பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 40

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிலவுபகல் கான்ற புண்ணிய வருட்பொடி
யிருவினை துரந்த திருவுடன் மூழ்கி
நடுவுடல் வரிந்த கொடிக்காய்ப் பத்தர்
சுத்தியமர் நீறுடன் றேள்வலன் பூண்டு
முடங்குவீ ழன்ன வேணிமுடி கட்டி
10
  யிருநான்கு முற்ற மடியரக் காய்ந்திவ்
வாறெதிர்ப் பட்ட வருந்தவத் திருவினிர்
தணியாக் கொடுஞ்சுரந் தருந்தழ றாவிப்
பொன்னுடற் றேவ ரொக்கலொடு மயங்கிக்
கொண்மூப் பஃறிரைப் புனலுடன் றாழ்த்திப்
15
  பிதுளிய தருவினுட் புகுந்திமை யாது
மருந்துபகுத் துண்டு வல்லுயிர் தாங்கும்
வடைவந் தனையென வழங்குமொழி நிற்க
தாய்கா றாழ்ந்தன ளாயம் வினவினாள்
பாங்கியைப் புல்லின ளயலுஞ் சொற்றனள்
20
  மக்கட் பறவை பரிந்துள மாழ்கினள்
பாடலப் புதுத்தார்க் காளைபின் னொன்றாற்
றள்ளா விதியிற் செல்குந ளென்று
தழல்விழிப் பேழ்வாய்த் தரக்கின் றுளிமுலை
பைங்கட் புல்வாய் பாலுணக் கண்ட
25
  வருணிறை பெருமா னிருணிறை மிடற்றோன்
மங்குனிறை பூத்த மணியுடுக் கணமெனப்
புன்னையம் பொதும்பர்ப் பூநிறை கூடனும்
பொன்னடி வருத்தியுங் கூடி
யன்னையர்க் குதவல் வேண்டுமிக் குறியே.

(உரை)
கைகோள்: களவு. தலைவி கூற்று.

துறை: விரதியர்க்குரைத்தல்.

     (இ-ம்.) இதனை, “எஞ்சி யோர்க்கு மெஞ்சுத லிலவே” (தொல். அகத். 42) எனவரும் நூற்பாவால் அமைத்துக்கொள்க.

     குறிப்பு: இக்கால்லாடச் செய்யுளுக்கு மேலெடுத்துக் காட்டியுள்ள திருக்கோவைச் செய்யுள் திணைவகையால் ஒத்தும் கூற்று வகையால் ஒவ்வாதும் இருத்தலுணர்க.

     இது தலைவனுடன் போகின்ற தலைவி எதிர்வந்த விரதியரை நோக்கி ‘நீயிர் எம்மூருக்குச் சென்று என்செலவினை எம்மன்னைமார்க்குக் கூறி அவரை ஆற்றுவிப்பீராக’ என்று வேண்டிக்கொண்டது என்க. இங்ஙனம் உடன்போக்கு நிகழ்வுழி, தலைவி எதிர்வருவோர்க்குக் கூறும் புலனெறி வழக்கினை,

கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக்
கோள்வல் வேங்கைய மலைபிறக் கொழிய
வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக்
கூறுமின் வாழியோ வாறுசென் மாக்க
ணற்றோ ணயந்துபா ராட்டி
உஎற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே”      (ஐங்குறு. 385)

எனவரும் பிற சான்றோர் செய்யுளானும் உணர்க.

1-7: நிலவு...............................திருவினர்

     (இ-ள்) நிலவு பகல் கான்ற புண்ணிய அருள்பொடி-திங்களின் ஒளியையும் ஞாயிற்றின் ஒளியையும் வீசாநின்ற சிவபுண்ணியத்தைத் தருகின்ற திருவருளை யுடைய திருநீற்றினாலே; இருவினை துரந்த திருஉடல் மூழ்கி-நல்வினை தீவினைகளைத் துவர நீக்கிய திருமேனி மூடப்பெற்று; உடல் நடு வரிந்த கொடிக்காய் பத்தர்-உடலின் நடுவிற் கட்டிய கொடியிற் காய்க்கும் சுரைக்காயாகிய கமண்டலம்; சுத்தி அமர் நீறுடன்-சுத்தி என்னும் கருவியொடு கூடிய திருநீற்றுப்பையோடு; வலன்தோள் பூண்டு-வலத்தோளில் மாட்டி; முடங்குவீழ் அன்னவேணி முடிகட்டி-முடங்கிய விழுதுபோன்ற சடையை முடியாக் கட்டி; இருநான்கு குற்றம் அடிஅறக் காய்ந்து-ஞானவரணீய முதலிய எட்டுக் குற்றங்களையும் வேரோடறுத்து; இ ஆறு எதிர்ப்பட்ட அருந்தவத்திருவினிர்- இப்பாலை வழியிலே எம்மை எதிர்ப்பட்ட செய்தற்கரிய தவமாகிய செல்வத்தை யுடையீர் என்க.

     (வி-ம்.) நிலவு, பகல்: ஆகுபெயர்கள். இவை திங்கள் ஞாயிறு என்னும் பொருளன. புண்ணியம்-சிவபுண்ணியம். அருள்பொடி திருவருளை எய்துவதற்குக் காரணமான திருநீறு. புண்ணியப்பொடி அருட்பொடி எனத் தனித்தனி கூட்டுக. “பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு” எனவும் “முத்தி தருவது நீறு” எனவும் பெரியாரும் பணித்தருளுதல் காண்க. (சம்பந்தர், திருமுறை-2). இருவினை-நல்வினையும் தீவினையும். நல்வினையும் பிறப்பிற்குக் காரணமாகலின் திருஉடல் என்றாள். மூழ்கி-மூழ்கப்பட்டு. உடல்நாடு என மாறுக. வரிதல்-கட்டுதல். கொடிக்காய் என்றது சுரைக்காயை. பத்தர்-நீர்ப்பத்தர்; கமண்டலம். சுத்தி-மேலே கூறினாம். வலந்தோள் எனமாறுக. வீழ்-விழுது. வேணி-சடை. இரு நான்கு குற்றம்- ஞானவரணீயம், கோத்திரம், அந்தராயம் முதலிய எண்வகைச் செல்வங்களுண்டாகும் செருக்கினை எண்வகைக் குற்றம் என்றாள் எனினுமாம். என்னை" தவமிகுதியாலே இவ்வணிமா முதலிய செல்வம் கைவரப்பெற்ற துறவோரும் இவற்றாற் செருக்கெய்தி யோகநெரியைக் கைவிட்டுப் பொய்ப்பொருளிற் சிக்கி உழலுதலுண்டாகலின் அக்குற்றம் இல்லாத பெரியீர்! என்று புகழ்ந்தபடியாகக் கொள்க. அணிமா முதலியன எட்டாகலின் குற்றமும் எட்டாயின என்க. அடி-வேர். ஆறு-வழி. தவத்திருவினீர்-தவத்தையே செல்வமாக உடையீர் என்றவாறு.

8-13: தணியா.........................நிற்க

     (இ-ள்) தணியாக் கொடுஞ்சுரம்-வெப்பந் தணியாத கொடிய இப்பாலை நிலமானது; தரும் தழல் தாவி-வழங்கா நின்ற தீ மேலெழுந்துபோய்; பொன் உடல் தேவர்-பொன்னிறமான உடம்பினையுடைய தேவர்கள்; ஒக்கலொடு மயங்கி-தத்தம் சுற்றத்தாரோடு அறிவு மயக்கமுற்று; கொண்மூ பல்திரை புனலுடன் தாழ்த்தி-முகில்களைப் பல அலைகளையுடைய வானக் கங்கையோடே தம்முலகின் கீழிருத்தி; பொதுளிய தருவினுள் புகுந்து-தளிர் செறிந்த கற்பகச் சோலையுள் நுழைந்து; இமையாது மருந்து பகுத்து உண்டு-கண்களிமையால் இருந்து அமிழ்தத்தைத் தம்முள் பகுத்துண்டு; வல் உயிர் தாங்கும்-தம்முடைய வலிய உயிரைப் பாதுகாக்கும்படி செய்கின்ற; வட்டை வந்தனை என-இப்பாலைநில வழியிலே நீ எமக்கிரங்கி நீவிர் கூறும் இம்முகமன் மொழிகள் அமைவனவாக என்க.

     (வி-ம்.) வெப்பந்தணியாத என்க. அழல்தாவி தேவர்கள் மயங்கித்தாழ்த்திப் புகுந்து இமையாது பகுத்துண்டு உயிர் தாங்கும்படி செய்கின்ற இவ்வட்டை என்க. வட்டை-வழி. இவை விரதியர் மொழியினைத் தலைவி கொண்டு கூறியபடியாம். ஒக்கல்-சுற்றத்தார். கொண்மூ-முகில். புனல்-ஈண்டு வானகங்கை. தரு-கற்பகம். அச்சத்தால் இமையாதிருந்தனர் எனவும் ஒருபொருள் தோன்றுதலுணர்க. அமிழ்துண்டிலரெனின் இவ்வெப்பத்தால் அத்தேவரெல்லாம் இறந்தொழிதல் ஒருதலை என்பார் மருந்து பகுத்துண்டு உயிர் தாங்கும் என்றார். இவ்வெப்பந் தாக்கியும் போகாவுயிரென்பார் வல்லுயிர் என்றார்.

17-18: பாடலம்............................செல்குநளென்று

     (இ-ள்) புது பாடலம் தார் காளைபின்-இன்றலர்ந்த பாதிரி மலர்மாலையணிந்த காளைப்பருவத்தையுடையான் ஒரு நம்பியோடே; ஒன்றால் தள்ளாவிதியில் செல்குநள் என்று-யாதோருபாயத்தாலும் விலக்குதற்கியலாத ஊழ்காரணமாக நும்மகள் செல்கின்றனள் என்றும் என்க.

     (வி-ம்.) தான் தேர்ந்து கொண்ட தலைவனுடைய மனவெழுச்சியையும் பருவத்தையும் பாராட்டுவாள் புதுப்பாடலந்தார்க் காளை என்றாள். பாடலந்தார்-பாதிரிமலர்மாலை. ஒன்றால்-பிறிதோருபாயத்தால் எனினுமாம்.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
 சூழினுந் தான்முந் துறும்”
(குறள். 380)

என்பது பற்றி ஒன்றால் தள்ள விதி என்றாள். இனி யாதொரு செயலாலும் மாற்றப்படாத கற்புடைமை காரணமாக எனினுமாம்.

14-16: தாய்...............................மாழ்கினள்

     (இ-ள்) தாய் கால் தாழ்ந்தனள்-தாய்மார்களின் திருவடிகளை நினைந்து கைகூப்பித் தலைதாழ்த்துத் திசைநோக்கி வனங்கினாள் என்றும்; ஆயம் வினவினள்-தன் தோழியர் குழாத்திலுள்ளாரை நலமுசாவினள் என்றும்; பாங்கியைப் புல்லினள்-உசாத்துணைத் தோழியாகிய தமக்கையை அன்பினாலே தழுவிக் கொண்டனள் என்றும்; அயலும் சொற்றனள்-ஏனையோர்க்கும் வணக்கம் சொல்லினள் என்றும்; மக்கள் பறவை பரிந்து உளம் மாழ்கினள்- தன் மகவாகக்கொண்டு பேணி வளர்த்த கிளி முதலிய பறவைகளை நினைந்து இரங்கி மயங்கினள் என்றும் என்க.

     (வி-ம்.) தாய்-நற்றாய் முதலியோர். ஆயம்-தோழியர் குழு. பாங்கி என்றது செவிலி மகளாய் தனக்கு மூத்த உசாத் துணைத் தோழியை. அயலும்-ஏனையோர்க்கும். மக்கட் பறவை: பண்புத்தொகை. உவமத்தொகை எனினுமாம். அவை கிளியும் நாகணவாய்ப் புள்ளும் பிறவுமாம். இதனால் தலைவியின் பேரன்பு புலனாதல் உணர்க. இதனோடு,

“அன்னவள் கூறுவா ளரசர்க் கத்தையர்க்
கென்னுடை வணக்கமுன் னியம்பி யானுடைப்
பொன்னிறப் பூவையுங் கிளியும் போற்றுகென்
றுன்னுமென் றங்கையர்க் குணர்த்து வாயென்றாள்”.
                          (கம்ப. அயோத். தைலமா. 40)

எனவரும் இராமாவதாரத்தையும் ஒப்பு நோக்குக.

19-21: தழல்...........................மிடற்றோன்

     (இ-ள்) தழல்விழி பேழ்வாய் தரக்கின்-கனல்கின்ற கண்களையும் பெரிய வாயினையுமுடைய புலியினது; துளிமுலை-பால் துளிக்கும் முலையின்கண்; பைங்கண் புல்வாய் பால் உணக்கண்ட-பசிய கண்களையுடைய மான்கன்று பால் உண்ணும்படி அருளாட்சி செய்தருளிய; அருள்நின்ற பெருமான்-அருளே நிறைந்த எம்பெருமானாகிய; இருள்நிறை மிடற்றோன்-இருள் மலிந்த மிடற்றினையுடைய சோமசுந்தரக்கடவுளினது என்க.

     (வி-ம்.) செங்கோன்மையின் சிறப்புணர்த்துவாள் புலி முலையினை மான்கன்று உண்ணக் கண்ட என்றாள்.

“பொருதுறைசேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்
 ஒருதுறையி னீருண்ண வுலகாண்டோ னுளனொருவன்”
                               (கம்ப. க. குலமுறை. 5)

எனப் பிற சான்றோரும் ஓதுதல் உணர்க. தரக்கு-புலி.

22-25: மங்குல்...........................குறியே

     (இ-ள்) மங்குல் நிறை பூத்த மணி உடுக்கணம் என-விசும்பிடமெல்லாம் நிறையப்பூத்துள்ள அழகிய விண்மீன் கூட்டம்போல; புன்னை பொதும்பர் பூ நிறை கூடல்-புன்னை மரச் சோலைகளெங்கும் மலர்கள் நிறைந்துள்ள மதுரை நகரத்தின்கண்; நும்பொன் அடி வருந்தியும் கூடி-நுங்களுடைய திருவடிகள் நோகும்படியும் எம்பொருட்டாகச்சென்று சேர்ந்து; அன்னையர்க்கு இக்குறி உதவல் வேண்டும்-என்னை இழந்து ஆங்கு அலமந்திருக்கும் என் தாய்மார்களுக்கு யான் இங்குக் கூறிய இம்மொழிகளை அறிவுறுத்துதல் வேண்டும் என்க.

     (வி-ம்.) மிடற்றோனுடைய கூடல் என இயைக்க. மங்குல்-விசும்பு வின்மீன்கள் புன்னைமலர்களுக்குவமை. நியிர் ஆண்டுச் செல்லுதல் மிகையெனக்கொள்ளினும் என்பொருட்டு வருந்தியும் செல்லுதல் வேண்டும் என்பாள் நும் பொன்னடி வருந்தியும் கூடி என்றாள். தாய்மார் நற்றாய் செவிலித்தாய் எனப் பலராகலின் அன்னையர்க்கு என்று பன்மை கூறினாள். பெரியோராகலின் கூறுதல் வேண்டும் என்னாது தன் பணிவுடைமை தோன்ற உதவல் வேண்டும் என்றாள்.

     இனி அருந்தவத்திருவினர் வட்டைவந்தனை என வழங்கும் மொழிநிற்க. இனி நீயிர் கூடல்சென்று எம்மன்னையர்க்கு நும்மகள் ஒரு காளைபின் ஊழால் செல்கின்றாள் என்றும், அவள் தானும், தாய் கால் தாழ்ந்தனள் என்றும், ஆயம் வினவினள் என்றும், பாங்கியைப் புல்லினள் என்றும், அயலும் சொற்றனள் என்றும், பறவைக்குப் பரிந்து மாழ்கினள் என்றும் கூறி அவர்க்கு இக் குறிகளை உதவல் வேண்டும் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு.பெருமிதம். பயன்-தாய் முதலியோரை ஆற்றுவித்தல்