பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 41

நேரிசையாசிரியப்பா

 
   
5
  விது குத்திய குறுந்தாட் பாரிடம்
விண்டலை யுடைத்துப் பிறைவாய் வைப்பக்
குணங்கினந் துள்ளக் கூளியுங் கொட்ப
மத்தி யந்தணன் வரேஞ்சொலி விடுப்பத்
தில்லை கண்ட புலிக்கான் முனிவனுஞ்
10
  சூயை கைவிடப் பதஞ்சலி யாகிய
வாயிரம் பணாடவி யருந்தவத் தொருவனுங்
கண்ணால் வாங்கி நெஞ்சரை நிறைப்பத்
திருநட நவின்ற வுலகுயிர்ப் பெருமான்
கடன்மாக் கொன்ற தீப்படர் நெடுவே
15
  லுருளினர்க் கடம்பி னெடுந்தார்க் கண்ணிய
னரிமகள் விரும்பிப் பாகஞ் செய்து
களியுட னிறைந்த வொருபரங் குன்றமும்
பொன்னந் தோகையு மணியரிச் சிலம்பு
நிரைத்தலைச் சுடிகை நெருப்புமி ழாரமும்
20
  வண்டுகிளை முரற்றிய பாசிலைத் துளவு
மரகத முடற்றிய வடிவொடு மயங்க
மரக்கா லாடி யரக்கர்க் கொன்ற
கவைத்தலை மணிவேற் பிறைத்தலைக் கன்னி
வடபாற் பரிந்த பலிமணக் கோட்டமுஞ்
25
  சூடகந் தோள்வளை கிடந்துவில் வீச
யாவர்தம் பகையும் யாவையிற் பகையும்
வலனிற் காத்து வருவன வருளு
மூழியுங் கணமென வுயர்மகன் பள்ளியு
முவாமதி கிடக்குங் குண்டுகடல் கலக்கி
30
  மருந்துகைக் கொண்டு வானவர்க் கூட்டிய
பாகப் பக்க நெடியோ னுறையுளுந்
தும்பி யுண்ணாத் தொங்கற் றேவர்
மக்களொடு நெருங்கிய வீதிப் புறமு
மதுநிறை பிலிற்றிய பூவொடு நெருங்கிச்
35
  சூரரக் கன்னிய ருடல்பனி செய்யுங்
கடைக்கான் மடியும் பொங்கர்ப் பக்கமு
மூடி யாடுநர்த் திரையொடு பிணங்கித்
தோழியிற் றீர்க்கும் வையகத் துழனியு
மளவா வூழி மெய்யொடு சூழ்ந்து
40
  நின்றுநின் றோங்கி நிலையறம் பெருக்கு
மானாப் பெரும்புக ழருணகர்க் கூடற்
பெண்ணுடல் பெற்ற சென்னியம் பிறையோன்
பொற்றகடு பரப்பிய கருமணி நிறையென
வண்டுந் தேனு மருள்கிளை முரற்றி
45
  யுடைந்துதமிழ் நறவுண் டுறங்குதார்க் கொன்றையன்
றிருவடி புகழுநர் செல்வம் போலு
மண்ணாந் தெடுத்த வணியுறு வனமுலை
யவன்கழல் சொல்லுந ரருவினை மானு
மலைமுலைப் பகையட மாழ்குறு நுசுப்பு
50
  மற்றப னசைத்த மாசுணம் பரப்பி
யமைத்தது கடுக்கு மணிப்பாம் பல்கு
லாங்கவன் றரித்த கலைமான் கடுக்கு
மிருகுழை கிழிக்கு மரிமதர் மலர்க்கண்
புகர்முகப் புழைக்கை துயிறரு கனவின்
  முடங்குளை கண்ட பெருந்துயர் போல
வுயிரினு நுனித்த வவ்வவ் வுருக்கொடு
பொன்மலை பனிப்பினும் பனியா
வென்னுயிர் வாட்டிய தொடியிளங் கொடிக்கே.

(உரை)
கைகோள்: களவு. தலைவன் கூற்று.

துறை: அவயவங்கூறல்.

     (இ-ம்.) இதற்கு, “தோழிகுறை அவட்சார்த்தி மெய்யுரக் கூறலும்” (தொல். கள. 11) எனவரும் விதிகொள்க.

50-54: புகார்முகம்..............................கொடிக்கே

     (இ-ள்) உயிரினும் நுனித்த அஅ உருக்கொடு-என்னுடைய உயிரினுங்காட்டில் பெரிதும் நுட்பமான அந்த அந்த உறுப்புக்களைக்கொண்டு; பொன்மலை பனிப்பினும் பனியா என் உயிர்-மேருமலை நடுங்கினும் நடுங்குறாத ஆற்றலுடைய என் உயிரை; புகர் முகம் புழை கை துயில்தரு கனவில்- புள்ளிகளையுடைய முகத்தினையும் துளையுள்ள கையினையு முடைய யானையானது துயிலும்பொழுது தோன்றுகின்ற கனவிடத்தே; முடங்கு உளைகண்ட பெருந்துயர்போல-வளைந்த பிடரி மயிரையுடைய சிங்கத்தைக்கண்டுழி உண்டாகுந் துன்பம் போன்ற பெரிய துன்பத்தைச் செய்து; வாட்டிய-வாடச்செய்த; தொடி இளங்கொடிக்கு-வளையலணிந்த இளங்கொடி போன்ற அந்நங்கைக்கு என்க.

     (வி-ம்.) தலைவியின் அவயவங்கள் தன் உயிரினும் நுழைந்து வருத்தும் என்பான் உயிரினும் நுனித்த அவ்வவ் வுருக்கொடு என்றான். வருத்தும் உருப்புக்கள் பலவாகலின் அவ்வவ்வுரு என்று அடுக்கினான். தன் ஆண்மையை விதந்தோந்துவான் பொன்மலை பனிப்பினும் பனியா என் உயிர் என்றான். பனித்தல்-நடுங்குதல். புழைக்கை-யானை.முடங்குளை-சிங்கம். இவை அன்மொழித் தொகை. யானை சிங்கத்தைக் கனவில் காணினும் மிகவும் துன்புறும். ஆதலின் தலைவியை நினைவிற்காணுமிடத்தும் தான்பெரிதும் துன்புறுதற்கு உவமையாக்கினான். தொடி-வளையல். இளங்கொடி: அன்மொழித்தொகை.

1-9: வீதி.......................பெருமான்

     (இ-ள்) விதி குத்திய குறுந்தாள் பாரிடம்-ஓடியாடுதல் புரிந்த குறிய கால்களையுடைய பூதங்கள்; விண்தலை உடைத்து பிறைவாய் வைப்ப-வானிடத்தைக் கிழித்து ஆங்குள்ள பிறைத்திங்களைத் தம் பல்லோடிணையாக வாயின்கண் வையாநிற்பவும்; குணங்கு இனம்துள்ள-பேய்க்கூட்டங்கள் மகிழ்ந்து கூத்தாடா நிற்பவும்; கூளியும் கொட்ப-கூளிகளும் சுழன்று ஆடா நிற்பவும்; மத்தி அந்தணன் வரம்சொலி விடுப்ப-மத்தியந்தணன் என்னும் முனிவன் வரம்பெறுமாறு அறிவித்து விடுத்தலால்; தில்லை கண்ட புலிக்கால் முனிவனும்-தில்லை என்னும் திருப்பதியினைக் கண்ட வியாக்கிரபாத முனிவனும்; சூயை கைவிட-அநசூயை என்னும் பார்ப்பனி தன் கையிலிருந்து நிலத்திலே விட்டமையால்; பதஞ்சலியாகிய ஆயிரம் பணஅடவி அருந்தவத்து ஒருவனும்-பதஞ்சலி முனிவனாகிய ஆடிரம்பட நிரையினையுடைய அரிய தவத்தையுடைய ஒருவனும் என்னும் இவ்விருவரும்; கண்ணால் வாங்கி நெஞ்சு அறை நிறைப்ப-தம் கண்களாகிய வழிகளால் உட்கொண்டு தம் நெஞ்சமாகிய அறைகளிலே நிரப்பி வைக்கவும்; திருநடம் நவின்ற-காண்போர்க்கு வீட்டுச் செல்வத்தை நல்கும் இன்பக் கூத்தாடியருளிய; உலகு உயிர் பெருமான்-உலகிற்கும் உலகினண் வாழும் உயிர்கட்கும் உயிராகிய சிவபெருமானும் என்க.

     (வி-ம்.) வீதி-நேராக ஓடும் ஓட்டம். குத்துதல்-குதித்தல். பாரிடம்-பூதம். பிறை தம் பல்லிற்கு ஒப்பாக வாயில் வைப்ப என்பது கருத்து. குணங்கு கூளி என்பன பேயின் வகைகள். மத்தி யந்தணன்-ஒரு துறவி. வரம்பெறுமாறு சொல்லி விடுப்ப என்க. சொலி: இடைக்குறை. புலிக்கால் முனிவன்-புலிக்கால் போன்ற காலையுடைய முனிவன.் சூயை அனசூயை என்பதன் முதற்குறை. பணம்-படம். அடவி-காடு: ஈண்டு மிகுதி குறித்து நின்றது. திருக்கூத்தின் இன்பத்தினைப் புலிக்கான் முனிவனும் பதஞ்சலியும் கண்வழியாக உட்கொண்டு நெஞ்சில் நிரப்பிக்கொண்டனர் என்பது கருத்து. பிறகூத்துப் போலாது காண்போர்க்குப் பேரின்பச் செல்வத்தினை நல்குதலின் திருநடம் என்றார். உலகு: ஆகுபெயர். உயிர்க்குயிராகிய பெருமான் என்க. இறைவன் உயிர்க்குயிராய் இருப்பதன் என்பதனை,

உருவொடு கருவி யெல்லாம் உயிர்க்கொடு நின்று வேறாய்
வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன்
தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான்
வருபவ னிவைதா னாகியும் வேறுமாய் மன்னி நின்றே”
                                   (சித்தியார். 93)

எனவரும் சித்தியாரானும் உணர்க.

10-13: கடல்......................குன்றமும்

     (இ-ள்) கடல்மா கொன்ற-கடலிடத்தே முளைத்து நின்ற மாமரமாகிய சூரபதுமனைக் கொன்ற; தீபடர் நெடுவேல்-தீப்பிழம்பு பரவா நின்ற நெடிய வேற்படையினையுடைய; உருள் இணர் கடம்பின் நெடுந்தார் கண்ணியன்-தேருருளையொத்த மலர்க் கொத்துக்களையுடைய கடம்பினது மலராற் புனைந்த நெடிய தாரினையும் கண்ணியையு முடைய முருகப் பெருமான்; அரிமகள் விரும்பி-தேவேந்திரன் மகளாகிய தெய்வயானை நாய்ச்சியாரை விரும்பி; பாகம் செய்து-(பராசரன் மக்களை) பரிபக்குவமுறச் செய்து; களியுடன் நிறைந்த-மகிழ்ச்சியோடு நிறைந்துள்ள; ஒரு பரங்குன்றமும்-ஒப்பற்ற திருப்பரங்குன்றமும் என்க.

     (வி-ம்.) மா-மாமரமாகிய சூரபதுமன். உருள்-தேருருள். இது கடப்ப மலருக்குவமை. தார்-மார்பிலணியும் மாலை. கண்ணி-தலையில் அணியும் மாலை. இவற்றை,

“கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
 வண்ண மார்பின் தாருங் கொன்றை”
(புறநா. கடவுள்)

எனவரும் பிறசான்றோர் கூற்றானும் உணர்க. அரி-இந்திரன். பாகம்-பக்குவம். இனி அரிமகளை மணந்து ஒருபாகத்தே அமர்த்தி எனினுமாம்.

14-20: பொன்.......................கோட்டமும்

     (இ-ள்) பொன் அம் தோகையும்-பொன்னாலியன்ற ஆடையும்; மணி அரி சிலம்பும்-மாணிக்கப் பரல்களையுடைய சிலம்பும்; நிரைத்தலைச் சுடிகை-நிரையான தலைச் சுடிகையிலுள்ள; நெருப்பு உமிழ் ஆரமும்-தீப்போன்ற ஒளியை வீசுகின்ற கவுத்துவ மணிமாலையும்; வண்டுகிளை முரற்றிய-வண்டுகள் கைக்கிளை என்னும் பண்ணைப் பாடுதற்கிடனான; பாசிலை துளவும்- பச்சிலையாகிய துழாய் மாலையும்; மரகதம் உடற்றிய வடிவொடு மயங்க-மரகதமணியின் நிறத்தைக் கெடுத்த தன் திருமேனியோடு தலை மயங்கும்படி; மரக்கால் ஆடி-மரக்கால் என்னும் கூத்தினை ஆடியருளி; அரக்கர் கொன்ற-அசுரர்களைக் கொன்றொழித்த; கவைதலை மணிவேல் பிறைதலை கன்னி-கவைத்த தலையினையுடைய அழகிய சூலப்படையினை ஏந்தி இளம் பிறையினைத் தலையிலே சூட்டியருளிய கன்னியாகிய கொற்றவை; பரிந்த வடபால் பலிமண கோட்டமும்-விரும்பி எழுந்தருளிய வடதிசைக் கண்ணதாகிய ஊன் மணங்கமழும் திருக்கோயிலும் என்க.

     (வி-ம்.) தோகை-ஈண்டு ஆடை. அரி-பரல். தலைச்சுடிகை- ஒருவகை யணிகலன். கிளை-கைக்கிளை என்பதன் முதற்குறை. அஃதாவது ஒருவகைப் பண். துளவு-திருத்துழாய். உடற்றிய: உவமவுருபு. மரக்கால்-பதினொருவகை கூத்தினிளொன்று; அஃதாவது அவுணர் வஞ்சத்தால் வெல்லுதல் கருதிப் பாம்பு தேள் முதலியனவாக உருக்கொண்டு வருதலையுணர்ந்த கொற்றவை அவற்றை அழித்தற் பொருட்டு மரத்தாலாகிய காலைக்கொண்டு நின்று ஆடிய கூத்து என்க. இடனை “மாயவள் ஆடல் மரக்கால் அதற் குறுப்பு, நாமவகை யிற்சொலுங்கா னான்கு” எனவரும் அடியார்க்கு நல்லார் மேற்கோளானும் (சிலப். 3. 14. உரை) இன்னும்,

“ஆய்பொன் னிரிச்சிலம்புஞ் சூடகமு
     மேகலையு மார்ப்ப வார்ப்ப
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல்
     வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல்
     வாளமலை யாடுமாயிற்
காயா மலர்மேனி யேத்தி வானோர் கைபெய்
     மலர்மாரி காட்டும் போலும்”       (சிலப். 2. 12. 12.)

எனவரும் சிலப்பதிகாரத்தானும் உணர்க. இனி “பொன்னந் தோகையும்...--கோடமும்” என்னுந் துணையும் வரும் அடைமொழிகள் கொற்றவைக்கு உரியனவாகவும் இவற்றைத் திருமாலுக்குரியனவாகக் கருதிப் பழைய உரையாசிரியர் “பொன்னந் தோகை.....வடிவொடு மயங்க” என்னுந் துணையும் பிரித்துக் கொடுபோய் வாளா திருமாலுக்கு அடையாக்கினர். கொற்றவைக்குத் திருமாலுக்குரிய அடையாளங்களும் சிவனுக்குரிய அடையாளங்களும் உரியனவாம் என்பதனை,

ஆனைத்தோல் போர்த்துப் புலியு னுரியுடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலைமே னின்றாயால்
வானோர் வணங்க மறைமேன் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்
வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரியதிரி கோட்டுக் கலைமிசைமே னின்றாயால்
அரியரன்பூ மேலோ னகமலர்மேன் மன்னும்
விரிகதிரஞ் சோதி விலக்காகி யேநிற்பாய்
சங்கமுஞ் சக்கரமுந் தாமரைக் கையேந்திச்
செங்க ணரிமான் சினவிடைமே னின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை யுருவாய் மறையேத்த வேநிற்பாய்
ஆங்குக்,
கொன்றையுந் துளவமுங் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப்பிணைய றோண்மே லிட்டாங்
கசுரர் வாட வமரர்க் காடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே”
                        (சிலப். 2. 12. 8, 9, 10, 11)

எனவரும் இளங்கோவடிகள் திருவாக்கானும் உணர்க. கவைத்தலை மணிவேல் என்றது முத்தலைச் சூலத்தை. பிறைத்தலைக் கன்னி-கொற்றவை. கோட்டம்-கோயில்.

21-24: சூடகம்..............................பள்ளியும்

     (இ-ள்) சூடகம் தோள்வளை கிடந்து வில்வீச-கங்கணமும் தோள்வளையும் திருத்தோள்களிலே கிடந்து ஒளிவீசா நிற்ப; யாவர்தம் பகையும் யாவையின் பகையும்-யாவரது பகைமையையும் விலங்கு முதலிய அஃறிணை உயிர்களின் பகைமையையும்; வளனில் காத்து-உலகினை வளம் செய்தலாலே ஒழித்து உலகினைப் பாதுகாத்து; வருவன அருளும்-மேன்மேலும் வருகின்ற நலன்களை யெல்லாம் தந்தருளுகின்றவனும்; ஊழியும் கணம் எனெ உயர்மகன் பள்ளியும்-நெடிய ஊழிக்காலமும் தனக்கு ஒரு நொடிப்பொழுதாக வளர்கின்றவனும் ஆகிய வடுகக் கடவுளின் கோயிலும் என்க.

     (வி-ம்.) சூடகம்-ஒருவகை அணிகலன். வில்-ஒளி. யாவர்தம் பகையும் யாவையின் பகையும் எனவே உயர்திணை உயிர்கலால் வரும் பகையும் அஃறிணை யுயிர்களால் வரும் பகைமையும் என்றாயிற்று. இப்பகையெல்லாம் வறுமை காரணமாக வருதலின் அவற்றை ஒழித்துப் பாதுகாத்தருளுகின்றான் என்பது கருத்து. ஊழியும் கணம் என்றது அக்கடவுள் நித்தியன் என்பதுபட நின்றது. வடுகன்-வயிரவன்.

25-27: உவாமதி....................................உறையுளும்

     (இ-ள்) உவாமதி கிடக்கும் குண்டுகடல் கலக்கி- நிறைத்திங்கள் இருத்தற்கிடனான ஆழமான திருப்பாற்கடலைக் கடைந்து; மருந்து கைக்கொண்டு வானவர்க்கு ஊட்டிய-அக்கடலிற் றிரண்ட அமிழ்தத்தைக் கைக்கொண்டு தேவர்களை உண்பித்த; பாகப்பக்கம் நெடியோன்-சிவபெருமானுடைய ஒரு பாகத்திலுள்ள திருநெடுமால்; உறையுளும்-எழுந்தருளிய திருக்கோயிலும் என்க.

     (வி-ம்.) உவாமதி-நிறைதிங்கள். திங்கள் திருப்பாற் கடலில் பிறத்தலின் அது கிடக்கும் கடல் என்றார். குண்டுகடல்-ஆழமான கடல்; என்றது திருப்பாற் கடலை. மருந்து-அமிழ்தம். நெடியோன்-திருமால். உறையுள்-இருப்பிடம்.

28-32: தும்பி..............................பக்கமும்

     (இ-ள்) தும்பி உண்ணாத் தொங்கல் தேவர்-வண்டுகள் மூசாத மலர்மாலை யணிந்த தேவர்கள்; மக்களொடு நெருங்கிய வீதிப் புறமும்-இறங்கி வந்து மக்களோடே நெருங்குவதற்குக் காரணமான திருவிதியிடங்களும்; மதுநிறை பிலியிற் பூவொடு நெருங்கி-தேனை நிரம்பத் துளிக்கின்ற மலர்களோடே செறிவுற்று; சூர்அரக் கன்னியர் உடல்பணி செய்யும்-சூரா மகளிர்கள் தம்முடலையும் நடுங்குதல் செய்கின்ற; கடைக்கால் மடியும்-ஊழிக்காற்றும் தடைபடுதற்குக் காரணமான; பொங்கர் பக்கமும்-சோலைப் பகுதிகளும் என்க.

     (வி-ம்.) தேவர்கள் அணியும் மலர்மாலையில் வண்டுகள் மொய்த்தலின்மையின் தும்பியுண்ணத் தொங்கற்றேவர் என்றார்; பழைய உரையாசிரியர் இதற்குப் பொன்னரிமாலை எனப் பொருள் கூறினார். இறைவனை நாளும் வழிபடுதற்குத் தேவர்கள் வீதியின்கண் வந்து நிறைதலின் தேவர் மக்களொடு நெருங்கிய வீதி என்றார். பிலிற்றுதல்-துளித்தல். சூராக் கன்னியர்-ஒருவகைத் தேவமகளிர். தேவமகளிரின் உடலையும் நடுங்கச் செய்யும் கடைக்கால் என்க. இனிச் சூரர மகளிர் பொங்கரில் புகுவோர் உடலைப் பனி செய்யும் பக்கம் எனினுமாம். கடைக்கால்-ஊழிக்காற்று. பொங்கர்-சோலை.

33-37: ஊடி................................கூடல்

     (இ-ள்) ஊடி ஆடுநர்-தத்தந் தலைவரோடு ஊடித் தனித்தனி நீராடுகின்ற மகளிரை; பிணங்கி திரையொடு தோழியில் திர்க்கும்-தான் மாறுபட்டு அவர்களின் தோழிமார்போலே தன் அலையாகிய கைகளாலே அவர்தம் ஊடலைத் தீர்த்து வைக்கின்ற; வையைத் துழனியும்-வையைப் பேரியாற்றின் ஆரவாரமும்; அளவா ஊழிமெய்யொடு சூழ்ந்து-அளவு படுத்தப்படாத ஊழி இறுதியிலும் மெய்ம்மையால் சூழப்பட்டு; நின்று நின்று ஓங்கி-என்றும் நிலைபெற்று உயர்ந்து; நிலைஅறம் பெருகும்-நிலைபெறுதற்குக் காரணமான அறத்தை வளர்க்கின்ற; ஆனாப் பெரும்புகழ் அருள்நகர் கூடல்-நீங்காத பெரிய புகழையும் திருவருளையும் ஒருங்கே உடைய நகரமாகிய மதுரைய்ன்கண் என்க.

     (வி-ம்.) தன்பால் வந்து நீராடுகின்ற காதலர்கள் தம்முள் ஊடித் தனித்தனி நீராடுதலைப் பொறாத வையைமகள் தன் அலைக் கைகளால் மோதி அம்மகளிரை ஊடல் தீர்த்துத் தத்தம் கணவரைக் கூடும்படி செய்கின்றாள் என்பது கருத்து. ஊடி நீராடு மகளிர் பேரலை வரும்பொழுது அதற்கஞ்சித் தங்கணவரைத் தழுவிக்கொள்ளுதலை இங்ஙனம் கூறினர். தோழியின்- தோழியைப்போல. துழனி-ஆரவாரம். ஊழிக்காலத்திலும் தான் செய்த அறத்தாலே காக்கப்பட்டு நிலைத்து நின்று பின்னும் அவ்வறத்தையே பெருகும் கூடல் என்று புகழ்ந்தவாறு. தன்னை அடைந்தவர்க்குத் திருவருளும் கைகூடுதலின் அருள் நகர் என்றார். இனி அருள் அம்மையாகலின் அம்மைக்கே சிறந்துரிமையுடைய நகர் என்பார் அங்ஙனம் கூறினர் எனினுமாம்.

38-41: பெண்..........................கொன்றையன்

     (இ-ள்) பெண்உடல் பெற்ற-பெண்ணைத் தன் உடலில் ஒரு கூற்றிற் கொண்ட; பிறை சென்னியோன்-பிறை சூடிய முடியையுடையோனும்; பொன்தகடு பரப்பிய கருமணி நிரையென-பொன் தகட்டின்மேல் பரப்பப்பட்ட நீலமணியின் நிரல் என்று சொல்லும்படி; வண்டும் தேனும்-ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும்; மருள்கிளை முரற்றி-வியத்தற்குக் காரணமான பண்ணைப் பாடி; உடைந்து உமிழ் நறவு உண்டு-மலர்தலால் சொரியாநின்ற தேனைப் பருகி; உறங்கு தார் கொன்றையன்- இன்பத்துயில் கொள்ளுதற்குக் காரணமான கொன்றை மாலையை யுடையவனுமாகிய சோமசுந்தரக் கடவுளது என்க.

     (வி-ம்.) பெண்-உமை. சென்னி-முடி. பிறைச்சென்னியோன் என மாறுக. பொற்காடு-கொன்றை மலரிதழுக்கும் கருமணி அவ்விதழின்கண் மொய்க்கும் வண்டுகளுக்கும் உவமை. வண்டும் தேனும் என்புழி ஆண் பெண் வண்டுகள் என்பதுபட நின்றது. மருள்கிளை: வினைத்தொகை. முரற்றி முரற்ற என செயவென்னெச்ச மாக்கிக் காரணப் பொருட்டாக்கலுமொன்று. நறவு-தேன். பொற்றகட்டிற் பரப்பிய நீலமணி கொன்றைமலரில் மொய்த்திருக்கும் வண்டுக் கூட்டங்களுக் குவமை.

42-43: திருவடி..............................வனமுலை

     (இ-ள்) திருவடி புகழுநர் செல்வம் போலும்-அழகிய அடிகளைப் புகழ்ந்து பாடும் சான்றோரது செல்வம் வளருமாறு போலே; அண்ணாந்து எடுத்த அணிஉறு வனமுலை-மேலோங்கித் தலை நிமிர்ந்த அணிகலன்கள் மிக்க அழகுள்ள முலைகளானவை வளராநிற்கும் என்க.

     (வி-ம்.) தலைவியினுடைய கொங்கைகள் செல்வம்போல வளரும் என்க. அண்ணாத்தல்-நிமிர்தல். அணி-அணிகலன்கள். உறு: மிகுதிப் பொருட்டு. வனம்-அழகு.

44-45: அவன்..................................நுசுப்பு

     (இ-ள்) மலைமுலைப்பகை அட-மலைபோன்ற முலையாகிய பகை வருத்துதலாலே; மாழ்குறும் நுசுப்பு-வருந்துதலையுடைய அவளிடையானது; அவன் கழல் சொல்லுநர்-அக்கடவுள் திருவடியைப் புகழ்ந்து வாழ்த்துவொருடைய; அருவினை மானும்-தீர்த்தற்கரிய வினை தேய்வது போலே தேய்ந்திருக்கும் என்க.

     (வி-ம்.) மலைமுலை: உவமைத்தொகை. அட: காரணப் பொருட்டாகிய வினையெச்சம். மாழ்கல்-வருந்துதல். கழல்: ஆகுபெயர்.

46-47: மற்றவன்................................அல்குல்

     (இ-ள்) மணிப்பாம்பு அல்குல்-மணிமுற்றிய பாம்பின் படத்தையொத்த அவள் அல்குலானது; அவன் அசைத்த மாசுணம்-அச் சோமசுந்தரக் கடவுள் அரையிற் கட்டின பாம்பானது; பரப்பி அமைத்தது கடுக்கும்-தன் படத்தை விரித்துப் பொருத்தி வைத்தாற்போன்றிருக்கும் என்க.

     (வி-ம்.) மணிப்பாம்பு அல்குல் என்றது உவமை குறியாது வாளா அடை மாத்திரையாய் நின்றது. அசைத்தல்-கட்டல். மாசுணம்-பாம்பு. கடுக்கும் என்பதனை ஈண்டும் ஒட்டுக.

48-49: இருகுழை........................கடுக்கும்

     (இ-ள்) இருகுழை கிழிக்கும்-அவளுடைய இரண்டு செவிகளையும் சென்று சென்று கிழிக்கின்ற; அரி மதர் மலர் கண்-செவ்வரி பரந்த மதர்த்த மலர்போன்ற அவளுடைய கண்களானவை; ஆங்கு அவன் தரித்த கலைமான் கடுக்கும்- அப்பெருமான் தன் கையின்கணேந்திய கலைமானின் கண்களை ஒத்திருக்கும் என்க.

     (வி-ம்.) ஆங்கு: அசை. குழை: ஆகுபெயர். அரி-செவ்வரி. மதர்கண், மலர்க்கண், அரிக்கண் எனத் தனித்தனி ஒட்டுக. கலைமான்: ஆகுபெயர்.

     இனி, இதனை, தோழி! என் உயிர்வாட்டிய இளங்கொடிக்கு வனமுலை திருவடி புகழுநர் செல்வம்போலப் பெருகி இருக்கும் நுசுப்பு அவன்கழல் பாடுநர் வினைபோலத் தேய்ந்திருக்கும்.அல்குல் அவன் அசைத்த மாசுணம் படத்தைப் பரப்பி வைத்தது போன்றிருக்கும். கண் அவன் ஏந்திய கலைமான் கண்ணை ஒக்கும் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.