|
|
செய்யுள்
48
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
அறுகுந்
தும்பையு மணிந்தசெஞ் சடையுங்
கலைமான் கணிச்சியுங் கட்டிய வரவமும்
பிறவுங் கரந்தொரு கானவ னாகி
யருச்சுன னருந்தவ மழித்தமர் செய்தவன்
கொடுமரத் தழும்பு திருமுடிக் கணிந்து |
10
|
|
பொன்னுடை
யாவந் தொலையாது சுரக்கப்
பாசுப தக்கணை பரிந்தருள் செய்தேன்
வாசவன் மகட்புணர்ந்து மூன்றெரி வாழத்
தென்கட னடுத்திடர் செய்துறைந் திமையவ
ரூருடைத் துண்ணுஞ் சூருட றுணித்த |
15
|
|
மணிவேற்
குமரன் களிமகிழ் செய்த
பேரருட் குன்ற மொருபாற் பொலிந்த
வறப்பெருங் கூடற் பிறைச்சடைப் பெருமான்
றிருவடிப் பொருந்தேன் பருகுநர் போல
மணமுடன் பொதுளிய வாடா மலர்த்தழை |
20
|
|
யொருநீ
விடுத்தனை யானவை கொடுத்தன
னவ்வழி கூறி னத்தழை வந்து
கண்மலர் கவர்ந்துங் கைம்மலர் குவித்து
நெட்டுயிர்ப் பெறிய முலைமுக நெருக்கியு
மூடியும் வணங்கியு முவந்தளி கூறியும் |
|
|
பொறையழி
காட்சிய ளாகி
நிறையழிந் தவட்கு நீயா யினவே. |
(உரை)
கைகோள்: களவு தோழிகூற்று
துறை: தழைவிருப்புரைத்தல்.
(இ
- ம்.) இதற்கு "நாற்றமும் தோற்றமும்" (தொல். களவி. உங) எனவரும்
நூற்பாவின்கண் 'நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்' என்னும் விதி கொள்க.
1
- 3: அறுகும் , , , , , , , , , , கானவனாகி
(இ-ள்)
அறுகுந் தும்பையும் அணிந்த செஞ்சடையும் - அறுகம்புல்லையும் தும்பை மலரையும் அணிந்த
சிவந்த சடையினையும்; கலைமான் கணிச்சியும் கட்டிய அரவமும் - கலைமானையும் மழுவையும்
அரையிற் கட்டிய பாம்பினையும்; பிறவும் கரந்து ஒரு கானவன் ஆகி - இன்னோரன்ன பிறவற்றையும்
மறைத்துக் கொண்டு ஒரு வேடுவனாய்த் தோன்றி என்க.
(வி-ம்.)
தும்பை: ஆகுபெயர். கலைமான் - ஆண்மான் கணிச்சி - மழு. அரையிற் கட்டிய அரவமும் என்க.
பிற - பிறை முதலியன. கானவன் - வேடன்.
4
- 7: அருச்சுனன் , , , , , , , , , , , , , செய்தேன்
(இ-ள்)
அருச்சுனன் அருந்தவம் அழித்து - அருச்சுனனுடைய செயற்கரிய தவநிலையைக் குலைத்து; அமர்
செய்து - அவனோடு போராடி; அவன் கொடுமரத்தழும்பு திருமுடிக்கு அணிந்து - அவன் வில்லால்
அடித்தமையால் உண்டான வடுவினைத் தனது அழகிய முடியின்கண் தாங்கி; பொன்உடை ஆவம்
தொலையாது சுரக்க - அழகினையுடைய அவனது அம்பறாத்தூணி வற்றாது அம்புகளை வழங்குமாறு செய்து;
பாசுபதக்கணை பரிந்து அருள் செய்தேன் - மேலும் பாசுபதம் என்னும் அம்பினையும் அன்பு
கூர்ந்து வழங்கிய சிவபெருமானுடைய என்க.
(வி-ம்.)
அருச்சுனன் - பாண்டு மக்கள் ஐவருள் நடுப்பிறந்தேன். அவன் செய்த தவத்திற்கு இரங்கிச்
சிவபெருமான் வேடவடிவங்கொண்டு வந்து, அவனைக் கொல்ல வந்து மறைந்திருந்த பன்றியாகிய
மூகதானவனைக் கொண்று, அதன் பொருட்டுவல் வழக்குப் பேசிப் போர்புரிந்து, வில்லாலடிப்பட்டு
அவ்வடித் தழும்பு எல்லாயுயிர்க்குங் கொடுத்துப் பின்னர்த் திருவுருவு காட்டி அவனுக்குப்
பாசுபதக்கணை வழங்கினர் என்பது வரலாறு. இதன் விரிவு பாரதக் கதையுட் காண்க.
ஆவம்
- அம்புக்கூடு. ஆவம் தொலையாது சுரத்தலாவது அம்பினை எடுக்க எடுக்க எடுக்க வறிதாகாமல்
அம்புகளா னிறைதல். பாசுபதக்கணை- சிவபெருமானுக்குரிய அம்பு.
8 - 12: வாசவன் . . . . . . . . . . குன்றம்
(இ-ள்)
தென் கடல் நடு திடர் செய்து - தென்திசையின் கண்ணுள்ள கடலில் நடுவிடத்தைத் திடராக
உயர்த்தி அதன் கண் நகர மமைத்துக் கொண்டு; உறைந்து- அதன்கணிருந்து கொண்டு; இமையவர்
ஊர் உடைத்து உண்ணும் சூர் உடல்- தேவர்களுடைய நகரங்களை இடித்துக் கொள்ளை கொண்டுண்ணும்
சூரபதுமன் என்னும் அசுரனுடைய உடலை; மூன்று எரி வாழ - அந்தணர் வளர்க்கும் மூன்று வகையான
வேள்வித்தீயும் இடையூறின்றி வளரும் பெருட்டு; துணித்த மணிவேல் குமரன் - இரு கூறாக்கிய
மணிபதித்த வேற்படையினை யேந்திய முருகக்கடவுள்; வாசவன் மகள் புணர்ந்து - தேவேந்திரன்
மகளாகிய தெய்வயானை நாய்ச்சியாரைத் திருமணம் புணர்ந்து; களிமகழ்செய்த - பெரிதும்
மகிழ்ந்திருத்தற்கு இடனான; பேரருள் குன்றம் - மிக்க அருளை அடியார்க்கு வழங்கும் திருப்பரங்குன்றமானது
என்க.
(வி-ம்.)
நடு - நடுவிடம். திடர் செய்தல் - மேடுறுத்துதல். இமையவர்- தேவர். உடைத்துக் கொள்ளைகொண்டுண்ணும்
என்க. சூர் - சூரபதுமன். சூரபதுமன் அந்தணர் வேள்விக்கு இடையூறு செய்தலின் மூன்றெரி
வாழ உடல் துணித்த என்றார். எரி வாழ எனவே அறங்கள் தழைக்க என்றாராயிற்று, மூன்றெரி
- மூன்று வகைப்பட்ட வேள்வித் தீ அவையாவன: ஆகவநீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி
என்பன. மணவேல் - மணி கட்டப்பட்ட வேலுமாம். அழகிய வேலுமாம். வாசவன்- தேவேந்திரன்.
களிமகிழ்: ஒரு பொருட் பன்மொழி, குன்றம் - திருப்பரங்குன்றம்.
12
- 14: ஒருபல் . . . . . . . . . . தேன்
(இ-ள்)
ஒரு பால் பொலிந்த அறப்பெருங்கூடல் - ஒரு திசையிலே விளங்கியுள்ள அறம் நிலைபெற்ற
பெரிய மதுரை நகரத்திலே எழுந்தருளியுள்ள; பிறைச் சடைப்பெருமான் - பிறைத்திங்களணிந்த
சடையினையுடைய சிவபெருமானுடைய; திருவடி பெருந்தேன் - அழகிய அடிகளாகிய மலர் வழங்கும்
அருளாகிய மிகுந்த தேனை என்க.
(வி-ம்.)
அறக்கூடல், பெருங்கூடல் எனத் தனித்தனி கூட்டுக. திருவடிப்பெருந்தேன் - அழகிய அடிகளாகிய
மலர் வழங்கும் அருளாகிய மிகுந்த தேனை என்க.
14
- 16: பருகுநர் . . . . . . . . . . கொடுத்தனன்
(இ-ள்)
பருகுநர் போல - பருகாநின்ற மெய்யடியார்களைப் போன்று; மணமுடன் பொதுளிய - நறு மணத்தோடே
தளிர்த்துள்ள; வாடா மலர்தழை - வாடாத மலரோடு கூடிய தழைகளை; ஒரு நீ விடுத்தனை
- ஒப்பற்ற நீ விடுத்தாய்; யான் அவை கொடுத்தனன் - யான் அத்தழையினைக் கொடுபோய்
எம்பெருமாட்டிக்குக் கொடுத்தேனாக என்க.
(வி-ம்.)
திருவடிப் பெருந்தேன் பருகுநர் என்றது அடிகளைத் தேனிக்கும் அடியார் என்றவாறு. மெய்யடியார்
வினை முதலியவற்றால் வாடாது தழைத்திருத்தல் போல வாடாமல் தழைத்த தழை என்றவாறு.
பொதுளுதல் - ஈண்டுத் தளிர்த்து நிரம்புதல். வாடாமலர் வாடாத்தழை என இரண்டனோடும்
ஒட்டுக. வாடாத என்னும் பெயரெச்சத்து ஈறுகெட்டு வாடா என நின்றது. நீ கொடுத்தாய்
என்பது அவள்பால்பெருங்காதலுடைய நீ கொடுத்தாய் என்பதுபட நின்றது. யான் கொடுத்தனன்
என்பது அவள்பால் பேரன்புடைய யான் கொடுத்தேன் என்பதுபட நின்றது. எனவே அத்தழை இவ்வாற்றால்
பெரும் சிறப்புடையனவாய் இருந்தன எனப் பின்னர்த் தலைவியின் மகிழ்ச்சிக்கு ஈண்டுக்
குறிப்பாக ஏதுக்கூறிய படியாம். விடுத்தல்-உய்த்தல்.
17
- 22: அவ்வழி . . . . . . . . . . நீயாயினவே
(இ-ள்)
அவ்வழி கூறின் - அப்பொழுது நிகழ்ந்தவற்றைச் சொல்லுங்கால்; அத்தழை வந்து - அந்தத்
தழைகள் அவள்பால் வந்து; கண்மலர் கவர்ந்தும்- அவனுடைய மலர் போன்ற கண்களால் கவரப்பட்டும்;
கைமலர் குவித்தும் - அவளால் தன் மலர் போன்ற கைகளைக் குவித்துத் தொழப்பட்டும்;
நெடு உயிர்ப்பு எறிய- பெருமூச்செறியும்படி; முலை முகம் நெருக்கியும் - அவளுடைய முலையிடத்தே
ஒற்றிக்கொள்ளப்பட்டும்; ஊடியும் - சிறிது ஓடப்பட்டும்; வணங்கியும் - அங்ஙனம் ஓடியதற்கு
இரங்கி மீண்டுந் தொழப்பட்டும்; உவந்து அளி கூறியும் - மனமுவந்து முகமனுரைக்கப்பட்டும்;
பொறை அழி காட்டிசியள் ஆகி - இவ்வாறெல்லாம் பொறுமையை யிழந்த தோற்றத்தையுடையவளாய்;
நிறை அழிந்தவட்கு - நிறையைக் கைவிட்ட எம்பெருமாட்டிக்கு; நீயே ஆயின - அவட்கு நீயேயாயின
என்க.
(வி-ம்.)
மலர்போன்ற கண்களைக் கவர்ந்தும் எனவும் மலர் போன்ற கைகளைக் குவித்தும் எனவும்
மாறுக. பொறையழி காட்சியள் என்பதற்கு எய்திய இன்பத்தைப் பொறுக்குந் தன்மையில்லாத
தோற்றத்தையுடையள் எனினுமாம். காமநோய் பொறுத்தலில்லாத தோற்றம் எனில் அத்தழை
நீயேயாயின என்றது பயனில் கூற்றாதல் உணர்க.
இதனைக்
கானவனாகித் தழும்பணிந்து கணையருள் செய்தோன் மூன்றெரி வாழச் சூருட றுணித்த வேற்குமரன்
புணர்ந்து மகிழ் செய்த குன்றம் பொலிந்த கூடற் பெருமான் அடித்தேன் பருகுநர்போல,
நீ விடுத்த மலர்த்தழை யான் கொடுத்தன னத்தழை நிறையழிந்தவட்கு நீயேயாயின வென
வினைமுடிவு செய்க மெய்ப்படும் பயனும் அவை.
|