பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 56

நேரிசையாசிரியப்பா

 
   
5
  அடியவ ருளத்திரு ளகற்றலின் விளக்கு
மெழுமலை பொடித்தலி னனறெறு மசனியுங்
கருங்கடல் கடித்தலிற் பெருந்தழற் கொழுந்து
மாவுயிர் வௌவலிற் றீவிழிக் கூற்று
மென்னுள மிருத்தலி னியைந்துண ருயிரு
10
  நச்சின கொடுத்தலி னளிர்தரு வைந்துங்
கருவழி நீக்கலி னுயர்நிலைக் குருவு
மிருநிலங் காத்தலின் மதியுடை வேந்து
மாகிய மணிவேற் சேவலங் கொடியோன்
வானக மங்கையுந் தேன்வரை வள்ளியு
15
  மிருபுறந் தழைத்த திருநிழ லிருக்க
மொருபரங் குன்ற மருவிய கூடற்
பெருநதிச் சடைமிசைச் சிறுமதி சூடிய
நாயகன் றிருவடி நண்ணலர் போலப்
பொய்பல புகன்று மெய்யொழித் தின்பம்
20
  விற்றுணுஞ் சேரி விடாதுறை யூர
னூருணி யொத்த பொதுவாய்த் தம்பல
நீயுங் குதட்டினை யாயிற் சேயாய்
நரம்பெடுத் துமிழும் பெருமுலைத் தீம்பாற்
குள்ளமுந் தொடாது விள்ளமு தொழுகுங்
25
  குதலைவாய் துடைப்பக் குளக்கடை யுணங்கியு
மண்ணுறு மணியெனப் பூழிமெய் வாய்த்தும்
பொலன்மணி விரித்த வுடைமணி யிழுக்கியுஞ்
சுட்டியுஞ் சிகையுஞ் சோர்ந்துகண் பனித்தும்
பறையுந் தேரும் பறிபட் டணங்கியு
  மறிக்கட் பிணாவின ரிழைக்குஞ் சிற்றிலிற்
சென்றழி யாது நின்றயர் காண்ப
னுறுவது மிப்பய னன்றேற்
பெறுகுவ தென்பா லின்றுநின் பேறே.

(உரை)
கைகோள்: கற்பு, தலைவிகூற்று

துறை: புதல்வன் மேல்வைத்துப் புலவி தீர்தல்,

     (இ-ம்.) இதற்கு "அவனறிவு ஆற்ற அறியு மாகலின்" (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண் 'தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்' எனவரும் விதிகொள்க.

1 - 4: அடியவர் . . . . . . . . . . கூற்றும்

     (இ-ள்) அடியவர் உளத்து இருள் அகற்றலின் - மெய்யடியாரது நெஞ்சத்துள்ள மலவிருளைப் போக்குதலால்; விளக்கும் - விளக்கினையும்; எழுமலை பொடித்தலின்- ஏழுமலைகளையும் நீறு செய்தலாலே; அனல் தெறும் அசனியும் - தீயாலழிக்கின்ற இடியேற்றினையும்; கருங்கடல் குடித்தலில் - கரிய கடல்நீரைப் பருகுதலாலே; பெருந்தழல் கொழுந்தும் - பெரியவடவைத் தீயின் பிழம்பையும்; மா உயிர் வௌவலின் - மாமரவுருவாகிய சூரனுயிரைக் கவர் தலாலே; தீவிழிக் கூற்றும்- தீக்காலும் கண்ணையுடைய கூற்றுவனையும் என்க.

     (வி-ம்.) இருள் - ஆணவமலம். மலை - கிரவுஞ்சமலை தெறுதல் - அழித்தல். அசனி - இடியேறு. பெருந்தழல் என்றது வடவைத்தீயை. மா - மாமரமாகிய சூரன். கூற்று - கூற்றுவன்.

5 - 9: என்னுளம் . . . . . . . . . . கொடியோன்

     (இ-ள்) என் உளம் இருத்தலின் - அடியேனுடைய உள்ளத்தினூடுறைதலாலே; இயைந்து உணர் உயிரும் - கருவிகளோடு பொருந்தி உணர்கின்ற என் உயிரையும்; நச்சினகொடுத்தலின் - அடியார் விரும்பியவற்றை வழங்குதலாலே; நளிர் ஐந்து தருவும் -களிர்ந்த ஐந்து தேவ தருக்களையும்; கருவழி நீக்கலின் - அடியார்க்குப் பிறவி வருதற்கேதுவாகிய வழியை அடைத்தலாலே; நிலை உயர் குருவும் - நிலையினின்று உயர்ந்த நல்லாசிரியனையும்; இருநிலம் காத்தலின் - பேருலகத்தைப் பாதுகாத்தலாலே; மதி உடை வேந்தும் - திங்கள் மரபிலுதித்த பாண்டிய மன்னனையும்; ஆகிய- நிகராகிய; மணிவேல் சேவல் அம் கொடியோன் - மணியையுடைய வேற்படையினையும் சேவற் கொடியினையும் உடைய முருகப் பெருமானாகிய கற்பகத் தருவினது என்க.

     (வி-ம்.) உணருயிர்: வினைத்தொகை. நச்சுதல் - விரும்புதல். நளிர் - களிர்ச்சி ஐந்து தருவும் என்க. அவயாவன அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் எனப்ன. கரு - தபிறப்பு. குரு - ஆசிரியன். இருநிலம் - பேருலகம். மதியுடை வேந்தும் - அறிவுடைய அரசனும் எனினுமாம். மணி - வேலிற் கட்டியுள்ள ஒலிமணி; பதித்துள்ள மணியுமாம்.

10 - 14: வாகை . . . . . . . . . . போல

     (இ-ள்) இருபுறம் - இரண்டு பக்கங்களினும்; வானக மங்கையும்-தெய்வயானை நாய்ச்சியாரும்; தேன்வரை வள்ளியும்தேன் ஒழுகுகின்ற மலையினிடத்தே வளர்ந்த வள்ளி நாய்ச்சியாரும்; தழைத்து - ஆகிய பூங்கொடிகளிரண்டும் தழைத்தமையா லுண்டான நிழலில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் என்றவாறாயிற்று. வானக மங்கை - தெய்வயானை. பெருநதி - கங்கைப் பேரியாறு. பெருநதி நிறுமதி என்புழிச் செய்யுளின்பமுணர்க. அடியை நண்ணுதலாவது, நினைத்தல்.

15 - 21: பொய் . . . . . . . . . . உணங்கியும்

     (இ-ள்) சேயாய் - மகனே!; பலபொய் புகன்றும் - பலவாகிய பொய்களைச் சொல்லியும்; மெய் ஒழித்து - வாய்மையைக் கைவிட்டு; இன்பம் விற்று உணும்- இன்பத்தை விலைக்கு விற்று உண்டு வாழ்கின்ற; சேரிவிடாது உறை - பரத்தையர் சேரியில் இடைவிடாதிருக்கின்ற; ஊரன் - உன் தந்தை ஈந்த; ஊருணி உத்த - ஊர்மக்ள் எல்லாம் நீருண்ணும் பொதுநீர் நிலையை ஒத்த; பெது - யாவர்க்கும் பெதுவாகிய; வாய்தம் பலம் - பரத்தை மகளிர் வாய்த்தம்பலத்தை; நீயும் குதட்டினையாயின்- நீதானும் மென்றாயாயின்; நரம்பு எடுத்து உமிழும் பெருமுலை தீம்பாற்கு-நரம்பு தடித்து வெளிப்படுத்துகின்ற எமது பெரிய முலைசுரக்கும் இனிய பாலை; உள்ளமும் தொடாது- நீ நின் நெஞ்சத்தாலும் நினையாமல்; விள் அமுது ஒழுகும் - அமுதம் விண்டு ஒழுகாநின்ற; குதலைவாய் துடிப்ப - தநின் மழலைவாயானது பாலுக்கு ஏக்கற்றுத் துடிக்கும்படி; குலக்கடை உணங்கியும் - பெரிய முன்றிலிலே நின்று வருந்தியும் என்க.

     (வி-ம்.) சேயாய்: விளி. மெய் - வாய்மை. இன்பம் - காமவின்பம். சேரி- பரத்தையர் சேரி. ஊரன் - ஊரனாகிய உன் தந்தை என்க. தந்தையீந்த வாய்த்தம்பலம் என இயைத்துக் கொள்க. குதட்டுதல் - மெல்லுதல். நரம்பெடுத்தல் - நரம்பு தடித்தல். விள்ளமுது : வினைத்தொகை. குதலை - மழலைமொழி. குலம் - பெருமை.

22 - 25: மண்ணுறும் . . . . . . . . . . அணங்கியும்

     (இ-ள்) மண்உறும் மணிஎன பூழிமெய் வாய்த்தும் - மண் படிந்த மணியைப்போலப் புழுதி உடலிற் பொருந்தவும்; பொலன் மணி விரித்த உடைமணி இழுக்கியும் - பொன்னும் மணியும் விரிக்கப்பட்ட அரைமணியானது சரிந்தும்; சுட்டியும் சிகையும் சேர்ந்து - நெற்றிச் சுட்டியும் சிகழிகையும் அவிழ; கண் பனித்தும் - கண்ணீர் சிந்தியும்; பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும் - சிறுபறையும் சிறுதேரும் பறித்துக் கொளப்பட்டு நொந்தும் என்க.

     (வி-ம்.) மண்ணுறும் மணி - புழுதிபடிந்த மணி. பொலன் - பொன். உடைமணி -இடையில் உடுக்கும் மணி அணிகலன். சிகை - சிகழிகை. பறைதேர் இரண்டும் சிறார் விளையாடும் சிறுபறையும் சிறுதேரும். உன் தாய்மார் சிறுபறையும் சிறுதேரும் உனக்கு விளையாடுவதற்காகக் கொடுத்திருக்கின்றார். அவற்றைப் பறித்துக் கொள்ளுமாறு சொல்வேன்; அல்லது நானே பறித்துக்கொள்வேன் என்பது கருத்து.

26 - 28: மறிக்கண் . . . . . . . . . . பயன்

     (இ-ள்) மறிக்கண் பிணாபினர் - மான்போல் கண்களையுடைய பேதைமகளிர்; இழைக்கும் சிறு இல்லில் சென்று அழியாது - கட்டும்சிற்றில்லில் சென்று அழித்திடாமல்; நின்று - நீ மயங்கி நின்று; அயர் காண்பன் - தளர்ச்சியுறுதலை யான் காண்குவேன்! உறுவதும் இப்பயன் - நீ நின் தந்தை தந்த தம்பலத்தைத் தின்றதனால் இனி நீ எய்துவதும் இந்தப் பயனே காண் என்க.

     (வி-ம்.) மறி - மான். பிணாவினர் - பெண்கள், ஈண்டுச் சிற்றில்லில் இழைத்து விளையாடும் பேதைப் பருவத்து மகளிர். (19) சேயாய்! நீயும் தம்பலம் குதட்டினையாயின் (20) தீம்பாற்கு உள்ளந் தொடாது துடிப்ப உணங்கியும் வாய்த்தும் இழுக்கியும் பனித்தும் அணங்கியும் அழியாது நின்று அயர்தலை யான் காண்பான். (இதனால்) உறுவதும் இப்பயனே காண் என இயைத்துக் கொள்க.

28 - 29: அன்றேல் . . . . . . . . . . பேறே

     (இ-ள்) அன்றேல் - அங்ஙனம் நீ இனிச் செய்யாயானால்; என் பால் பெறுகுவது-எனது முலைப்பாலைப் பெறுவது; இன்று நின்பேறு - இப்பொழுதே நின்னுடைய பேறாகும் என்க.

     (வி-ம்.) அன்றேல் என்றது, நீ நின் தந்தை தந்த தம்பலத்தை இங்ஙனம் குதட்டாதொழியின் என்றவாறு. பேறு - பெறுதற்குரிய பொருள்.

     இதனை செயாய்! சேவலங் கொடியோன் இருக்கம் ஒரு பரங்கன்ற மருகிய வடனாயகன் றிருவடி நண்ணலர் போல, ஊரன் ஊருணியொத்த பொதுவாய்த்தம்பலம் நீயுங் குதட்டினையாயின், துடிப்பவுணங்கியும் வாய்த்து மிழுக்கியும் பனித்தும் அணங்கியும் நின்றயர்தல் பாண்பன், உறுவது மிப்பயனே; அன்றேல் என்பால் பெறுவதின்று நின்பேரென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.