பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 6

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிணமுயி ருண்ட புலவு பொறாது
தலையுட லசைத்துச் சாணைவாய் துடைத்து
நெய்குளித் தகற்று நெடுவேல் விடலை
யந்தண ருகுநீர்க் கருட்கரு விருந்து
கோடா மறைமொழி நீடுறக் காணுங்
10
  கதிருடல் வழிபோய்க் கல்லுழை நின்றோர்
நெருப்புருத் தன்ன செருதிறல் வரைந்த
வாசகங் கண்டு மகிழ்ந்தது மிவணே
துணைவிளக் கெரியு நிலைவிழிப் பேழ்வாய்த்
தோகைமண் புடைக்குங் காய்புலி மாய்க்க
15
  வாய்செறித் திட்ட மாக்கடிப் பிதுவே
செடித்தலைக் காருட லிடிக்குரற் கிராதார்
மறைந்துகண் டக்கொலை மகிழ்வழி யிந்நிலை
தவநதி போகு மருமறைத் தாபதர்
நன்னார்கொ ளாசி நாட்டிய திவ்வுழை
20
  கறையணற் புயங்க னெரிதழல் விடத்தை
மலைமரை யதக மாற்றிய வதுபொல்
கொடுமறக் கொலைஞ ராற்றிடை கவர
வெண்ணாது கிடைத்த மெய்ப்பொடி யாகவென்
25
  சிற்றிடைப் பெருமுலைப் பொற்றொடி மடந்தைதன்
கவைஇய கற்பினைக் காட்டுழி யிதுவே
குரவஞ் சுமந்த குழல்விரித் திருந்து
பாடலம் புனைந்தகற் பதுக்கையிவ் விடனே
யொட்டுவிட் டுலறிய பராரைநெட் டாக்கோட்
30
  டுதிர்பறை யொருவை யுணவூன் றட்டி
வளைவாய்க் கரும்பருந் திடைபறித் துண்ணக்
கண்டுநின் றுவந்த காட்சியு மிதுவே
செம்மணிச் சிலம்பு மரகதப் பொருப்புங்
குடுமியந் தழலு மவணிருட் குவையு
  முளைவரும் பகனு மதனிடை மேகமுஞ்
சேயிதழ் முளரியுங் காரிதழ்க் குவளையும்
ஓருழைக் கண்ட வுவகைய தென்ன
வெவ்வுயிர் நிறைந்த செவ்விகொண் மேனியில்
35
  அண்டப் பெருந்திரள் அடைவீன் றளித்த
கன்னிகொண் டிருந்த மன்னருட் கடவுள்
மலையுருக் கொண்ட வுடல்வாள் அரக்கர்
வெள்ளமும் சூரும் புள்ளியற் பொருப்பு
நெடுங்கடற் கிடங்கு மொருங்குயிர் பருகிய
40
  மணிவேற் குமரன் முதனிலை வாழுங்
குன்றுடுத் தோங்கிய கூடலம் பதியோன்
றாடலை தரித்த கோளினர் போல
நெடுஞ்சுர நீங்கத் தங்கா
லடுந்தழன் மாற்றிய காற்குறி யிவணே.

(உரை)
கைகோள் : களவு. செவிலி குற்று

துறை: சுவடு கண்டறிதல்

     (இ-ள்) இதற்கு, “ஏமப் போரூர்ச் சேரியுஞ் சுரத்தும் தாமே செல்லும் தாயரு முளரே” (தொல்-அகத். 40) என்னும் விதிகொள்க. இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் இன்னோரன்னவற்றை “எஞ்சியோர்க்கு மெஞ்சுதல் இலவே” (தொல். அகத்-45) என்பதன்கண் அமைப்பர்.

1-3: நிணம்.....................................விடலை

     (இ-ள்) உயிர் உண்ட புலவு நிணம் பொறாது- பகைவர்களுடைய உயிரை உடலினின்றும் அகற்றியதனாலே உண்டான புலால் நாற்றத்தையும் நிணத்தையும் பொறாமல்; தலை உடல் அசைத்து-தன் தலையையும் உடம்பையும் விதிர்த்து; சாணை வாய் துடைத்து-சாணையின்கண் தேய்த்துத் தன் வாயைத் துடைத்துப் பின்னரும், நெய் குளித்து அகற்றும்-நெய்யின் கண் முழுகி அந் நாற்றத்தையும் நிணத்தையும் போக்கிக் கொள்ளும்; நெடுவேல் விடலை-நெடிய வேற்படையை யுடைய தலைமகன் என்க.

     (வி-ம்.) இது கருவி கருத்தாவாயிற்று. உயிருண்ட-கொன்ற. புலவு-புலனாற்றம். தலையையும் உடலையும் அசைத்து என உம்மை விரித்துக் கொள்க. சாணை-படைத்தலங்களைக் கூரிதாக்கும் ஒரு கருவி. பகைவரைக் குத்திய வேலை மற்றவர்கள் கையால் விதிர்த்துச் சாணைபிடித்து நெய்பூசுதல் வழக்கம். அதனைத் தற்குறிப்பேற்றமாக இங்ஙனம் கூறினார். விடலை-பாலைத்திணைத் தலைமகன்.

4-8: அந்தணர்.......................................இவணே

     (இ-ள்) அந்தணர் உகும் நீர்க்கு-அந்தணர் தன்னை வனங்கிக் கையால் அள்ளிவிடுகின்ற நீரினால்; அருள்கரு இருந்து-தான் அருளாகிய கருவினை எய்தி; கோடா மறைமொழி நீடு உறக் காணும்-கோடுதலில்லாத அவ்வந்தனருடைய மந்திரம் நெடிது நிலை நிற்கும்படி அருள்செய்கின்ற; கதிர் உடல் வழிபோய்- ஞாயிற்று மண்டிலத்தின் உடல்வழி புகுந்து போய் மேனிலையுலகத்து நிலைத்திருத்தலோடன்றி இவ் வுலகத்தும்; கல் உழை நின்றோர்-இவ்வுலகத்தும் தமக்கென நடப்பட்ட நடு கல்லினும் நிலைத்து நின்ற மறவர்களின்; நெருப்பு உருத்து அன்ன செருத்திறல் வரைந்த-ஊழித்தீ சினந்து அழித்தாற் போன்ற பொர்த்திரத்தை எழுதிய; வாசகங் கண்டு-மொழிகளை ஓதிப்பார்த்து; மகிழ்ந்ததும் இவண்-களிப்படைந்தது இவ்விடத்திலேதான் என்க.

     (வி-ம்.) தன்னை வணங்கி நீர் உகுக்கும் அந்தணர்க்கு அருளுடையோன் ஆதலோடு அவர் மறை மொழியும் அழியாதிருக்கும்படி செய்யும் ஞாயிரு என்றவாறு. போரின்கண் இறந்த மறவர்கள் ஞாயிற்று மண்டிலத்தை ஊடுறுவிச் சென்று மேனிலையுலகத்தே நீடு வாழ்வர் என்பது நூற்றுணிவு. ஆதலின் கதிருடல் வழிபோய் நின்றோர் என்றார். கதிருடல் வழிபோய் மேனிலையுலகத்து நெடிது வாழ்தலே யன்றி இவ்வுலகத்தும் கல்லிழை நின்றோர் என விரித்துக் கொள்க. போர்க்களத்தின்கண் அஞ்சாது நின்று விழுப்புண் பட்டிறந்த மறவர்க்கு கல்நடுதலும் அக்கல்லின்கண் அம்மறவரின் பெயரும் பீடும் எழுதி வைத்தலும் பண்டைத் தமிழரின் வழக்கம். இதனை,

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
 சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று
 இருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
 சொலப் பட்ட எழுமூன்று துறைத்தே”   (தொல்-புறத். சூ.5)

எனவும்,

“அணிமயிர்ப் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
 இனி நட்டனரே கல்லும்”                 (புறநா. 264)

எனவும்,

“பெயரும் பிடு மெழுதி யதர்தொறும்
 பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்”

எனவும் வரும் பிற சான்றோர் கூற்றாலும் உணர்க.

     இங்கு மகட்போக்கிய செவிலித்தாய், பாலையின்கண் தேடிச் சென்று அங்கு ஒரு வீரக்கல் முன்னர்க் கிடந்த தலைவன் தலைவியர் அடிச்சுவட்டைக் கண்டு நின்றவள் இவ்விடத்திலே நின்று தலைவன் இக்கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் மறவன் புகழை ஓதி யுணர்ந்து மகிழ்ந்து பின் அப்பால் சென்றிருத்தல் வேண்டும் என்று ஊகிக்கின்றாள் என்க.

9-11: துணை........................................இதுவே

     (இ-ள்) துணைவிளக்கு எரியும் நிலைவிழிப்பேழ்வாய்-இரேட்டை விளக்கு எரிந்தாற்போலக் கனலுகின்ற நிலைமையினையுடைய விழிகளையும், பெரிய வாயினையும்; மாண்புடைக்கும் காய்புலி மாய்க்க-தம்மைச் சினந்து வந்த புலியைக் கொல்லும் பொருட்டு; வாய் செறித்திட்ட மாகடிப்பு இது-அதனது வாயினுள்ளே செருகிய பெருங்கடிப்பு இதுவாகும் என்க.

     (வி-ம்.) புலியினது இரண்டு கண்களுக்கும் எரிகின்ற நிலையிலுள்ள இரட்டை விளக்குகள் உவமை. பேழ்-பெரிய. தோகை-வால். ஆலைக்கண்டு புலி தன் வாலைச் சுழற்றி நிலத்தில் புடைத்தல் இயல்பு. மறவர்கள் பெருங்கடிப்பு என்னும் கூர்ந்த தடியினால் தன் மேலே பாயும் புலியின் பிளந்த வாயினுள் குத்திக் கொல்லுதல் வழக்கம். செவிலி பாலை நிலத்தில் குருதி தோய்ந்து கிடந்த பெருங்கடிப்பு ஒன்றினைக் கண்டு இது தலைவன் தன்மேற் பாய்ந்த புலியைக் குத்திய கடிப்பு என்று ஊகிக்கின்றாள். குத்துண்ட புலி உய்ந்து ஓடிப்போய்ப் பின்னர் வேடர்களால் கொலையுண்டமை இனிக் காண்க.

     (வி-ம்.) இந்நிலை-இவ்விடம். இந்நிலை மகிழ்வுழி எனமுடித்துக் கொள்க. உழி-இடம். இதனால் செவிலி அப்பாலையின்கண் சிறிது தூரம் அடியொற்றிச் சென்று ஓரிடத்தே நிலைத்து நின்ற சுவடுகளைக் கண்டும் சிறிது சேய்மையில் வேடர் அடிகலையும் புலியின் அடிகளையும் குருதி முதலியவற்றையும் கண்டும் இவ்வாறு ஊகிக்கின்றாள் என்பது உணரலாம்.

14-15: தவநிதி........................................இவ்வுழை

     (இ-ள்) இவ்வுழை-இவ்விடம்; தவம் நதி போகும் அருமறைத் தாபதர்-தவத்தை மேற்கொண்டு புண்ணிய நீரில் ஆடுதற்குச் செல்லும் உணர்தற்கரிய மறைகளையுணர்ந்த துறவோர்கள்; நன்னர்கொள் ஆசி நாட்டியது-எம்மகளும் அவள் கணவனும் கைகுவித்து வணங்கியபொழுது அவ்விருவரையும் நன்மையைக் கொண்டுள்ள மொழிகளைக் கூறி வாழ்த்திய இடமாம் என்க.

     (வி-ம்.) தவம்-தவவொழுக்கம்; நதிபோகும்-நதியில் ஆடப்போகும், நதியில் ஆடுதலும் தவமாதலின் தவநதி போகும் தாபதர் என்றாள். இதனை,

“நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்”

எனவரும் (தொல். புறத். 20) சூத்திரத்திற்கு எடுத்துக்காட்டாக வரும்,

“நீர்பலகான் மூழ்கி நிலத்ததைஇத் தோலுடையாச்
 சோர்சடை தாழச் சுடரோம்பி-யூரடையார்
 கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
 வானகத் துய்க்கும் வழி”         (பு-வெ-வாகை.14)

எனவரும் புறப்பொருள் வெண்பா மாலையானும் உணர்க, ஈண்டும் அடிகள் பலவற்றைக் கண்ட செவிலி இங்ஙனம் ஊகிக்கின்றாள் என்று கொள்க.

16-22; கறை......................................இதுவே

     (இ-ள்) இது கறை அணல் புயங்கன் எரிதழல் விடத்தை-இவ்விடம் கறுப்பினையுடைய கீழ்வாயினையுடைய பாம்பினது எரிகின்ற தீப்போன்று கொல்லும் நஞ்சினை; மலைமறை அதகம் மாற்றிய அதுபோல்-மலையின்கண் மறைந்துள்ள மருந்து மாற்றி விடுகின்ற அச்செயல் போல; சிற்றிடை பெருமுலை பொன்தொடி மடந்தை-சிறிய இடையினையும் பெரிய முலையினையும் பொன்னானியன்ற தொடியினையுமுடைய என்மகள், தன் கவைஇய கற்பினை-தன்னிடத்துண்டாகிய கற்பை; ஆறு இடை கவற-வழியிலே கவர்ந்து கொள்ளும் பொருட்டு; எண்ணாது கிடைத்த கொடு மறக் கொலைஞர்-ஆராயாது வந்து எதிர்ந்த கொடிய பாவமாகிய கொலைத் தொழிலையுடைய கள்வருடைய; புண் எழுசெரு நிலை கைவளர் கொழுந்து-புண் உண்டாதற்குக் காரணமாகிய போர்க்களத்தின்கண் தொழில் வன்மை மிகுந்த தலைப்படையினரது; மெய்பொடியாகக் காட்டுழி-உடல்கள் துகளாகும்படி மெய்ப்பித்துக் காட்டிய இடமாகும் என்க,

     (வி-ம்.) இதன்கண் தலைவனும் தலைவியும் போகும் பொழுது நம்பி பலராகிய ஆறலை கள்வர்களைக் கொன்றான் என்றும், தமியனாகிய அந்நம்பி கூட்டமாகிய அக்கள்வரைக் கொன்றொழித்தமைக்குக் காரணம் என் மகளின் கற்புடைமையே என்றுஞ் செவிலி ஊகித்து மகிழ்கின்றாள் என்க, அறத்தில் தலைசிறந்த கற்புடைமையின் முன் அப்பாவம் நிற்கமாட்டாமல் தோற்றது என்பது கருத்து, ஆறலை கள்வர் கொடுந்தொழிலுக்கு நஞ்சு உவமை. தலைவியின் கற்புக்கு மலையின்கண் மறைந்துள்ள மருந்து உவமை என்க. இவ்விடம் என் மகள் கற்பின் சிறப்பினைக் காட்டிய இடம் என்க.

     கறை-கறுப்பு, அணல்-கீழ்வாய், புயங்கன்-பாம்பு தழல் போன்றவிடம் என்க. அதகம்-மருந்து, அது-அச்செயல், மறம்-பாவம். எண்ணாது-ஆராயாமல். கிடைத்த-எதிர்ப்பட்ட. செருநிலை-போக்களம். கை-தொழில். கொழுந்து-தலைப்படை. சிற்றிடைப் பெருமுலை என்புழிச் செய்யுளின்பமுணர்க. கவைஇய அகத்திட்டுத் தழுவிய. காட்டுழி-காட்டுமிடம். கொடுமரக் கொலைஞர் என்றும் பாடம்.

23-24: குரவம்............................................இடனே

     (இ-ள்) இவ்விடன்-இந்த இடம்; குரவம் சுமந்தகுழல் விரித்து இருந்து-என்மகள் தன்னுடைய குராமலர்சூடி இருந்த கூந்தலை விரித்துவிட்டு அமர்ந்திருந்து; பாடலம் புனைந்த கற்பதுக்கை-இக்காலத்திற்கேற்ற பாதிரி மலரைச் சூட்டிக்கொண்ட கற்குவியல் ஆகும் என்க.

     (வி-ம்.) குரவம்: ஆகுபெயர்; குராமலர். குழல்-கூந்தல். பாடலம்; ஆகுபெயர். பாதிருப்பூ என்க. இவ்விடம் பாடலம் புனைந்த பதுக்கை என்க. பதுக்கை-கற்குவியல். அஃதாவது சிறிது அப்பாற் சென்ற செவிலி ஒரு கற்குவியலின்பால் தலைவி தலைவர் இருவர்களுடைய காற் சுவடுகளையும் பழஒய குரா மலர்களையும் கண்டு இவ்விடத்தில் தலைவி கூந்தலில் இருந்த குராமலரைக் களைந்து புதிய பாதிரி மலரை இக் கற்குவியலின் மேலிருந்து சூடிச்சென்றனள் என்று ஊகித்தபடியாம். தலைவன் தலைவியின் கூந்தலில் பாடலம் புனைந்தான் என்று கொள்ளினுமாம்.

25-28: ஒட்டு.................................இதுவே

     (இ-ள்) இது-இவ்விடம்; ஒட்டுவிட்டு உலரிய பராரை நெடு ஆகோட்டு-யானைகள் உராய்தலாலே மேந்தோல் பெயர்ந்து காய்ந்த பருத்த அடியினையுடைய நெடிய ஆமரத்தினது கிளையின்கண் இருந்த; உதிர்பறை எருவை ஊன் உணவு-உதிர்ந்த சிறகுகளையுடைய கிழக்கழுகு தன் வாயிற் பற்றியுள்ள ஊனாகிய உணவினை; வளைவாய் கரும்பருந்து-வளைந்த அலகினையுடைய கரிய பருந்தொன்று; இடை தட்டிப் பறித்து உண்ண-அக்கழுகுண்ணுதற்கிடையே தன் காலால் தட்டிப் பறித்து உண்ணா நிற்ப; கண்டு நின்று உவந்த காட்சியும்-தலைவனும் தலைவியும் அதனைக் கண்டு நின்று மகிழ்ந்த இடம் ஆம் என்க.

     (வி-ம்.) ஒட்டு-தோல். ஒட்டியிருத்தலால் தோலை ஒட்டென்றார். பராரை-பருத்த அடிமரம். பரு:அரை=பராரை ஆ-ஆச்சா மரம். பறை-சிறகு. வளைவாய்: வினைத்தொகை. கிழக்கழுகு கொண்டுள்ள ஊனை இளமையுடைய பருந்து தட்டிப் பறித்து உண்ணுதலைக் கண்ட தலைவனும் தலைவியும் மகிழ்ந்தமைக்குக் காரணம், தலைவிக்கு நொதுமலர் வரைந்தவுடன் தலைவன் தலைவியை அந்நொதுமலர் கைக்கொள்ளாது செய்து தானே கைப்பற்றிக் கொண்டு வருகின்ற செயலை இருவரும் நினைத்தமை என்க. எருவை-கழுகு. காட்சி என்றது. கண்டு நின்ற இடத்தை.

29-34: செம்மணி....................................கடவுள்

     (இ-ள்) செம்மணிச் சிலம்பும்-மாணிக்க மலையையும்; மரகதப் பொருப்பும்-மரகத மலையையும்; ஓர் உழைக்கண்ட-ஓரிடத்தே பார்க்குங்கால்; உவகையது என்ன உண்டாகும் மகிழ்ச்சி போன்றும்; குடுமி அந்தழலும் அவண் இருள் குவையும்-கொழுந்தினையுடைய நெருப்பினையும் அவ்விடத்திலேயே இருட்குவியலையும்; கண்ட உவகையது என்ன-கண்டமையால் உண்டான மகிழ்ச்சியைப் போலவும்; முளைவரும்பகனும் அதன் இடை மேகமும்-தோற்றம் செய்கின்ற இள ஞாயிற்று மண்டிலத்தையும் அதன் ஒரு மருங்கில் முகிலையும்; கண்ட உவகையது என்ன-கண்டுழி உண்டாகும் மகிழ்ச்சியைப் போலும்; சே இதழ் முளைரியும் கார் இதழ் குவளையும்-சிவந்த இதழ்களையுடைய தாமரை மலரையும் கரிய இதழ்களையுடைய குவளை மலரையும்; ஓர் உழைக்கண்ட உவகையது என்ன-ஓரிடத்தே கண்டுழி உண்டாகும் மகிழ்ச்சி போலும் தன்னைக் காண்பார்க்குப் பெரும் மகிழ்ச்சி உண்டாகும்படி; எவ்வுயிர் நிறைந்த செவ்விகொள் மேனியில்-எல்லா வுயிர்க்கண்ணும் நிறைந்த செவ்வியைக் கொண்ட தன் திருமேனியின்கண்; அண்டப் பெரும் திரள் அடைவு ஈன்று அளித்த-அண்டங்களாகிய பெரிய கூட்டத்தைப் படைப்பு முறையானே படைத்து அவ்வண்டங்களில் வாழும் உயிரினங்களையும் பாதுகாத்தருளிய; கன்னி கொண்டு இருந்த மன் அருள்கடவுள்-என்றும் இளமையோடிருக்கும் உமையம்மையாரைத் தனதொரு கூற்றிலே கொண்டிருந்த நிலைபெற்ற அருளையுடைய இறைவனாகிய சோமசுந்தரக் கடவுளாகிய என்க.

     (வி-ம்.) செம்மணிச் சிலம்பும் தழலும் பகனும் செம்முளரியும் சிவபெருமானுக்கும், மரகத மலையும் இருட் குவையும் மேகமும் கருங்குவளையும் உமையம்மையாருக்கும் உவமைகள். மலைகள் உடம்பிற்கும் தழலும் இருட்குவையும் கூந்தலுக்கு வமைகள். பகனும் மேகமும் நிறவுவமை; முளரியும் குவளையும் கண்களுக்குவமை என நுண்ணிதின் உணர்க. செம்மணி-மாணிக்க மணி. குவை-குவியல். முளைவரும்-முளைத்துலுண்டாகிற, எனவே முளைவரும் பகன் என்றது, தேற்றம் செய்கின்ற இளஞாயிறு என்றாயிற்று. பகன்-ஞாயிறு. தைத்திங்களில் வரும் ஞாயிற்றிற்குப் பகன் என்று பெயர். இவன் உத்தராயணம் தொடங்குதலின் அவ்வாற்றானும் இளஞாயிறு ஆதலின் பதினோராயிரம் கதிர்களையுடைய இவ்விள ஞாயிற்றையே ஈண்டு இறைவனுக்கு உவமை எடுத்தார் என்க. முளரி-தாமரை. இது இறைவன் கண்களுக்குவமை. காரிதழ்க் குவளை-நீலோற்பலம். இது அம்மை கண்களுக்குவமை. ஓருழைக் கண்ட என்பதனையும் உவகையது என்ன என்பதனையும் ஏற்ற பெற்றி கூட்டிக்கொள்க. உவகையதென்ன-தன்னைக் காண்பார்க்கு உவகை உண்டாகும்படி என வருவித்தோதுக. எவ்வுயிர்க் கண்ணும் எனல் வேண்டிய உருபும் முற்றும்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. அடைவு-முறை. கன்னி-உமை: கன்னியைக் கொண்டிருந்த என்க. மன்னருள்: வினைத்தொகை.

37-44: மலை.....................................இவணே

     (இ-ள்) மலை உரு கொண்ட வாள் அரக்கர் வெள்ளமும்-நீலமலை உருவங்கொண்டாற் போன்ற உடம்பினையும் வாளினையும் உடைய அரக்கர் கூட்டத்தையும்; சூரும்-சூரனையும்; புள்இயல் பொருப்பும்-பறவையின் பெயரமைந்த மலையினையும்; நெடுங்கடல் கிடங்கும்-ஆழமாகிய நெடிய கடலினையும்; ஒருங்கு உயிர்ப்பருகிய மணிவேல் குமரன்-ஒருசேர உயிர் குடித்த அழகிய வேற்படையையுடைய முருகப் பெருமான்; முதல்நிலை வாழும் குன்று உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன்-படைவீடு ஆறனுள் முதன்மையுடைய வீடாகக் கொண்டு நிலைத்து வாழாநின்ற திருப்பரங்குன்றத்தினை ஒரு பாலணிந்து உயர்ந்துள்ள நான்கு மாடங்களையும் உடைய கூடலாகிய அழகிய மதுரை மாநகரத்தை உடைய சிவபெருமானுடைய; தாள்தலை தரித்த கோளினர்போல- திருவடிகளைத் தலையிற் றாங்குதற்குக் காரணமாகிய கொள்கையினையுடைய சான்றோர் போல; நெடு சுரம் நீங்க-நெடிய பாலை நிலத்தை நீங்கவேண்டி; தம்கால் அடுந்தழல் மாற்றிய கால்குறி இவண்-தம்முடைய கால்களைச் சுடுகின்ற வெப்பத்தை ஆற்றிக்கொண்ட அடிச்சுவடுகளே இவ்விடத்திற் காணப்படுவன. ஆதலால் அவர் சென்ற நெறி இதுவேயாம் என்க.

     (வி-ம்.) மலை-ஈண்டு நீலமலை. வெள்ளம்-கூட்டம். சூர்-சூரங் புள்-கிரவுஞ்சம் என்னும் பறவை. புள்ளியல் பொருப்பு-கிரவுஞ்சகிரி என்க. முதல்-முதன்மையுடையது. அஃதாவது திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினங்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், சோலைமலை என்னும் படைவீடு ஆறனுள் முதன்மையுடைய திருப்பரங்குன்றம் என்க. கோளினர்-கொள்கையுடையோர். இறைவனுடைய திருவடிகளைத் தாஇயில் தாங்குதல் சான்றோர் பிறப்பாகிய வெம்பாலையை விரைந்து கடந்து போமாறுபோலே நெடிஞ்சுரம் நீங்க என்றவாறு. காலின் தழலை நீக்கிய குறி என்றமையால் அக்காற் சுசுவடுகள் அரிதிற் கிடைத்த ஒருமர நீழலில் நிலைத்து நின்ற காற்சுவடுகள் என்க. ஆதலால் அவர் சென்ற நெரி இதுவே என்பது குறிப்பெச்சம்.

     நாட்டிய கல்லைக் கண்டு மகிழ்ந்ததனாலும், புலிபட்டதனாலும், மறைந்தவேடர்பலருடைய அடிச்சுவட்டினாலும், குந்திய காற்சுவடுகளினாலும், அவற்றிற் கெதிர் நின்று விலகிய சுவடுகளாலும், ஆறலை கள்வர் மாண்டு கிடந்தமையாலும், பதுக்கையருகில் கழிந்த பூவாலும், அணிந்துழி உதிர்ந்த பூவாலும், கழுகின் சிறகுகள் உதிர்ந்து கிடந்தமையாலும், மரநீழலில் அழுந்திய சுவடுகளாலும் செவிலி அவ்வவிடத்து னிகழ்ச்சிகளைக் கண்டறிந்தாள் என்க. இனி விடலை மகிழ்ந்த இடம் இவ்விடம், கழிந்த விடம் இது, மகிழ்ந்த இடம், இந்நிலை. தாபதர் ஆசி நாட்டியது இவ்விடம் மெய்தூளாகக் காட்டுமிடம் இவ்விடம். பாதிரி மலரைப் புனைந்த இடம் இக்கற்பதுக்கை. பார்த்து மகிழ்ந்த இடம் இவ்விடம். தழலாற்றிய காற்குறியையுடைய விடம் இவ்விடம் ஆதலால் அவர் போயின நெறி இதுவென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் உடன் போக்குணர்தல்.