பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 50

நேரிசையாசிரியப்பா

 
   
5
  அவ்வுழி யவ்வுழிப் பெய்யுண வுன்னி
முகன்றரு மிருசெய லகன்பெறக் கொளுவும்
புல்லப் பாண்மகன் கில்லையு மின்றி
யின்பக் கிளவி யன்பினர்ப் போக்கி
முடித்தலை மன்ர்செருக்குநிலை யொருவிப்
10
  பொன்னுறு ஞாழற் பூவுடன் கடுக்கும்
பேழ்வாய்ப் புலியுகிர் சிறுகுறல் விளங்க
வமுதந் துளிக்குங் குமுதவாய் குதட்டிப்
பழங்கொ டத்தை வழங்குசொற் போலு
மழலைக் கிளவியு மிருநிலத் தின்பமு
15
  மொருவழி யளிக்கு மிருங்கதிச் சிறுவனைத்
தழல்விழி மடங்கற் கொலையரிக் குருளையைப்
பொன்மலை கண்ட பொலிவு போல
மணிகெழுமார்பகத் தணிபெறப் புகுத்தலிற்
கறங்கிசை யருவி யறைந்துநிமிர் திவலையுந்
20
  துருத்திவா யதுக்கிய குங்குமக் காண்டமுங்
குறமகார் கொழிக்குங் கழைநித் திலமு
நெடுநிலை யரங்கிற் பரிபெறு தரளமும்
புனம்பட வெறிந்த காரகிற் றூமமு
மந்தணர் பெருக்கிய செந்தீப் புகையும்
25
  வேங்கையின் றாதுடன் விரும்பிய சுரும்புங்
கந்திவிரி படிந்த மென்சிறை வண்டுஞ்
சந்தனப் பொங்கர்த் தழைசிறை மயிலு
முன்றிலம் பெண்ணைக் குடம்பைகொ ளன்றிலு
மொன்றினோ டொன்று சென்றுதலை மயங்குங்
30
  குழகன் குன்றக் கூடலம் பதிநிறை
மஞ்சடை குழற்பெறு செஞ்சடைப் பெருமா
னருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல்
வாவியிற் கேட்ட காவியங் களத்தினன்
றிருக்கண் கண்ட பெருக்கினர் போல
35
  முளரியங் கோயிற் றளைவிட வந்து
நல்லறம் பூத்த முல்லையந் திருவினை
ணின்னுளத் தின்னன் மன்னறக் களைந்து
பொருத்தங் காண்டிவண் டாரு
மருத்தியங் கோதை மன்னவன் பாலே.

(உரை)
கைகோள் : கற்பு. தோழி கூற்று

துறை: ஊடல் தணிவித்தல்.

     (இ - ம்.) இதற்கு "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் "உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால் நின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக் கண்ணும்" எனவரும் விதி கொள்க.

15 - 18: கறங்கு . . . . . . . . . . . . . தரளமும்

     (இ-ள்) கறங்கு இசை அருவி அறைந்து நிமிர் திவலையும்-முழங்காநின்ற ஓசையினையுடைய அருவி வீழ்தலாலே எழுாநின்ற துளிகளும்; துருத்திவாய் அதுக்கிய குங்குமக் காண்டமும் - நீர்வீசும் துருத்தி என்னும் கருவியின் வாயை அழுத்துவதனாலே சிதறுகின்ற குங்குமங் கலந்த நீரும்; குறமகார் கொழிக்கும் கழை நித்திலமும் - குறவர் மக்கள் விளையாட்டின்கண் கொழிக்கின்ற மூங்கில் முத்துக்களும்; நெடுநிலை அரங்கில் பரிபெறு தரளமும் - நெடிய மேனிலை மாடத்தின்கண் அமைந்த கூத்தாட்டரங்கின்கண் மாலைகள் அறுந்து சிந்துகின்ற முத்துக்களும் என்க.

     (வி-ம்.) கறங்குதல் - முழங்குதல், அறைந்து - அறைய, திவலை - துளி, துருத்தி - நீர்வீசுங் கருவி. காண்டம் - நீர், மகார் - குழந்தைகள் - கழை - மூங்கில், நித்திலம் - முத்து. அரங்கு - ஆடலரங்கு, பரிதல், அறுதல், தரளம் - முத்து.

19 - 24: புனம் . . . . . . . . . . அன்றிலும்

     (இ-ள்) புனம்பட எறிந்த கார் அகில் தூமமும் - காடு கொடும்படி வெட்டி வீழ்த்திய கரிய அகில் மரத்தின்கண் தீக்கொளுவுதலாலே ஏழுந்த புகையும்; அந்தணர் பெருக்கிய செந்தீ புகையும்-மறையோரால் வளர்க்கப்பட்ட சிவந்த வேள்வித் தீயின் புகையும்; வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும்- வேங்கையின் பூந்துகளை விரும்பிய பெடை வண்டுகளும்; விரிகந்தி படிந்த மென்சிறை வண்டும் - பாளை விரிந்த கமுகின்கண் மொய்க்கின்ற மெல்லிய சிறகுகளையுடைய ஆண் வண்டுகளும்; சந்தனப் பொங்கர் தழைசிறை மயிலும் - சந்தனப் பொழிலிலே கூத்தாடுகின்ற செழித்த சிறகினையுடைய மயில்களும்; முன்றில் அம் பெண்ணைக் குடம்பைகொள் அன்றிலும் -முற்றத்தில் நிற்கும் பனையின்மேல் அமைந்த கூட்டில் வதிகின்ற அன்றிற் பறவைகளும் என்க.

     (வி-ம்.) புனம் - காடு. அகிலில் தீக்கொளுவியதனால் உண்டாகும் தூமம் என்க. தூமம் - புகை. வேங்கை - ஒருவகை மரம். சுரும்பு - பெடைவண்டு. கந்தி -கமுகு. சிறை - சிறகு. வண்டு - ஈண்டு ஆண்வண்டு. பொங்கர் - பொழில், தழைசிறை: வினைத்தொகை. முன்றில் - முற்றம். குடம்பை - கூடு, அன்றில் - ஒருவகைப் பறவை. இதனை இக்காலத்தார் வக்கா என வழங்குவர்.

25 - 27: ஓன்றினொடு . . . . . . . . . . பெருமான்

     (இ-ள்) ஒன்றினொடு ஒன்று சென்று தலைமயங்கும் - ஒன்றோடொன்று சேர்ந்து தம்மில் மயங்குதற்கிடமாகிய; குழகன் குன்றம் - முருகக் கடவுள் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றத்தையுடைய; கூடல் அம்பதி நிறை - நான்மாடக் கூடல் என்னும் அழகிய மதுரைப் பதியின்கண் நிறைந்துள்ள; மஞ்சு அடைகுழல் பெறு - முகிலையொத்த கூந்தலையுடைய கங்கை நங்கை தனக்கிடமாகப் பெற்றுள்ள; செஞ்சடைப் பெருமான் - சிவந்த சடையினையுடைய சிவபெருமான் ஆகிய என்க.

     (வி-ம்.) அருவித் திவலையும், குங்குமக் காண்டமும் நித்திலமும், தரளமும், தூமமும், புகையும், சுரும்பும், வண்டும், மயிலும், அன்றிலும், தலைமயங்கும் குன்றம் என இயைக்க. தலைமயங்கல்: ஒருசொல்; கலத்தல் என்பது பொருள். குழகன்- முருகன். குன்றம் - திருப்பரங்குன்றம். மஞ்சடை குழல் : அன்மொழித் தொகை. கங்கை நங்கை என்க. பெருமான் - சிவபெருமான்.

28 - 32: அருந்தமிழ் . . . . . . . . . . திருவினள்

     (இ-ள்) அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல் - எல்லை காண்டற்கரிய தமிழ்ப்புலவனாகிய நக்கீரன் பாடிய பெருமையுடைய தமிழ்ச் செய்யுளை; வாவியில் கேட்ட - பெற்றாமரைக் குளத்தின்கண் தன் செவியாற் கேட்டருளிய; காவி அம்களத்தினன் - நீலநிறமுடைய அழகிய மிடற்றினையுடைய சோமசந்தரக் கடவுளினது; திருக்கண் கண்ட பெருக்கினர் போல - திருக்கோலத்தைத் தம் கண்ணால் கண்ட அன்புப் பெருக்கினையுடைய அடியார் போல; முளரி அம்கோயில் தளைவிடவந்து - தாமரையாகிய கோயில் இதழாகிய கதவுகளைத் திறந்துவிட இங்கு வந்து; நல்அறம் பூத்த முல்லைஅம் திருவினள் - நல்ல இல்லறத்தை மேற்கொண்டு பெருக்கிய அறக் கற்பினையுடைய அழகிய திருமகளே என்க.

     (வி-ம்.) அருந்தமிழ் - எல்லை காண்டற்கரிய தமிழ் என்க. கீரன் - நக்கீரன், பெருந்தமிழ் - பெருமையுடைய தமிழ். பனுவல்-செய்யுள். இறைவனுடைய செய்யுளுக்குக் குற்றங்வறிய நக்கீரனை இறைவன் நெற்றிக்கண்ணால் நோக்க நக்கீரன் அவ்வெப்பம் பொறாமல் பொற்றாமரைத் தடத்திற் போய்வீழ்ந்து தன்னைக் காப்பாற்றியருளும் படி பாடிப் பரவினானாக, அருளுருவமாகிய இறைவன் அவன் பாடல் கேட்டு மகிழ்ந்து அவனைக் கரையேற்றிக் காப்பாற்றினானாதலின் கீரன் தமிழ்ப் பனுவல் வாவியிற்கேட்ட காவியங்களத்தினன் என்றாள். வாவி ஈண்டுப் பொற்றாமரைக் குளம். களத்தினன் திருவைக்கண் கண்ட பெருக்கினர் என்க. தலைவியைத் திருமகளாக உருவகிக்கின்றாளாகலின் தன்னுடைய தாமரைக் கோயிலிலிருந்து ஈண்டுவந்து நல்லறம் பூத்த திருவினள் என்றாள். நல்லறம் என்றது ஈண்டு இல்லறத்தை. அவை விருந்தோம்பல் முதலியன. "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை" (குறள். 46) என்றார் திருவள்ளுவரும், முல்லை கற்புடைமை. ஊடல் தீர்தற்கு ஏதுக் கூறுவாள் முல்லையந் திருவினள் என்றாள். என்னை"

"சேக்கை இனியார்பாற் செல்வான் மனையாளாற்
 காக்கை கடிந்தொழுகல் கூடுமோகூடா"  
                            (பரிபாடல். 20. 86 - 87)

ஆதலின் நீ ஊடல் தீர்தல் வேண்டும் என்பது இத்தோழியின் கருத்தாகலின் என்க. திருவினள்: அண்மைவிளி.

1 - 5: அவ்வுழி . . . . . . . . . . ஒருவி

     (இ-ள்) அவ்வுழி அவ்வுழி பெய்உணவு உன்னி - பரத்தையர் சேரியின்கண் அவ்வவ் வீடுகளில் தனக்கு இடப்படுகின்ற உணவினைக் கருதி; முகன்தரும் இருசெயல் அகன்பெறக் கொளுவும் - முகமானது மெய்ப்பாடாகக் காட்டும் விருப்பும் வெறுப்பும் என்னும் இரண்டு செயல்களையும் தன் நெஞ்சிலே பொருந்தக் கொள்கின்ற; புல்லப் பாண்மகன் - புன்மையுள்ள பாணனுடைய; சில்லையும் இன்றி - இழிதகைமையும் இன்றி; இன்பக் கிளவி அன்பினர்ப் போக்கி - இன்பம் தருகின்ற சொற்களையுடைய பொய்யன்பினையுடைய பரத்தையர்களையும் அகற்றி; முடித்தலை மன்னர் செருக்குநிலை ஒருவி - முடியணிந்த தலையினையுடைய அரசர்களுக்கியல்பாக உள்ள செருக்குடைமையையும் தன்பானின்று விலக்கி என்க.

     (வி-ம்.) அவ்வுழி அவ்வுழி - அங்கங்கே. முகன், அகன் இரண்டும் போலி, புல்லம் - புன்மை. சில்லை - இழிதகவு. பாணன் கில்லையுமின்றி என்றது பாணனை விடுத்துப் பொய்கூறுவிக்கும் இழிதகைமையும் இன்றி என்றவாறு. இன்பக் கிளவி அன்பினர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. தலைவன் அரசனாகலின் அவனுக்கியல்பாக உள்ள செருக்கினையும் விடுத்து வந்துள்ளான் என்பாள் முடித்தலை மன்னர் செருக்குநிலை ஒருவி என்றாள்.

6 - 11: பொன் . . . . . . . . . . சிறுவனை

     (இ-ள்) பொன்உறு ஞாழல் பூவுடன் கடுக்கும்-பொன்னிறம் பொருந்திய ஞாழற் பூவினையொத்த; பெழ்வாய்ப் புலி உகிர் சிறுகுரல் விளங்க - பெரிய வாயினையுடைய புலியினது நகத்தாலியன்ற அணிகலன் தனது சிறிய கழுத்திற்கிடந்து விளங்காநிற்ப; அமுதம் துளிக்கும் குமுதவாய் குதட்டி - அமிழ்தினையொத்த வாயூறல் சிந்துகின்ற செங்குமுத மலரையொத்த தன் வாயினைக் குதட்டி; பழங்கொள் தத்தை வழங்குசொல் போலும் மழலை கிளவியும் - பழத்தையே உணவாகக் கொள்ளுகின்ற கிளி மொழிகின்ற மொழியையொத்த மழலைச் சொல்லையும்; இருநிலத்து இன்பமும் ஒருவழி அளிக்கும் - இம்மையும் மறுமையுமாகிய ஈரிடத்தும் உண்டாகும் இன்பங்களையும் ஓரிடத்தே உதவுகின்ற; இருங்கதி சிறுவனை - பெரிய வீட்டின் பத்தைத் தரும் இயல்புடைய நம் புதல்வனை என்க.

     (வி-ம்.) பொன்: ஆகுயெர். ஞாழற்பூ புலிநகத்திற்குவமை. புலியுகிர் அதனாலாய அணிகலனுக்காகுபெயர். குரல் கழுத்திற்காகுபெயர். அமுதம் - ஈண்டு வாயூறல். குமுதம் - செங்கழுநீர் மலர். தத்தை - கிளி. மழலைக்கிளவு - எழுத்துருவம் பெறாத மொழி. இருநிலம் - இம்மை மறுமை. இருங்கதி என்றது வீடு போற்றினை.

"எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
 பண்புடை மக்கட் பெறின்"             (குறள். 62)

என்பவாகலின் இருநிலைத்தின்பமும் ஒருவழியளிக்கும் இருங்கதிர்ச் சிறுவன் என்றாள், சிறுவன் என்றது ஈண்டு மகன் என்பதுபட நின்றது.

12 - 14: தழல் . . . . . . . . . . . . . . . புகுதலில்

     (இ-ள்) தழல்விழி மடங்கல் கொலை அரிக்குருளையை - தீப்போன்ற கண்களையும் பிடரிமயிரையும் கொலைத் தொழிலையுமுடைய சிங்கத்தின் குட்டியை; பொன்மலை கண்ட பொலிவு போல - பொன்மலையின்மேல் கண்டதொரு காட்சியைப்போல; மணிகெழு மார்பு அகத்து அணிபெறப் புகுதலில் - மணியணிகலன் பொருந்திய தனது மார்பின்கண் அழகுண்டாகச் செர்த்தி வருதலால் என்க.

     (வி-ம்.) தழல்-தீ மடங்கல்-மடங்கிக் கிடக்கும் பிடரிமயிர். அரிசிங்கம். குருளை-குட்டி. சிங்கக்குட்டி புதல்வனுக்கும் பொன்மலை தலைவன் மார்பிற்கும் உவமைகள். நம்பெருமான் அரசனாயிருந்தும் செருக்கிலனாய் ஊடியிருக்கும் நின்பால் பாணனை வாயிலாக விடாமலும் பரத்தையரைத் தானே நீக்கி மகனைத் தன் மார்போடணைத்துக் கொண்டு நின்பால் ஆற்றாமை வாயிலாகத் தானே வருகின்றனன். ஆதலால் நீ இன்னும் ஊடியிருத்தற்கிடனின்று என்பது கருத்து.

33 - 35: நின்னுளத் . . . . . . . . . . பாலே

     (இ-ள்) வண்டு ஆரும்அருத்தி அம்கோதை மன்னவன் பால் - வண்டுகள் மெய்க்கின்ற நின்னுடைய அவாவிற்குப் பொருளாய் உள்ள அழகிய மலர்மாலை பூண்ட நம்பொருமான்பால்; நின்உளத்து இன்னல் - நின் நெஞ்சிலே தோன்றியிருக்கின்ற துன்பத்திற்குக் காரணமான ஊடலை; மன்அறக் களைந்து பொருத்தம் காண்டி-முழுதும் அறக்களைந்து அவனோடு ஒற்றுமை கொள்வாயாக என்க.

     (வி-ம்.) அருத்தி - அவா. நின் அவாவிற்குக் காரணமான கோதை என்க. கோதை - மாலை. இன்னல் - துன்பம். துன்பத்திற்குக் காரணமான ஊடல் என்க. மன் - ஆக்கம்; அஃது ஈண்டு முழுதும் என்பதுபட நின்றது. காண்டி - காண்பாயாக. இனி இதனைத் திவலை முதலியன தலைமயக்கும் குன்றத்தையுடைய கூடற்பெருமானாகிய காவிக்களத்தினன் திருக்கண்டார் போல அறம்பூத்த திருவினளே நம்பெருமான் பாணனை இன்றியும் அன்பினர்ப்போக்கியும் செருக்குநிலை ஒருவியும் நம் சிறுவனை மார்பகத்துத் தழுவிக்கொண்டு புகுதலால் இனி அவன்பால நீ கொண்டுள்ள இன்னல்களைந்து அவனொடு பொருத்தங்காண்டி என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.