பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 52

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நடைத்திரைப் பரவை நாற்கட லணைத்து
வரையறுத் தமைந்த வகைநான் காக
விதிவரத் திருத்திய மேதினிப் பொறையைக்
குருமணி விரித்தலிற் றேனொடு கிடந்து
மாயாது தொடுத்த மணமலர் சுமத்தலின்
10
  வரையென நிறுத்திய திருவுறை பெருந்தோ
டரித்து மணைத்துந் தானெனக் கண்டுஞ்
செய்தது மன்றித் திருமனம் பணைத்துக்
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்
விடையா வடந்தைசெய் வெள்ளியஞ் சிலம்பினுந்
15
  தென்கால் விடுக்குஞ் செம்பிற் பொருப்பினுங்
கொண்டல்வந் துலவு நீலக் குவட்டினுங்
கோடைசென் றுடற்றுங் கொல்லிக் கிரியினும்
பிறந்தவர் விறவாப் பெரும்பதி யகத்து
முடிந்தவர் முடியா மூதூ ரிடத்துங்
20
  கண்டவர் காணாக் காட்சிசெய் நகரினும்
வேதத் தலையினும் விதியாக மத்தினுங்
கல்விய ருளத்துங் கவர்நெஞ் சகத்துந்
தெய்வம் விடுத்துப் பொய்கொள்சிந் தையினுங்
கொலையினர் கண்ணுங் குன்றா தியைந்து
25
  வெளியுறத் தோன்றி யிருளுற மறைந்த
விஞ்சைவந் தருளிய நஞ்சணி மிடற்றோன்
சந்தமும் பதமுஞ் சருக்கமு மடக்கமுஞ்
சின்னக் குறளுஞ் செழுங்கார் போலப்
பெருமறை முழுங்குந் திருநகர்க் கூட
  லொப்புற் றடைமலர் சுமந்த
மைப்புறக் கூந்தற் கொடிவணங் கிடையே.

(உரை)
கைகோள் : கற்பு. தோழிகூற்று

துறை: காவற் பிரிவறிவித்தல்.

     (இ-ம்.) இதனை "தலைவரும் விழுமநிலை எடுத்துரைப்பினும்" (தொல், அகத், 42) எனவரும் நூற்பாவின்கண் 'நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்' என்பதன்கண் அமைத்துக் கொள்க.

10 - 13: விடையா . . . . . . . . . . கிரியினும்

     (இ-ள்) விடையா வடந்தைசெய் வெள்ளிஅம் சிலம்பினும் - வருத்தம் செய்யாத வடகாற்றினை விடுக்கின்ற செம்பினையுடைய பொதிகை மலையினும்; கொண்டல் வந்து உலவும் நீலக்குவட்டினும் - கீழ்காற்று வந்து உலவுகின்ற நீலமலையிலும்; கோடை சென்று உடற்றும் கொல்லிக்கிரியினும் - மேல்காற்று வந்து வருத்துகின்ற கொல்லிமலையினும் என்க.

     (வி-ம்.) விடைத்தல் - வருத்துதல். எனவே விடையா என்பது அதன் எதிர்மறை வினையாயிற்று. வடந்தை - வடகாற்று. வெள்ளிச் கிலம்பு - கயிலைமலை. தென்கால் -தென்றற்காற்று. செம்பின் பொருப்பு-என்றது பொதியமலையை. பொதியமலையின்கண் செம்பு என்னும் உலோகத்துகள் மிக்கிருத்தல்பற்றி செம்பற்பொருப்பு எனப்பட்டது. இக் காரணத்தாலே அம்மலையிற் றோன்றும் யாற்றிற்கும் 'தாமிரபரணி' என்னும் பெயர் வழங்குதல் காண்க. கொண்டல் - கீழ்காற்று. நீலக்குவடு என்றது நீலகிரியை. கோடை- மேல்காற்று. கொல்லிக்கிரி - கொல்லிமலை.

14 - 21: பிறந்தவர் . . . . . . . . . . தோன்றி

     (இ-ள்) பிறந்தவர் பிறவா பெரும்பதி அகத்தும் தன்னிடத்தே பிறந்தவர்கள் வீடு பெறுதலேயன்றி மீண்டும் பிறவாத பெருமையினையுடைய திருவாரூரிலும்; முடிந்தவர் முடியா மூதூர் இடத்தும் - தன்னிடத்தே வந்து இறந்தவர்கள் வீடுபெறுதலேயன்றி மீண்டும் பிறந்து இறவாத சிறப்பினையுடைய பழமையான வடகாசியிலும்; கண்டவர் காணாக் காட்சி செய்நகரினும் - தன்பால் வந்து கண்டவர் மீண்டும் பிறப்பினைக் காணாமைக்குக் காரணமான மெய்க்காட்சியினைச் செய்கின்ற தில்லைப் பதியினும்; வேதத் தலையினும் - மறையினுச்சியினும்; விதி ஆகமத்தினும் - சான்றோரால் விதிக்கப் பட்ட ஆகமங்களினும்; கல்வியர் உளத்தும் - கற்று மெய்யுணர்ந்த சான்றோர் செஞ்சத்தினும்; குன்றாது இயைந்து- குறையாமல் பொருந்தி; வெளி உறத்தோன்றி- வெளிப்பட்டுத் தோன்றியும் என்க.

     (வி-ம்.) ஆரூரில் பறிக்க முத்தி, காசியில் இறக்க முத்தி, தில்லையைக் காண முத்தி என்பது பற்றி இங்ஙனம் கூறினார், பிறவாத முடியாத காணாத எனல்வேண்டிய பெயரெச்சத்து ஈறுகள் தொக்கன, பிறந்தவர் விறவாத பெரும்பதி என்றது ஆரூரை. முடிந்தவர் முடியாத மூதூரென்றது வடகாசியை. கண்டவர் காணாத காட்சி செய்நகர் என்றது தில்லையை என்க. கல்வியர் என்றது மெய்ஞ்ஞானக் கேள்வியுடையாரை.

18 - 20: கவர் . . . . . . . . . . கண்ணும்

     (இ-ள்) கவர் நெஞ்சகத்தும் - ஐம்புலக்னளிடத்தும் கவர்பட்டுச் செல்லும் நெஞ்சினிடத்தும்; தெய்வம் விடுத்த பொய் கொள் சிந்தையினும் - மெய்ப் பொருளாகிய தெய்வம் உண்டென் பதையும்விடுத்து மண் பெண் பொன் முதலிய பொய்ப் பொருள்களையே உறுதிப் பொருள்கள் என்று கொள்ளுகின்ற நெஞ்சத்தினும்; கொலையினர் கண்ணும் - கொலைத்தொழில் செய்வாரிடத்தும் என்க.

     (வி-ம்.) (10 முதல் 20 வரையில்) சிலம்பினும் பொரும்பினும் குவட்டினும் கரியினும் பெரும்பதியகத்தும் மூதூரிடத்தும் நகரினும் தலையினும் ஆகமத்தினும் உளத்தும் (20- 21) குன்றாதியைந்து வெளியுறத்தோன்றி எனவும் கொண்டு கூட்டுக. இனி, கவர் நெஞ்சகம் என்பது ஐம்புலன்களிடத்தும் கவர்த்துச் செல்லும் நெஞ்சகம் என்றவாறு. தெய்வம் விடுத்து என்றது மெய்ப்பொருளாகிய தெய்வத்தை உண்டென்பதையும் விடுத்து என்பதுபட நின்றது. பொய்கொள் சிந்தை என்றது மண், பெண், பொன் முதலிய பொய்ப்பொருள்களையே உறுதிப் பொருள்களாகக் கொள்கின்ற சிந்தை என்பதுபட நின்றது.

21 - 22: இருள் . . . . . . . . . . மிடற்றோன்

     (இ-ள்) இருள்உற மறைந்த - இருளுண்டாக மறைகின்ற; விஞ்சை வந்து அருளிய நஞ்சு அணி மிடற்றோன் - வித்தை கைவந்த நஞ்சினை அணிந்த மிடற்றினை யுடையவனது என்க.

     (வி-ம்.) (19 முதல் 20 வரையில்) கவர் நெஞ்சகத்தும் பொய்கொள் சிந்தையினும் கொலையினர் கண்ணும் (20 - 21) இருளுறமறைந்த மிடற்றோன் எனக்கொண்டு கூட்டிக்கொள்க. விஞ்சை - வித்தை. சில இடங்களின் தோன்றிச் சில இடங்களில் மறைதலின் இச்வெயலை வித்தை என்றார்.

23 - 27: சத்தமும் . . . . . . . . . . இடையே

     (இ-ள்) பெருமறைச் சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும் - விரிந்த வேதத்திலுள்ள இசைகளும் மொழிகளும் சருக்கங்களும் அடக்கங்களும்; சின்னக் குறளும் - சிற்றுரு வமைந்த திருக்குறளும்; செழுங்கார்போல முழங்கும் - வளவிய முகில் போல முழுங்குகின்ற; திருநகர் கூடல் ஒப்புற்று - அழகிய நகராகிய மதுரைக்கு ஒப்பாகி; அடைமலர் சுமந்த - தழைகளும் மலர்களும் தாங்கா நின்ற; புறம் மை கூந்தல் - முதுகின்கட்கிடந்த கரிய கூந்தலையும்; வணங்கு கொடி இடை- வளைகின்ற பூங்கொடிபோன்ற இடையினையுமுடைய எம்பெருமாட்டியே கேள் என்க.

     (வி-ம்.) பெருமறைச் சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும் என இயைத்துக் கொள்க. சின்னக்குறள் என்றது சிறிய உருவத்தாலியன்ற வெண்பாக்களையுடைய திருக்குறளை. எனவே ஆரியர் மறையும் தமிழ் மறையும் ஒருங்கே முழுங்கும் மதுரை என்றாளாயிற்று. சத்தம் முதலியன நூலுறுப்புக்கள். கூடல் ஐம்பொறி இன்பங்களையும் ஒருங்கே உடைத்தாதல் போல ஐம்பொறி இன்பங்களையும் ஒருங்கே தருபவள் என்பது கருதிக் கூடல் ஒப்புற்று என்றாள். அடை - இலை. மை - கருமை. வணங்கிடை: அன்மொழித்தொகை.

1 - 9: நடைத் . . . . . . . . . . போலும்

     (இ-ள்) குருசில் - நம்பெருமானுக்கு; நடைதிரை பரவை நால்கடல் அணைத்து- இயங்குதலையுடைய அலையையுடைய நீர்ப்பரப்பாகிய நாற்றிசைக் கடல்களால் கோலி; வரை அறுத்து - எல்லைப்படுத்தி; அமைந்த வகை நான்கு ஆக விதிவரதிருத்திய மேதினிப் பொறையை - பொருந்திய கூறு நான்கு ஆகும்படி இலக்கண விதியுண்டாகச் சான்றோர்களால் திருத்தியமைக்கப்பட்ட நிலமாகிய சுமையினை; குருமணி விரித்தலின்- தோளணியின்கண் குருவிந்த மணிகள் பதிக்கப்பட்டு ஒளி பரப்புதலாலும்; தேனொடு கிடந்து மாயாது தொடுத்த மணமலர் சுமத்தலின் - வண்டுகளோடு பொருந்தி வாடாமல் தொடுக்கப்பட்ட நறுமணமுடைய மலர்மாலைகளைச் சுமத்தலாலும்; மலைகள் இவை என - கண்டோர் இவைகள் மலைகள் என்று சொல்லும்படி; நிறுத்திய திருவுறை பெருந்தோள் தரித்தும் - பகைவரை வென்று நிரல நிறுத்தப்பட்ட வெற்றித்திரு உறைகின்ற தன்னுடைய பெரிய தோளினிடத்தே தாங்கியும்; அணைத்தும்- தழுவிக்கொண்டும்; தான் எனக் கண்டும் - அந்நிலத்தின்கண் வாழும் உயிர்களைத் தன்னுயிர் என்றே நினைந்தும்; செய்ததும் அன்றி - இதுகாறும் பாதுகாத்தற் றொழிலைச் செய்து வந்ததுமல்லாமல்; திருமனம் பணைத்து - தனது அழகிய நெஞ்சம் ஊக்கங்கொண்டு; காக்கவும் கருத்து உறும் போலும் - இந்நிலத்தினைப் பகைவர்கைபற்றா வண்ணம் பாதுகாக்கவும் ஒரு கருத்தினைக் கொண்டுள்ளான் போல்கின்றனன் என்க.

     (வி-ம்.) குருசில் - தலைவன். நடை - இயக்கம். பரவை - பரப்பு. நாற்கடல் நான்கு திசைகளிலும் உள்ள கடல்கள். வகை நான்கு ஆக என்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகைப்படும்படி என்றவாறு. விதி - இலக்கண விதி. பழைய உரையாசிரியர் மனுநூல் விதி என்றது வேண்டா கூறுதல் ஆதல் உணர்க. மேதினி - தநிலம். பொறை - சுமை. குருமணி - குருவிந்தம் என்னும் மணி. தேன் - வண்டு, தலைவனுடைய தோளுக்கு மலை உவமை. மலை உவமையாதற்குப் பொதுத்தன்மை மணி விரித்தலும் மலர் சுமத்தலும் என்க. பகைவரை வென்று நிலைநிறுத்திய திரு என்க. திரு-வெற்றித்திரு சுமைசுமப்போர் தோளிற்றாங்கியும் மார்பிலணைத்தும் சுமத்தல் இயல்பாகலின் நிலச்சுமையை நம்பெருமான் தோள் தரித்தும் அணைத்தும் சுமந்தனன் என்றாள். மனம் பணைத்தல் - நெஞ்சம் ஊக்கங்கோடல். கருத்துறும் - கருத்துக் கொள்வான் போலும். எனவே இப்பொழுது நம்பெருமான் நாடுகாத்தற் பொருட்டு நம்பை் பிரிந்து போவான். இதனை நீ உணர்ந்து கொள் என்றாளாயிற்று.

     இனி இதனைக் கூடல் ஒப்பாகிய வணங்கிடையாய்! நங்குருசில் இதுகாறும் மேதினிப் பொறையைத் தரித்தும் அணைத்தும் தானெனக் கண்டும் செய்ததும் அன்றி இப்பொழுது மனம் பணைத்து நம்நாடு பகைவர்பாற் படாமல் காக்கவும் கருதுவான் போல்கின்றனன் என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.