளுமாயிற்று. அவை அழுங்குதற்கு அவற்றிற்குற்ற அலமரல் என்னையோ என்னும் வினாவால் மற்று நீதானும் குறியிடத்தே வாராமைக்கு உனக்குற்ற தடைதான் யாதோ என இறைச்சிப் பொருள்வகையால் வினவினாளுமாயிற்று.

     இனி இதனை, பொற்கொடி! யாம் சூழுங்காவில் அன்னமும் இனமும் பெடையொடு வெரீஇத் தங்கூட்டில் வைகறைகாறும் துயில் கொள்ளாது ஆரவாரித்தற்கு அவற்றிற்கெய்திய அலமரல்தான் யாதோ" யாம் அறிகின்றிலேமே! என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.