பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 49

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வியரமு தரும்பி முயற்கண் கறுத்துத்
தண்ணநின் றுதவலி னிறைமதி யாகிப்
பொன்னம் பொகுட்டுத் தாமரை குவித்து
நிறையளி புரக்கும் புதுமுகத் தணங்குநின்
னொளிவளர் நோக்க முற்றனை யாயி
10
  னின்னுயிர் வாழ்க்கை யுடலொடும் புரக்கலை
யொருதனி யடியாற் குதவுதல் வேண்டி
மண்ணவர் காண வட்டணை வாளெடுத்
தாதி சாரணை யடர்நிலைப் பார்வை
வாளுட னெருக்கன் மார்பொடு முனைதல்
15
  பற்றிநின் றடர்த்த லுட்கையின் முறித்த
லானனத் தொட்ட லணிமயிற் புரோக
முட்கலந் தெடுத்த லொசிந்திட மழைத்தல்
கையொடு கட்டல் கடித்துள் ளழைத்தலென்
றிவ்வகைப் பிறவு மெதிரம ரேறி
20
  யவன்பகை முறித்த வருட்பெருங் கடவுள்
கூடலங் கானற் பெடையுடன் புல்லிச்
சேவ லன்னந் திருமலர்க் கள்ளினை
யம்மலர் வள்ள மாகநின் றுதவுதல்
கண்டுகண் டொருவன் மாழ்கி
  விண்டுயிர் சேர்ந்த குறிநிலை மயக்கே.

(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று

துறை: விரவிக்கூறல்.

     (இ - ம்.) இதற்கு, "நாற்றமும் தோற்றமும்" (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண் 'மறைந்தவள் அருகத் தன்னொடு மவளொடு முதல்மூன்று அளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்' என்பதன்கண் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் எனவரும் விதிகொள்க.

1 - 4: வியர் . . . . . . . . . . அணங்கு

     (இ-ள்) வியர் அமுது அரும்பி முயல்கண் கறுத்து - வியர்வாகி அமுதம் துளிக்கப் பெற்றுப் போர் முயலுதலையுடைய கண் கறுத்து; தண்ணம் நின்று உதவலின் -குளிர்ச்சியைத் தந்து நிற்றலால்; நிறைமதி ஆகி - முழுவெண்டிங்களேயாகி; பொன்னம் பொகுட்டுத் தாமரை குவித்து - பொன்னிறமான அழகிய பொகுட்டினையுடைய தாமரை மலரைக் குவியும்படி செய்து; நிறை அளி புரக்கும் - நிரம்பிய தண்ணளியைத் தன்னிடத்தே வைத்துக் காவா நின்ற; புதுமுகத்து அணங்கு - காணுந்தோறும் புதுமை பயக்கும் முகத்தினையுடைய திருமகளை யொத்த பெருமாட்டியே கேள் என்க.

     (வி-ம்.) வியர் - வியர்வை. அரும்புதல் - முகிழ்த்தல். முயற்கண் கறுத்து என்புழித் திங்களுக்கு முயலையுடைய இடங்கறுத்து என்றும் முகத்திற்குப் போர் முயலுங்கண்கள் கறுத்து என்றும் கொள்க. தண்ணம், அம் : சாரியை. பொன்னம் பொகுட்டு என்புழி அம் அழகு. பொகுட்டு - கொட்டை. தாமரை மலர் இவள் முகத்தை ஒவ்வேம் என்று நாணிக் கூம்பும் என்பாள் தாமரை குவித்து என்றாள். குறை நயப்பிக்கின்றாளாகலின் நீ அளி புரக்கும் முகத்து அணங்கு என முகமன் மொழிந்தாள். புதுமுகம் - காணுந்தோறும் புதுமை தோன்றும் முகம். அணங்கு - தெய்வப்பென். ஈண்டுத் திருமகள். அணங்கு:அண்மை விளி.

7 - 12: ஒருதனி . . . . . . . . . . ஓட்டல்

     (இ-ள்) ஒருதனி அடியாற்கு உதவுதல் வேண்டி - தனிமையான ஓர் அடியவனுக்கு உதவி செய்யும்படி திருவுளம் கொண்டு; மண்ணவர் காண - நிலவுகலத்திலுள்ளார் அறியும் படி; வட்டணை வாள் எடுத்து - கேடகத்தையும் வாளையும் கைகளிலே பற்றி; ஆதி சாரணை அடர்நிலை பார்வை வாளுடன் நெருக்கல் மார்பொடு மனைதல்- முதலில் சார்ந்து நிற்றலும் நெருங்கு நிலையிலே நோக்கம் வைத்தலும் வாளொடு நெருங்குதலும் வாளை மார்விலேற்றி எதிர்த்தலும்; பற்றி நின்று அடர்த்தல் உள்கையின் முறித்தல் ஆநநத்து ஒட்டல் - ஒருவரொருவரைப் பற்றிநின்று போர்செய்தலும் கைக்குள் அடக்கி முறித்தலும் கேடகத்துள் தாழ்ந்து முகத்தோடு அடங்குதலும் என்க.

     (வி-ம்.) அடியான் - ஈண்டு வாளாசிரியன் மண்ணவர்காண என்றது திருமால் முதலிய தேவர்களும் காணவொண்ணாத தான் இந்நில உலகத்தார் காணும்படி வந்து என்றவாறு. வட்டணை - கேடகம். ஆதிசாரணை, அடர்நிலைப் பார்வை, வாளுடன் நெருக்கல், மார்பொடு முனைதல், பற்றி நின்றடர்த்தல், உட்கையின் முறித்தல் முதலியன வாட்போர்த் தொழில்வகை. ஆநநம் - முகம்.

12 - 16: அணி . . . . . . . . . . கடவுள்

     (இ-ள்) அணிமயில் புரோகம் - அழகுள்ள மயிலைப் போலும் ஞமலியைப்போலும் நிரலே பின்னே பறிந்து முன்னே நடத்தலும்; உள்கலந்து எடுத்தல்-ஒருவருடல் ஒருவருடலொடு மயங்கி மேலுறவெடுத்தலும்; ஒசிந்து இடம் அழைத்தல்- வளைந்து கொடுத்து இடப்புறமாக வருவித்தலும்; கையொடு கட்டல் - ஒருவர் கையோடு ஒருவர்கை பொருந்தும்படி கட்டி இறுக்குதலும்; கடிந்து உள்அழைத்தல்- விலகச்செய்து மீண்டும் தம்பால் வருவித்துக் கோடலும்; என்று இவ்வகை பிறவும்- என்று கூறப்படும் இந்த வாட்போர்த் தொழில் வகையும் இன்னோரன்ன பிறவும்; எதிர் அமர் ஏறி - எதிர்ப்படுகின்ற வாட்போரின்கண் பெரிதும் முயன்று; அவன்பகை முறித்த -அவ்வடியவனுடைய பகைவனாகிய சித்தன் என்னும் மாணாக்கனுடைய உறுப்பிக்களைத் தனித்தனி, துணித்தருளிய; அருள் பெருங்கடவுள் - அருளுருவமாகிய முழுமுதற் கடவுள் எழுந்தருளியுள்ள என்க.

     (வி-ம்.) மயில்போலப் பின்னிட்டுத் தாக்கலும் புரோகம்போல முன்னேறித் தாக்கலும் என்க. இவையும் உள்கலந்து எடுத்தல், ஒசிந்து இடம் அழைத்தல், கையொடு கட்டல், கடிந்து உள்ளழைத்தல் என்பனவும் வாட்போர்த் தொழில்வகை என்க. பிறவும் என்றது ஈண்டுக் கூறப்படாத இன்னோரன் னபிற தொழில்கள் என்றவாறு. அவன் என்றது அடியவனாகிய வாளாசிரியனை. பகை என்றது அவன் பகைவனாகிய சித்தனை. கடவுள் - சோமசுந்தரக்கடவுள். இதனைத் திருவிளையாடற் புராணத்தில் 27. அங்கம்வெட்டின படலத்தின்கண் விரிவாக உணர்க. வாட்போர் வகையினை.

"எதிர்ப்பர்பின் பறிவர் நேர்போ யெழுந்துவா னேறு பேல
 அதிர்ப்பர்கே டகத்துட் டாழ்வுற் றடங்குவர் முளைப்பர் வாளை
 விதிர்ப்பர்சா ரிகைபோய் வீசி வெட்டுவர் விலக்கி மீள்வர்
 கொதிப்பர்போய் நகைப்ப ராண்மை கூறுவர் மாறி நேர்வர்"
                                (திருவிளை. அங்கம். 17)

எனவும்,

"வெந்நிடு வார்போற் வட்டித்து விளித்து மீள்வர்
 கொன்னிடு வாண்மார் பேற்பர் குறிவழி பிழைத்து நிற்பர்"
                                 திருவளை. அங்கம் 12)

எனவும் வரும் பரஞ்சோதி முனிவர் வாக்கானு முணர்க.

17 - 21: கூடல் . . . . . . . . . . மயக்கே

     (இ-ள்) கூடல் அம் கானல் - மதுரையைச் சார்ந்த அழகிய கடற்கரைச் சோலையில்; சேவல் அன்னம் பெடையுடன் புல்லி - ஓரன்னச் சேவல் தன் பெடையன்னத்தைத் தழுவி; திருமலர் கள்ளினை - அழகிய தாமரை மலரின்கண் உண்டான தேனை; அம்மலர் வள்ளம் ஆக - அத்தாமரை மலரே கிண்ணமாகக் கொண்டு; நின்று உதவுதல் கண்டு கண்டு - அப்பெடை யன்னத்தின் பக்கத்திலே தானே நின்று உண்பித்தலைப் பார்த்துப் பார்த்து; ஒருவன் - ஒரு நம்பி; பாழ்கி விண்டு உயிர் சோர்ந்த - மயங்கி நிலைமாறித் தனது உயிர் தளர்ந்த; மயக்கு நிலைக்குறி- மயக்கத்தையுடைய நிலைமையினை எய்தின குறிப்பினை என்க.

     (வி-ம்.) கானல் - கடற்கரைச் சோலை. பெடையுடன் : உருபு மயக்கம். 'பூவினுட் சிறந்தது பொறிவாழ் பூவே' என்றமையால் திருமலர் என்றது தாமரை மலர் என்றாயிற்று. கல் - தேன். வள்ளம் - கிண்ணம். ஒருவன் என்றது தலைவனை. மயக்க நிலைக்குறி என மாறுக.

4 - 6: நின்னொளி . . . . . . . . . . புரக்கலை

     (இ-ள்) நின் ஒளிவளர் நோக்கம் உற்றனை ஆயின் - உன்னுடைய ஒளிமிக்க கண்களாலே பார்த்திருப்பாயாயின்; இன்உயிர் வாழ்க்கை - நினது இனிய உயிரின் வாழ்க்கையை; உடலொடும் புரக்கலை நின்னுடலிடத்தே வைத்துப் பாதுகாப்பாயல்லை; துறப்பாய், யான் வன்கண்மையுடையே னாகலின் அதனைக் கண்டு வைத்தும் ஆற்றியிராநின்றேன் என்க.

     (வி-ம்.) துறப்பாய் என்பதும் யான் வன்கண்மையுடையேனாகலின் அதனைக் கண்டுவைத்தும் ஆற்றியிரா நின்றேன் என்பதும் குறிப்பெச்சம். கூர்த்த நோக்குடையை என்பாள் ஒளிவளர் நோக்கம் என்றாள். புரக்கலை - தபுரப்பாயல்லை. புரத்தல்- காப்பாற்றுதல்.

     இனி, இதனைப் 'புதுமுகத்தணங்கே' அடியாற்கு உதவுதல் வேண்டி வாளெடுத்து அமரேறிப் பகைமுறித்த கடவுளுடைய கூடற்கானலிலே அன்னச்சேவல் பெடையைப் புல்லிக் கள்ளினை அதற்கு உதவுதல் கண்டுகண்டு ஒருவன் மாழ்கி உயிர் சேர்ந்த கறிப்பை நீ நோக்கமுற்றனையாயின் நீ உயிர்வாழ்க்கை போற்றுவாயல்லை!' என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.