|
|
செய்யுள்
35
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
அருடருங்
கேள்வி யமையத் தேக்கப்
பற்பல வாசான் பாங்குசெல் பவர்போன் மூன்றுவகை
யடுத்த தேன்றரு கொழுமலர்
கொழுதிப் பாடுங் குணச்சுரும் பினங்கா
ளுளத்துவே றடக்கி முகமன் கூறாது |
10
|
|
வேட்கையி
னீயிர்வீழ் நாட்பூ வினத்துட்
காருடற் பிறையெயிற் றரக்கனைக் கொன்று
வச்சிரத் தடக்கை வரைப்பகை சுமந்து
பழவுடற் காட்டுந் தீராப் பெரும்பழி
பனிமலை பயந்த மாதுடன் றீர்த்தருள் |
15
|
|
பெம்மான்
வாழும் பெருநகர்க் கூட
லொப்புறு பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன்
கொலையின ருள்ளமுங் குறைகொள விருண்டு
நான நீவி நாண்மலர் மிலைந்து
கூடி யுண்ணுங் குணத்தினர் கிளைபோ |
|
|
னீடிச்
செறிந்து நெய்த்துடல் குளிர்ந்த
கருங்குழற் பெருமணம் போல
வொருங்கு முண்டேற் பேசுவி ரெமக்கே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவன் கூற்று
துறை: நலம்புனைந்துரைத்தல்.
(இ-ம்.)
இதற்கு, முன்னிலையாக்கல்...................என்மனார் புலவர் (தொல். கள. 10)
எனவரும் நூற்பாவின் கண் நன்னய முரைத்தல் எனவரும் விதி கொள்க.
1-4:
அருடரும்........................சுரும்பினங்காள்
(இ-ள்)
அருள்தரும் கேள்வி அமைய தேக்க-தாங்கற்ற நூலறிவேயன்றித் திருவருளைத் தோற்றுவிக்கும்
கேள்வியினாலாய அறிவினை நிறைத்து அடங்கும்படி; பலபல ஆசான் பாங்கு செல்வர்போல்-பல்வேறு
நல்லாசிரியன்மாரிடத்துச் சென்று கேட்கின்ற நன் மாணாக்கர்போல; மூன்றுவகை அடுத்த
தேன்தரு கொழுமலர் கொழுதிப் பாடும்-முன்பு உண்ட தேன் நிற்க மேலும் சிறந்த தேனையுண்டு
தேக்குதற்குக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ என மூன்றுவகையாக அடுத்துள்ள கொழுவிய
மலர்களை எய்தி அவற்றைக் கிண்டித் தேன்பருகி மகிழ்ந்து இசைபாடாநிற்கும்; குணம்
சுரும்பினங்காள்-நற்பண்பினையுடைய வண்டினங்களே! என்க.
(வி-ம்.)
அருள்தருங் கேள்வி-திருவருளைக் கூட்டுவிக்கின்ற ஞானக்கேள்வி. அமைய-ஆன்றவிந்து அடங்க;.
ஆசான் என்புழி ஆசான்மார் எனும் பலரறியீறு தொக்கது; இனி ஒருமை பன்மை மயக்கம் எனினுமாம்.
அருள்தருங் கேள்வி எனவே அறிவுதரும் நூற்கல்வியை முன்னரே பெற்றவர் என்பது பெற்றாம்.
இதற்கேற்ப முன்னரே தே உண்டு பின்னரும் கொழுமலர் கொழுதிப்பாடும் சுரும்பு என்க. பாங்கு-இடம்.
ஆசான் பாங்கு செல்பவர் எனவே நன்மாணாக்கர் என்பது பெற்றாம். மூன்றுவகைப்பூ-கோட்டுப்பூ,
கொடிப்பூ, நீர்ப்பூ என்பன. அருதருங் கேள்வி என்பதற்கேற்பச் சிறந்த தேனைத் தரும்
மலர் என்க. பொருளின்கண் கொழுமலர் என்றமையால் உவமையின் கண்ணும் நல்லாசிரியன்மார்
எனக் கொள்க. மூன்று வகையடித்த மலர் என்பதற்கேற்ப உவமையிடத்தும் சரியை, கிரியை,
யோகம், ஞானம் என நால்வகை அடுத்த கேல்வி எனவும் விரித்துக்கொள்க. கொழுதுதல்-
கிண்டிப்பருகுதல். கொழுதிப்பாடும் என்றதற்கேற்பச் சென்று கேட்டு மகிழும் மாணாக்கர்
என்று கொள்க. குணம்-ஈண்டு நற்பண்பு. சுரும்பு-வண்டு.
5-6: உளத்து........................இனத்துள்
(இ-ள்)
உளத்துவேறு அடக்கி-நீயிர் எம்நிலத்து வண்டாயினும் நீயிர் கண்டதொன்றாக நெஞ்சின்கண்
வேறொன்றனைக் கருதி; வேட்கையின் முகமன்கூறாது-எம்பாற் கொண்டுள்ள விருப்பம் காரணமாக
முகமன் கூறாமல்; நீயிர் வீழ் நாள்பூ இனத்துள்-நீங்கள் விரும்புகின்ற புதிய மலர்க்கூட்டத்தினுள்
வைத்து என்க.
(வி-ம்.)
வேட்கையின் முகமன் கூறாது என்றது நீயிர் எந்நிலத்து வண்டாகலின் எம்பாலுற்ற வேட்கை
காரணமாக முகமன் கூறாதே கொண்மின் என்பதுபட நிற்றலின் இடமணித்தாதல் கூறினானும்
ஆயிற்று. உளத்து வேறு அடக்குதல்-நெஞ்சத்தின்கண் தாம் கண்டவற்றைக் கூறாது வேறொன்றைக்
கருதுதல். வீழ்நாட்பூ- விரும்புதற்குக் காரணமான நாட்பூ. மொய்க்கும் பூவுமாம். நாட்பூ-அன்றலர்ந்த
மலர்.
7-9:
காருடல்.....................பெரும்பழி
(இ-ள்)
கார்உடல் பிறை எயிறு அரக்கனைக் கொன்று-கரிய உடலினையும் பிறைபோன்று வளைந்த பற்களையுமுடைய
விருத்திராசுரனைக் கொன்றமையாலே; வச்சிரம் தடக்கை வரைப்பகை சுமந்த-வச்சிரப்
படையையுடைய பெரிய கையினையுடைய இந்திரன் சுமந்துள்ள; பழஉடல் காட்டும் தீரா பெரும்பழி-பழைய
வடிவினைக் காட்டுதற்குக் காரணமாகிய எவ்வாற்றானும் தீராத பெரிய தீவினை என்க,
(வி-ம்.)
பழஉடல் காட்டுதல்-கொல்லப்பட்ட வடிவத்தைக் காட்டுதல். அஃதாவது கொல்லப்பட்ட உயிர்
ஆவியாய்த் தன் பழைய வடிவத்தோடு தோன்றிக் கொன்றவனைப் பிடித்து ஆட்டுதல். விருத்திரனுடைய
ஆவி பழைய வடிவிற்றோன்றி ஆட்டுதலால் பழைய வடி வினைக்காட்டும் பழி
என்றார். பழி-ஈண்டுப் பிரமகத்தி, வீரகத்தி இரண்டும். இந்திரனை இத்தீவினை பிடித்தாட்டியதனை,
வலாரி தன்னைப்
பிடித்தது பிரமச் சாயை (58) |
உம்மெனும் மார்பைத்
தட்டு முருத்தெழு மதிர்க்கும் போர்க்கு
வம்மெனும் வாய்ம டிக்கும் வாளெயி றதுக்கும் வீழுங்
கொம்மென வோடு மீளுங் கொதித்தழுஞ் சிரிக்குஞ் சீறும்
இம்மெனு மளவு நீங்கா தென்செய்வா னஞ்சி னானே (59) |
எனவரும் (திருவிளை-இந்திரன்
பழி) பரஞ்சொதி மொழியானும் உணர்க.
10-18:
பனிமலை........................எமக்கே
(இ-ள்)
பனிமலை பயந்த மாதுடன் திர்த்து அருள் பெம்மான் வாழும்-இமயமலை ஈன்றருளிய பார்ப்பதியினோடே
எழுந்தருளித் தீர்த்து உய்யக்கொண்டருளிய சிவபெருமான் வாழ்தற்கிடனான; பெருநகர்
கூடல் ஒப்புறு-பெரிய நகரமாகிய மதுரையை ஒத்த சிறப்பினையுடைய; சிறு இடை பொந்தொடி
மடந்தைதன்-சிறிய இடையினையும் பொன்னாலியன்ற வலையலினையும் உடைய இந்நங்கையாரின்;
கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு நானம்நீவி நாள்மலர் மிலைந்து-கொலைத் தொழிலையுடைய
தீவினையாளரின் நெஞ்சமும் வெளிதென்னும்படி இருண்டு புழுகு பூசப்பட்டுப் புதிய மலர்களை
அணிந்து; கூடி உண்ணும் குணத்தினர் கிளைபோல் நீடி-விருந்தினரோடு கூடி உண்ணும் இயல்பினையுடைய
நற்குணத்தாருடைய சுற்றத்தார் நீளுமாறுபோலே நீண்டு; செறிந்து நெய்த்து உடல் குளிர்ந்த
கருகுழல் பெருமணம்போல-நெருங்கி நெய்ப்புடைத்தாய் உடல் குளிர்ச்சிபெற்ற கரிய கூந்தல்
கமழுகின்ற மிக்க மணம்போல; ஒருங்கும் உண்டேல் எமக்குப் பேசுதிர்-கமழா நின்ற மலர்கள்
ஓரிடத்தேனும் உண்டாயின் அவற்றை எமக்குக் கூறுவீராக; என்க.
(வி-ம்.)
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் இயற்கையன்பினாலும் செயற்கை யன்பினாலும் உந்தப்பட்டு
நின்ற தலைவன் தலைவி பெரு நாணினள் ஆதலின் அவள்கேட்ப வண்டொடு கூறினான் என்க.
இதனுடன்,
கொங்குதேர்
வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலி
னறியவு முளவோ நீ யறியும் பூவே (குறுந்.
2) |
எனவரும் குறுந்தொகைச்
செய்யுளையும் ஒப்பு நோக்குக.
இனி,
சுரும்பினங்காள் முகமன் கூறாது நீயிர் வீழும் நாட்பூவினத்துள் மடந்தை குழல் மணம்போல
மணக்கும் பூக்கள் உண்டாயின் எமக்குக் கூறுவீராக என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும்
பயனும் அவை.
|