|
|
செய்யுள்
62
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பெண்ணெனப் பெயரிய பெருமகட் குலனு
ளுணாநில னுண்டு பராயவப் பெருந்தவங்
கண்ணுற வுருப்பெருங் காட்சிய தென்னக்
கருவுயிர்த் தெடுத்த குடிமுத லன்னை
நின்னையுங் கடந்த தன்னவ ளருங்கற் |
10
|
|
பரிகடன் மூழ்கிப் பெறுமருள் பெற்ற
நிலமகட் கடந்தது நலனவள் பொறையே
யிருவினை நாடி யுயிர்தொறு மமைத்த
வூழையுங் கடந்தது வாய்மையின் மதனே
கற்பகம் போலு மற்புதம் பழுத்த |
15
|
|
நின்னிலங் கடந்த தன்னவ ளில்லம்
பேரா வாய்மைநின் னூரனைக் கடந்தது
மற்றவ ளூரன் கொற்றவெண் குடையே
யேழுளைப் புரவியோ டெழுகதிர் நோக்கிய
சிற்றிலை நெருஞ்சிற் பொற்பூ வென்ன |
20
|
|
நின்முகக் கிளையினர் தம்மையுங் கடந்தனர்
மற்றவட் பார்த்த மதிக்கிளை யினரே
யுடனிழன் மான வுனதரு ணிற்கு
மென்னையுங் கடந்தன ளன்னவட் கினியோள்
கொலைமதின் மூன்று மிகலறக் கடந்து |
25
|
|
பெருநில வெறித்த புகர்முகத் துளைக்கைப்
பொழிமதக் கறையடி யழிதரக் கடந்து
களவுத் தொழில்செ யரிமக னுடலந்
திருநுத னோக்கத் தெரிபெறக் கடந்து
மாறுகெயாண் டறையு மதிநூற் கடல்கிளர் |
30
|
|
சமயக் கணக்கர் தந்திறங் கடந்து
புலனொடு தியங்கும் பொய்யுளங் கடந்த
மலருட னிறைந்து வான்வழி கடக்கும்
பொழினிறை கூடற் புதுமதிச் சடையோன்
மன்னிலை கடவா மனத்தவர் போல |
|
|
வொன்னல
ரிடுந்திரைச் செலினுந்
தன்னிலை கடவா தவன்பரித் தேரே. |
(உரை)
கைகோள்: கற்பு; செவிலி கூற்று.
துறை: வாழ்க்கை
நலங்கூறல்
(இ-ம்.)
இதுவுமது.
1
- 4: பெண்.................................... அன்னை
(இ-ள்)
பெண் என பெயரிய பெருமகள் குலனுள்-பெண்ணென்று பெயருள்ள பெருந்தகை மகளிர் கூட்டத்துள்;
உணாநிலன் உண்டு பராய அப்பெருந்தவம்- மகட்பேறு கருதி உணவினை நிலத்தை மெழுகி அதில்
உண்டு நோற்ற அந்தப் பெரிய தவத்தின் பயனானது; கண் உற உருப்பெறும் காட்சியது என்ன-கண்கூடாகக்
காணுமாறு ஒரு வடிவெடுத்து வந்த காட்சிபோல; கருஉயிர்த்து எடுத்த குடிமுதல் அன்னை - நம்
செல்வியைக் கருக்கொண்டு ஈன்றெடுத்த இவ்வுயர் குடிக்குத் தலைவியாகிய தாயே கேள்!
என்க.
(வி-ம்.)
பெண்எனப் பெயரிய என்றது பெண் என்று சான்றோரால் உயர்த்துக் கூறப்படும் பெயரையுடைய
என்பதுபட நின்றது.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்" (குறள்) |
எனவரும் திருக்குறளை
ஈண்டு நினைக. பெருமகள் குலன - பெருந்தகைப் பெண்டிர் குழு. நிலன் உண்டு - நிலத்தை
மெழுகி அதில் உணவையிட்டு உண்டு என்க. தவன்-தவப்பயன். நம் செல்வியைக் கருவுயிர்த்து
எடுத்த என்க. குடி என்றது ஏசாச் சிற்ப்பின் இசை விளங்கும் இக்குடி என்பதுபட நின்றது.
5
- 9: நின்னையும்........................ மதனே
(இ-ள்)
அன்னவள் அருங்கற்பு - அம்மகளது பெறலருங் கற்புடைமை; நின்னையுங் கடந்தது - நின் கற்புடைமையினுங்
காட்டில் மிகவும் மேம்பட்டது காண்; நலனவள் பொறை அக்கற்பு நலமுடைய அவளது பொறுமை;
கடல் மூழ்கி அரிபெறும் அருள் பெற்ற நிலமகள் கடந்தது-கடலின் மூழ்கிப் பின்னர்த்
திருமால் தோற்றுவித்தலால் அவனைக் கணவனாகப் பெறும் அருளைப்பெற்ற நிலமகள் பொறுமையினுங்
காட்டில் மேம்பட்டது; வாய்மையின் மதன் அவளது வாய்மையின் மாண்பு; இருவினை நாடி உயிர்தொறும்
அமைத்த ஊழையுங் கடந்தது - இருவினை
காரணமாக எல்லா உயிரிடத்தும் அமைக்கப்பட்ட ஊழ் முறைமையினும் மேம்பட்டது என்க.
(வி-ம்.)
அன்னவள் என்றது அங்ஙனம் நீ தவஞ்செய்து பெற்றெடுத்த அம்மகள் என்பதுபட நின்றது.
மகளிர்க்குக் கற்பினும் சிறந்ததொன்றின்மையால் அதனையே முற்படக் கூறினாள். நின்
கற்பையுங் கடந்தது என்க. நலனவள் என்றது அக்கற்பு நலமுடைய அவள் என்பதுபட நின்றது.
பொறை - பொறாமை. கடல் மூழ்கி அரிபெறும் அருள் பெற்ற என்றது முன்பொருகாலத்தில்
நிலம் கடலில் முழுகியபொழுது திருமால் பன்றியாகி அதனைக் கோட்டால் உயர்த்து நிலைநிறுத்தினான்
என்னும் வரலாற்றினை உட்கொண்டது. இதனை,
"தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
றுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர் பிண்டி அவற்றிற்கும்
உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்
நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமு நுதலிய
செய்குறி யீட்டங் கழிப்பிய வழிமுறை
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்(கு)
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வநிற் பேணுதுந் தொழுது" (பரி.
2. 9-19) |
எனவரும் பரிபாடலானும்
உணர்க. நிலமகள் பொறுமையின் மிக்காள் என்பதனை,
"அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத்
தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை" (குறள்.
151) |
எனவரும் திருக்குறளானும்
உணர்க். நிலமகள் பொறை என்க மதன் - மாண்பு. (பிங்கல) ஊழ் என்றது ஈண்டுப் பால்வரை
தெய்வத்தை. அவள் வாய்மை தப்பாத வலிமையுடையது என்பாள் தப்பாத வலிமையுடைய ஊழினை
உவமை எடுத்தாள். ஊழ் அங்ஙன மாதலை,
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்"
(குறள். 310) |
எனவரும் திருக்குறளானும்
உணர்க. இனி ஊழ்தானும் அவளை வாய்மையினின்றும் பிறழச் செய்ய இயலாது என்றும் ஒரு
பொருள் கொள்க.
10
- 13: கற்பகம்.................................... குடையே
(இ-ள்)
அன்னவள் இல்லம் - அவளது இல்வாழ்க்கையானது; கற்பகம் போலும் அற்புதம் பழுத்த நின்
இலம்
கடந்தது - வேண்டுவோர் வேண்டுவன நல்கும் கற்பகமரத்தை யொத்த வியப்புமிக்க நின்னுடைய இல்வாழ்க்கையினும் சிறப்புடையது; அவள் ஊரன் கொற்றம் வெண்குடை -இனி அவள் கணவனது வெற்றியையுடைய வெண்குடை நீழல்; பேராவாய்மை நின் ஊரமைனக் கடந்தது - பிறழாத வாய்மையையுடைய நின் கணவனுடைய கொள்ள வெண்குடை நிழலினும் சிறந்துது காண் என்க.
(வி-ம்.) இல்லம்-இல்வாழ்க்கை, கற்பகம் - தன்கால் வந்து வேண்டுவோர் வேண்டுவன நல்கும் அற்புதமுடைத்தாகலின் தன்னில்லத்திற்கு வந்து வேண்டுவோர் வேண்டுவன நல்கும் இல்வாழ்க்கைக்கு உவமையாக வெடுத்தாள். உவமைக்குக் கொடுத்த இவ்வடை மொழியால் அன்னவள் இல்வாழ்க்கை அவ்வறத்தின் நின்னறத்தினும் சிறப்புடைத்து என்பது கருத்தாகக் கொள்க. ஊரன்: தலைவன். குடை என்றது மன்னுயிரோம்பும் அருளாட்சியை.
14
- 19: ஏழுளைப்................................. இனியோள்
(இ-ள்) அவள் பார்த்த மதி உறவினர் - அவளைத் தஞ்சமாக நோக்கியுள்ள அறிவுடைய சுற்றத்தார்; உளைப்புரவி ஏழோடு எழும் கதிர்நோக்கிய சிறுஇலை நெருஞ்சில் பொன்பூ என்ன- பிடரி மயிரினையுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரோடு தோன்றுகின்ற ஞாயிற்றையே பார்த்திருக்கின்ற சிறிய இலைகளையுடைய நெருஞ்சிற் கொடியின் பொன்னிற மலர்கள் போன்று; நின்முகம் நோக்கிய கிளையினர் தம்மையுங் கடந்தனர் - நின்னுடைய முகத்தையே நோக்கி வாழும் நின் சுற்றத்தாரினும் காட்டில் சிறந்தோர்காண்; அன்னவட்கு இனியோள்-அத்தலைவிக்கு அன்புள்ள தோழியானவள்; உடல்நிழல் மான உனது அருள் நிற்கும் என்னையும் கடந்தனர் - உன் உடலினது நிழலைப்போன்று உனது அருள் எல்லையிலேயே நிலைபெற்ற என்னினும் காட்டில் சிறந்தவள் காண் என்க.
(வி-ம்.) பார்த்த - தஞ்சமாகப் பார்த்த. மதி - அறிவு. உளை - பிடரிமயிர். கதிர்- ஞாயிறு. நெருஞ்சிப்பூ காலை முதுல் மாலைவரை ஞாயிற்றினையே நோக்கி இருக்கும் இயல்புடையது. இதனை "செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞசிப் பொன்புனை மலரின் புகற்சிபோல: (பெருங்கதை.. 2. 4. 14-15) எனவும், " ஓங்குமலை நாடன், ஞாயி றனையனென் றோழி, நெருஞ்சி யனையவென் பெரும் பணைத்தோளே" (குறுந். 315) எனவும், "நெருஞ்சிப் பசரை வான்பூ, ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாங்கு" (புறநா 155) எனவும், "வெஞ்சுடர் நோக்கும் நெருஞ்சியில்" (இறை. சூ. 47 உரை. மேற்) எனவும் "நீள்சுடர் நெறியை நோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல்" (சீவக461) எனவும் வரும் பிற சான்றோர் கூற்றானும் உணர்க. பொன்பூ - பொன்னிற மலர். இனியோள் என்றது உசாத்துணைத் தோழியை. இவள் செவிலி மகள். ஆகவே ஈண்டுச் செவிலி, தாயே! என் மகள் என்னினுங் காட்டில் சிறந்து விளங்குகின்றாள் என்றாளாயிற்று. இதுகாறும் கூறியவற்றால்,
"கற்புங் காமமு நற்பா லொழுக்கமு
மெல்லியற் பொறையு நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலுஞ் சுற்ற மோம்பலும்
பிறவு மன்ன கிழவோண் மாண்புகள்" (தொல்.
சூ. 152) |
செவிலியால் நற்றாய்க்
குணர்த்தப்பட்டமை உணர்க.
20
- 24: கொலை .......................................... கடந்து
(இ-ள்)
கொலைமதில் மூன்றும் - கொலைத்தொழில் செய்யும் முப்புரத்தையும்; இகல் அறக்கடந்து
- பகை நீங்க வென்று; பெருநில எரித்த புகர்முகம் துளைக்க- மிகுந்த நிலாவொளியை வீசிய
கொம்புகளையும் புள்ளிகளையுடைய முகத்தையும் துளையுடைய கையையும் உடைய; மதம்பொழி கறையடி
- மதநீரைப் பொழிகின்ற யானையானது; அழிதர கடந்து - அழியும்படி வென்று; களவு தொழில்செய்
அரிமகன் உடலம் - களவாகிய போர்த் தொழிலைப் புரிந்த காமவேளினது உடம்பானது; திருநுதல்
நோக்கத்து எரிபெற கடந்து - அழகிய நெற்றிக் கண்ணினால் தீயுண்ணும்படி செய்து வென்று
என்க.
(வி-ம்.)
கொலைமதில் - கொரைத்தொழிலையுடைய மதில். முப்புரம்- மதிலுருவாயித்தலின் அவற்றை
மதில் என்றே கூறினர். இவை இரும்பு, பொன், வெள்ளி என்பவற்றால் இயன்றன. இதனை
"இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி வெள்ளிப் புரிசை அன்றோர், துரும்புறச் செற்றகொற்
றத்தெம்பி ரான்தில்லைச் சூழ்பொழிற்கே" என வரும் திருக்கோவையாரானும் உணர்க.
அழிதர : ஒருசொல். அரிமகன் - காமவேள். எரிபெற -தீயுண்ண.
25
- 30: மாறு................................. கடந்து
(இ-ள்)
மாறு கொண்டு அறையும்-ஒருவரோடொருவர் மாறுபட்டுக் கூறுகின்ற; மதிநூல் கடல்கிளர்-தம்
அறிவானது நூலாகிய கடலை ஆராய்தலின் ஊக்கமிக்க; சமயக் கணக்கர்தம் திறம் கடந்து
- சமயக்கணக்கர்களுடைய விகற்பங்களுக்கு அப்பாலாகி; புலனொடு தியங்கும் பொய்உளம்
கடந்த-ஐம்புலன்களோடு கூடி மய்ஙகாநின்ற பொய்யுடைய நெஞ்சத்தையுங் கடந்த; மலருடன்
நிறைந்து வான்வழி கடக்கும் பொழில்நிறை கூடல் - மலர்களுடன் நிறைந்து வானவீதியையும்
ஊடுருவிச் செல்லுகின்ற பொழில்களால் நிறைந்த மதுரையில் எழுந்தருளியுள்ள; புதுமதிச்
சடையோன் - இளம்பிறையைத் தரித்த சடையையுடைய இறைவனுடைய; மன்நிலை-நிலைபெற்ற அருள் நிலையினின்றும்; கடவா
மனத்தவர்போல - பிறழாத நெஞ்சுள்ள மெய்யன்பர் போன்று என்க.
(வி-ம்.)
மாறு - மாறுபாடு. மதி-அறிவு. மன்-நிலைபெற்ற. நிலை-அருள்நிலை.
31
- 32: ஒன்னலர்................................... தேரே
(இ-ள்)
ஒன்னலர் இடுதிறை-பகைவரால் அளக்கப் படுகின்ற திறைப்பொருளின் பொருட்டு; செலினும்-அரசனாகிய
அவள் கணவன் சென்றாலும்; அவன் பரித்தேர்-அவனுடைய குதிரைகளையுடைய தேரானது; தன்நிலை
கடவாது - அன்றே மீண்டுவந்து தனது கொட்டிலில் தங்குவதன்றி அதனைக் கடந்து வேற்றிடங்களில்
தங்குவதன்று என்க.
(வி-ம்.)
ஒன்னலர் - பகைவர். அவள் தேர் தன்நிலை கடவாது என்றது அவன்மேற்கொண்டு செல்லும்
வினை இடையூறின்றி முடிதலின் அன்றே மீண்டுவந்து தன் நிலையில் தங்கும் என அவள் கணவனுடைய
ஆள்வினைத் திறத்தை விதந்துரைத்த படியாம். இதனை, கருவுயிர்த்தெடுத்த அன்னை, அனவ்வள்
கற்பு நின்னையும் கடந்தது, அவள் பொறை நிலமகட் கடந்தது, வாய்மையின் மதன் ஊழையுங்
கடந்தது, அன்னவளில்லம் நின்னிலங் கடந்தது, மற்றவளூரன் கொற்ற வெண்குடை நின்னூரனைக்
கடந்தது, மதிக் கிளையினர் நின்கிளையினர் தம்மையும் கடந்தனர், பொன்னவட் கினியோள்
என்னையுங் கடந்தனள், புதுமதிச் சடையோன் மன்னிலை கடவா மனத்தவர்போல ஒன்னல ரிடுந்திறைச்
செலினும் அவன் பரித்தேர் தன்னிலை கடவாதென வினைமுடிவு செய்க. மெய்ப்படும் பயனும்
அவை.
|