பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 37

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வடமீன் கற்பினம் பீடுகெழு மடந்தை
பெருங்கடன் முகந்து வயிறுநிறை நெடுங்கார்
விண்டிருந்து முழங்கி வீழா தாகக்
கருவொடு வாடும் பைங்கூழ் போலக்
கற்புநாண் மூடிப் பழங்கண் கொள்ள
10
  வுயர்மர முளைத்த வூரி போல
வோருடல் செய்து மறுமனங் காட்டு
மாணிழை மகளிர் வயினல் குதலாற்
கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றிருதரு குட்டி யாயபன் னிரண்டினைச்
15
  செங்கோன் முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள வென்னும் படர்களை கட்டுத்
திக்குப்பட ராணை வேலி கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளக்கு
நாற்படை வன்னிய ராக்கிய பெருமான்
20
  முள்ளுடைப் பேழ்வாய்ச் செங்கண் வராலினம்
வளைவாய்த் தூண்டிற் கருங்கயிறு பரிந்து
குவளைப் பாசடை முண்டக முழக்கி
நெடுங்கால் பாய்ந்து வடுத்த வொண்டொழிற்
சுருங்கைவழி யடைக்கும் பெருங்கழிப் பழனக்
  கூடற் கிறைவ னிருதாள் விடுத்த
பொய்யினர் செய்யும் புலம் போலப்
பேரா வாய்மை யூரான்
றாரொடு மயங்கிப் பெருமையு மிலனே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழிகூற்று

துறை: தோழியியற்பழித்தல்.

     (இ-ம்.) இதனை, “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல்-கற்பு. 9) எனவரும் நூற்பாவின்கண் ‘வகைப்படவந்த கிளவி; என்பதன்கண் அமைத்துக்கொள்க.

1-5: வடமீன்......................................கொள்ள

     (இ-ள்) வடமீன் கற்பின் எம் பீடுகெழுமடந்தை-அருந்ததிபோலும் கற்பினையுடைய எம்பெருமாட்டியாகிய பெருமை பொருந்திய தலைவி; கற்பு நாண்முடி-கற்பாலும் நாணத்தாலும் அடக்கப்பட்டு; பெருங்கடல் முகந்து வயிறுநிறை நெடுங்கார்-பெரிய கடலின்கண் நீரை முகந்து வயிறு நிறையப்பட்ட நெடிய முகில்; விண்திரிந்து முழங்கி வீழாது ஆக-வானத்தில் ஏறி வலம் சூழ்ந்து இடித்து முழங்கியும் பெய்யா தொழிந்தமையால்; கருவொடு வாடும் பைங்கூழ்போள-சூலொடு வாடுகின்ற பசிய பயிர்போன்று வாடி; பழங்கண் கொள்ள-பிரிவாற்றாமையாற் பெரிதும் வருந்தாநிற்பவும் என்க.

     (வி-ம்.) வடமீன்-அருந்ததி. போடு-“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் ஓம்பலும் பிறவும் ஆகிய கிழவோள் மாண்புகள். (தொல். 1098) மடந்தை என்றது தலைவியை. தலைவனது அயன்மை தோன்ற எம்மடந்தை என்றாள். தலைவன் பண்டு நின்னிற் பிரியேன் பிரியின் இன்னன் ஆவேன் எனச் சூண்மொழிந்து வைத்தும் அதனை மறந்து இப்பொழுது அவளை அளித்திலன் என்பாள் பெருங்கடல் முகந்து வயிறுநிறை நெடுங்கார் வீண் திரிந்து முழங்கியும் வீழாதாக என்றாள். முழங்கியும் எனல்வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொகது. முழங்குதல் சூள்மொழிந்தமைக்கும் வீழாதாதல் அளி செய்யாமைக்கும் உவமைகள். இஃது பொருட்புறத்தே தோன்றிய இறைச்சிப் பொருள்வகை என்க. தலைவி அவனை இன்றியமையாமைக்குக் கருவொடு வாடும் வைங்கூழ் என்றாள். கற்பும் நாணும் உடைய குலமகளிர் இத்தகைய துன்பத்தைப் பிறர் அறியாமல் மறைத்தல் வேண்டுதலின் கற்பு நாண்மூடி பழங்கண் கொள்க என்றாள். பழங்கண்-துன்பம்.

6-8: உயர்.....................................நல்குதலால்

     (இ-ள்) உயர் மரம் முளைத்த ஊரிபோல-உயர்ந்த மரத்திலே முளைத்த புல்லுருவிபோல; ஓருடல் செய்து-உடம்பால் மட்டும் ஓருடல் போன்று காட்டி; மறுமனங்காட்டும்-மனத்தால் வேறொன்றனைக் கருதுகின்ற; இழைமாண் மகளிர்வயின்-அணிகலன்களால் மட்டும் மாட்சிமையுடையவராகிய பரத்தையரிடத்தே; நல்குதலால்-அருள் செய்திருத்தலால் என்க.

     (வி-ம்.) தலைவன் உயர்குடிப் பிறத்தலானும் பிறர்க்கு அருள் செய்தலுடைமையானும் அவனுக்கு ஓங்கிநின்ற பிற உயிர்க்குக் கனி நிழல் முதலியன நல்கிப்பேணும் உயர்தருவினை உவமையாகக் கூறினள். புல்லுருவி அம்மரத்தின் உறுப்புப்போல் ஒன்றுபடப் பொருந்தி அம்மரத்தினது வளனெல்லாம் வேரால் உறிஞ்சி இறுதியில்

அம்மரத்தையே பயனற்றதாக்கி விடுத்தலின் தொடக்கத்தே தலைவனை இன்றியமையார்போல அவனோடு உறஉறப் பொய்க்கேண்மை கொண்டு பின்னர் அவன் பொருள் முதலியவற்றைக் கவர்ந்து கேடு சூழ்தலின் பரத்தையர்க்கு உவமை கூறினள். இனி அணிகலன் முதலியவற்றாலாய புறத்தோற்றமேயன்றிப் பிறநலம் ஏதும் இல்லாப் பரத்தையர் என்பாள் மாணிழை மகளிர் என்றாள்.

9-10: கருமுகிற்கு..........................பன்னிரண்டினை

     (இ-ள்) கருமுகிற்கு அணி நிறம் தழல்கண் பிறைஎயிற்று-கரிய முகிலுக்கு உவமையாகத் தகுந்த நிறத்தினையும் தீப்பிழம்பு போன்ற கண்களையும் பிறைபோன்று வளைந்த பற்கலையுமுடைய; அரிதரு குட்டியாய பன்னிரண்டினை-பன்றி ஈன்ற பன்னிரண்டு குட்டிகளையும் என்க.

     (வி-ம்.) அணிதல்-உவமை கூறுதல். அரி-பன்றி. பன்னிரண்டினையும் எனல்வேண்டிய முற்றும்மை தொக்கது. குட்டியாய பன்னிரண்டினை என்றாரேனும் பன்னிரண்டு குட்டிகளையும் என்க. :குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார்” (தொல். பொருளதி. மரபி, 6. 10) என்பதனால் பன்றிக்குக் குட்டி கூறுதல் மரபாதல் உணர்க.

11-15: செங்கோல்.....................பெருமான்

     (இ-ள்) செங்கோல் முளைஇட்டு-செங்கோன்மை என்னும் வித்தினை விதைத்து; அருள்நீர் தேக்கி-அருளாகிய நீரைப் பாய்ச்சி; கொலை களவு என்னும் படர்களைகட்டு-கொலை களவு முதலியவாகக் கூறப்படும் தீவினைகளாகிய படரும் களைகளைப் பறித்து; திக்கு படர் ஆணை வேலி கோலி-எண்டிசைகளினும் செல்லா நின்ற ஆணை என்னும் வேலியை இட்டு வலைத்து; உலகுதருமப் பெரும் பயிர் பெற-உலகமாகிய வயலின்கண் அறம் என்னும் பெரிய பயிர்தழைக்கும்படி விளைக்கின்ற; நால் படைவன்னியர் ஆக்கிய பெருமான்-நாற்படைகளையும் உடைய சிறந்த அமைச்சர்கள் ஆக்கியருளும் பெருமானும் என்க.

     (வி-ம்.) (10) பன்றி ஈன்ற பன்னிரண்டு குட்டிகளையும் வன்னியராக்கிய பெருமான் என இயைத்துக் கொள்க. இப்பன்னிருவரும், “ஈகையும் தருமமும் புகழும், தென்னர் கோமகற்கு வைகலும் பெருகத் திசையெலாம் விசைய முண்டாக்கி”னர் ஆகலின் (திருவிளை. பன்றி: மந்திரி......19) செங்கோன் முளையிட்டு.........விளைக்கும் வன்னியர் என்றார். செங்கோல்-செங்கோல் முறைமை. உலகென்னும் வயல் என்க. நாபடை-யானை, குதிரை, தேர், காலாள் என்பன.

19-22: முள்..................................போல

     (இ-ள்) முள் உடை பேழ்வாய் செ கன் வரால்இனம்-முள்ளினையுடைய பெரிய வாயினையும் சிவந்த கண்ணினையும் உடைய வரால்மீன் கூட்டங்கள்; வளைவாய் தூண்டில் கருங்கயிறு பரிந்து-வளைந்த வாயினையுடைய தூண்டிலின்கண் இட்ட வலிய கயிற்றினை அறுத்துக்கொடுபோய்; குவளைப் பாசடை முண்டகம் உழக்கி-குவளையினது பசிய இலைகளையும் தாமரையையும் கலக்கி; நெடுங்கால் பாய்ந்து-நெடிய வாய்க்கால்களிலே குதித்து; படுத்த ஒள்தொழில் சுருங்குவகை அடைக்கும்-நீர்பாயும் பொருட்டு இயற்றப்பட்ட நுண்ணிய தொழிலினையுடைய மதலின் வழியை நீர்செல்லா தடைத்தற்கிடமான; பெருங்கழி பழனம் கூடற்கு இறைவன்-பெரிய கழிகளையுடைய நெய்தற்பரப்பினையும் மருதநிலப்பரப்பினையும் உடைய மதுரைமா நகரத்திற்குத் தலைவனும் ஆகிய சிவபெருமானுடைய; இருதாள் விடுத்த பொய்யினர் செய்யும் புல்லம் போல-இரண்டு திருவடிகளையும் நினையாது விட்ட பொய்யையுடைய மடவோர் இயற்றுகின்ற புன்செயல்களைப்போல என்க.

     (வி-ம்.) வரால்-ஒருவகை மீன். வளைவாய்: வினைத்தொகை. தூண்டில்-மீன்பிடிக்கும் ஒருவகைக் கருவி. கருங்கயிறு என்புழி கருமை வலிமைப் பண்பு குறித்து நின்றது. இனி, கயிறு நீரினுள் வேறாகத் தோன்றாதபடி கருநிறம் பூசிய கயிறு எனினுமாம். முண்டகம்-தாமரை. கால்-வாய்க்கால். சுருங்கை-மதகு. பெருங்கழியும் பழனமும் என உம்மை விரிக்க. பழனம்-மருதநிலம். பெருமானும் இறைவனுமாகிய சிவனுடைய தாள் என்க. மெய்ப்பொருளாகிய இறைவனுடைய தாள் நினையாத மடவோர் மெய்ப்பொருளையே பற்றி உழலுதலின் பொய்யினர் என்றார். அவர் செய்யும் தொழில்கள் புன்றொழிலேயாதலன்றி உலகத்தாரால் புகழப்படும் பெருமை சிறிதும் உடையன அல்லவாகலின் பெருமையின்மைக்கு உவமை கூறப்பட்டன. புல்லம்-புன்மை; செய்யும் புன்மை எனவே செய்யும் புன்றொழில் என்பது பெற்றாம்.

23-24: பேரா................................இலனே

     (இ-ள்) பேரா வாய்மை ஊரான்-நீங்காத வாய்மையையுடைய தலைவன்; தாரொடு மயங்கி-அப்பரத்தை மகளிரின் மாலை முதலிய ஒப்பனையால் மயக்கமெய்தி; பெருமையும் இலன்-தன் உயர்குடிப் பிறப்பிற்கேற்ற பெருமையும் இலனாயினன் என்க.

     (வி-ம்.) பேராவாய்மை யூரான் என்றது இகழ்ச்சி. பொய்யுடையோன் என்பது கருத்து. தாரொடு என்புழி ஒடு வுருபு ஆலுருபின் பொருட்டாய் நின்றது. தார்-மலர். தாரொடு மயங்கி என்றது முதலியவற்றால் இயன்ற அப் பரத்தை மகளிரின் புறத்தோற்றத்தே மயங்கி என்றவாறு. செயல் நல்குதலாயிருந்தும் இடந்தீமையால் தனக்குரிய பெருமை எய்தாதாயிற்று. இனி, பெருமையும் என்புழி உம்மையை எச்சப் பொருளதாக்கி அவர்பால் அவன் நுகரும் இன்பந்தானும் மெய்யின்பம் ஆகாததோடு பெருமையும் இலதாயிற்று என்றாளுமாயிற்று எனினுமாம்.

     இனி ஊரன் மடந்தை பழங்கண் கொள்ள மறுமனங்காட்டும் மாணிழை மகளிர் வயின் நல்குதலாலே அவர் தாரொடு மயங்கிப் பெருமையும் இலன் ஆயினன் என வினைமுடிவு செய்க.

     ஊரன் பொய்யினர் செய்யும்புல்லம்போலப் பெருமையும் இலன் எனத் தோழி தலைவனைப் பழித்துழித் தலைவி அதுபொறாது அவன் அங்ஙனம் ஒழுகினும் பெருமையுடையோனேகாண் எனத்தோழியைச் சீறி வைவளாகலின் இவ்வாற்றாலேனும் தலைவி அத்துன்ப நிலையினின்றும் தன்நெஞ்சை வேறு நெறியிற்றிருப்பி ஆறுதல் பெறவேண்டுமென்பது தோழியின் நோக்கமாகலின் இதன் பயன் தலைவியை ஆற்றுவித்தலே ஆயிற்று. மெய்ப்பாடு-அழுகை. பயன்-தலைவியை ஆற்றுவித்தல்.