பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 39

நேரிசையாசிரியப்பா

 
   
5
  முன்னி யாடுக முன்னி யாடுக
குமுதமும் வள்ளையு நீலமுங் குமிழுந்
தாமரை யொன்றிற் றடைந்துவளர் செய்த
முளரிநிறை செம்மகண் முன்னி யாடுக
நில்பெறு தவத்தினை முற்றிய யானும்
10
  பலகுறி பெற்றிவ் வுலகுயி ரளித்த
பஞ்சின் மெல்லடிப் பாவை கூறாகிக்
கருங்குரு விக்குக் கண்ணருள் கொடுத்த
வெண்டிரு நீற்றுச் செக்கர் மேனியன்
கிடையிற் றாபதர் தொடைமறை முழக்கும்
15
  பொங்கர்க் கிடந்த சூற்கார்க் குளிறலும்
வல்லியைப் பரியும் பகடுவிடு குரலும்
யாணர்க் கொடுஞ்சி நெடுந்தே ரிசைப்பு
மொன்றி யழுங்க நின்ற நிலை பெருகி
மாதிரக் களிற்றினைச் செவிடுறக் கொடுக்கும்
20
  புண்ணியக் கூட லுண்ணிறை பெருமான்
றிருவடி சுமந்த வருளினர் போலக்
கருத்தே னுடைத்துச் செம்மணி சிதறிப்
பாகற் கோட்டிற் படர்கறி வணக்கிக்
கல்லென் றிழிந்து கொல்லையிற் பரக்குங்
  கறங்கிசை யருவியஞ் சாரற்
புறம்பு தோன்றிநின் கண்ணா குவனே.

(உரை)
கைகோள்: களவு. தலைவன்கூற்று.

துறை: ஆடிடத்துய்த்தல்.

     (இ-ம்.) இதனை, “முன்னிலையாக்கல் சொல்வழிப்படுத்தல்.....இன்னவை நிகழும் என்மனார் புலவர்” (தொல். கள. 10) எனவரும் நூற்பாவின்கண் ‘இன்னவை’ என்பதன்கண் அமைத்துக் கொள்க.

1-4: முன்னி.........................ஆடுக

     (இ-ள்) முளரிநிறை செம்மகள்-செந்தாமரையில் எழுந்தருளியுள்ள செய்யமேனித் திருமகளை ஒப்போய்; முன்னி ஆடுக முன்னி ஆடுக-இனி நீ நின்னுடைய தோழியர் குழாத்திற் சென்று விளையாடுவாயாக வருந்தேல் இனி நீ சென்று நின் தோழியரோடு விளையாடுவாயாக; குமுதமும் வள்ளையும் நீலமும் குமிழும்-குமுத மலரும், வள்ளைக்கொடியும், நீலமலரும், குமிழமலரும்; தாமரை ஒன்றில் தடைந்து வளர் செய்த செம்மகள்-ஒரு தாமரை மலரின்கண்ணே செறிந்து வளர்ந்தாலொத்த திருமுகத்தையுடைய செவ்விய நங்காய்; முன்னி ஆடுக-இனி நீ நின் தோழியருடன் சென்று விளையாடுவாயாக என்க.

     (வி-ம்.) வருந்தாதே சென்று விளையாடுவாய் என்பான் முன்னியாடுக முன்னியாடுக என மும்முறையும் அடுக்கினான். முளரிநிறை செம்மகள் என்றது திருமகளை. இனி குமுதமும்.....செய்த, செம்மகள் எனவும் இயைத்துக் கொள்க. இங்ஙனம் இயைத்து வளர் செய்தாலொத்த திருமுகத்தையுடைய செம்மகளே என உவமைக்கேற்பப் பொருளும் வருவித்தோதுக. குமுதம்-செவ்வல்லி. இது இதழுக்குவமை. வள்ளை-வள்ளைக் கொடி. இது செவிக்குவமை. நீலம்-கருங்குவளை. இது கண்களுக்குவமை. குமிழ்-குமிழ மலர். இது மூக்கிற்குவமை. தாமரை இது முகத்திற்குவமை. எனவே தலைவியின் திருமுகம் குமுதம் முதலியவற்றின் மலர் தன்னகத்தே செறிந்துள்ள ஒரு தாமரை மலர்போன்றிருந்தது எனத் தலைவியினது நயப்புணர்த்தியவாறாம். செம்மகள் என்பதுமது. செம்மகள்: அண்மை விளி.

6-9: பலகுறி...........................மேனியன்

     (இ-ள்) பலகுறி பெற்று இ உலகு அளித்த-தான் ஒருத்தியேயாகவும் பலவேறு பெயர்களையுடையளாய் இப்பேருலகத்தின்கண் வாழுகின்ற உயிர்க் கூட்டங்களைத் தோற்றுவித்துப் பாதுகாத்தருளிய; பஞ்சின் மெல் அடி பாவை கூறு ஆகி-பஞ்சினும் காட்டில் மென்மையையுடைய திருவடிகளையுடைய உமையம்மையாரைத் தன் பாகத்தே கொண்டு; கருங்குருவிக்குக் கன் அருள் கொடுத்த-கீழ்ச் சாதியாகிய கரிக்குருவிக்கும் தனது கண்ணருளை வழங்கிய; வெந்திரு நீற்றுச் செக்கர் மேனியன்-வெள்ளிய திருநீறு சண்ணத்த செவ்வானம் போன்ற திருமேனியையுடையவனும் என்க.

     (வி-ம்.) பலகுறி-பல பெயர். சத்தியாகிய தான் ஒருத்தியே பலவேறு பெயர்களைப் பெற்று என்க. சத்தி பலவேறு பெயர் பெற்று நிற்கும் என்பதனை,

“சத்திதான் பலவோ வென்னில் தானொன்றே அநேக மாக
 வைத்திடுங் காரி யத்தான் மந்திரி யாதிக் கெல்லாம்
 உய்த்திடு மொருவன் சத்தி போலரன் உடைய தாகிப்
 புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்த வாறாம்” (சித்தி. 81)

எனவும்,

“சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்
 உய்த்திடு மிச்சை செய்தி இவைஞானத் துளவோ வென்னின்
 எத்திற ஞான முள்ள தத்திற மிச்சை செய்தி
 வைத்தலான் மறைப்பில் ஞானல் மருவிடுங் கிரியை யெல்லாம்” (சித்தி. 82)

எனவரும் சிவஞான சித்தியாராலும் உணர்க. உயிரளித்தலாவது உயிர்களுக்குப் புத்தி முத்திகளை அருளுதல் என்க. இனி, கருங்குவிக்கும் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. கருங்குருவி-கரிக்குருவி. கரிக்குருவிக்கு அருள் செய்தமையைத் திருவிளையாடற் புராணத்தே (47) கரிக்குருவிக்குபதேசஞ் செய்த படலத்தால் உணர்க. செக்கர்-செவ்வானம்.

10-17: கிடையில்..........................போல

     (இ-ள்) கிடையில் தாபதர் தொடைமற முழக்கும்-தமது பள்ளியின்கண் துறவோர் ஓதுகின்ற தொடையோடுங் கூடிய மறைமுழக்கமும்; பொங்கர் கிடந்த சூலையுடைய முகில்களின் முழக்கமும்; வல்லியைப் பரியும் பகடுவிடு குரலும்-கால் விலங்கினை முறிக்கும் களிற்றியானைகள் பிளிறும் முழக்கமும்; யாணர் கொடிஞ்சி நெடுந்தேர் இசைப்பும்-அழகிய கொடிஞ்சியினையுடைய நெடிய தேர்களின் முழக்கமும்; ஒன்றி அழுங்க-ஒருங்கு கூடி ஆரவாரித்தலாலே; நின்றநிலை பெருகி-அவ்வொலிகள் தாம் நின்ற நிலையினின்றும் பெருகி; மாதிரக் களிற்றினை செவிடு உறக் கொடுக்கும்-திசை யானைகளைச் செவிடுபடும்படி செய்யும்; புண்ணியக் கூடலுள்-புண்ணியத்தைத் தாராநின்ற மதுரையின்கண்; நிறை பெருமான்-எழுந்தருளியுள்ள பெருமானும் ஆகிய சோமசுந்தரக் கடவுளினுடைய; திருவடி சுமந்த அருளினர் போல-திருவடிகளை நெஞ்சத்தின்கண் தாங்கிய அருளாளர்போல என்க.

     (வி-ம்.) கிடை-பள்ளி. தாபதர்-துறவோர். கிடக்குமிடமாதலின் பள்ளி கிடை எனப்பட்டது. தொடை-ஒருவகைச் செய்யுளுறுப்பு. பொங்கர்-சோலை. குளிரல்-முழக்கம். வல்லி-விலங்கு. பரிதல்-அறுத்தல். முறித்தலுமாம். பகடு-யானை. யாணர்-அழகு. கொடிஞ்சி-ஒரு தேருறுப்பு. இசைப்பு-முழக்கம். அழுங்குதல்-ஆரவாரித்தல். ஒலிகள் பல ஓரிடத்தெழின் பேரொலியாதலியல்பாகலின் நின்ற நிலை பெருகி என்றான். மாதிரம்-திசை.

5: நிங்...........................யானும்

     (இ-ள்) நின்பெறு தவத்தினை-பெறற்கரும் பேறாகிய நின்னைப் பெறுதற்குக் காரணமான தவத்தினை; முற்றிய யானும்-பண்டும் பண்டும் பலப்பல பிறப்புக்களிலே செய்து முடித்த யானும் என்க.

     (வி-ம்.) வேண்டிய வேண்டியாங்கு எய்தற்குச் செய்தவமே காரணமாகலின் பெறற்கரும் பேறாகிய நின்னை இங்ஙனம் பெற்றதற்கு முற்பிறப்புக்களிலே பெருந்தவம் செய்து முடித்தேனாதல் ஒருதலை என்பான் நிற்பேறு தவத்தினை முற்றிய யானும் என்றான்.

18-22: கருந்தேன்....................................கண்ணாகுவனே

     (இ-ள்) கருந்தேன் உடைத்து செம்மணி சிதறி-பெரிய தேன் கூண்டினைக் கிழித்துச் சிவந்த மாணிக்கங்களை யாண்டும் சிதறி; பாகல்கோட்டில் படர்கறி வணக்கி-பலாவினது கிளைகளிலே படர்ந்த மிளகுக் கொடிகளினை வளைத்து; கல் என்று இழிந்து-கல்லென்னும் ஓசையுண்டாக்க வீழ்ந்து; கொல்லையில் பரக்கும் கறங்கு இசை அருவி-புனங்களிலே பரவுகின்ற மிகுந்த ஒலியுள்ள அருவி நிரினையுடைய; அம்சாரல் புறம்பு தோன்றி-அழகிய இம்மலைச் சாரலின் பக்கத்தே சென்று; நின்கண் ஆகுவன்-விரைவில் மீண்டு உன்னிடத்தே வருவேன்காண் ஆதலால் வருந்தாதேகுக! என்க.

     (வி-ம்.) கருந்தேன் என்புழி அன்மொழித் தொகையாய்த் தேன் கூண்டை உணர்த்திற்று. பாகல்-பலா. கறி-மிளகு. கல்லென்று; ஒலிக்குறிப்பு. கறங்குதல்-ஒலித்தல். புறம்பு-பக்கம். ஆதலால் வருந்தாதேகுக என்பது குறிப்பெச்சம்.

     இனி இதனைச் செம்மகளே! நீ சென்று ஆடுக. நிற்பெறு தவத்தினைச் செய்து முற்றிய யானும் சாரலின் புறம்பு தோன்றி விரைவில் நின்னிடத்தே வருகுவன் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.