பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 63

நேரிசையாசிரிப்பா

 
   
5
  நீரர மகளிர் நெருங்குறப் புகுந்து
கண்முகங் காட்டிய காட்சிய தென்னப்
பெருங்குலை மணந்த நிறைநீர்ச் சிறைப்புனன்
மணநிறப் படாமுது கிடையறப் பூத்துச்
சுரும்பொடு கிடந்த சொரியிதழ்த் தாமரை
10
  கண்ணினுங் கொள்ளா துண்ணவும் பெறாது
நிழறலை மணந்த புனல்கிட வாது
விண்ணுடைத் துண்ணும் வினைச்சூர் கவர்ந்த
வானவர் மங்கையர் மயக்கம் போலப்
பிணர்க்கரு மருப்பிற் பிதிர்பிட வுழக்கி
15
  வெண்கார்க் கழனிக் குருகெழப் புகுந்து
கடுக்கைச் சிறுகா யமைத்தவாற் கருப்பை
யிணையெயி றென்ன விடையிடை முட்பயில்
குறும்புதன் முண்டகங் கரும்பெனத் துய்த்துச்
செங்கட் பகடு தங்குவய லூரர்க்
20
  கருமறை விதியு முலகியல் வழக்குங்
கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து
வடசொன் மயக்கமும் வருவன புணர்த்தி
யைந்திணை வழுவா தகப்பொரு ளமுதினைக்
குறுமுனி தேறவும் பெறுமுதற் புலவர்க
25
  ளேழெழு பெயருங் கோதறப் பருகவும்
புலனெறி வழக்கிற் புணருல கவர்க்கு
முற்றவம் பெருக்கு முதற்றா பதர்க்கு
நின்றறிந் துணர்த்தவுந் தமிழ்ப் பெயர் நிறுத்தவு
மெடுத்துப் பரப்பிய விமையவர் நாயகன்
30
  மெய்த்தவக் கூடல் விளைபொருண் மங்கையர்
முகத்தினுங் கண்ணினு முண்டக முலையினுஞ்
சொல்லினுந் தொடக்கும் புல்லம் போல
வெம்மிடத் திலதா லென்னை
தம்முளந் தவறிப் போந்ததிவ் விடனே

(உரை)
கைகோள்: கற்பு. தலைவிகூற்று

துறை: பள்ளியிடத் தூடல்

     (இ-ம்.) இதற்கு "அவனறிவு" (தொல். கற்பி) எனவரும் நூற்பாவின்கண் 'செல்லாக்காலைச் செல்கென விடுத்தலும்' எனவரும் விதிகொள்க.

1 - 5: நீரரமகளிர்.................................... தாமரை

     (இ-ள்) நீர் அர மகளிர்-நீரில் வாழும் தெய்வ மகளிர்; நெருங்குறப் புகுந்து கண்முகங் காட்டிய காட்சியது என்ன - நெருங்கப் புகுந்து தம்முடைய கண்களையும் முகத்தையும் காட்டுகின்ற தோற்றத்தைப்போல பெருங்குலை மணந்த நிறைநீர் சிறைப்புனல்-பெரிய கரை செறிந்த நிறைவுங்ளள நீரைத் தடுத்து நிறுத்தப்பட்ட குளத்தின்கண்; மணிநிறப் பாடம் முதுகுஇடை அறப்பூத்து-மணி நிறத்தையுடைய படாம் போர்க்கப்பட்டாற் போன்ற அழகிய முதுகின்கண் இடையின்றி மலர்ந்து; சுரும்பொடு கிடந்த சொரியிதழ் தாரை - வண்டுகளோடே இருந்தேன் சொரியும் அகவி தழையுடைய தாமரைப் பூவை என்க.

     (வி-ம்.) நீரரமகளிர் - நீரில் வாழும் ஒருவகைத் தெய்வ மகளிர். சூலை-செய்கரை, படாம்-ஆடை. இடை-இடைவெளி. முதுகு - ஈண்டு மேற்பரப்பு. சுரும்பு-வண்டு. தேன் சொரி தாமரை- இதழ்த்தாமரை எனத் தனித்தனி கூட்டுக. தாமரைக்கு நீரர மகளிரின் கண்களும் முகமும் உவமை.

6 - 9: கண்ணினும்....................... போல

     (இ-ள்) கண்ணினுங் கொள்ளாது- கண்ணாலும் நோக்காமல்; உண்ணவும் பெறாது நிழல் தலைமணந்த - உண்ணவும் விருப்பம் பெறாமல் குளிர்ச்சியைத் தன்னிடத்தே கொண்ட; புனல் கிடவாது - நீரிலும் படுத்திராமல்; விண் உடைத்து உண்ணும்- விண்ணுலகத்தை அழித்துக் கொள்ளை கொண்டுண்ணும்; வினைச்சூர்- தீவினையையுடைய சூரபன்மனாலே; கவர்ந்த - சிறை கொள்ளப்பட்ட; வானவர் மங்கையர் மயக்கம் போல-தேவமகளிர் தடுமாற்றம் போல என்க.

     (வி-ம்.) தாமரைப்பூவைக் கண்ணினுங் கொள்ளாது என்க. நிழல் - ஈண்டுக் குளிர்ச்சி. வினை-தீவினை. சூர் - சூரபன்மன்.

10 - 14: பிணர்.................................... துய்த்து

     (இ-ள்) பிணர்கரு மருப்பின் - பொருக்கையுடைய கரிய கொம்புகாளலே; பிதிர்பட உழக்கி - சேறாகும்படி நீரைக் கலக்கி; வெண்கார் கழனி - வெள்ளிய கார்நெற் பயிருள்ள வயல்களினிடத்தேயுள்ள; குருகு எழ புகுந்து - பறவைகள் சிறையடித் தெழும்படி பாய்ந்து சென்று; கடுக்கைச் சிறுகாய் அமைத்த வால்கருப்பை-கொன்றையினது சிறிய காய்போன்ற வாலையுடைய காரெலியினது; இணை எயிறு என்ன - தம்மில் ஒத்த பற்கள் போன்று; இடை இடை முள்பயில் - நடுவே நடுவே முட்கள் பொருந்திய; குறும்புதல் முண்டகம்- குறிய புதலாகிய நீர்முள்ளிச் செடியை; கரும்புஎன துய்த்து-கரும்பைத் தின்பது போல விரும்பித் தின்று என்க.

     (வி-ம்.) பினர்-பொருக்கு. வெண்கார் - வெண்மை நிறமுடைய நென்மணியை யுடைய கார்காலத்துப் பயிர். குருகு- பறவைப் பொது. கடுக்கை-கொன்றை. கருப்பை-காரெலி; ஒருவகை எலி. இதன் வாலுக்குக் கொன்றையின் சிறுகாய் உவமை. முள்ளிச் செடியின் முள்ளுக்குக் காரெலியின் பற்கள் உவமை.

15 - 19: செங்கன்............................. அமுதினை

     (இ-ள்) செங்கண் பகடு தங்கும் வயல் ஊரர்க்கு-சிவந்த கண்களையுடைய எருமைகள் மிகக்குறைகின்ற கழனிகளையுடைய மருத நிலத்தூரினையுடைய தலைவராகிய நுமக்கு; அருமறை விதியும் - உணர்தற்கரிய மெய்ந்நூல் விதியும்; உலகியல் வழக்கும் - உலத்தார் ஒழுகும் ஒழுக்கமும ; கருத்து உறைபொருளும்- கருத்தின்கண் உறைகின்ற நுண்பொருளும்; விதிப்பட நினைந்து - முறைப்பட ஆராய்ந்துணர்ந்து; வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி - வடமொழிப் புணர்ச்சியாக வருவனவற்றையும் அதற்குரிய முறைப்படி சேர்த்து; ஐந்திணை வழுவாது -குறிஞ்சி முதலிய ஐவகை ஒழுக்க முறைமையும் வழுவாமல்; அக்ப்பொருளி அமுதினை - அகப்பொருள் இலக்கணம் என்னும் அமிழ்தை யொத்த சுவையையுடை நூலை என்க.

     (வி-ம்.) பகடு - எருமை, தலைவற்கு - முன்னிலைப் புறமொழி. அருமறை- உணர்தற்கரிய நான்மறை. உலகியல் வழக்கு - சான்றோர் ஒழுகும் ஒழுக்கம். வடசொல் மயக்கம்- செந்தமிழின்கண் வந்து கலக்கும் வடமொழிக் கலப்பு, அவற்றைப் புணர்த்துதலாவது,

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
"எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" (தொல். சூ. 884)

எனவரும் இலக்கண முறைப்படி தமிழ் மொழியின்கண் அமைத்தல. ஐந்தினை- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் இன்ப வொழுக்கங்கள். அமுது: உவமவாகு பெயர். அகப்பொருள் அமுது என்றது இறையனாரகப் பொருளை என்க.

20 - 24: குறுமுனி................................. கூடல்.

     (இ-ள்) குறுமுனி தேரவும் - அகத்திய முனிவன் நன்கு தெளியவும்; முதல்பெறு புலவர்கள் ஏழ்எழு பெயரும் கோது அறப் பருகவும் - தலைமை பெற்ற சங்கப் புலவர்களாகிய நாற்பத்தொன்பதின்மரும் ஐயந்திரிபின்றி உட்கொள்ளவும்; புலன் நெறிவழக்கில் புணர் உலகவர்க்கும் - ஐந்து புலன்கள் வழியாக இன்பம் துய்க்கின்ற இல்வாழ்வார்க்கும்; முன்தவம் பெயருக்கும் முதல் தாபதர்க்கும் - அவ் வைம்புலன்களையும் அடக்கி இளமை தொடங்கித் தவத்தைப் பெருக்காநின்ற முதன்மையுடைய துறவிகளுககும்; நின்று அறிந்து உணர்த்தவும்-தாம்தாம் நிலைபெற்றுணர்ந்து மாணவர்க்கு அறிவுறுத்தவும்; தமிழ்ப் பெயர் நிறுத்தவும்-தமிழ் என்னும் மொழியின் புகழை உலகில் நிலைநிறுத்தவும்; எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன் - 'அன்பினைந்திணை' என அடியெடுத்து விரித்தருளிய தேவதேவனுரடைய; மெய்த தவக் கூடல்-மெய்யாய தவப்பயனைத் தருகின்ற மதுரை நகரிடத்தே என்க.

     (வி-ம்.) குறுமுனி - அகத்தியன், புலவர் ஏழ்எழு பெயரும் என்றது கடைச் சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மரையும். கோது - குற்றம். அவை ஐயமும் திரிபும் என்க. அமுதம் என்பதற்கேற்பப் பருகவும் என்றார். புலன் நெறி என்றது இல்லறத்தை. தாபதர் -துறவிகள். மாணவர்க்கு உணர்த்தவும் என்க. பெயர் - புகழ்.

24 - 30 விளைபொருள்.......................................இடனே

     (இ-ள்) விளைபொருள் மங்கையர் - பிறர் ஈட்டிய பொருளை விரும்புகின்ற பரத்தை மகளிர்; முகத்தினும் கண்ணினும்-தம் முகத்தாலும் கண்களாலும்; முண்டக முலையினும்-தாமரை யரும்பையொத்த முலைகளானும்; சொல்லினும் தொடக்கும் புல்லம் போல - சொற்களாலும் வயப்படுத்தும் பொய்யாய தழுவுதல் போல; எம்மிடத்து இலது - எம்பால் இல்லை; அங்ஙனம் இல்லையாகவும்; இவ்விடன் தம் உளம் தவறி போந்தது என்னை - எம்மில்லமாகிய இந்த இடத்தில் தங்கள் உள்ளம் தடுமாறி வந்ததற்குக் காரணம் யாதோ? அறிகின்றிலேம் என்க.

     (வி-ம்.) விளைபொருள் - பிறர் ஈட்டும் பொருள். பிறர் ஈட்டும் பொருளை விரும்பும் பரத்தையர் என்பாள் விளைபொருள் மங்கையர் என்றாள். எனவே அவர் செய்யும் செயல்களெல்லாம் நீயிர் ஈட்டும் பொருட் பொருட்டன்றி நும்பால் அன்பால் செய்வாரலர் என்றாளும் ஆயிற்று. முகம் முதலிய புறத்துறப்புக்களாலேயே அவர் உன்னை வயப்படுத்துகின்றனரேயன்றி அகத்துறுப்பாகிய அன்பாலன்று என்பாள், முகத்தினும் கண்ணினும் முலையினும் சொல்லினும் தொடக்கும் புல்லம் என்றாள். புல்லம்-புல்லல். ஆதலால் நீ இடந்தெரியாமல் ஈண்டு வந்தனைபோலும்; இது பரத்தை இல்லம் அன்று என்பாள் 'இவ்விடன் தம்முளம் தவறிப்போந்தது என்னை' என்றாள் தவறால்-தடுமாறுதல். போந்தது - வந்தது.

     இதனை, ஊரர்’கு விதியும் வழ’கும் பொருளும் நினைந்து புணர்த்தி, அகப்பொருளமுதைத் தேறவும் பருகவும் உலகவர்’குந் தாபதர்’கும் உணர்த்தவும் நிறுத்தவும் பரப்பிய நாயகன் கூடலில், பொருண் மங்கையர் புல்லம் போல எம்மிடத்திலது, அற்றாகவும் இவ்விடத்தே யுள்ளந்தவறித் தாம்போந்த தென்னையென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.