பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 65

நேரிசையாசிரியப்பா

 
   
5
  இருநிலந் தாங்கிய வலிகெழு நோன்மைப்
பொன்முடிச் சயிலக் கணவற் புணர்ந்து
திருவெனுங் குழவியு மழுதெனும் பிள்ளையு
மதியெனு மகவு மலருல கறியக்
கண்ணொடு முத்தங் கலுழ்ந்துடல் கலங்கி
10
  வாய்விட் டலறி வயிறுெநோந் தீன்ற
மனனெழு வருத்தம துடையை யாசுலிற்
ரெுமய லெய்தா நிறையின ளாக
வென்னொரு வெய்தா நிறையின ளாக
வென்னொரு மயிலையு நின்மகட் கொண்டு
தோன்றிநின் றழியாத் துகளறு பெருந்தவ
15
  நிதியெனக் கட்டிய குறுமுனிக் கருளுடன்
றரளமுஞ் சந்து மெரிகெழு மணியு
முடங்குளை யகழ்ந்த கொடுங்கரிக் கோடு
மகிலுங் கனகமு மருவிகொண் டிறங்கிப்
பொருநையங் கன்னிக் கணியணி பூட்டுஞ்
20
  செம்புடற் பொதிந்த தெய்வப் பொதியமு
முவட்டா தமையா வுணர்வெனும் பசியெடுத்
துள்ளமுஞ் செவியு முருகிநின் றுண்ணும்
பெருந்தமி ழமுதம் பிரியாது கொடுத்த
தோடணி கடுக்கைக் கூடலெம் பெருமா
25
  னெவ்வுயி ரிருந்து மவ்வுயி ரதற்குத்
தோன்றா தடங்கிய தொன்மைத் தென்ன
வார்த்தெழு பெருங்குர லமைந்துநின் றோடுங்கிநின்
பெருந்தீக் குணணு மொழிந்துளங் குளிரு
மிப்பெரு நன்றி யின்றெற் குதவுதி
  யெனிற்பதம் பணிகுவ வன்றே நன்கமர்
பவள வாயுங் கிளர்பச் சுடம்பு
நெடுங்கயல் விழியு நிறைமலை முலையு
மாசறப் படைத்து மணியுட னிறத்த
பெருமுகில் வயிறள வூட்டித்
திருவுல களிக்குங் கடன்மட மகளே,

(உரை)
கைகோள் : களவு, தோழிகூற்று

துறை : கடலிடைவைத்துத் துயரறிவித்தல்

     (இ-ம்.) இதற்கு “நாற்றமுந் தோற்றமும்” (தொல். கள. 23) எனவரும் நூற்பாவின்கண் ‘புணர்ச்சி வேண்டினும்’ எனவரும் விதிகொள்க,

26-31: நன்கமர் .................................. மகளே

     (இ-ள்) நன்கு அமர் பவளவாயும்-கண்டோர் மிகவும் விரும்புதற்குக் காரணமான பவளமாகிய வாயும் ; கிளர் பச்சுடம்பும்-ஒளிவீசும் பச்சையுடம்பும் ; நெடுங்கயல் விழியும் - நெடிய கயல்மீனாகிய கண்ணும் ; நிறைமலை முலையும் - அழகு நிறைந்த மலையாகிய முலைகளும், மாசுஅறப் படைத்து - குற்றமறப் பெற்று ; மணியுடன் - முத்து முதலிய மணிகளுடனே ; நிறத்த பெருமுகில் வயிறு அளவு ஊட்டி - நன்றித்தையுடைய பெரிய முகில்களை வயிறு கொள்ளுமளவு நீராகிய அமுதத்தை ஊட்டி ; திரு உலகு அளிக்கும் கடல் மடமகளே - செல்வத்தை உலகத்திற்கு வழங்கா நின்ற கடலாகிய மடப்பமுடைய பெண்ணே கேள் ! என்க,

     (வி-ம்.) அமர் - விரும்புகின்ற பச்சுடம்பு - பச்சை நிறமான உடம்பு. அழகு நிறைந்த மலை என்க, மணி - முத்து முதலியன - வயிறு அளவு - வயிறு கொள்ளுமளவு. அளித்தல் - வழங்குதல். மடமகள் - இளமகளுமாம்.

1-7 : இருநிலம் ................................... ஆகலின்

     (இ-ள்) இருநிலம் தாங்கிய - பெரிய நிலவுலகத்தைத் தாங்குதற்குக் காரணமான ; வலிகெழு நோன்மை பொன்முடிச் சயிலக் கணவன் புணர்ந்து- வலிமை பொருந்திய பொறையையுடைய பொன்முடியையுடைய மந்தரமலையாகிய கணவனைக்கூடி ; திரு எனும் குழவியும் அமுது எனும் பிள்ளையும் மதி எனும் மகவும் - திருமகளாகிய பெண்ணையும் அமுதமாகிய மகவினையும் திங்களாகிய மகவினையும் ; மலர்உலகு அறிய - பரந்த உலகிலுள்ளோர் அறியும்படி ; கண்ணொடு முத்தங் கலுழ்ந்து - கண்ணில் முத்துக்களாகிய கண்ணீரைச் சொரிந்து ; உடல் கலங்கி வாய்விட்டு அலறி - உடம்பு நொந்து வாய்திறந்தழுது ; வயிறு நொந்து ஈன்ற - கருவுயிர்த்தல் துன்பம் எய்திப் பெற்றதனால் ; மனம்எழு வருத்தம் உடைய ஆகலின்- மனத்தின்கண் எழாநின்ற துன்பத்தை உடையை ஆதலால் என்க.

     (வி-ம்.) சயிலக் கணவனைப் புணர்ந்து திருமுதலிய மக்களைக் கண்கலுழ்ந்து கலங்கி அலறி நொந்து ஈன்றதனால் நீ மனவருத்தம் உடையையாக இருக்கின்றனை ஆகையால் என்க. இருநிலம் என்புழி, இருமை - பெருமை. வலிகெழு சயிலம் நோன்மைப் பொன்முடி என வலிமையைச் சயிலத்திற்கும் நோன்மையை முடிக்கும் ஏற்றுக. சயிலம் - மலை. அஃதாவது மந்தரமலை. திரு - திருமகள், குழவி, பிள்ளை மகவு என்பன ஒருவகையணி. உலகு : ஆகுபெயர். கண்ணொடு என்புழி மூன்றனுருபு ஏழனுருபின்கண் மயங்கிற்று. கண் முத்தம் என்பனவற்றைச் சிலேடை வகையால் பொருள் காண்க.

8 - 9 : பெருமயல் ........................ கொண்டு

     (இ-ள்) பெருமயல் எய்தா நிறையினள் ஆக - மிக்க மயக்கத்தைப் பொருந்தாத மாட்சிமையுடையளர யிருக்கும்படி ; என் ஒரு மயிலையும் நின்உளங் கொண்டு - என் தோழயாகிய மயில் போன்ற இப்பெண்ணையும் நின் மகளாகக் கருதி என்க.

     (வி-ம்.) கடலே நீ வருந்தி மகப்பல பெற்றுள்ளாய் ஆதலின் மகவருமை நன்குணர்வை, எம்பெருமாட்டியையும் நின்மகளாகக் கருதி(க் கொள்க) என்றவாறு. நிறையினள் - துன்புறாது நெஞ்சை நிறுத்தும் பண்புடையளாக எனினுமாம், மயில் : உவமவாகு பெயர்.

10 - 16: தோன்றி...............................பொதியமும்

     (இ-ள்) தோன்றி நின்று அழியா துகள்அரு பெருந்தவம் - பிறந்து இருந்து இறவாமைக்குக் காரணமான குற்றமற்ற பெரிய தவத்தையே ; நிதி எனக் கட்டிய குறுமுனிக்கு - தான் பெருதற்குரிய செல்வமாகக் கருதி வளர்த்துள்ள அகத்திய முனிவனுக்கு ; அருளுடன் தாளமும் சந்தும் எரிகெழு மணியும் - பேரன்புடன் முத்துக்களையும் சந்தனத்தையும் ஒளிபொருந்திய மணிகளையும் ; முடங்குளை அகழ்ந்த கொடுங்கரிக் கோடும் - வளைந்த பிடரிமயிரையுடைய சிங்கத்தினால் அகழப்பட்ட வளைந்த யானைக் கொம்புகளையும் ; அகிலும் கனகமும் - அகிலையும் பொன்னையும் ; அருவிக்கொண்டு - தனது அருவிகளாகிய கையில் ஏந்திக்கொண்டு ; இறங்கி பொருனை அம் கன்னிக்கு - கீழிறங்கி வந்து பொருனையாறு என்னும் அழகிய பெண்ணுக்கு ; அணிஅணி பூட்டும் - அழகிய அணிகலன்களாக பூட்டா நின்ற ; செம்பு உடல் பொதிந்த தெய்வப் பொதியமும் - செம்பென்னும் உலோகம் விரவிய உடம்பால் மூடப்பெற்ற தெய்வத் தன்மையுள்ள பொதியமலையையும் என்க,

     (வி-ம்.) அழியாமைக்குக் காரணமான தவம், துகளறு தவம் எனத் தனித்தனி கூட்டுக, நிதி - ஈட்டிவைக்கும் செல்வம் ; குறுமுனி - அகத்திய முனி, தரளம் - முத்து, சந்து - சந்தனம், முடங்குளை - அன்மொழித் தொகை; சிங்கம், கரிக்கோடு - யானைக்கொம்பு, அருவியாகிய கைகளில் ஏந்திக்கொண்டு என்க. பொருளை - தாமிரபருணி, கடலாகிய கணவனை இன்னும் சென்றடையாமையால் பொருனையைக் கன்னி என்றால், கன்னிக்கு அணிகலம் பூட்டுதல் அறம், அணியணி - அழகிய அணிகலன். செம்பு - தாமிரம், பொதியமலையில் தாமிரம் என்னும் உலோகம் கலந்திருத்தலின் செம்புடல் பொதிந்த பொதியம் எனப்பட்டது. அம்மலையினின்றும் வருதலால் பொருனையைத் தாமிரபருணி என வழங்குகின்றனர் என்பாருமுளர்.

17-20: உவட்டாது ............................ பெருமான்

     (இ-ள்) உவட்டாது அமையா உணர்வு எனும் பசி எடுத்து - உண்டு தெவிட்டாத வழி அமையாத அறிவு என்கின்ற பசி தோன்றி; உள்ளமும் செவியும் உருகி நின்று உண்ணும் பெருந்தமிழ் அமுதும் - நெஞ்சமும் செவியும் இன்பத்தால் உருகி நிலைத்துப் பருகுதற்குக் காரணமான பெரிய தமிழாகிய அமிழ்தத்தையும்; பிரியாது கொடுத்த - பிரிவற்றிருக்குமாறு வழங்கியருளிய; தோடு அணி கடுக்கைக் கூடல் எம்பெருமான் - இதழ் நெருங்கிய கொன்றை மலரை அணிந்த மதுரையில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் என்க.

     (வி-ம்.) அமையா உணர்வு என்னும் பசி தோன்றி உண்ணும் தமிழ் அமுதம் என்க. குறுமுனிக்குப் பொதிய மலையையும் தமிழமுதும் கொடுத்த பெருமாள் என்க. உள்ளம் உருகிச் செவியாகிய வாயால் உண்ணும் அமிழ்து எனினுமாம். தோட்டையும் அணி கடுக்கையும் அணிந்த பெருமான் எனினுமாம். தோடு - இதழ்; குழையுமாம். கடுக்கை - கொன்றை மலர்.

21-26: எவ்வுயிர்......................................அன்றே

     (இ-ள்) எவ்வுயிர் இருந்தும், எவ்வகைப்பட்ட உயிர்க்களிடத்தும் கலந்திருந்தும்; அவ்வுயிரதற்கு தோன்றாது அடங்கிய-அவ்வுயிர்க்குத் தான் வெளிப்படாது அடங்கிய; தொன்மைத்து என்ன - அனாதித் தன்மைபோல்; ஆர்த்து எழு - ஆரவாரித்து மேமெழுகின்ற; பெருங்குரல் அமைந்து நின்று - பேரோசை அடங்கி நின்று; ஒடுங்கி - தணிந்து; நின்பெருதீக்குணனும் ஒழிந்து - உனது மிக்க கொடுங்குணமும் நீங்கி; உளங்குளிரும் இப்பெரு நன்றி - என் நெஞ்சம் குளிரத்தக்க இப்பேருதவியை; இன்று எனக்கு உதவுதி எனின் - இற்றைநாள் எனக்குச் செவ்வாய் எனின்; நின்பதம் பணிகுவல்யான் எக்காலமும் உன் அடிகளை வணங்குவேன்காண் என்க.

     (வி-ம்.) இறைவன் எல்லா வுயிர்களிடத்தும் இருந்தேயும் தோன்றாது அடங்கியிருத்தல் போல நீயும் நின் ஆரவாரமடங்கி இருத்தல் வேண்டும் என வேண்டிக் கொண்டவாறு. இன்று உதவுதி எனின் யான் என்றும் நின்பதம் பணிகுவல் என விரித்தோதுக. கொன்மைத்து- அனாதித்தன்மை, கொடுங்குணம் - பிறரை வருத்துதல். எற்கு - எனக்கு, அன்று, ஏ: அசை

     இதனை, கடன் மடமகளே! புணர்ந்து, உலகறியக் கலுழ்ந்து, கலங்கி, அலறி, நொந்து, குழவியும் பிள்ளையும் மகவுமீன்ற வருத்தமுடைமையாதலால் நிறையினளாக என்மயிலையு நின் மகளாகக் கொண்டு, கூடற்பெருமானது தொன்மைத்தென்ன, குரலமைந்தொடுங்கி, தீக்குண மொழிந்து உள்ளங் குளிரும் பெருநன்றி யுதவுதியெனின், நின்பதம் பணிகுவலென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.