பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 44

நேரிசையாசிரியப்பா

 
   
5
  இலதெனி னுளதென் றுள்ளமோடு விதித்துஞ்
சொல்லா நிலைபெறுஞ் சூளுறின் மயங்கிச்
செய்குறி குணனுஞ் சிந்தையுட் டிரிவு
முழைநின் றறிந்து பழங்கண் கவர்ந்துங்
கண்ணெதிர் வைகி முகன்கொளிற் கலங்கியும்
10
  வழங்குறு கிளவியிற் றிசையென மாழ்கியு
மொருதிசை நோக்கினு மிருக்கினு முடைந்தும்
போக்கென வுழைய ரயர்ப்பிடை கிளப்பினு
முலைக்குவட் டொழுக்கிய வருவிதண் டரளஞ்
செம்மணி கரிந்து தீத்தர வுயிர்த்தும்
15
  போமென் வாய்ச்சொற் கேட்பினும் புகைந்துங்
கொள்ளா ரறுதியுங் கொண்டோ ரிசைத்தலு
மீதெனக் காட்டிய மயின்மட வரற்கு
முன்னொரு வணிகன் மகப்பே றின்மையின்
மருமான் றன்னை மகவெனச் சடங்குசெய்
20
  துள்ளமுங் கரணமு மவனுழி யொருக்கி
முக்கவர்த் திருநதி துணையுடன் மூழ்கி
யப்புலத் துயிர்கொடுத் தருட்பொருள் கொண்டபின்
மற்றவன் றாயம் வவ்வுறு மாக்கள்
காணிகைக் கொண்ட மறுநிலை மைந்தனை
25
  நிரைத்துக் கிளைகொ ணெடுவழக் குய்த்தலு
மைந்தனுங் கேளிரு மதிமுடிக் கடவுணின்
புந்தியொன் றன்றிப் புகலில னென்றய
ரவ்வுழி யொருசா ரவன்மா துலனென
வறிவொளி நிறைவே யோருருத் தரித்துவந்
  தருள்வழக் கேறி யவர்வழக் குடைத்த
கூட னாயகன் றாள்பணி யாரென
எவ்வழிக் கிளவியிற் வறிச்
செவ்விதிற் செல்லுந் திறனினி யானே.

(உரை)
கைகோள்: களவு: தலைவன். கூற்று.

துறை: சொல்லாதேகல்.

     (இ - ம்.) இதற்கு, "ஒன்றாத் தமரினும்" (தொல், அகத், 41.) எனவரும் நூற்பாவின்கண் ‘தோழியொடு வலிப்பினும்” எனவரும் விதி கொள்க.

1 - 3: இலது . . . . . . . திரிவும்

     (இ - ம்.) இலதெனின் உளது என்று உள்ளமொடு விதித்தும் - யான் நின்னைப் பிரிதல் இல்லை எனச் சொல்லுமிடத்தே அவள் தன் நெஞ்சத்தே இவனுக்குப் பிரியுங் குறிப்புண்டென்று கருதி; சொல்லாநிலை பெறும் - மனம் வருந்தி யாதொன்றும் மறுமொழி சொல்லாளாய் வாளாவிருப்பள்; சூள் உறின் செய்குறி குணனும் மயங்கி சிந்தையுள்ம திரிவும் - அதுகண்டு யான் நின்னைப் பிரியேன் எனச் சூள் கூறுவேனாயின் என் செய்கைகளையும் குணங்களையும் ஆராய்ந்து; நெஞ்சு திரிந்து-தன் நெஞ்சத்துள் வேறுபட்டும் என்க.

     (வி-ம்.) இலது - பிரியும் கருத்து இல்லை. உளது - பிரியுங் கருத்து உண்டு. விதித்தல் - உறுதிகோடல். சொல்லாநிலை - மௌனமாக விருத்தல்.

4 - 5: உழை . . . . . . . கலங்கியும்

     (இ-ள்) உழைநின்று அறிந்து பழங்கண் கவர்ந்தும் - அன்றியும் யான் என் ஏவலிளைஞருடன் பேசும்பொழுது பக்கத்தே நின்று அவற்றைக் கேட்டறிந்து அம்மொழிகளுள் தான் துன்பப்படதற் கேதுவானவற்றைக் கவர்ந்துகொண்டு வருந்தியும்; கண் எதிர்வைகி முகன் கொளின் கலங்கியும் - அன்றியும் யான் அவள் கண்ணெதிரே நின்று அவாவினால் அவள் முகத்தை உற்று நோக்கின் இந்நோக்கமும் பிரிதற்குறிப்புடைத்து என்று தன்னுட் கருதி மனஞ்சுழன்றும் என்க.

     (வி-ம்.) உழை - பக்கம், யான் பேசும் மொழிகளை அறிந்து என்க. பழங்கண் - துன்பந்தரும் தொழிகள்; ஆகுபெயர், அம் மொழிகளுள் வைத்துத் துன்பம் தருவனவற்றைக் கவர்ந்து என்க. முகன் - முகம்.

6 - 7: வழங்குறு . . . . . .. உடைந்தும்

     (இ-ள்) வழங்குறு கிளவியில் திசைஎன மாழ்கியும் - அன்றியும் யான் பேசுகின்ற மொழிகளுள் வைத்து யான்பிறி தொன்றற்காகத் 'திசை' என்று கூறுமளவிலே மயங்கியும்; ஒரு திசை நோக்கினும் இருக்கினும் - அன்றியும் யான் யாதானும் ஒரு திசையை நோக்கினாலும் அல்லது ஒரு திசையை நோக்கினாலும் அல்லது ஒரு திசைநோக்கி இருந்தாலும்; உடைந்தும் - இவையெல்லாம் பிரிவுக் குறிப்புக்களே என்க்கருதி மனமுடைந்தும் என்க.

     (வி-ம்.) கிளவி - சொல். மாழ்கல் - மயங்கல், இவையெல்லாம் பிரிவுக் குறிப்புக்கள் எனக்கருதி உடைந்தும் என்க.

8 - 10: போக்கென . . . . . . . உயிர்த்தும்

     (இ-ள்) உழையர் அயர்ப்புஇடை போக்கு எனக் கிளப்பினும் - அன்றியும் ஏவல் இளைஞர் தம் மறவி காரணமாகப் போக்கு உளது என்று கூறினும்; முலைகுவட்டு ஒழுங்கிய அருவி - மனம் வருந்தித் தன் முலைகளாகிய மலைகளின்மேல் வீழ்த்திய கண்ணீரருவியோடே; தண்தரளம் செம்மணி கரிந்து தீத்தர உயிர்த்தும் - அம்முலைகளின் மேலணிந்த குளிர்ந்த முத்துமாலைகளும் சிவந்த மணிமாலைகளும் வெப்பத்தால் கரிந்து தீந்து போகும்படி நெருப்புண்டாகப் பெருமூச்செறிந்தும் என்க.

     (வி-ம்.) அயர்ப்பு - மறவி. முலையாகிய குவடு என்க. கண்ணீரருவி என்க. தரளம் - முத்து. உயிர்த்தல் - பெருமூச்செறிதல்.

11-13: போமென் . . . . . . . மடவரற்கு

     (இ-ள்) போம்என் வாய்சொல் கேட்பினும் - அயலிலே பிறர் யாரேனும் தம்முட் பேசுங்கால் 'போவான்' என்று கூறக் கேட்பின் அக்கூற்றினைத் தீநிமித்தமாகக் கருதி; புகைந்தும் - தன் நெஞ்சு கொதித்தும்; கொள்ளார் அறுதியும் - பிரிவென்னும் துன்பத்தினை மேற்கொள்ளாத நல்லோருடைய உறுதிப்பாட்டினையும்; கொண்டோர் இசைத்தலும் - பிரிவினை மேற்கொண்டோர் கூறுங் கூற்றுக்களும், ஈதுஎனக் காட்டிய மயில் மடவரற்கு - இத்தன்மையன என்று எனக்கு எடுத்துக் கூறிய மயில்போலும் மடவரற்கு - இத்தன்மையன என்று எனக்கு எடுத்துக் கூறிய மயில்போலும் மடப்பத்தையுடைய தலைவிக்கு என்க.

     (வி-ம்.) போம்என் வாய்ச்சொல் என்றது புள்ளினை. அஃதாவது ஒரு காரியங் கருதி யிருப்போர் அதுபற்றி மனங்கலங்குங்கால் அயலிலே பிறர்பேசும் பேச்சுக்களிலே வரும் சில சொற்களை நன்னிமித்தமாகவோ தீநிமித்தமாகவோ அச்சொல்லின் தன்மைக்கேற்ப உட்கோடல், இதனை விரிச்சி என்ப, ஈண்டுத் தலைவி அயலிலே பிறர் கூறும் மொழிகளிலே போவான் என எழுந்த கொல்லைத் தனக்குத் தீ நிமித்தமாகக் கொள்கின்றாள் என்றபடி, கொள்ளார் கொண்டோர் என்பன நிரலே பிரிவினை மேற்கொள்ளார் எனவும் பிரிவினை மேற்கொண்டோர் எனவும் பொருள்பட நின்றன. ஈது: ஒருமை பன்மை மயக்கம். மடவரல் - மடப்பம் வருதற்குக் காரணமானவள்.

14-18: முன் . . . . . . . கொண்டபின்

     (இ-ள்) முன்ஒரு வணிகன் - முற்காலத்தே ஒரு செட்டி; மகப்பேறு இன்மையின் - தனக்குப் பிள்ளைப் பேறில்லாமையால் மருமான் தன்னை மகவு என சடங்குசெய்து - தன் தங்கை மகனாகிய மருமகனைத் தனக்குப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு அதற்குரிய சடங்குகளையும் செய்து; உள்ளமும் கரணமும் அவனுழி ஒருக்கி - தன் உயிரையும் மனமுதலிய உட்கருவிகளையும் அவன்பால் ஒருங்கே வைத்து; முக்கவர் திருநதி துணையுடன் மூழ்கி - பின்னொருகால் அழகிய கங்கை, யமுனை, வாணி என்னும் மூன்று கிளைகளாக வந்து ஓரிடத்தே கூடும் முக்கூடலிலே தன் மனைவியோடே சென்று நீராடி; அப்புலத்து உயிர் கொடுத்து - அவ்வட நாட்டிலேயே உயிர்நித்து அப்புண்ணியத்தினால்; அருள் பொருள் கொண்டபின்- அச்செட்டி திருவருளாகிய பொருளை மறுமையிலே கைக்கொண்ட பின்னர் என்க.

     (வி-ம்.) மருமான் - உடன் பிறந்தாள் மகன். உள்ளம்: ஆகுபெயர், உயிர் என்க. காரணம் - ஈண்டு அந்தக்கரணம். அவை மனம், சித்தம் புத்தி, அகங்காரம் என்பன. அவன் - அம்மருமகன் துணை - மனைவி, அப்புலம் - அவ்வடநாடு. தீர்த்த யாத்திரையில் இறப்போர் துறக்கம் பெறுதலின் உயிர்கொடுத்து அருட்பொருள் கொண்டார் என்றார்.

19-21: மற்றவன் . . . . . . . உய்த்தலும்

     (இ-ள்) மற்றுஅவன் தாயம் வவ்வுறும் மாக்கள் - அச்செட்டியினுடைய தாயத்தராய் அவன் பொருளைக் கவரும் எண்ணமுடைய சுற்றத்தார்; காணி கைக்கொண்ட மறுநிலை மைந்தனை - முன்னம் அவனால் மகவாகக் கொள்ளப்பட்டு அவனுடைய நிலமுதலிய பொருள்களைக் கைக்கொண்ட மறுநிலை கைக்கொண்டிருந்த வேறுகுடியிற் பிறந்த மகனாகிய அச்செட்டி மகனை; கிளை நிறைத்துக்கொள் நெடுவழங்கு உய்த்தலும் - சுற்றத்தாரைக் கூட்டி அவையினை நிரப்பி அப்பொருளைக் கைக்கொள்ளுதற்குக் காரணமான நீண்ட வழக்கினை மேற்கோடலாலே என்க.

     (வி-ம்.) மற்று வினைமாற்றின்கண் வந்தது. காணி - நிலம். மறுநிலை மைந்தன் - வேறு குடிப்பிறப்புடைய மகன். கிளை- சுற்றத்தார். கிளை நிறைத்துக்கொள் நெடுவழக்கு என மாறுக. வழக்கு உய்த்தல் - வழக்கினை நடத்துதல்.

22-25: மைந்தனும் . . . . . . . வந்து

     (இ-ள்) மைந்தனும் கேளிரும் - வழக்கிடப்பட்ட அச்செட்டிமகனும் அவன் சுற்றத்தாரும் வேறுபுகல் காணாராய் இறைவன் திருக்கோயிலை அடைந்து; மதிமுடி கடவுள் நின் புந்தி ஒன்று அன்றிபுகல் இலன் என்று - பிறைசூடிய சோம சுந்தரக் கடவுளே! உனது திருவுளமாகிய ஒரு புகலிடமல்லாமல் இச்சிறுவன் பிறிதோர் ஆதரவும் இலன் என்று கூறி; அயர் அவ்வுழி - நெஞ்சு வருந்துகின்ற அந்த நிலையிலே; ஒருசார் அவன் மாதுலன் என - ஒரு பக்கத்திலிருந்து அச்செட்டி மகனுடைய மாமனைப்போலவே; அறிவு ஒளிநிறைவு-மெய்யறிவும் ஒளி நிறைவுமாகிய அக்கடவுள்; ஓர் உரு தரித்து வந்து - ஒரு வடிவங்கொண்டு அவ்வவையின்கண் வந்து என்க.

     (வி-ம்.) மைந்தன் - வழக்கிடப்பட்ட செட்டிமகன், கேளிர் - அவன் சுற்றத்தார். மதி - பிறை, கடவுள் : விளி, புந்தி-உள்ளம். புகல் - ஆதரவு. அவ்வுழி- அந்நிலையில், மாதுலன் - மாமன, அறிவொளி நிறைவு - கடவுள். அவ்வவைக்கண் வந்து என்க.

26-29: அருள் . . . . . . . யானே

     (இ-ள்) அருள் வழக்கு எறி - தன் அருள்காரணமாக வழக்குப்பேசி; அவர் வழக்கு உடைத்த - மாற்றாராகிய அத் தாயத்தாரது வழக்குத் தோற்கச் செய்தருளிய; கூடல் நாயகன் - மதுரைக்கு இறைவனாகிய அக்கடவுளினது; தாள்பணியார் என- திருவடிகளைப் பணியாதார் போன்று; இனி யான் எவ்வழிகிளவியின்கூறி - இனி யான் எவ்வாற்றால் என் சொல்லால் என் பிரிவினை (அவளுக்குச்) சொல்லி; செவ்விதின் செல்லுந்திறன் - நேர்மையாகச் செல்லும் வகை உளதாம். ஆதலால் யான் அவட்குச் சொல்லாமலே சென்று பொருளீட்டி விரைந்து வருவேன். அதுகாறும் அவளை நீ ஆற்றுவித்துக் கொண்டிருப்பாயாக என்க.

     (வி-ம்.) ஆதலால் யான் அவட்குச் சொல்லாமலே சென்று பொருளீட்டி விரைந்து வருவேன். அதுகாறும் அவளை நீ ஆற்றுவித்துக் கொண்டிருப்பாயாக என்பது குறிப்பெச்சம். இனி, விதித்தும் திரிந்தும் கவர்ந்தும் கலங்கியும் மாழ்கியும் உடைந்து உயிர்த்தும் புகைந்தும் அறுதியும் இசைத்தலும் காட்டிய மடவரற்கு யானினிக் கூடனாயகன்றாள் பணியாரென எவ்வழிக்கிளவியிற் கூறிச் செல்லுந் திறனென வினைமுடிவு செய்க. மெய்ப்படும் பயனும் அவை.