பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 57

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நடைமலை பிடித்த சொரியெயிற் றிடங்கரை
யாழி வலவ னடர்த்தது போலப்
புன்றலை மேதியைப் புனலெழ முட்டிய
வரியுடற் செங்கண் வராலுடன் மயங்க
வுட்கவைத் தூண்டி லுரம்புகந் துழக்கு
10
  நிறைநீ ரூர நெஞ்சகம் பிரிக்கும்
பிணிமொழிப் பாண னுடனுறை நீக்கி
நூலொடு துவளுந் தோறிரை யுரத்தின்
மால்கழித் தடுத்த நரைமுதிர் தாடிசெய்
வெள்ளி முகிழ்த்த வொருகட் பார்ப்பான்
15
  கோலுடன் படருங் குறுநகை யொருவிப்
பூவிலைத் தொழின்மகன் காவல்கை விட்டுத்
திக்குவிண் பெருகத் திருமதி கைலை
நாமகள் பெருங்கட னாற்கோட் டொருத்தல்
புண்ணிய மிவைமுதல் வெள்ளுடற் கொடுக்கும்
20
  புகழ்க்கவிப் பாடகர் புணர்ச்சியின் பகற்றி
யெல்லாக் கல்வியு மிகழ்ச்சிசெய் கலவியர்
பெருநகைக் கூட்டமுங் கழிவுசெய் திவ்விடை
மயக்குறு மாலை மாமக ளெதிர
வொருவழி படர்ந்த தென்னத் திருமுக
25
  மாயிர மெடுத்து வான்வழி படர்ந்து
மண்ணே ழுருவி மறியப் பாயும்
பெருங்கதத் திருநதி யொருங்குழி மடங்க
வைம்பகை யடக்கிய வருந்தவ முனிவ
னிரந்தன வரத்தா லொருசடை யிருத்திய
  கூடற் பெருமான் குரைகழல் கூறுஞ்
செம்மையர் போலக் கோடா
தெம்மைய நோக்கிச் சிறிதுகண் புரிந்தே.

(உரை)
கைகோள் : கற்வு. தலைவி கூற்று

துறை: கலவி கருதிப் புலத்தல்.

     (இ-ம்.) இதனை "அவனறிவு" (தொல். கற்பி. சு) எனவரும் நூற்பாவின்கண் பல்வேறு நிலை என்பதன்கண் அடக்குக.

1 - 6: நடைமலை . . . . . . . . . . ஊர

     (இ-ள்) நடைமலை பிடித்த - யானையைப் பற்றிக் கொண்ட; சொரி எயிறு இடங்கரை - புழுச் சொரிகின்ற பற்களையுடைய முதலையை; ஆழி வலவன் அடர்த்தது போல - சக்கரப் படையை வலக்கையி லேந்திய திருமால் கொன்றது போல; புன் தலை மோதியை புனல் எழுமுட்டிய - புன்மையுடைய தலையையுடைய எருமையை நீரினின்றும் எழும்படி தாக்கிய; வரி உடல் செம்கண் வரால் உடன் புகுந்து; உழக்கும் நிறைநீர் ஊர - கலக்கா நின்ற நிறைந்த நீர்நிலைகளையுடைய மருத நிலத்து ஊரையுடைய தலைவனே என்க.

     (வி-ம்.) நடைமலை - யானைக்கு வெளிப்படை. புபச் சொரிகின்ற எயிறு என்க. இடங்கர் - முதலை. ஆழிவலவன் - திருமால். திருமால் வரால் மீனுக்குவமை. எருமைக்கு முதலை உவமை. வரி-கோடு. வரால்-ஒருவகை மீன். உரம்-விசை. ஊரல்- மருதநிலத்தலைவன்.

20 - 28: திருமுகம் . . . . . . . . . . புரிந்தே

     (இ-ள்) ஆயிரம் திருமுகம் எடுத்து - எண்ணிறந்த அழகிய முகங்களைக் கொண்டு; வான்வழி படர்ந்து - வானத்திலே பரவி; மண்ஏழ் உருவி மறிய- கீழேழுலகங்களும் ஒன்றனுள் ஒன்று ஊடுருவிப் புரளும்படி; பாயும் அப்பொருங்கதம் திருநதி - பாய்தற்குக் காரணமான அந்தப் பெரிய வெகுளியையுடைய அழகிய வானகங்கையானது; ஒருங்குழி மடங்க - ஓரிடத்தே அடங்கும்படி; ஐம்பகை அடக்கிய அருந்தவ முனிவன் - புலப்பகை ஐந்தையும் தன்னுள் தணிய அடக்கிய செயற்கரிய தவத்தையுடைய பகீரதன் என்னும் முனிவன்; இரந்தன வரத்தால் - கேட்டனவாகிய வரங்களாலே; ஒருசடை இருத்திய - ஒரே சயைின்கண் வைத்தருளிய; கூடற்பெருமான் -மதுரை மாநகரத்தில் எழுந்தருளிய சிவபெருமானுடைய; குரைகழல் கூறும். செம்மையர் போல-ஒலிக்கின்ற கழல்களையுடைய திருவடிகளை ஏத்துகின்ற நடுவு நிலைமையுடையோர் போல; கோடாது - மாறுபடாமல்; எம்மையும் நோக்கிச் சிறிது கண்புரிந்து - எளியேமாகிய எம்மையும் நினைத்து ஒருசிறிது கண்ணோட்டம் செய்து என்க.

     (வி-ம்.) ஆயிரம் திருமுகம் எடுத்து என மாறுக. ஆயிரம் என்றது மிகுதிக்கோர் எண்ணுக் கூறியவாறு. எண்ணிறந்த முகம் என்பது கருத்து. மண்ஏழ் - மண் முதலிய ஏழுலகங்களம். பாயுங்கதம் - பாய்தற்கக் காரணமான பெருஞ்சினம். ஒருங்குழி-ஓரிடத்து. நதி ஒருங்குழி மடங்க ஒருசடை இருத்திய பெருமான் என இயையும். ஐம்பகை- ஐம்புலன்களாகிய பகை. செயற்கரிய தவம் செய்தலின் பகீரதனை முனிவன் என்றார். குரைகழல்: அன்மொழித் தொகை. செம்மை - நடுவுநிலைமை. பகீரதன் தவம் செய்துழி விண்ணினின்றும் மண்ணுலகிற் பாயும் கங்கை செருக்குற்றுப் பாய்ந்தாள் என்பதனையும், பகீரதன் வேண்டுகோட் கிணங்கி இறைவன் கங்கையைத் தன் சடையில் ஏற்று அருள் செத்மையையும்,

"உந்தி யம்புயத் துதித்தவ னுறைதரு முலகம்
இந்தி ராதிய ருலகமு நடுக்குற விரைத்து
வந்து ோன்றினள் வரநதி மலைமகள் கொழுநன்
சிந்தி டாதொரு சடையினிற் கரந்தனன் சேர" (அகலிகைப் 55)

எனவரும் இராமாவதாரத்தானும் உணர்க. கண்புரிதல் - கண்ணோட்டம் செய்தல்.

6 - 11: நெஞ்சகம் . . . . . . . . . . ஒருவி

     (இ-ள்) நெஞ்சகம் பிரிக்கும் பிணிமொழி பாணனுடன் - ஒன்றுபட்டுள்ள காதலர் நெஞ்சத்தை வேறுபடுத்துகின்ற பிணிப்பையுள்ள பாடல் வல்ல பாணனுடன்; உறைநீக்கி -உறைதலைவிட்டு: நூலொடு துவளும் தோல்திரை உரத்தின் - பூணூலோடு அசைகின்ற தோள் திரைந்துள்ள மார்பினிடத்தே பொருந்தும்படி; மால்கழித்து நரைமுதர் தாடிசெய் வெள்ளி - கருமை நீங்கி நெருங்கிய நரையினால் முதிர்ந்த தாடியை வளர்த்த சுக்கிரனைப்போல; முகிழ்த்த ஒருகண் பார்ப்பான் - அரும்பின ஒற்றைக் கண்ணையுடைய பார்ப்பனத் தோழனுடைய; கோலுடன் படரும் குறுநகை ஒருவி- ஊன்றுகோலுடனே செல்லுதலால் உண்டாகும் புன்முறுவலை அகற்றி என்க.

     (வி-ம்.) பிணிமொழி - கேட்டோருளத்தைப் பிணிக்கும் பாடல். உரை: முதனிலைத் தொழிடற்பெயர். மால் - கருநிறம், நின் பார்ப்பனத் தோழனுக்கும் ஒரு கண் கருடு. நீ கோலூன்றிச் செல்லும் அவனைப் பின்தொடர்ந்து செல்வாய் என்பாள் ஒற்றைக் கண் பார்ப்பான் கோலுடன் படரும் என்றாள்.

12 - 16: பூவிலை . . . . . . . . . . அகற்றி

     (இ-ள்) பூவிலை தொழில்மகன் - பூவிற்கும் தொழிலையுடையவனது; காவல் கைவிட்டு - பாதுகாவலினின்றும் நீங்கி; திக்கு - எட்டுத் திசையினும்; விண் - விண்ணுலகத்தினும்; பெருக-பெருகும்படி; திருமதி -அழகிய நிறைத்திங்களும்; கைலை-கைலைமலையும்; நாமகள் - கலைமகளும்; பெருங்கடல் - பெரிய பாற்கடலும்; நால்கோட்டு ஒருத்தல்- நான்கு கொம்புள்ள அயிராவதமாகிய களிற்றியானையும்; புண்ணியம் இவைமுதல் - அறமும் இன்னோரன்ன பொருள்களுக்கும்; வெள்உடல் கொடுக்கும் - வெண்ணிற உடம்பினைச் செய்யாநின்ற; புகழ்-புகழினை; கவிப்பாடகர் - கவியில் கட்டிப்பாடுகின்ற புலவரது; புணர்ச்சி இன்பு அகற்றி - சேர்க்கையினால் வரும் இன்பத்தையும் விட்டு என்க.

     (வி-ம்.) அழகிற் சிறந்திருத்தலின் முழுத்திங்களைத் திருமதி என்றார். ஒருத்தல்- ஈண்டு அறிராவதம். மதி முதலியவற்றிற்கு வெண்ணிற உடம்பு உண்டாவதற்குக் காரணம் புகழுக்குத் தோற்றல் என்க.

17 - 18: எல்லாக் கல்வியும்........................செய்து

     (இ-ள்) எல்லாக் கல்வியும் இகழ்ச்சிசெய் கலவியர்-எல்லாக் கல்விகளையும் பழிக்கின்ற கலவித் தொழிலில் சிறந்த பரத்தையரது; பெருநகைக் கூட்டமும் கழிவு செய்து-மிகுந்த மகிழ்ச்சிக்குக் காரணமான சேர்க்கையையும் தொலைத்து என்க.

     (வி-ம்.) கல்வி - ஈண்டு அறம், பொருள், இன்பம், வீடு முதலிய நாற்பொருள்களையும் விளக்கும் எல்லாக் கல்வியும் என்றவாறு. இவை பரத்தமைத் தொழிலை விலக்குதலின் அவர் இவற்றை இகழ்தல் வேண்டிற்று நகை - மகிழ்ச்சி.

18 - 20: இவ்விடை . . . . . . . . . . படர்ந்ததென்

     (இ-ள்) இ இடை - எளியேம் இல்லமாகிய இவ்விடத்திலே; மயக்குறுமாலை மாமகள் எதிர - உயிர்களை மயக்குதலையுடைய மாலைக்காலம் என்னும் பெருந்தகைப் பெண் தன்னை எதிர் கொள்ளும்படி; ஒருவழி படர்ந்தது என் - ஒரோவழி வந்தது யாது காரணம் என்க.

     (வி-ம்.) இவ்விடை என்றது எளியேமாகிய எம் இல்லத்தின் கண் என்பதுபட நின்றது. இது எம் இல்லம் என்று அறியாமல் மயங்கி வந்தனை போலும் என்பாள் மயக்குறு மாலை மாமகள் எதிர என்றாள். ஒருவழி என்றது அரிதாக என்றவாறு.

     இதனை, நிறைநீரூர! கூடற்பெருமான் குரைகழல் கூறுஞ் செம்மையர் போல, கோடாது எம்மையு நோக்கி, சிறிது கண்புரிந்து, பாணனுடனுறை நீக்கி, பார்ப்பான் கோலுடன் படருங் குறுநகை யொருவி, பூவிலைத் தொழின்மகன் காவல் கைவிட்டு, கவிப்பாடகர் புணர்ச்சியின்பகற்றி, பெருநகைக் வட்டமுங் கழிவு செய்து, இவ்விடை மாலைமா மகளெதிர ஒருவழி படர்ந்த தென்னென வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.