|
|
செய்யுள்
36
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
மைகுழைத்
தன்ன தொள்ளியஞ் செறுவிற்
கூர்வாய்ப் பறைதபு பெருங்கிழ நாரை
வஞ்சனை தூங்கி யார லுண்ணு
நீங்காப் பழனப் பெருநகர்க் கூடற்
கரமான் றரிந்த பெருமா னிறைவன் |
10
|
|
பொன்பொழித்
த்வெடுத்த லின்புறு திருவடி
யுளம்விழுங் காத களவினர் போலவென்
னுயிரொடும் வளர்ந்த பெருநாண் டறியினை
வெற்பன் காதற் காலுலை வேலையின்
வலியுடைக் கற்பி னெடுவளி சுழற்றிக் |
15
|
|
கட்புலங்
காணாது காட்டைகெட வுந்தலி
னென்போ லிந்நிலை நின்றவர் படைக்கும்
பேறாங் கொழிக பெருநாண் கற்பின
ரெற்பே றுடைய ராயிற்
கற்பிற் றோன்றாக் கடனா குகவே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று
துறை: நாணிழந்து
வருந்தல்.
(இ-ம்.)
இதற்கு உயிரினும் சிறந்தன்று......................தோன்றுமன் பொருளே (தொல்.
கள. 22) எனவரும் நூற்பாவின்கண் தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் எனவரும்
விதிகொள்க.
1-4:
மைகுழைத்..............................கூடல்
(இ-ள்)
மைகுழைத்து அன்ன தொள்ளியம் செறுவில்-மையினைக் குழைத்தாற்போன்ற கரிய சேற்றினையுடைய
அழகிய கழனியின்கண்ணே; பரைதபு பெருகிழ நாரை-பறக்கும் ஆற்றலை இழந்த பெரிய கிழட்டு
நாரை; வஞ்சனை தூங்கி-வஞ்சனையாகத் தூங்குதல்போல் இருந்து; நீங்கா கூர்வாய் ஆரல்
உண்ணும்-வாய்த்தவழி நூங்காமல் தனது கூர்த்த வாயினால் ஆரல்மீனைப் பற்றித் தின்னுதற்கிடமான;
பழனம் பெருநகர் கூடல்-மருதநிலப் பரப்பினையுடைய பெருப்ரிய நகரமாகிய மதுரையின் கண்ணே
எழுந்தருளியுருக்கும் என்க.
(வி-ம்.)
தொள்ளி குழைந்த சேறு. செறு-கழனி. பறை-பறத்தல், தபுதல்-கெடுதல். இனி, பறை சிறகுமாம்.
சிறகுதிர்ந்த நாரை என்க. வஞ்சனையாகத் தூங்கி என்க. ஆரல்-ஒருவகை மீன.் பழனம்-பொது,
நிலமுமாம். நீங்காது என்னும் வினையெச்சத்தீறு கெட்டது. இனி உண்ணுதல் நீங்காத பழனம்
என ஈறுகெட்ட பெயரெச்சம் எனினுமாம்.
5-11:
கரமான்............................உந்தலின்
(இ-ள்)
கரம் மான் தரித்த பெருமான் றைவன்-கையின்கண் மானை எந்திய சிவபெருமானாகிய கடவுளுடைய;
பொன் பழித்து இன்புறு எடுத்த திருவடி-நிறத்தால் பொன்னையும் பழித்து அடியார் இன்புறுதற்குக்
காரணமான தூக்கிய திருவடியின் அழகாகிய நீரினை; உளம் விழுங்காத களவினர்போல்-நெஞ்சாகிய
வாயால் பருகாத வஞ்சமாந்தரை விலக்குதல்போல; என் உயிரொடும் வளர்ந்த பெருநாண்
தறியினை-என் உயிரோடு கூடி இதுகாறும் வளர்ந்துவந்த என்னுடைய பெரிய நாணாகிய துணை;
வெற்பன் காதல் கால் உலை வேலையின்-யான் எம்பெருமான்பால் கொண்டுள்ள காதலாகிய
காற்று உலைக்கும் பொழுதில்; வலியுடை கற்பின் நெடுவளி சுழற்றி-அந்த நாணினுங்காட்டில்
வலிமைமிக்குடைய எனது கற்பாகிய பெரிய சூறைக்காற்று அத்தூணைச் சுழற்றி; கண்புலங்காணாது
காட்டைக் கெட உந்தலின்-யான் அதனை என்னிடத்தே காண்டற்கியலாதபடி ஒரு காட்டைப்பொழுதில்
அஃது அழிந்துபோம்படி புறத்தே தள்ளுதலாலே என்க
(வி-ம்.)
பெருமானாகிய இறைவன் என்ல.இனி, பெருமான் இறைவன் பொன்பழித்து எடுத்த இன்புறு திருவடி
என்பதற்கு, பெருமான் இரணிடவன்மன் செல்வத்தினை வெறுத்து உயர்ந்த இன்பம் பெறுதற்குக்
காரணமாகிய திருவடி எனப் பழைய உரையாசிரியர் கூறுவர். பழித்த திருவடி என ஒட்டுக. பழித்த
எடுத்த எனும் சொற்கள் பழித்தெடுத்த என உடம்படுமெய் தோன்றாது நிலைமொழி ஈறுகெட்டு
புணர்ந்தன. விழுங்காத என்பதற்கேற்ப அடியின் அழகாகிய நீரை என்க. களவினர்-வஞ்சகர்.
களவு முதலிய திவினையுடையோர் எனினுமாம். நாண்-பெண்மைக் குணங்களுள் ஒன்றாகலின் என்
உயிரொடும் வளர்ந்த பெருநாண் என்றாள். இதுகாறும் அந்நாணம் என்பால் மிகவும் உறுதிஆய்
இருந்தது என்பாள் பெருநாண் தறி என்றாள். வெற்பன்-குறிஞ்சித் தலைவன். காதல் நாணை அகற்றித் தன்னை
அவன்பாற் றள்ளுதலின் கால் என்று உருவகித்தாள். கால்-காற்று. காதல்மட்டும் அந்நாணினை
முழுதும் அழித்துவிடமாட்டாது என்பாள் கால் உலைக்கும்பொழுதில் என்றாள். நாணினும்
செயிர்தீர் கற்புச் சிறந்தன்று என்பதுபற்றி வலியுடைக் கற்பு என்றாள். அக்கற்பைப்
பேணும்பொருட்டுத் தான் நாணைத்துவரத் துறத்தலின் கற்பின் நெடுவளி சுழற்றிக் கட்புலங்
காணாது உந்தலின் என்றாள். அந்நாணம் இப்பொழுது என்னிடம் சிறிதும் இல்லை என்பாள்
கட்புலங்காணாது உந்தலின் என்றாள். தான் தலைவனுடனே போதற்கு ஒருப்படுமளவிலே அந்நாணம்
என்னைவிட்டு நீங்கிற்றென்பாள் காட்டைகெட என்றாள். காட்டை-ஓரளவை. அஃதாவது-எட்டு
நொடிப்பொழுது கொண்டது ஓரிலவம். இலவம் எட்டுக்கொண்டது ஒரு காட்டைப்பொழுது என்க.
12-15:
என்போல்...............................ஆகுகவே
(இ-ள்)
என்போல் இந்நிலை நின்றவர்-என்னைப்போல இங்ஙனம் நாண் அழிதற்குக் காரணமான இந்த
நிலையின்கண் நின்ற மகளிர்கள்; படைக்கும் பேறு ஆங்கு ஒழிக-வரும் பிறவியிடத்திலே
எய்ஹ்டும் உயர்குடியிற் பிறத்தல் ஆகிய இப்பேற்றினை ஒழிவாராக; பெருநாண் கற்பினர்
என்பேறு உடையார் ஆயின் கற்பில் தோன்றாக் கடன் ஆகுகவே-பெரிய நாணத்தையும் கற்பினையும்
என்போலப் பெற்றுடைய மகளிராயின் கற்பில்லாத குடியில் தோன்றும் கடப்பாட்டினை உடையர்
ஆகுக என்க.
(வி-ம்.)
இந்நிலை-இங்ஙனம் நாணழியக் கற்புப்பேணும் நிலை. படைக்கும் பேறு-எய்தும் உயர்குடிப்
பேறு. உயர் குடியிற்றோன்றின் ஒரோவழி உயிரினும் சிறந்த நாண்விடுத்தே கற்பினைப்
பேணவேண்டுதலின் அந்நிலை பெரிதும் துன்புறுவதொன்றாயிருக்கும் என்பாள் படைக்கும் பேறு
ஆங்கு ஒழிக என்றாள். இனி நாணில் பரத்தையர் குடியிற் பிறப்பினும் கற்பினைப் பேணுதல்
கூடும். பெருநாண் கற்பினர் கற்பு இல் தோன்றாக் கடன் ஆகுக என்றாள். கடன்: ஆகுபெயர்;
கடமையுடையோர் என்க. கற்பில் குடியில் தோன்றிக் கற்பினைப் பேணுதலை மாதவி முதலியோரிடத்தும்,
காமக் கிழத்தியரிடத்தும் காண்க. நாணத்தோடு பிறந்து, அதனை விடுதல் துன்பமாகலின்
அஃதில்லாத பரத்தையர் குடியிற்றோன்றுதல் நன்றென்றாள் ஆங்கும் கற்பினைப் பேணுதல்
கூடுமாகலின் என்பது கருத்து.
இனி,
களவினரை விலக்குதல்போல நாணாகிய துணினைக் காதலாகிய காற்று உலைக்கும் போழ்தில்
கற்பாகிய காற்றுத் தள்ளுதலால் என்னைப்போன்றவர் மறுமைக்கண் உயர்குடியில் பிறத்தல்
ஒழிக. கற்பும் நாணும் உடையோர் கற்பில்லாப் பரத்தையர் குடியில் பிறப்பாராக. அங்கும்
கற்பினைப் பேணுதல் கூடுமாதலின் என வினைமுடிவு செய்க. ஆங்கும் கற்பினைப் பேணுதல் கூடுமாகலின்
என்பது குறிப்பால் வந்த ஏதுப்பொருள் என்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|