பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 61

நேரிசையாசிரியப்பா

 
   
5
  ஏழ்கடல் வளைந்த பெருங்கட னாப்பண்
பத்துடை நூறு பொற்பமர் பரப்பு
மாயிரத் திரட்டிக் கீழ்மே னிலையும்
யோசனை யடுத்த மாசறு காட்சிப்
பளிங்கப் பொருப்பிற் றிடர்கொண் மூதூர்
10
  களவுடை வாழ்க்கை யுளமனக் கொடியோன்
படர்மலை யேழுங் குருகமர் பொருப்பு
மாவெனக் கவிழ்ந்த மறிகட லொன்றுங்
கடுங்கனற் பூமி படும்படி நோக்கிய
தாரையெட் டுடைய கூரிலே நெடுவேற்
15
  காற்படைக் கொடியினன் கருணையோ டமர்ந்த
புண்ணியக் குன்றம் புடைபொலி கூடற்
பிறைச்சடை முடியினன் பேரரு ளடியவர்க்
கொருகாற் றவறா வுடைமைத் தென்னப்
பிரியாக் கற்பெனு நிறையுடன் வளர்ந்த
20
  நெடுங்கய லெறிவிழிக் குறுந்தொடித் திருவின
டெய்வமென் றொருகாற் றெளியவு முளத்திலள்
பலவுயிர் தழைக்க வொருகுடை நிழற்று
மிருபுல வேந்தர் மறுபுலப் பெரும்பகை
நீர்வடுப் பொருவ நிறுத்திடப் படரினு
25
  மேழுய ரிரட்டி மதலைநட் டமைத்த
தன்பழங் கூடந் தனிநிலை யன்றி
யுடுநிறை வானப் பெருமுக டுயரச்
செய்யுமோர் கூடம் புணர்த்தி
னெய்ம்மிதி யுண்ணா தவன்வடக் களிறே.

(உரை)
கைகோள்: கற்பு; செவிலி கூற்று.

துறை: கற்புப் பயப்புரைத்தல்.

     (இ-ம்.) இதனை, "கழிவினும் வரவினும்" (தொல்.கற்பி.) எனவரும் நூற்பாவின்கண் 'செவிலிக்குரிய ஆகும்' என்னும் மிகையாற் கொள்க.

1 - 5: ஏழ்கடல்........................ மூதூர்

     (இ-ள்) ஏழ்கடல் வளைந்த பெருங்கடல் நாப்பண் - ஏழு கடல்களையும் அகத்திட்டு வளைந்த பெரும்புறக் கடல் நடுவில்; பத்து உடைநூறு யோசனை பொற்பு அமர் பரப்பும் - ஆயிரம் யோசனை அளவுள்ள அழகமைந்த அகலமும்; ஆயிரத்து இரட்டி கீழ்மேல் நிலையும் - இரண்டாயிரம் யோசனை அளவுள்ள கீழ்நிலையும் மேல்நிலையும்; அடுத்த மாசு அறு காட்சி-பொருந்திய குற்றமற்ற தோற்றத்தினையுடைய; பளிங்கு அ பொருப்பின் திடர்பொள் மூதூர் - பளிங்காலியன்ற அழகிய மலைபோலும் உயர்ச்சிகொண்ட மகேந்திர மென்னும் பழைய நகரிடத்தே என்க,

     (வி-ம்.) பெருங்கடல் நாப்பண் திடர்கொள் மூதூர் என்க. ஏழ்கடலாவன உப்புக்கடல், நல்ல தண்ணீர்க் கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தேன் கடல் என்பன. பொற்பு-அழகு. பளிங்கு அ பொருப்பு என கண்ணழித்துக் கொள்க. அ-அழகு. பொருப்பு - மலை. மூதூர்-பழைதாகிய ஊர்.

6 - 12: கனவு .......................... கூடல்

     (இ-ள்) களவுடை வாழ்க்கை உளமனக் கொடியோன் - வஞ்சக வாழக்கையுள்ள கொடிய நெஞ்சினையுடையோனுடைய; படர்மலை ஏழும் - அகன்றுள்ள ஏழு மலைகளும்; குருகு அமர் பொருப்பும் - கிரவுஞ்சம் என்னும் பறவை போன்ற வடிவையுடைய மலையும்; மா எனக் கவிழ்ந்த மறிகடல் ஒன்றும் - மாமரமாகத் தலைகீழாக இருந்த அலைகளை மறிததெறியா நின்ற கடல் ஒன்றும்; கடுங்கனல் பூழிபடும்படி நோக்கிய - கொடிய தீப்பொறிகள் ஆகும்படி சினந்து பார்த்த; தாரை எட்டு உடைய எட்டுக் கண்களையுடைய; கூர்இலை நெடுவேல் -கூரிய இலைத்தொழிலமைந்த நெடிய வேலை ஏந்திய; கால் படை கொடியினன் கோழிக் கொடியை உய்ர்ததவனாகிய முருகப்பெருமான்; கருணையோடு அமர்ந்த புண்ணியக் குன்றம் - அருளோடு எழுந்தருளுதற்குக் காரணமான அறத்தினையுடைய திருப்பரங்குன்றம்; புடைபொலி கூடல் - பக்கத்தில் அழகு பெற்றிருக்கின்ற மதுரையில் எழுந்தருளியுள்ள என்க.

     (வி-ம்.) களவு - வஞ்சகம். குருகமர் பொருப்பு - கிரவுஞ்சமலை. அக்கொடியோன் மாஎனக் கவிழ்ந்திருத்தற் கிடனான மறிகடல் ஒன்றும் என்க. கடுங்கனற் பூழி - கடிய தீப்பொறி. தாரை - கண். காற்படை - காலின்கண் உள்ள முள்ளையே படைக்கலமாக உடைய கோழி. அமர்ந்த புண்ணியம் - அமர்த்ற்குக் காரணமான புண்ணியம்.

13 - 17: பிறைச் ................................ உளத்திலள்

     (இ-ள்) பிறை சடைமுடியினன் பேர் அருள் அடியவர்க்கு - பிறையை யணிந்த சிவபெருமானுடைய பேரருளைப் பெற்ற மெய்யடியார்க்கு; ஒருகால் தவறா உடைமைத்து என்ன - ஒரு காலத்திலும் தப்பிப்போகாத பொருள்போல; பிரியாக் கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த- தன்னைவிட்டு நீங்காத கற்பென்று சொல்லுகின்ற நிறையோடு வளர்ந்த; நெடுங்கயல் எறிவிழி - நெடிய கயல்மீனைத் தோற்பிக்கும் விழிகளையும்; குறுந்தொடி - சிறிய தொடியையுமுடைய; திருவினள் - திருமகளை ஒத்த நம் மகள்; ஒருகால் உளத்து தெய்வம் என்று தெயிளவும் ஒலள் - ஒரு காலத்திலேனும் தன் நெஞ்சத்தில் தன் கணவனையன்றி வேறுதெய்வம் உண்டு என்று ஆராயவும் நினைத்தல் இலள் என்க.

     (வி-ம்.) பிறைச் சடைமுடியினன் - சிவபெருமான். நிறை-நெஞ்சை நிறுத்தும் ஆற்றல். திரு-திருமகள்.

18 - 20: பல....................... படரினும்

     (இ-ள்) பல உயிர் தழைக்க-உலகத்திலுள்ள பலவேறு உயிர்களும் தழைக்கும்படி; ஒருகுடை நிழற்றும் - ஒரு குடையால் தண்ணளி செய்கின்ற; இருபுல வேந்தர்- இருவேறு நாட்டு மன்னர்களுள்; மறுபுலம் விளைந்த பெரும்பகை-வேறொரு நாட்டின் பொருட்டு விளைந்த பழம் பகைமையை; நீர்வடு பொருவ நிறுத்திடப் படரினும்-நீரின்கண்ணுண்டான பிளவு விரைந்து ஒன்றுபட்டு மறைந்தாற்போல மறையும்படி நீக்கி அவர்களைச் சந்து செய்ய அவள் கணவனாகிய அரசன் சென்றாலும் என்க.

     (வி-ம்.) இருபுலம் - இரண்டு நாடு. பெரும்பகை - பழைய தான தீராப்பகை. இத்தகைய பகைமை கொண்டுள்ள மன்னர்களைச் சந்து செய்தல் பலநாள் முயன்று செய்தற்குரிய காரியம் ஆகவே செயற்கரும் செயலுக்கு ஈண்டு ஒன்றை எடுத்துக் காட்டியபடியாம். நீர்வடு பொருவ - நீரில் உண்டாக்கிய வடுதோன்றிய இடம் தெரியாமல் மறைந்து போவதுபோலப் பகைமையைப் போக்கிச் சந்து செய்தல் என்க.

21 - 25: ஏழுயர்....................... களிறே

     (இ-ள்) ஏழ்இரட்டி உயர் மதலை நட்டு - பதினான்குமுழம் உயர்ந்துள்ள தூண்களை நிறுத்தி; அமைத்த தன் பழங்கூடம் தனிநிலை அன்றி - இயற்றப்பட்ட தனது பழைமையான கூடமாகிய ஒரே யிடத்தல்லாமல்; அவன் கட களிறு அத்தலைவன் வினைமேற் கொண்டுழி ஊர்ந்து செல்லும் மதயானையானது; உடுநிறை வானம் பெருமுகடு உயரச் செய்யும் ஓர்கூடம்- மீன்கள் நிறைந்த வானைத் தீண்டும்படி பெரிய முகட்டினை உயர்த்தி இயற்றப்பட்ட பிறிதொரு கூட்டத்தில்; புணர்த்தின்-கட்டினால்; நெய்ம்மிதி உண்ணாது - நெய்யொடு கலந்த கவளத்தை உண்ணமாடடாது என்க.

     (வி-ம்.) நம்மகள் கணவனாகிய அரசன் செயற்கருஞ் செயலாகிய சந்து செய்தலை மேற்கொண்டு செல்லினும், அவன் ஊர்ந்து செல்லும் களிறு அன்றே மீண்டு வந்து தன் கொட்டிலில் கவளம் உண்பதல்லது வேறொரு கொட்டிலில் நின்று கவளம் உண்ணமாட்டாது என்றவாறு, எனவே தலைவன் மேற்கொள்ளும் செயல் எத்தகைய அருஞ்செயலயினும் இடையூறின்றி அன்றே நிறைவுறும் என்றாளாயிற்று. தலைவன் இங்ஙனம் சிறப்புறுதற்குக் காரணம் நம் மகளின் கற்புடைமையே காண் என்றவாறு. யானை ஏழுமுழம் உயரமுடையது. ஆகவே அதற்கியற்றும் கொட்டிலுக்குப் பதினான்கு முழத்தூண் நடுதல் வேண்டிற்று. மதலை - தூண். நெய்ம்மிதி - நெய்கலந்து மிதித்தியற்றிய கவளம்.

     இதனை, காற்படைக் கொடியினன் புண்ணியக் குன்றம் புடைபொலிகூடற் சடைமுடியுனன் பேரருளடியவர்க்குத் தவறாஹபடைமைத்தென்ன, பிரியாக் கற்பெனு நிறையுடன் வளர்ந்த திருவினளுளத்தில் பிறதெய்வமுண்டெனத் தெளிந்தில ளாதாலால், தலைவன் வேந்தர் பெரும்பகையை நீர்வடுப்பொருவ நிறுத்திடப் படரினும் அவன் களிறு தன் பழங் கூடத்தன்றிப் பிறிதொரு கூடம் புணர்த்தின் நெய்ம்திதி யுண்ணாதென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.