பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 46

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பசிமயல் பிணித்த பிள்ளைவண் டாற்ற
வாசையிற் செறிந்த பொங்கர்க் குலத்தா
யருப்பு முலைக்கண் டிறந்துமிழ் மதுப்பால்
சினைமலர்த் துணைக்கரத் தன்புட னணைத்துத்
தேக்கிட வருத்தி யலர்மலர்த் தொட்டில்
10
  காப்புறத் துயிற்றுங் கடிநகர்க் கூட
லருளுட னிறைந்த கருவுயிர் நாயகன்
குரவரும் புடுத்த வாலெயிற் றழல்விழிப்
பகுவாய்ப் பாம்பு முடங்க லாக
வாலவாய் பொதிந்த மதிமுடித் தனிமுதல்
15
  சேக்கொண் முளரி யலர்த்திய திருவடி
கண்பரு காத களவின ருளம்போற்
காருடன் மிடைந்த குளிறுகுரற் கணமுகி
லெம்முயி ரன்றி யிடைகண் டோர்க்கு
நெஞ்சறை பெருந்துய ரோவா துடற்றக்
  கவையா நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர்
கண்ணினுங் கவருங் கொல்லோ
வுண்ணிறைந் திருந்த வாழிய மனனே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று.

துறை: கூதிர்கண்டு கவறல்.

     (இ - ம்.) இதனை, "அவனறி வாற்ற வறியு மாகலின்" (தொல், கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண் ‘ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்’ என்பதன்கண் அமைத்து’கொள்க.

1 - 7: பசி . . . . . . . . . . நாயகன்

     (இ-ள்) பசிமயல் பிணித்த பிள்ளைவண்டு அரற்ற - பசியாகிய மயக்கத்தாற் கட்டுண்ட தன் பிள்ளைகளாகிய வண்டுகள் ஆரவாரித்தலாலே; ஆசையின் செறிந்த பொங்கர் குலத்தாய்-

அவற்றிடத்தே வேணவாக் கொண்ட சோலையாகிய நற்றாய்; அருப்பு முலைக்கண் திறந்து - தனது அரும்பாகிய முலையின் கண்ணைத் திறந்து; உமிழ்மதுபால் - அம் முலையினின்றும் சொரிகின்ற தேனாகிய பாலினை; மலர்ச்சினைத் துணைக்கரத்து அன்புடன் அணைத்து - அவ்வண்டுப் பிள்ளைகளைத் தன் பூங்கொத்துக்களாகிய இருகரங்களிலும் அன்போடே தழுவிக்கொண்டு; தேக்குஇட்அருத்தி - அப்பிள்ளைகள் உண்டு தெவிட்டுமளவும் உண்பித்துப் பின்பு; அலர் மலர்த்தொட்டில் காப்புஉறத் துயிற்றும் - மலர்ந்த தனது மலர்த்தொட்டிலிலே காவலுண்டாகத் துயில்வியா நின்ற; கடிநகர் நான்மாடக்கூடலில் - காவலுடைய நான்காடக் கூடலாகிய மதுரையின்கண்; அருளுடன் நிறைந்த கருவுயிர் நாயகன் - அருளாகிய அங்கயற் கண்ணம்மையோடே எழுந்தருளிய உலகத்தில் உயிர்தோன்றுதற்குக் காரணமான சோமசுந்தரக் கடவுளம் என்க.

     (வி-ம்.) மயல் - மயக்கம், அரற்றல் - ஈண்டுப் பசித்தழுதல். ஆசை அவா; திசை. சிலேடை வகையில் திசைகளிலே செறிந்த சோலைகளை ஆசையிற் செறிந்த பொங்கர் என்றார். வண்டுகள் தோன்றி வளர்தற்கிடனாதலின் பொங்கர்த்தாய் என அவற்றிற்குத் தாயாக உருவகித்தார். அருப்புமுலை - அரும்பாகிய முலை. மதுவாகிய பால் என்க. துணைக்கரம் என்றது வாளா அடை மாத்திரை, தேக்கிடுதல் - உண்டு தெவிட்டுதல், அலர்மலர் : வினைத்தொகை, கடி-காவல், விளக்கமுமாம், அருள்-அருளாகிய அம்மை, கருவுயிர் நாயகன்: வினைத்தொகை. இறைவன் உலகினைப் படைக்குங்கால் அம்மையப்பனாய் நின்று படைத்தலின் அருளுடன் நிறைந்த கருவுயிர் நாயகன் என்றார். இதனை.

"சிவம்சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்
 உவந்திரு வரும்பு ணர்ந்திங் கலகுயி ரெல்லா மீன்றம்
 பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும்
 தவந்திரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியு மன்றே'
                                    (சித்தியார். 167)

எனவரும் சித்தியாரானும் உணர்க. கருவுயிர்த்தலாவது காரணமாத் திரையாய் நின்ற மாயையையும் உயிர்களையும் படைத்தருளல்.

8 - 12: குரவரும்பு . . . . . . . . . . உளம்போல்

     (இ-ள்) குரவு அரும்பு உடுத்தவால் எயிற்று அழல்விழி பகுவாய் பாம்பு- குராவரும்புகள் சூழ்ந்தாலொத்த வெள்ளிய பற்களையும் கனலுகின்ற கண்ணையும் பிளவாநின்ற வாயினையுமுடைய தன் கங்கணமாகிய பாம்பே; முடங்கல் ஆக- தன்உடலை வளைத்து எல்லை காட்டுதலாலே; ஆலவாய் பொதிந்த - ஆலவாயாகச் செய்தருளிய; மதிமுடி தனிமுதல் - பிறைசூடிய முடியினையுடைய ஒப்பற்ற முழுமுதற் கடவுளும் ஆகிய சிவபெருமானுடைய; சேகொள் முளரி அலர்த்திய திருஅடி - சிவந்த நிறத்தைக் கொண்ட தாமரை மலரைப்போல விரித்து ஆடியருளிய அழகிய அடிகளை; கண்பருகாத களவினர் உளம்போல்-தங்கண்ணாற் கண்டு நுகராத வஞ்சகருடைய செஞ்சம்போல என்க.

     (வி-ம்.) குரவு - குராமரம். குரா என்னும் குறியதன்கீழ் ஆகாரம் குறுகி உகரமேற்றுக் குரவு என்றாயிற்று. குராவரும்பு பாம்பின் பற்களுக்குவமை. வால்- வெண்மை. அழல்விழி: வினைத்தொகை. இனி அழலையுடைய விழி என விரித்தலுமாம். பாம்பு முடங்கல் ஆக என்புழி எல்லை தெரியாது கவன்ற பாண்டியனுக்கு அச்செய்தியைத் தெரிவிக்கும் பொருட்டுத் தான் விடுத்த திருமந்திரவோலையாக எனவும் ஒருபொருள் தோன்றுதலுணர்க. சே - சிவப்பு. முளரி -தாமரை மலர். அலர்த்திய என்றமையால் தாமரை போல விரித்தாடிய எனப்பொருள் கூறப்பட்டது. கண்பருகுதல் - கண்ணால் நுகர்ந்து இன்புறல்.

13 - 18: காருடன் . . . . . . . . . . மனனே

     (இ-ள்) கார்உடன் மிடைந்த முகில்கணம் - தமக்குரிய கார்ப்பருவத்தோடே தோன்றிச் செறிந்த முகிற்வட்டம்; குளிறு குரல் - முழங்காநின்ற குரலோடே; எம் உயிர் உன்றி - எம்முயிர்க்கே யன்றி; இடை கண்டோர்க்கும் - இடையிலே தம்மைக் கண்ட ஏனையோருயிர்க்கும்; நெஞ்சு அறை பெருதுயர் ஓவாது உடற்ற - நெஞ்சு தம்மைக் கைவிட்டு அறைபோதலாகிய பெருந்துன்பத்தை ஒழியாது இயற்றாநிற்ப; கவையா நெஞ்சமொடு பொருவினை சென்ற எம்பெருமானுடைய; கண்ணினும் கவரும் கொல்லோ - கண்ணிற் காணப்பட்டு அவ்வழியே அவர் நெஞ்சினைக் கவர்ந்து விடுமோ, உள்நிறைந்திருந்த மனனே - அவர் மேற்கொண்டு சென்ற வினை முடிவதாக என்று அதுகாறும் என்னுள்ளே நிறைந்திருந்த என் நெஞ்சமே இக்கார்ப்பருவம் அங்ஙனம் அவர் நெஞ்சைக் கவர்ந்து அவர்வினைக் கிடையூறு செய்யின் அவர்நிலை என்னாம் என்க.

     (வி-ம்.) கார் - கார்ப்பருவம். இனி, கரிய உடலோடு மிடைந்த முகில் எனினுமாம். குளிறுதல் - முழங்குதல். துணைவரைப் பிரிந்திருக்கும் எம்முயிர்க்கேயன்றி இந்நிலை எய்திய ஏனையோருயிர்க்கும் என்றவாறு. நெஞ்சு அறைபோதலாகிய பெருந்துயர் என்க. அறை போதலாவது உற்றுழிக் கைவிட்டுப்போதல். தலைவன் போவோமோ? தவிர்வோமோ? என்று இருமனப்பட்டு வருந்தாமல் வினையே ஆடவர்க்கு உயிர் என்பது பற்றி ஒருமனதுடனே வினைமேற் சென்றோர் எனத் தலைவனைப் பாராட்டுவாள் 'கவையா நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர்' என்றாள்.

     இனி, அவன் நெஞ்சத்தாற் கவரப்படான் ஆயினும் இக்கார்ப்பருவம் அவன் கண்ணிற் றோன்றியவழி என்னை நினைந்து ஆற்றான் ஆவனோ? எனக் கவல்வாள் கண்ணினுங் கவருங் கொல்லோ என்றாள். கவர்தல் - இழுத்தல். அவன் வினைமுடித்து வருக என்று தன் கடமை கருதி அவன் பின்சென்று வருந்தாது என்னுள்ளே அமைதியுற்றிருக்கும் நெஞ்சமே என்று அதனைப் பாராட்டுவாள் எண்ணிறைந் திருந்த மனனே என்றாள். எம்பெருமான் இப்பருவத்தால் கவரப்படுவானாயின் அவன் நிலை என்னாம் என்றிரங்கியபடியாம்.

     இனி, இதனை மனனே கடிநகர்க் கூடலை ஆலவாய் பொதிந்த தனி முதல் திருவடி பருகாதார் உளம்போல இருண்டு மிடைந்த முகிற்கணம் பொருவினைச் சென்றோர் கண்விழிப் புகுந்து அவரையுங் கவருமோ கவருமாயின் அவர்நிலை என்னாம் என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.