பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 58

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிரையிதழ் திறந்து மதுவண் டருந்தும்
விருந்துகொண் மலரும் புரிந்துறை மணமுஞ்
செந்தமிழ்ப் பாடலுந் தேக்கிய பொருளும்
பாலுஞ் சுவையும் பழமு மிரதமு
முடலு முயிரு மொன்றிய தென்னக்
10
  கண்டுந் தெளிந்துங் கலந்தவுள் ளுணர்வாற்
பாலு மமுதமுந் தேனும் பிலிற்றிய
வின்பமர் சொல்லி நண்புமணக் கடவார்
விண்ணவர் தலைவனும் வீயா மருந்து
15
  மளகைக் கிறையு மரும்பொரு ளீட்டமுங்
கண்ணனுங் காவலு முனியும் பசவு
மொன்றினுந் தவறா வொருங்கியைந் தனபோ
னீடிநின் றுதவுங் கற்புடை நிலையினர்
தவங்கற் றீன்ற நெடுங்கற் பன்னை
20
  முன்னொரு நாளின் முதற்றொழி லிரண்டினர்
பன்றியும் பறவையு மென்றுரு வெடுத்துக்
கவையா வுளத்துக் காணுங் கழலுங்
கல்வியி லறிவிற் காணு முடியு
மளவுசென் றெட்டா வளவின ராகி
25
  மண்ணு மும்பரு மகழ்ந்தும் பறந்து
மளவா நோன்மையி னெடுநாள் வருந்திக்
கண்ணினிற் காணா துளத்தினிற் புணராது
நின்றன கண்டு நெடும்பயன் படைத்த
திருவஞ் செழுத்துக் குறையா திரட்ட
30
  விருநில முருவிய வொருதழற் றாணத்
தெரிமழு நவ்வி தமருக மமைத்த
நாற்கர நுதல்விழித் தீப்புகை கடுக்கள
முலகுபெற் றெடுத்த வொருதனிச் செல்வி
கட்டிய வேணி மட்டலர் கடுக்கை
35
  யாயிரந் திருமுகத் தருணதி சிறுமதி
பகைதவிர் பாம்பு நகைபெறு மெருக்கமு
மொன்றிய திருவுரு நின்றுநனி காட்டிப்
பேரருள் கொடுத்த கூடலம் பதியோன்
பதமிரண் டமைத்த வுள்ளக்
    கதியிரண் டாய வோரன் பினரே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழி கூற்று.

துறை: வழிபாடு கூறல்.

     (இ-ம்.) இதனை "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல்.கற்பி.) எனவரும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாம்' என்பதன்கண் அமைத்துக் கொள்க.

15: தவம்.............................அன்னை

     (இ-ள்) தவங்கற்று ஈன்ற - பெரிதும தவம் பயின்று நந் தலைமகளைப் பெற்றெடுத்த; நெடுங்கற்பு அன்னை -நெடிய கற்பொழுக்கம் சான்ற தாயே; கேள்; என்க.

     (வி-ம்.) கற்றல் ஈண்டுச் செய்தல் என்னும் வினைமேனின்றது. வேற்றுமை கருதாளாய்த் தோழி செவிலியைத் தலைமகளை ஈன்ற தாயாகக் கூறுகின்றாள். இனி இச் செய்யுளை தலைவன் இல்லத்திற்குச் சென்று அக்காதலர்கள் இல்லறங் கண்டு வந்த செவிலி நற்றாய்க்குக் கூறியது எனச் செவிலி கூற்றாக்கினும் அமையும்.

16 - 24: முன்னொரு..............................கண்டு

     (இ-ள்) முன் ஒரு நாளில் - முன்பொரு காலத்தில்; முதல் தொழில் இரண்டினர்- முத்தொழிலுள் வைத்து முன்னின்ற படைத்தலும், காத்தலுமாகிய இரண்டு தொழில்களையுமுடைய நான்முகனும் திருமாலும்; பறவையும் பற்றியும் என்று உருவு எடுத்து-அன்னப் பறவையும் பன்றியும் என்று கூறப்படும் வடிவங்களை எடுத்துக்கொண்டு; கவையா உளத்துக் காணும் கழலும்-பொறி புலன்களிலே சகவர்த்தோடாது ஒன்றுபட்ட நெஞ்சத்தினால் காணுதற்குரிய திருவடிகளையும்; கல்வியில் அறிவில் காணும் முடியும்-மெய்ந்நூற்கல்வியாலும் மெய்யுணர்ச்சியாலும் காணுதற்குரிய திருமுடியினையும் காணக் கருதி; உம்பரும் மண்ணும் பறந்தும் அகழ்ந்தும்-நிலத்தினும் வானினும் அகழ்ந்தும் பறந்தும்; அளவா நோன்மையின் - அளவுபடாத தம் வலிமை காரணமாக; நெடுநாள் வருந்தி - நீண்டகாலம் வருத்த மெய்தியும்; அளவு சென்று எட்டா அளிவினர் ஆகிதாம்- கருதிய அளவும் சென்று எட்டா தன்மையுடையராய்; கண்ணினிற் காணாது உளத்தினிற் புணராது- அவை தங்கண்களில் காணப்படாமலும் நெஞ்சத்தால் நினைக்கப்படாமலும்; நின்றன கண்டு- அப்பாற்பட்டு நிற்பனவாதலை உணர்ந்து என்க.

     (வி-ம்.) முதற்றொழில் இரண்டு - படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களுள் வைத்து முன்னின்ற படைத்தலும் காத்தலும் ஆகிய தொழிலிரண்டும் என்க. எனவே, படைத்தற்றொழிலையுடைய நான்முகனும் காத்தற் றொழிலையுடைய திருமாலும் என்பதாயிற்று. பறவையும் பன்றியும் என மாறுக. நான்முகன் அன்னப் பறவையாகவும் திருமால் பன்றியாகவும் உருவெடுத்து என்க. கவையா உளம்-பொறிகளின் வழியாய்க் கவர்த்துப் புலன்களில் ஓடாத நெஞ்சம். எனவே, ஐம்புலன்களிற் செல்லாது ஒன்றுபட்டுத் திருபடியில் நிலைத்து நின்ற நெஞ்சத்தாற் காணப்படும் கழல் என்பதாயிற்று. கழல்: ஆகுபெயர். கல்வி-மெய்ந்நூற் கல்வி. அறிவு-ஈண்டு மெய்யுணர்வின் மேனின்றது. அளவு-தாங்கருதிய அளவு. உம்பரிற் பறந்தும் மண்ணை அகழ்ந்தும் என மாறு. உம்பர்-வானம். நோன்மை-வலிமை. நின்றன கண்டு என்புழிக் காட்சி அறிவின் மேற்று.

24 - 25: நெடும்பயன்..................... இரட்ட

     (இ-ள்) நெடும்பயன் படைத்த திரு அஞ்சு எழுத்து.தம் அறியாமைக் கிரங்கிப் பின்னர் அழியாப் பயன் பொதிந்துள்ள திரு ஐந்தெழுத்தனை; குறையாது இரட்ட-நறைவாக ஓதி வழிபடாநிற்ப என்க.

     (வி-ம்.) நெடும்பயன்-வீட்டின்பம். குறையாது - ஓதுதற்குரிய முறையில் குறையாது என்க. இரட்டுதல் - மீண்டும் மீண்டும் ஓதுதல்.

26 - 34: இருநிலம்............................ பதியோன்

     (இ-ள்) இருநிலம் உருவிய ஒருதழல் தூணத்து-பெரிய நிலத்தை ஊடுருவிச் சென்ற ஒரு தீப்பிழம்பாகிய தூணினின்றும்; எரிமழு நவ்வி தமருகம் அமைத்த நால்கரம்-எரிகின்ற மழுவும் மானும் உடுக்கையும் அமைத்த நான்கு கைகளும்; நுதல்விழி துப்புகை கடுகளம் - நெற்றிக்கண்ணும் தீப்புகையா நின்ற நஞ்சினையுடைய மிடறும்; உலகு பெற்று எடுத்த ஒரு தவின் செல்வி - உலகங்களை யெல்லாம் பெற்று வளர்த்த ஒப்பற்ற அருட்செல்வியாகிய உமையும்; கட்டிய வேணி - சுற்றிக் கட்டிய சடைமுடியும்; மட்டு அலர் கடுக்கை - தேனொடு மலர்ந்த கொன்றைப் பூமாலையும்; ஆயிரம் திருமுகத்து அருள்நிதி - எண்ணிறந்த முகங்களாய் ஒழுகும் திருவருள் தருதற்குக் காரணமான கங்கையாறும்; சிறுமதி-இளம்பிறையும்; பகை தவிர் பாம்பும்- அதனோடு பகைதவிர்ந்த அரவமும்; நகைபெறும் எருக்கமும்-மலர்ச்சி பெற்ற எருக்க மலர்மாலையும்; ஒன்றிய திருவுரு-பொருந்திய தன திருவுருவத்தை; நின்று நனிகாட்டி- மேற்கொண்டு நின்று அந்நர்ன்முகனுக்கும் திருமாலுக்கும் நன்கு காட்சி கொடுத்து; பேரருள் கொடுத்த கூடலம்பதியோன் - பேரருள் வழங்கிய மதுரை நகரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுடைய என்க.

     (வி-ம்.) எரிமழு: வினைத்தொகை. நவ்வி - மான். தமருகம் - உடுக்கை. நுதல்விழி - நெற்றிக்கண். கடு-நஞ்சு. களம்-மிடறு. செல்வி-உமை. வேணி - சடை. மட்டு - தேன். கடுக்கை-கொன்றை. மாலைக்கு ஆகுபெயர். அருள்நதி - அருள் பெறுதற்குக் காரணமான நதி. அம்மதியோடு பகைதவிர்ந்த பாம்பு என்க. நகை-மலர்ச்சி; ஒளியுமாம். எருக்கம்:ஆகுபெயர்.

35 - 36: பதம்........................அன்பினரே

     (இ-ள்) பதம் இரண்டு அமைத்த - இரண்டு திருவடிகளையும் வைத்த; உள்ளம கதியிரண்டாய ஓர் அன்பினர் - உள்ளத்தையுடைய ஒழுக்கத்தால் இருவகைப்பட்ட பகுப்பற்ற அன்மையுடைய தலைவனும் தலைவியும் என்க.

     (வி-ம்.) கதி இரண்டு - ஆணும் பெண்ணும் என்னும் பிறப்பு வேற்றுமையாலுண்டான இருவகை ஒழுக்கம் என்க. அன்பினர் - அன்பினையுடைய தலைவனும் தலைவியும் என்க.

1 - 5: நிரை ................................... ஒன்றியது என்ன

     (இ-ள்) நிரையிதழ் திறந்து வண்டு விருந்துகொள் மது அருந்தும் மலரும்-நெருங்கிய இதழ்களைத் திறந்து வண்டுகள் விருந்தினர் போன்று அம்மலர் கொண்ட தேனை அருந்துதற்கிடனான மலரும்; புரிந்து உறை மணமும் - அம்மலருடன் நீங்கா திருக்கின்ற மணமும்; செந்தமிழ்ப் பாடலும்- செவ்விய தமிழ்மொழியால் யாத்த செய்யுளும்; தேக்கிய பொருளும்- அதன்கண் நிறைந்துள்ள பொருளும்; பாலும் சுவையும் - ஆன்பாலும் அதன் சுவையும்; பழமும் இரதகும் - பழமும் அதன் சாறும்; உடலும் உயிரும் - உடலும் அதன்கண் உறையும் உயிரும்; ஒன்றியது என்ன-பொருந்தியது போல என்க.

     (வி-ம்.) தலைவனும் தலைவியும் மலரும் மணமும் போலவும், பாடலும் அதன் பொருளும் போலவும், பாலும் சுவையும் போலவும், பழமும் சாறும் போலவும், உடலும உயிரும் போலவும் தம்முட் பொருந்தி என்றவாறு, தலைவன் தலைவியர் விரும்தோம்பற் சிறப்பு இறைச்சி வகையால் தோன்றும்படி நிரையிதழ் திறந்து மதுவண்டு அருந்தும் விருந்துகொள் மலர் என்றாள். இரதம் - சாறு.

6 - 9: கண்டும்....................கடவார்

     (இ-ள்) கண்டும் தெளிந்தும் கலந்த உள் உணர்வால் - தம்முள் ஒருவரை யொருவர் நன்கறிந்தும் தெளிந்தும் தம்முள் கலந்த உள்உணர்ச்சியினாலே; பாலும் அமுதமும் தேனும் பிலிற்றிய இன்பு அமர் சொல்லி - பாலும் அமிழ்தமும் தேனும் தருகின்ற இன்பமெல்லாம் பொருந்திய மொழியினையுடைய நம் செல்வியின்; நண்பும்- கேண்மையினின்றும்; மனக்குறியும் வாய்மையும் சிறப்பும்-மனக்குறிப்பினின்றும் வாய்மையினின்றும் தத்தமக்குரிய பலவகைச் சிறப்பினின்றும்; நிழல் எனக் கடவார்தலைவர் அவள் நிழலைப்போலப் பிரிதல் இலராய் என்க.

     (வி-ம்.) பால் அமுதம் தேன் என்னும் இவை தருகின்ற இன்பமெல்லாம் ஒருங்கேயுடைய செல்வி என்க. நண்பு-காதற் கேண்மை. குறி-குறிப்புணர்ந்து நடத்தல். சிறப்பு-தலைமகட்குரிய பல்வேறு வகைச் சிறப்புகள்.

10 - 14: விண்ணவர்..............................நிலையினர்

     (இ-ள்) விண்ணவர் தலைவனும்-அக்காதலர் இருவரும் வானவர் தலைவனாகிய இந்திரனும்; வீயாமருந்தும் - அவனது இறவாமைக்குக் காரணமான அமிழ்தமும்; அளகைக்கு இறையும்-அளகாபதிக்கு அரசனாகிய குபேரனும்; அரும்பொருள் ஈட்டமும்-அவனது கிடைத்தற்கரிய பொருட்குவியலும்; கண்ணனும் காவலும்- திருமாலும் அவனது காத்தற்றொழிலும்; முனியும் பசுவும் - வதிட்ட முனிவனும் அவனது காமதேனுவும்; ஒன்றினும் தவறா ஒருங்கு இயைந்தனபோல் - யாதொன்றாலும் தவறுபடாமல் ஒன்றுபட்டியைந் திருத்தல்போல; நீடி நின்று உதவும் கற்புடை நிலையினர் -மிகவும் நிலைபெற்றுத் தம்முள் ஒருவருக்கொருவர் உதவிசெய்யும் கற்பினையுடைய வாழ்க்கை நிலையினர்காண் என்க.

     (வி-ம்.) விண்ணவர் தலைவன் - இந்திரன். வீயாமருந்து-அமிழ்தம். அளகைக்கிறை -குபேரன். முனி-வதிட்ட முனி. பசு-காமதேனு. இயைந்தன என்பது உயர்தினை விரவி அஃறிணை முடிவேற்றது. கற்பு - சான்றோரால் கற்பிக்கப்பட்ட நல்லொழுக்கம்.

     இனி, இதனை, அன்னையே! கூடலம்பதியோன் பதம் இரண்டமைத்த உள்ளக் கதியினராய ஓர் அன்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முள் மலர்மணம் முதலியவற்றைப்போல் கலந்த உள்ளுணர்வால் தலைவர் செல்வியின் கேண்மை முதலியவற்றினின்றும் கடவார். அவ்விருவரும் விணணவர் தலைவனும் மருந்தும் முதலியன ஒருங்கியைந்தனபோல் இயைந்து ஒருவருக்கொருவர் உதவும் நிலையினர் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.