பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 53

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நுனிக்கவி னிறைந்த திருப்பெரு வடிவின
ளுயிர்வைத் துடல முழுன்றன போல
நெடும்பொரு ளீட்ட நிற்பிரிந் திறந்து
கொன்றுண லஞ்சாக் குறியினர் போகுங்
கடுஞ்சுரந் தந்த கல்லதர் வெப்பந்
10
  தேவர் மருந்துந் தென்றமிழ்ச் சுவையு
மென்னுயிர் யாவையு மிட்டைத் தேந்திக்
குருவியுங் குன்றுங் குரும்பையும் வெறுத்தநின்
பெருமுலை மூழ்கவென் னுளத்தினிற் றொடாமுன்
வீழ்சுற் றொழுக்கிய பராரைத் திருவடக்
15
  குளிர்நிழ லிருந்து குணச்செயன் மூன்று
முடலொடு படரு நிலைநிழல் போல
நீங்காப் பவத்தொகை நிகழ்முத னான்கு
முடனிறைந் தொழியா வுட்பகை யைந்து
மதிஞரிற் பழித்த வடுவிரு மூன்று
20
  மணுகா தகற்றிப் பணிமுனி நால்வர்க்
கறமுத னான்கும் பெறவருள் செய்த
கூடற் பெருமா னீடருண் மூழ்கி
யிருபத முள்வைத் திருந்தவர் வினைபோற்
போயின துனைவினை நோக்கி
  யேகின வெனக்கே யற்புதந் தருமே.

(உரை)
கைகோள் : கற்பு. தலைவன் கூற்று

துறை: உண்மகிழ்ந்துரைத்தல்.

     (இ-ம்.) இதனைக் "கரணத்தினமைந்து முடிந்த காலை . . . . . கிழவோன் மேன" (தொல். கற்பி. 5) எனவரும் நூற்பாவின்கண் 'எண்ணரும்சிறப்பு' என்பதன்கண் அமைத்துக் கொள்க.

1 - 5: நுனிக் . . . . . . . . . . வெப்பம்

     (இ-ள்) நுனிகவின் நிறைந்த திருபெரு வடிவினள் - உணர்வுடையோர் நுனித்துணர்தற்குத் தகுந்த அழகு நிரம்பிய திருமகளினுங் காட்டில் மிக்க வடிவினையுடையோய்! கேள்; உயிர் வைத்து உடலம் உழன்றன போல - உயிரை ஓரிடத்தே வைத்து உடம்பு தனியே திரிந்தாற்போன்று; நெடும்பொருள் ஈட்ட நின்பிரிந்து இறந்து - மிக்க பொருளைத் தேடும்பொருட்டு உன்னை இல்லத்தின்கண் தனித்துறைய வைத்துப் பிரிந்து போய்; கொன்று உணல் அஞ்சா குறியினர்போகும் கடுஞ்சுரம் தந்த- உயிர்களைக் கொன்று உண்ணுதலாகிய தீவினைக்கு அஞ்சாத குணமுடைய தீயோர் செல்லுதற்குரிய இடமாகிய கொடிய பாலைநிலத்திலுள்ள; கல் அதர் வெப்பம்- பரல்களையுடைய வழியில் உண்டான வெப்பமானது என்க.

     (வி-ம்.) நுனிக்கவின் - நுனித்துணர்தற்குரிய அழகு. திரு-திருமகள். வடிவினள்: அண்மை விளி. தலைவிக்கு உயிர் உவமை. தலைவனுக்கு உடல் உவமை. உயிர்வைத்து உடலம் உழன்றனபோல என்பது இல்பொருளுவமை. உடல் நண்ணுடலும் பருவுடலும் எனப் பலவாகலின் உழன்ற எனப் பன்மை வறப்பட்டது. நெடும் பொருள் என்புழி நெடுமை மிகுதி குறித்து நின்றது. இறத்தல் - செல்லல். கொன்று என்றதனால் உயிர்களை என்னும் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. அஞ்சாத என்னும் பெயரெச்சத்தீறு தொக்கது. கொன்றுண்ணுந் தீவினையாளர் எயினர் முதலியோராய்ப் பிறந்து பாலைநிலத்தே உழல்வர் என்பதுபற்றிக் கொன்றுணல் அஞ்சாக் குறியினர் போகுங் கடுஞ்சுரம் என்றான். சுரம் - பாலை. கல் - பரல்; மலையுமாம். அதர்- வழி.

6 - 9: தேவர் . . . . . . . . . . முன்

     (இ-ள்) தேவர் மருந்தும் தென்தமிழ்ச் சுவையும் என்உயிர் யாவையும் இட்டு அடைத்து எந்தி - அமரர்கள் உண்ணுகின்ற அமிழ்தமும் இனிய செந்தமிழின் சுவையும் என்னுடைய உயிரும் ஆகிய இவையிற்றை யெல்லாம் தமக்குள்ளே பெய்து அடைக்கப்பட்டு இறுமாந்து; குருவியும் குன்றும் குரும்பையும் வேறுத்த - சக்கரவாகப் பறவையையும் மலைகளையும் தெங்கிளங்காயையும் சினந்த; நின் பெருமுலை மூழ்க என் உளத்தினில் தொடாமுன் - நின்னுடைய பெரிய முலைகளில் மூழ்கித் திளைத்தற்கு யான் என் நெஞ்சத்தால் நினைப்பதற்கு முன்பே என்க.

     (வி-ம்.) மருந்து - அமிழ்தம். நினைத்தற்கும் நுகர்தற்கும் இனிய வாதலின் அமிழ்தமும் தமிழ்ச் சுவையும் உவமையாயின. தனக்கின்றியமையாமையின் தன் உயிரையும் இட்டு அடைக்கப்பட்டு என்றான். ஏந்துதல் - இறுமாந்திருத்தல். குருவி என்னும் பொதுப்பெயர் குறிப்பால் ஈண்டுச் சக்கரவாகப் பறவையைக் குறித்து நின்றது. குரும்பை - பனங்குரும்பையுமாம். மூழ்குதல் - தழுவித் திளைத்தல். உளத்தினில் என்புழி ஏழனுருபு மூன்றாவதன்கண் மயங்கிற்று தொடுதல் - ஈண்டு நினைத்தல்.

10 - 12: வீழ் . . . . . . . . . . போல

     (இ-ள்) வீழ் சுற்று ஒழுக்கிய பராரை திருவடக் குளிர் நிழல் இருந்து-விழுதுகளைத் தன்னைச் சூழ இறக்கிய பரிய அடிப்பகுதியையுடைய அழகிய கல்லாலின் குளிர்ந்த நிழலின்கண் வீற்றிருந்து; குணச்செயல் மூன்றும் உடலொடு படரும் நிலை - இராசதம் முதலிய மூன்று குணங்களின் செய்கைகளும் உடலோடு செல்லுகின்ற நிலைமையினையுடைய; நிழல் போல - நிழலின் தன்மைபோல என்க.

     (வி-ம்.) வீழ் - விழுது. பருஅரை - பராரை எனப் புணர்ந்தது. வடம் - ஆலமரம். குணம் - இராசதம், தாமதம், சாத்துவிகம் என்பன. இக்குணங்கள் உடலைத் தொடரும் நிழல்போல உயிரைத் தொடர்வன என்பது கருத்து.

13 - 16: நீங்கா . . . . . . . . . . அகற்றி

     (இ-ள்) நீங்கா பவம் தொகை - நீங்காத பிறவிக்கு ஏதுவாகிய வினைக்கூட்டம்; நிகழ்தற்கக் காரணமான உட்கருவிகள் நான்கும்; உடன் நிறைந்து - தம் முடனே அநாதியாயிருந்து; ஒழியா உள்பகை ஐந்தும் - நீங்குதலில்லாத உட்பகைகள் ஐந்தும்; மதிஞரின் பழித்த வடுஇரு மூன்றும் - அறிஞர்களால் பழிக்கப்பட்ட காமம் முதலிய கற்றங்கள் ஆறும்; அணுகாது அகற்றி - தம்மை நெருங்காமல் விலக்கி என்க.

     (வி-ம்.) பவம் - பிறப்பு. குணச்செயல் மூன்றும் நீங்காப் பவம் என்க. தொகை- என்றது ஈண்டு வினைக்கூட்டத்தை. முதல் - காரணம். முதல் நான்கும் என்றது மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் உட்கருவிகளை. உட்பகை ஐந்தும் என்றது அவிச்சை, அகங்காரம், அவா, விருப்பு, வெறுப்பு என்பனவற்றை. மதிஞர்-அறிஞர். வடு - குற்றம். அறுவகைக் குற்றங்களாவன : காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மார்ச்சரியம் என்பன.

16 - 19: பணி . . . . . . . . . . போற்

     (இ-ள்) பணிமுனி நால்வர்க்கு அறம் முதல் நான்கும் பெற அருள்செய்த- தன்னை வணங்கிய முனிவர் நால்வர்க்கும் அறம் முதலிய உறுதிப்பொருள் நான்கும் உண்டாகும்படி குறிப்பாய் அறிவுறுத்திய; கூடல் பெருமான் நீடு அருள் மூழ்கி-மதுரையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுடைய அழிவில்லாத திருவருட் கடலில் முழுகி ; இருபதம் உள்வைத்து இருந்தவர் வினைபோல் - இரண்டு திருவடிகளையும் நெஞ்சத்தில் இருத்திபோகிருந்தவர்களுடைய வினைகள் ஒழிந்தாற்போல என்க.

     (வி-ம்.) முனிவர் நால்வரென்றது - சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனச்சுசாதர் என்பவர். அறமுதல் நான்கும் என்றது - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கனையும், இறைவன் கல்லாலின் நீழலிலிருந்து சனகர் முதலிய முனிவர்க்கு அறமுதலிய நாற்பொருளையும், உணர்த்தியதனை,

"கல்லாலி னீ ழறனி லொருநால் வார்க்கு
கடவுணீ யுணர்த்தியதுங் கைகாட் டென்றாற்
சொல்லாலே சொலப்படுமோ சொல்லுந் தன்மை
துரும்புபற்றிக் கடல்கடக்கும் துணிபே யன்றோ."

எனத் தாயுமானாரும்.

"கல்லாலின் புடையமர்ந்து நான் மறையா
     றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
     பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
     யிருந்தபடி யிருந்து காட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாம
     னினைந்துபவத் தொடக்கை வெல்வாம்"

எனப் பரஞ்சோதி முனிவரும் அருளிய பாடல்களான் உணர்க. இருந்தவர்- போகிருந்தவர் என்க. வினை - இருவினைகளும்.

20 - 21: போயின . . . . . . . . . . தருமே

     (இ-ள்) போயின துனைவினை நோக்கி ஏகின எனக்கு அற்புதம் தருமே- ஒழிந்துபோன விரைவினை ஆராயுமிடத்து நின்னைப் பிரிந்துசென்ற எனக்கு வியப்பைத் தாரா நிற்கும் என்க.

     (வி-ம்.) (5) வெப்பம் (20) போயின துனைவினை நோக்கி எனக்கு அற்புதம் தரும் என்க. துனைவு - விரைவு. நோக்கி என்னும் செய்தெனெச்சத்தைச் செயவென் னெச்ச மாக்குக. அற்புதம் - வியப்பு.

     இனி இதனை வடிவினளோ! நிற்பிரிந் திறந்துபோகுங் கடுஞ்சுரந் தந்த கல்லதர் வெப்பமானது நின் பெருமுலை மூழ்க வென்னுள்ளத் தினிற் றொடாமுன் வடற்பெருமா னீடருண் மூழ்கி யிருபதமுள் வைத்திருந்தவர் வினைபோற் போயின துனைவினை நோக்கி, ஏகினவெனக்கே யற்புதறந் தருமென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.