பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 45

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நின்றறி கல்வி யொன்றிய மாந்தர்
புனைபெருங் கவியுட் டருபொரு ளென்ன
வோங்கிப் புடைபரந் தமுதமுள் ளூறிக்
காண்குறி பெருத்துக் கச்சது கடிந்தே
யெழுத்துமணி பொன்பூ மலையென யாப்புற்
10
  றணிபெரு முலைமேற் கோதையு மொடுங்கின
செங்கோ லரசன் முறைத்தொழில்போல
வமுதமும் கடுவும் வாளும் படைத்த
மதர்விழித் தாமரை மலர்ந்திமைத் தமர்த்தன
செய்குறை முடிப்பவர் செனனம் போலப்
15
  பதமலர் மண்மிசைப் பற்றிப் படர்ந்தன
வமுதம் பொடித்த முழுமதி பெய்ய
முகம் வியர்ப் புறுத்தின வுள்ளமுஞ் சுழன்றன
விதழிங் தும்பையு மதியமுங் கரந்து
வளைவிலை மாக்கள் வடிவெடுத் தருளி
20
  முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால்
வீதி கூறி விதித்தமுன் வரத்தாற்
கருமுகில் விளர்ப்ப வறனீர் குளிப்பக்
கண்புதை யாப்புத் திணயிருள் விடிய
வுடறொறும் பிணித்த பாவமும் புலரக்
25
  கண்டநீள் கதுப்பினர் கைகுவி விடித்துக்
குருகணி செறித்த தனிமுத னாயகன்
குருகு மன்னமும் வால்வளைக் குப்பையை
யண்டமும் பார்ப்பு மாமென வணைக்கும்
மலைநீர்ப் பழன முதுநகர்க் கூட
  லொப்புடைத் தாயவிப் பொற்றொடி மடந்தை
யணங்கின ளாமென நினையல்
பிணங்கி வீழ்ந்து மாழ்குறு மனனே.

(உரை)
கைகோள் : களவு தலைவன் கூற்று

துறை: தெளிதல்

     (இ - ம்.) இதற்கு

"வண்டே இழையே வள்ளி பூவே
 கண்ணே அலமரல் அமைப்பே அச்சமென்று
 அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ
 நின்றவை களையுங் கருவி என்ப"       (தொல். கள. 4)

எனவரும் விதி கொள்க.

28: பிணங்கி . . . . . . . . . . மனனே

     (இ-ள்) பிணங்கி வீழ்ந்து - என்னோடு மாறுபட்டு இவளைப் பெரிதும் விரும்பி; மாழ்குறும் மனனே - மயங்கா நின்ற என் நெஞ்சமே கேட்பாயாக! என்க.

     (வி-ம்.) பிணங்குதல் - தான் இழுத்து நிறுத்தவும் நில்லாது காட்சிப் புலன்மேற் சொல்லுதல். வீழ்தல் - விரும்புதல். கேள் என்பது எச்சம்.

14 - 16: இதழியும் . . . . . . . . . . வாக்கால்

     (இ-ள்) இதழியும் தும்பையும் மதியமும் கரந்து - தான் இயல்பாக வணிந்துள்ள கொன்றை மலர் மாலையையும் தும்பை மலர் மாலையையும் இளைய பிறைத்திங்களையும் மறைத்துக் கொண்டு; வளைவிலை மாக்கள் வடிவு எடுத்தருளி- வளையல் விற்கும் வணிக மாக்களது வடிவத்தை மேற்கொண்டருளி; முத்தமிழ் நால்மறை முளைத்தருள் வாக்கால் - இயலும் இசையும் நாடகமும் ஆகிய மூன்று வகைப்பட்ட தமிழும் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வகைப்பட்ட வேதங்களும் தோன்றுதற்கிடனான தன்னுடைய அருள் வாக்கினாலே என்க.

     (வி-ம்.) இதழி - கொன்றை. மதி - ஈண்டுப்பிறை. வளைவிலை மாக்கள்- வளையல் விற்கும் வணிகர். தென்மொழியும் வடமொழியும் சிவபெருமானாற் றோற்றுவிக்கப்பட்டன. ஆதலின் முத்தமிழ் நான் மறை முளைத்தருள் வாக்கு என்றார். முத்தமிழ் - இயல் இசை நாடகம் என்பன. நான்மறை - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன.

" விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள்
வடமொ ழிக்குரைத் தாங்கியன் மலயமா முனிக்குத்
திடமு றுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொன்
மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ"
                           (திருவிளை. திருநாட். 56)

என்றார் பரஞ்சோதி முனிவரும். இனி,

" உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்
வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி
நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க்கடவு டந்த தமிழ்தந்தான்"
                               (கம்ப. அகத். 41)

எனக் கம்ப நாடரும் ஓதுதல் உணர்க.

18-20: விதி . . . . . . . . . . புலர

     (இ-ள்) வீதிகூறி முன்விதித்த வரத்தால் - மதுரைமாநகரத்தின் வீதியிலே சென்று விலைகூறி முற்காலத்தே முனிவர் விதித்தருளிய வரம் காரணமாக; கருமுகில் விளர்ப்ப - கரிய முகில் வெளிறாகவும்; அறல்நீர் குளிப்ப - கருமணல் நீரிலே மூழ்கிப் போகவும்; கண்புதை யாப்புத் திணி இருள் - காண்போர் கண்களைப் புதைத்திடுகின்ற உறுதியினையுடைய திணிந்த இருள் பிழம்பானது; விடிய - விடிந்தொழியவும்; உடல்தொறும் பிணித்த பாவமும் புலர - உடம்புகள் தோறும் பிணிக்கப்பட்ட தீவினைகள் ஒழியவும் என்க.

     (வி-ம்.) வீதி - மதுரை நகரத்து வீதிகள். முன்பு தாருகவனத்து முனிவர்கள் காபாலியாகிய பலிக்கு வந்த இறைவனைக் கண்டு தம் மனைவிமார் கற்புத்திரிந்தார் என வெகுண்டு நீவிர் மதுரையின்கண் வணிக மகளிராய்ப் பிறப்பீராக எனச் சபித்தாராக; அதுகேட்ட அம்மகளிர் வருந்த அங்குச் சோமசுந்தரக் கடவுள் வந்து நும்மைக் கைதீண்டும் வழி இச் சாபங்கழியும் என வரமீந்தாராக, அவ்வரங் காரணமாக இறைவன் வளையல் விலைகூறிச் சென்றமையின் முன்விதித்த வரத்தால் என்றார். இறைவன் வெளிப்பாட்டினால் கருநிறம் பெற்ற பொருள்களும் வெளிறாயின என்பர் கருமுகில் விளர்ப்ப அறல் நீர் குளிப்ப என்றார். பாவம் கருநிறமுடைத் தென்பவாகலின் இங்ஙனங் கூறினார். அவர் வரவினால் உலகத்தைச் சூழ்ந்துள்ள துயரவிருளெல்லாம் ஒழிந்தது என்பார் கண்புதை இருள்விடிய என்றார். அவர் வரவினால் உயிர்களைப் பற்றியிருந்த தீவினைகளெல்லாம் ஒழிந்தன வென்பார் உடல்தொறும் பாவமும் புலர என்றார்.

21 - 22: கண்ட . . . . . . . . . . நாயகன்

     (இ-ள்) கண்ட - தன்னெதிர் வந்து தன்னைக்கண்ட; நீள்கதுப்பினர் கைகுவிபிடித்து - நீண்ட கூந்தலையுடைய வணிக மகளிருடைய கைகளை நன்கு குவியுமாறு பிடித்து; குருகு அணி செறித்த தனிமுதல் நாயகன் - வளையல் என்னும் அணியைச் செருகிய ஒப்பற்ற முழுமுதற் கடவுளாகிய இறைவனது என்க.

     (வி-ம்.) கண்ட - தன்னை எதிர்வந்து கண்ட என்க. கதுப்பினர்- கூந்தலையுடையோர். குவிய என்னும் செயவெனெச்சத்தீறு கெட்டது. குருகு- வளையல், அணி - அணிகலன், நாயகன் - இறைவன்.

23 - 26: குருகு . . . . . . . . . . மடந்தை

     (இ-ள்) குருகும் அன்னமும் - நாரைகளும் அன்னப்பறவைகளும்; வால்வளைக் குப்பையை - வெள்ளிய சங்குக் கூட்டங்களை; அண்டமும் பார்ப்பும் ஆம்என - தத்தம் முட்டைகளும் குஞ்சுகளுமாம் என்று கருதி; அலைநீர் பழனம் - அலை எறிகின்ற நீரினையுடைய கழனிகளாற் சூழுப்பட்ட; முதுநகர் கூடல் ஒப்ப உடைத்தாய - பழைய நகரமாகிய மதுரையை ஒப்பானவளாகிய; இப்பொன்தொடி மடந்தை - இந்தப் பொன் வளையலணிந்த நங்கையினுடைய என்க.

     (வி-ம்.) குருகு - நாரை. வால்வளை - வெண்மையான சங்கு. குப்பை- கூட்டம். அண்டம் - முட்டை. பார்ப்பு - குஞ்சு. பழனம் - கழனி, பொதுநிலமுமாம், மதுரையைத் தனக்கு ஒப்பாக உடையளாகிய மடந்தை என்றவாறு, மடந்தை - ஈண்டுப் பருவங்குறியாது நங்கை என்னும் பொருள்பட நின்றது.

1 - 6: நின்று . . . . . . . . . . . ஒடுங்கின

     (இ-ள்) நின்று அறிகல்வி - கற்றலின்கண் நிலைபெற்றிருந்து அறியத்தக்க கல்வியை; ஒன்றிய மாந்தர்புனை - பொருந்திய நல்லிசைப் புலவர்களாலே இயற்றப்பட்ட; பொருங்கவியுள் தருபொருள் என்ன-பெரிய செய்யுள் தன்னுள்ளிருந்து வழங்குகின்ற பொருள்போல; ஒங்கி புடைபரந்து - உயர்ந்து பக்கங்களிலே பரந்து; உள்அமுதம் ஊறி - உள்ளே அமுதம் ஊற்றெடுத்து; காண்குறி பெருத்து-காண்டற்குரிய நல்லிலக் கணத்தோடே பருத்து; கச்சுக் கடிந்து - வாரைக் கிழித்து; எழுத்து என மணி என பொன் என பூ என மலை என - எழுத்தென்றும், மணி என்றும் கொன் என்றும், மலர் என்றும், மலை என்றும் கூறப்படும் இவற்றோடு; யாப்பு உற்று-தொடர்பு பெற்று; அணிபெறும் முலைமேல் - அழகுபெற்ற முலைமேல் அணிந்த ; கோதையும் ஒடுங்கின -மாலைகளும் வாடிக் கிடந்தன காண் என்க.

     (வி-ம்.) நின்று அறிதலாவது - கற்றலிலே நிலைத்து நின்று அறிதல். கலிபுனையும் மாந்தர் என்றமையால் நல்லிசைப் புலவர் என்பது பெற்றாம். புனைதல் - இயற்றுதல். நல்லசெய்யுள் ஆழ்ந்து நோக்குந்தோறும் உயர்ந்த பொருளைத் தந்து பெரிதும் விரிதல் இயல்பாகலின் ஓங்கப்புடை பரந்துள்ள முலைக்கு உவமையாயிற்று. செய்யுள் அங்ஙனம் பொருள் தருதலை,

"எற்பொரு நாகர்த மிருக்கை யீதெனக்
 கிற்பதோர் காட்கிய தெனினுங் கீழுறக்
 கற்பக மனையவக் கவிஞர் நாட்டிய
 சொற்பொரு ளாமெனத் தோன்றல் சான்றது"
                                (கம்ப. பம்பா, 6)

எனவரும் கம்ப வாக்கானு முணர்க. அமுதம் உள்ளூறுதலாவது பயில்வார்க்கு அமுதம் போன்ற சுவை உள்ளத்தே ஊறுதல். இது செய்யுளுக்கும் முலைக்கும் ஒத்தலுணர்க. காண்குயி: வினைத்தொகை, குறி - இலக்கணம். இனி, செய்யுளியற்றும் புலவர் எழுத்து, மணி, பொன், பூ, மலை என்னும் இம்மங்கலச் சொல்லைக்கொண்டு யாத்தலும் முலை தொய்யிலெழுதப்படுதலும் பொன்னாலும் மணியாலும் பூவாலும் இயன்ற மாலைகளை யணிதலும் மலையை யொத்தலும் உணர்க. அணி பெறுதல் இரண்டற்கும் ஒக்கும். கோதை - மாலை.

7 - 9: செங்கோல் . . . . . . . . . . அமர்த்தன

     (இ-ள்) செங்கோல் அரசன் - செங்கோலேந்திய மன்னனுடைய; முறைத்தொழில் போல - முறைசெய்யும் தொழிலைப் போல; அமுதமுங் கடுவும் வாளும் படைத்த - அமுதத் தன்மையும் நஞ்சின் தன்மையும் வாளின் தன்மையும் பெற்ற; மதர்விழி தாமரை - மதர்த்த விழிகளாகிய தாமரை மலர்கள்; மலர்ந்து இமைத்து அமர்த்தன - விரிந்து இமைத்துப் பொருதன காண் என்க.

     (வி-ம்.) செங்கோல் - செங்கோன்மை. செங்கோல் அரசற்கு அளியும் தெறலும் வாள் முதலிய படைக்கலங்களும் வேண்டப்படுதல் போல இவள் விழிகளிடத்தும் அளியும் தெறலும் படைக்கலத் தன்மையும் இருந்தன என்பது கருத்து. அமுதம் அளிக்கும், கடு தெறலுக்கும் வாள் வடிவத்திற்கும் உவமவாகு பெயர். அமர்த்தல் - பொருதுதல்.

10 - 11: செய்குறை . . . . . . . . . . படர்ந்தன

     (இ-ள்) செய்குறை முடிப்பவர் செனனம் போல - முன்பு செய்த தவத்தின் குறையைச் செய்து முடிப்பதற்கு வந்து பிறந்தவரது பிறப்புப்போல; பதமலர்- இவளுடைய அடிகளாகிய மலர்; மண்மிசைப் பற்றிப் படர்ந்தன - நிலத்தின்மேல் மெல்லப் பொருந்தி நடவாநின்றனகாண் என்க.

     (வி-ம்.) தவத்தின் குறையை முடிக்க வந்து பிறந்தவர் உலகியலில் அழுந்தாமல், பட்டும் படாமல் ஒழுகுதல்போல இவளடியும் ஏனையோர் அடிபோல் நிலத்தின்கண் அழுந்தாமல் மெல்லெனப் பொருந்தி நடந்தன என்பது கருத்து. செய்குறை- முற்பிறப்பிற் செய்துவிட்ட தவக்குறை. சென்னம்- பிறப்பு, பதம் - பாதம், படர்ந்தன- நடவாநின்றன.

12 - 13: அமுதம் . . . . . . . . . . சுழன்றன

     (இ-ள்) முகம் - இவளுடைய முகத்தின்கண்; அமுதம் பொடித்த முழுமதி என்ன வியர்ப்புறுத்தின - அமுதத்துளிகளரும்பின நிறைத்திங்கள்போல வியர்வைத்துளிகள் அரும்பா நின்றன; உள்ளமும் சுழன்றன-இவள் மனமுதலியனவும் சுழலாநின்றன என்க.

     (வி-ம்.) முகத்திற்கு நிறைமதியும் வியர்வைத் துளிகளுக்கு அதன்கண் துளிக்கும் அமுதத் துளிகளம் உவமை. உள்ளம் மனம் சித்தம் புத்தி அகங்காரம் என நான்காகலின் சுழன்றன என்றார்.

27: அணங்கினள் . . . . . . . . . . நினையல்

     (இ-ள்) அணங்கினள் ஆம்என - இங்ஙனமிருத்தலாலே இவள் மானிடமகளே தெய்வமகள் என்று; நினையல் - எண்ணற்க! என்க.

     (வி-ம்.) அணங்கினள் - தெய்வமகள், நினையல் - நினையாதே. ஆதலால் இவள் மானிடமகளேகாண் என்பது குறிப்பெச்சம்.

     இதனை, என்னுடைய மனனே! இதழி முதலிய கரந்து வளைவிலை மாக்கள் வடிவெடுத்து நீள் கதுப்பினர் கைகள் குவியப்பிடித்து வளையல் செறித்த நாயகனது கூடலை ஒத்த இம்மடந்தையின் முலைமேல் கோதையும் வாடின. விழித்தாமரையும் மலர்ந்து இமைத்து அமர்த்தன. பதமலர் மண்மிசைப் பற்றிப்படர்ந்தன. முகத்தில் வயிர்வை துளித்தன. உள்ளங்களும் சுழன்றன. ஆதலால் இவள் மானிடமகளே! தெய்வமகள் என எண்ணற்க! என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.