பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 5

நேரிசையாசிரியப்பா

 
   
5
  இரண்டுடே லொன்றாய்க் கரைந்துகண் படாமல்
அளவியல் மனநிலை பரப்புங் காலம்
தளைகரை கடந்த காமக் கடலுட்
புன்னுனிப் பனியென மன்னுத லின்றிப்
பீர மலர்ந்த வயாவுநோய் நிலையாது
10
  வளைகாய் விட்ட புளியருந் தாது
செவ்வாய் திரிந்து வெள்வாய் பயவாது
மனைபுகை யுண்ட கருமண் ணிடந்து
பவள வாயிற் சுவைகா ணாது
பொற்குட முகட்டுக் அருமணி யமைத்தெனக்
15
  குங்குமக் கொங்கையும் தலைக்கண் கறாது
மலர விழ்ந்த தாமரைக் கயலென
வரிகொடு மதர்த்த கண்குழி யாது
குறிபடு திங்க ளொருபதும் புகாது
பொன்பெய ருடையோன் றன்பெயர் கடுப்பத்
20
  தூண்ம பயந்த மாணமர் குழவிக்கு
அரக்கர் கூட்டத் தமர்விளை யாட
நெருப்புமி ழாழி யீந்தரு ணிமலன்
கூடன் மாநக ராட வெடுத்த
விரித்த தாமரை குவித்த தாளோன்
25
  பேரருள் விளையச் சிரிலர் போலத்
துலங்கிய வமுதங் கலங்கிய தென்ன
விதழ்குவித்துப் பணித்த குதலையுந் தெரியாது
முருந்து நிரைத்த திருந்துபற் றோன்றாது
தெய்வங் கொள்ளார் திணிமன மென்ன
30
  விரிதரு கூழையுந் திருமுடி கூடாது
துணைமீன் காட்சியின் விளைகரு வென்னப்
பார்வையிற் றெழில்கள் கூர்விழி கொள்ளாது
மறுபுலத் தடுபகை வேந்தடக் கியதென
வடுத்தெழு கொலைமுலை பொடித்தன வன்றே
  செம்கண் மாலை யிம்முறை யென்றால்
வழுத்தலும் வருதலுந் தவிர்த்து
மொழிக்குறி கூடாச் செவ்வே லோயே!

(உரை)
கைகோள், களவு, தோழி கூற்று

துறை: சேட்படை

     (இ-ம்.) இதற்கு “நாற்றமும் தோற்றமும்” (தொல். கள. 23) எனவரும் சூத்திரத்தின்கண் ‘பேதமை யூட்டலும்’ என வரும் விதிகொள்க.

33 : மொழி..............................வேலோயே

     (இ-ள்) குறிமொழி-குறித்தசொல்லும்; கூடா-விரைவினாலே கூடப்படாத; செவ்வேலோய்-குருதியாற் சிவந்த வேலினையுடையோய் என்க.

     (வி-ம்.) குறிமொழி என மாறுக. குறித்தசொல் முடிவதற்கு முன் பகைவர்மேற் பாய்ந்து கொல்லும் வேல் என்பது கருத்து. அஃதாவது, ஒருவனைச் சுட்டி இவனைக் கொல் என்று சொல்லும் ஏவல்மொழி மிடியுமுன் கொல்லும் வேல் என்றவாறு.

15 : பொன்.......................கடுப்ப

     (இ-ள்) இரணியம் என்பது பொன்னின் பெயராதலின் இரணியன் பொன்பெயர் உடையோன் எனப்பட்டான். தன் எனது திருமாலை. கடுப்ப-சினப்ப. அஃதாவது தன்மகனாகிய பிரகலாதன் நாராயணன் என்று கூறக்கேட்ட பொழுத் வெகுண்டான் என்பது கருத்து. தன்பெயர் கொடுப்ப உன்றும் பாடம். இதற்கு இரணியன் இறைவன் திருப்பெயர் ஓதுவதற்கு மாறாகத் தன் பெயரை ஓதும்படி கற்பிக்க என்க.

1 - 4: இரண்டு..........................................இன்றி

     (இ-ள்) இரண்டு உடல் ஒன்றாய்-தாயும் தந்தையுமாகிய இருவருடைய உடலும் புணர்ச்சியின்கண் ஓருடலாகி; கரைந்து கண்படாமல்-இன்பத்தால் உளமுருகிக் கண்முதலிய பொறிகளினது நுகர்ச்சியுண்டாகாமலும்; அளவியல் மனநிலை பரப்பும் காலம்-அளவானியன்ற கூட்டமும் இன்ப நிலையும் உண்டாக்கும் காலமாகிய; தளைகரை கடந்த காமக் கடலுள்-தடைசெய்யும் கரையைக் கடந்த காமமாகிய கடலினுள்; புல்நுனி பனியென மன்னுதல் இன்றி-புல்லினது நுனியின்கண் வீழ்ந்த பனித்துளியினது அளவாய்க் கருப்பையில் தங்குதல் இன்றியும் என்க.

     (வி-ம்.) அளவியன் மணம்-சாதியானமைந்த கூட்டம். இதனை, “அருணி வடவை அத்தினி என்பவை தெரியுங்காலை அரிவையர் சாதி சசனே இடப னச்சுவனின்றி மகன்மேற் சாதி வகுக்கவும் படுமே” என்னும் இன்பசாரத்தானும் உணர்க. நிலை-அமுதம் நிற்கும் நிலை. காலம்-நாழிகை மாலை முதலியவை. இவையிற்றை விரிந்த நூல்களால் உணர்க. மன்னுதல் இன்றியும் எனல் வேண்டிய எண்ணும்மை தொக்கது. உயிர்கள் கருவாகுங் காலம் புல் நுனிமேல் வீழ்ந்த பனித்துளி அளவிற்றா இருக்கும் என்ப. ஆகலின் இங்ஙனம் கூறினர் என்க.

5: பீரம்....................................நிலையாது

     (இ-ள்) பீரம் மலர்ந்த-பீர்க்கம் பூவினது நிறம்போலப் பசலை பூத்தற்குக் காரனமாகிய; வயாவுநோய் நிலையாது-வயாவு என்னும் நோய் உண்டாகாமலும் என்க.

     (வி-ம்.) பீர்-பசலை. வயா-கருக்கொண்டுள்ள மகளிர்க்கு நுகரப்படும் பொருள்களின்மேற் செல்லும் வேட்கைப் பெருக்கம். “வயாவென் கிளவி வேட்கைப் பெருகம்” (உரி-73) என்பது தொல்காப்பியம். நிலையாதும் என்புழி எண்ணும்மை தொக்கது.

6: வளை......................................அருந்தாது

     (இ-ள்) வளைகாய்விட்ட புளி அருந்தாது-வளைந்த காயினைத் தோற்றுவித்த புளியமரத்தினது பழத்தினது சுவையை விரும்பி நுகராமலும் என்க.

     (வி-ம்.) வளைகாய்விட்ட புளி என்பது சினை முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்றதோர் ஆகுபெயர். அருந்தாதும் எனல் வேண்டிய உம்மை தொக்கது. கருவுற்ற மகளிர் புளிச் சுவையை விரும்புதல் இயல்பு.

7: செவ்வாய்...........................................பயவாது

     (இ-ள்) செவ்வாய் திரிந்து-இயல்பாகவமைந்த சிவந்தவாய் வேறுபட்டு; கொள்வாய் பயவாது-வெளுத்த வாயாக உண்டாகமலும் என்க.

     (வி-ம்.) செவ்வாய்-கொள்வாய்: முரணணி. பயவாதும் எனல் வேண்டிய உம்மை தொக்கது.

8-9: மனை.........................................காணாது

     (இ-ள்) மனை புகையுண்ட கருமண் இடந்து-இல்லத்தின்கண் உண்டாகிய புகை படிந்ததனால் வந்த கரிய மண்ணை அகழ்ந்தெடுத்து; பவளவாயில் சுவைகாணாது-பவளம் போன்ற வாயினிலிட்டுச் சுவைத்தல் செய்யாமலும் என்க.

     (வி-ம்.) மனை-ஈண்டு மனையின்கண் அடுக்களை. வயாநோய் உடைய மகளிர் புகைபடிந்த கருமண்ணை வாயிலிட்டு சுவைத்தல் இயல்பு. கானாதும் எனல்வேண்டிய உம்மை தொக்கது. பவளவாய்: உவமைத்தொகை

10-11: பொற்குடம்........................................கறாது

     (இ-ள்) குங்குமக் கொங்கையும்-குங்குமமணிந்த கொங்கைகள் தாமும்; பொன் குட முகட்டு-பொன்னாலியன்ற குடத்தின் உச்சியில்; கருமணி அமைத்தென-நீலமணியைப் பதித்து வைத்தாற்போல; தலைக்கண் கறாது-தம் முச்சியில் அமைந்த கண்கள் கறுக்காமலும் என்க.

     (வி-ம்.) முகடு-உச்சி. கருமணி-நீலமணி. இது முலைக்கண்களுக் குவமை. தலைக்கண்-தம்முச்சியில்லமைந்த கண். கண்-ஈண்டு முலைக்கண் கருவுற்ற மகளிர்க்கு முலைக்கண் கறுத்தல் இயல்பு. கறாது-ஈண்டும் உம்மைச் தொக்கது.

11-12: மலர.......................................குழியாது

     (இ-ள்) மலர அவிழ்ந்த தாமரைக்கயல் என-இதழ்கள் நன்கு மலரும்படி விரிந்த தாமரை மலருன்கண் தங்கும் கயற்கொண்டைகளை ஒத்த; வரிகொடு மதர்த்த கண் குழியாது-செவ்வரி பரக்கப்பட்டுக் களித்த கண்கள் குழியாமலும் என்க.

     (வி-ம்.) மலர-இதழ்கள் நன்கு மலரும்படி என்க. தாமரை: ஆகுபெயர். கயல்-ஒரு வகை மீன். முகத்திற்குத் தாமரை மலரும் கண்களுக்குக் கயலும் உவமை. வரி-செவ்வரி. கருவுற்ற மகளிர்க்கு கண்குழிதல் இயல்பு. குழியாதும் உம்மை விரிக்க.

14: குறி...............................புகாது

     (இ-ள்) குறிபடு திங்கள் ஒருபதும் புகாது-கருவுயிர்க்கும் காலம் என்று குறித்தல் பெற்ற தினள் பத்தும் செல்லாமலும் என்க.

     (வி-ம்.) குறிபடும் என்பதற்குக் கருவுயிர்த்தற்குரிய அடையாளங்கள் தோன்று எனினுமாம். புகாது-ஈண்டும் உம்மை தொக்கது.

     (1) கண்படாமலும் (4) மன்னுதலின்றியும் (5) நோய் நிலையாதும் (6) புளியருந்தாதும் (7) வெள்வாய் பயவாதும் (9) சுவைகாணாதும் (11) கண்கறாதும் (12) கண்குழியாதும் (14) ஒருபதும் புகாதும் (17) பயந்த குழவிக்கு என இயைத்துக் கொள்க.

14-18: தூணம்.........................................நிமலன்

     (இ-ள்) தூணம் பயந்த மாண் அமர் குழவிக்கு-ஒரு கற்றூண் ஒரு நொடியின் ஈன்ற மாட்சிமை பொருந்திய நரசிங்கமாகிய குழந்தைக்கு; அரக்கர் கூட்டத்து அமர் விளையாட-அரக்கருடைய குழுவுடனே போர்புரிந்து விளையாடற் பொருட்டு; நெருப்பு உமிழ் ஆழி ஈந்து அருள் நிமலன்-நெருப்பினை உமிழுகின்ற ஆழிப்படையை வழங்கருளிய நிமலனும் என்க.

     (வி-ம்.) தூணம்-தூண். அம்: சாரியை. தூணமாகிய தாய் கண்படுதல் முதலிய அவத்தைகளின்றியும் பத்துத் திங்கள் சுமவாமலும் நொடியில் பயந்த குழவி என்க: என்றது நரசிங்கத்தின் தோற்றத்தை. பொன்பெயரோன் சினத்தாலே தூணிற்றோன்றிய நரசிங்கமாகிய திருமாலுக்கு என்க. ஆழி-சக்கரம், நிமலன்-அழுக்கற்றவன்.

19-20: கூடல்.......................................தாளோன்

     (இ-ள்) கூடல்மா நகர் ஆட-மதுரைமா நகரத்திலே மாறியாடுதற் பொருட்டு; எடுத்த-தூக்கியருளிய; விரித்த தாமரை குவித்த தாளோன்-மலர்ந்த தாமரையைச் செயற்கையால் குவித்து விட்டாற்போன்ற திருவடியையுடையவனும் ஆகிய இறைவனுடைய என்க.

21-23: பேரள்......................................தெரியாது

     (இ-ள்) பேரருள் விளை அச்சீர் இலர்போல-மிகுந்த அருளினை உண்டாக்கும் அச்சிறப்பினைப் பெறார் போலவும்; துலங்கிய அமுதம்-தெளிந்த நீர்; கலங்கியது என்ன-கலங்கினாற் போலவும்; இதழ் குவித்து-என்றோழிதன் இதழ்கலைக் குவித்து; பணித்த குதலையுந் தெரியாது-மொழிந்தருளிய மழலை மொழிகளுக்கும் பொருள் விளங்காது; என்க.

     (வி-ம்.) இறைவனுடைய அருள் விளைதற்குக் காரணமான அச்சிறப்பினை உடையார் அல்லாதார்க்கு மெய்ப்பொருள் விளங்காதது போலவும் கலங்கிய நீரில் உட்பொருள் விளங்காதது போலவும் எம்பெருமாட்டியின் குதலையும் பொருள் விளங்காது என்றவாறு. அருள் விளைதற்குரிய சீர் என்றது மலபரிபாகத்தை. பணித்த-மொழிந்த. குதலை-பொருள் விளக்கமற்ற எழுத்துருவம் பெறாத மலைமொழி.

24: முருந்து..................................தோன்றாது

     (இ-ள்) திருந்து முருந்து நிரைத்த-திருந்திய முருந்தினை நிரல்பட வைத்தாற் போன்ற; பல்தோன்றாது-பல்லின்கண் காமக்குறிப்புடைய நகை தோன்றாது என்க.

     (வி-ம்.) முருந்து-மயில் இறகின் அடி. இது பல்லுக்குவமை. நிரைத்தல்-நிரல்பட வைத்தல். பல்லின்கண் நகை தோன்றாது என்க. நகை-காமக்குறிப்புடைய புன்முறுவல். இதனை,

“யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்காற்
 றானோக்கி மெல்ல வரும்”               (குறள்-1094)

எனவும்,

“குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
 சிறக்கணித்தாள் போல நகும்”             (குறள்-1095)

எனவும் வரும் திருக்குறள்களானும் உணர்க.

25-26: தெய்வம்........................கூடாது

     (இ-ள்) தெய்வம் கொள்ளார் திணிமனம் என்ன-கடவுள் உண்டென்று நினையாத மடவோருடைய இருள் செறிந்த நெஞ்சம் ஒருவழிப்படாதது போல; விரிதரு கூழையும் திருமுடி கூடாது-பரந்த கூந்தலும் அழகிய முடியிடத்தே பொருந்த மாட்டாது என்க.

     (வி-ம்.) தெய்வம் உண்டு என்று கொள்ளார் என்க. இருள் திணிந்த மனம் என்க. இருள்-அறியாமை. திணிமனம்: வினைத்தொகை. விரிதரு கூழையும் அது. கூழை-கூந்தல். பேதைப் பருவத்து மகளிர்க்குக் கூந்தல் முடியின்கண் அடங்குமளவு வளராமையின் கூழையும் திருமுடி கூடாது என்றாள். மடங்காக் கூழையும் மருங்குதலும் பற்றிப் புதையிருந்தன்ன கிளரொளி வனப்பினர் (பெருங். 1. 34, 132-3) எனப் பிறரும் ஓதுதல் காண்க.

27-28: துணைமீன்............................................கொள்ளாது

     (இ-ள்) துணைமீன்-காதற்றுணையாகிய இரட்டை மீன்கள்; காட்சியின் விளைகரு என்ன-தம்முடைய பார்வையாலேயே விளைக்கின்ற சினையைப் போல; கூர்விழி-எம்பெருமாட்டியின் கூரிய கண்கள்; பார்வையின் தொழில்கள் கொள்ளாது-தமது நோக்கத்தாலேயே பிறர் உள்ளத்தே காமக்குறிப்பினைத் தோற்றுவித்தல் முதலிய தொழில்களைச் செய்யமாட்டா என்க.

     (வி-ம்.) துணைமீன்-ஆணும் பெண்ணுமாகிய இரட்டை மீன்கள். கண்கள் இரண்டாகலின் துணைமீன் என்றார். மீன்கள் தம் சினையைத் தம் விழ்களால் கூர்ந்து நோக்கும் அளவிலே அச்சினை குஞ்சுகளாய் விடும். அதுபோலத் தலைவியின் கண்கள் தம்பார்வையால் காதலன் நெஞ்சில் காமவியக்கத்தை தோற்றுவிக்க மாட்டா என்றவாறு.

29-30: மறுபுலத்து.......................................அன்றே

     (இ-ள்) வேந்து மறுபுலத்து அடுபகை அடக்கியது என-ஒரு வேந்தன் தன் பகைப்புலத்தார் விளைக்கும் பகையைக் காலம்பார்த்து உள் அடக்கினாற்போல; வடுத்து எழுகொலை முலை பொடித்தன வன்றே-கொலையை வெளிப்படுத்தி எழா நின்ற முலை இன்னும் தோன்றவில்லை என்க.

     (வி-ம்.) மறுபுலம்-பகையரசர் இடம். ஒரு வேந்தன் தன் மாற்றரசர் பகையைக் காலம் பார்த்து நெஞ்சுள் அடக்கி வைத்தாற்போல இவள் முலையும் தனது கொலைத் தொழிலைத் தன்னுள் அடக்கிக் கொண்டு மார்பின்கண் அடங்கி இருப்பதன்றி முகிழ்த்துத் தோன்றவில்லை என்றவாறு. பொடித்தன அன்று: பன்மை ஒருமை மயக்கம். பொடித்தன வென்றே என்றும் பாடம். வடுத்தெழுதலாவது வெளிப்படத்தோன்றுதல்.

31-32: செம்மகள்...........................................தவிர்த்தி

     (இ-ள்) செம்மகள் மாலை இம்முறை என்றால்-செவ்விய எம்பெருமாட்டியின் தன்மை இத்தகையது எனின்; வழுத்தலும் வருதலும் தவிர்தி-நீ இவள் பொருட்டால் என்னைப் போற்றிக் குறை இரத்தலும் இங்கு வருதலும் தவிவாயாக என்க.

     (வி-ம்.) செம்மகள்-செவ்விய ஒழுக்கமுடையமகள். மாலை-தன்மை; அவள் தம்மை இங்ஙனமிருத்தலின் நீ குறை இரத்தலும் ஈண்டு வருதலும் பயனில் செயலாம். ஆதலால் வாராதே கொள் என்று கூறிச் சேட்படுத்தவாறு.

     இனி, “வேலோய்! எம் பெருமாட்டியின் குதலையும் பொருள் தெரியாது பல்லினும் முறுவல் தோன்றாது கூழையும் முடியிற்கூடாது விழியும் தொழில் கொள்ளாது முலையும் பொடித்தனவல்ல ஆதலின் அவள் இளையவள் விளைவிலள் ஆதலின் நீ வழுத்தலும் வருதலும் தவிர்தி என முடிவு செய்க. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-செவ்வி பெறுதல்.