|
|
செய்யுள்
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நிலையுடைப்
பெருந்திரு நேர்படு காலைக்
காலாற் றடுத்துக் கனன்றெதிர் கறுத்தும்
நனிநிறை செல்வ நாடுநன் பொருளு
மெதிர்பெறிற் கண்சிவந் தெடுத்தவை களைந்துந்
தாமரை நிதியும் வால்வளைத் தனமு |
10
|
|
மில்லம்
புகுதரி லிருங்கத வடைத்து
மரியய னமரர் மலைவடம் பூட்டிப்
பெருங்கடல் வயிறு கிடங்கெழக் கடைந்த
வமுதமுட் கையி லுதவுழி யூற்றியு
மெய்யுல கிரண்டினுட் செய்குந ருளரே |
15
|
|
லெழுகதிர்
விரிக்கு மணிகெழு திருந்திழை
நிற்பிரி வுள்ளு மனனுள னாகுவன்
முழுதுற நிறைந்த பொருண்மன நிறுத்திமுன்
வேடந் துறவா விதியுடைச் சாக்கிய
னருட்கரை காணா வன்பெனும் பெருங்கடல் |
20
|
|
பலநாட்
பெரகி யொருநா ளுடைந்து
கரைநிலை யின்றிக் கையகன் றிடலு
மெடுத்தடை கன்மலர் தொடுத்தவை சாத்திய
பேரொளி யிணையாக் கூடன் மாமணி
குலமலைக் கன்னியென் றருள் குடி யிருக்கும் |
25
|
|
விதிநிறை
தவறா வொருபங் குடைமையும்
பறவைசெல் லாது நெடுமுக டுருவிய
சேகரத் திறங்குந் திருநதித் துறையு
நெடும்பக லூழி நினைவுட னீந்தினு
மருங்கரை யிறந்த வாகமக் கடலு |
30
|
|
மிளங்கோ
வினர்க ளிரண்டறி பெயரு
மன்னமும் பன்றியு மொல்லையி னெடுத்துப்
பறந்து மகிழ்ந்து்ம் படியிது வென்னா |
|
|
வறிவகன்
றுயர்ந்த கழன்மணி முடியு
முடைமையன் பொற்கழல் பேணி
யடையலர் போல வருண்மனந் திரிந்தே. |
(உரை)
கைகோள் : களவு தலைவன் கூற்று
துறை : பிரிவுணர்த்தல்
(இ-ம்.) இதற்கு,
முன்னிலை யாக்கல் (தொல், களவி. சு0) எனவரும் நூற்பாவின்கண் தெளிவு அகப்படுத்தல்
எனவரும் விதி கொள்க.
11
: எழுகதிர்...................திருந்திழை
(இ-ள்)
எழுகதிர் விரிக்கும் - குணகடலில் எழாநின்ற இளஞாயிறுபோல ஒளியைப் பரப்புகின்ற ;
மணிகெழு திருந்து இழை - மணிகள் பொருந்திய திருத்தஞ் செய்யப்பட்ட அணிகலன்களையுடைய
நங்கையே என்க.
1-6
: நிலை............................அடைத்தும்
(இ-ள்)
நிலையுடை பெருந்திரு நேர்படு காலை - நிலைநிற்றலையுடைய பெருஞ் செல்வமானது தானே வந்தெய்திய
காலத்தே ; காலால் தடுத்து - அதனைக் காலால் தள்ளி ; எதிர் கனன்று கறுத்தும் - அதற்கெதிராக
நெஞ்சழன்று வெகுண்டும் ; நனிநிறை செல்வ நாடும் . ஒழியாது நிரம்பிய வளப்பத்தைத்
தருகின்ற நாடும் ; நன்பொருளும் எதிர்பெறின் - நல்ல பொருள்களும் தாமே வந்து எதிர்ப்பட்ட
விடத்தே ; கண்சிவந்து எடுத்தும் அவை களைந்தும் - கண் சிவக்கும்படி சினந்தும் அவையிற்றை
எடுத்தெறிந்தும் ; தாமரை நிதியும் வால்வளை தளமும்பதுமநிதியும் வெள்ளிய சங்கநிதியும்
; இல்லம் புகுதலில் - தாமே வந்து வீட்டில் புகுமிடத்தே ; இருங்கதவு அடைத்தும் - அவை
புகுதாதபடி பெரிய கதவுகளை அடைத்துத் தடுத்து்ம் என்க,
(வி-ம்.)
நிலையாமையே இயல்பாயுள்ள செல்வத்தினும் மேலாய செல்வம் என்பான் நிலையுடைப் பெருந்திரு
என்றான். அதற்கு நேர்படுதல் அரிது என்பான் - நேர்படு காலை என்றான், நனிநிறைந்த
செல்வத்தையுடைய நாடு என்க. அஃதாவது நாடாவளத்தையுடைய நாடு, நன்பொருள் என்றது படை,
குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பன. தாமரை நிதி - பதமநிதி. வளைத்தனம் - சங்கநிதி
7-10 : அரி....................................உளரேல்
(இ-ள்)
அரி அயன் அமரர் - திருமாலும் பிரமனும் தேவர்களும், மலைவடம் பூட்டி - மந்தரமலையாகிய
மத்தின்கண் வாசுகி என்னும் வடத்தைப் பூட்டி ; பெருங்கடல் வயிறு கிடங்கு எழ - பெரிய
கடலினது வயிறானது பள்ளமாகும்படி ; கடைந்த அமுதம் உள்கையில் உதவுழி ஊற்றியும் - கடைந்ததனாற்றிரணட்
அமிழ்தத்தை உள்ளங்கையில் கிடைக்கும் பொழுது அதனைத் தரையிற் கவிழ்த்தும் ; மெய்உலகு
இரண்டினுள் - மெய்மையுள்ள விண்ணுமாகிய இரண்டுலகத்தினும் ; செய்குநர் உளரேல் - செய்தார்
உண்டாயிருந்தால் என்க.
(வி-ம்.)
திருமால் முதலிய தேவர்கள் திருப்பாற் கடலில்கண் மந்தரமலையை மத்தாக நட்டு வாசுகியைக்
கடை கயிறாகக்கொண்டு அமுதம் கடைந்தனர் என்பத புராண வரலாறு. வயிறு . ஈண்டு உன்னிடம்,
கிடங்கு - பள்ளம், உள்கை - உள்ளங்கை, பெருந்திரு முதலியன தாமே வந்தெய்தும் பொழுது
அவற்றை வேண்டாமென விடுப்போர் மண்ணிலும் விண்ணிலும் இல்லை என்றவாறு,
13-17:
முழுதுற............................அகன்றிடலும்
(இ-ள்)
முழுதுஉற நிறைந்த பொருள் - உள்ளும் புறமுமாக எங்கும் நிறைந்துள்ள சிவமென்னும் பொருளை
; மனம் நிறுத்திமுன் வேடம் துறவா - தன் நெஞ்சின்கண்ணே நிலைபெற வைத்தும் தாம்
முன்பு தழுவிய சமண சமயத்திற்குரிய வேடத்தைக் கைவிடாத ; விதிஉடை சாக்கியன் - முறைமையையுடைய
சாக்கிய நாயனார் ; அருள்கரை காணா - திருவருள் என்னும் கரையைக் கண்டு ; அன்பு என்னும்
பெருங்கடல் - அன்பாகிய பெரிய கடலானது ; பலநாள் பெருகி - நெடுங்காலமாகப் பெருக்கெடுத்து
; ஒருநாள் உடைபட்டுக் கரைநிலை பெறாமல் கைகடந்து செயலற்றுப் போதலும் என்க.
(வி-ம்.)
முழுதுற நிறைந்த பொருள் என்றது அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த இறைவனை முன்வேடம்
- சாக்கிய நாயனார் முன்னர்த் தழுவியிருந்த சமணத் துறவிவேடம், அஃதாவது தோமரு கடிஞையும்
சுவன்மேல் அறுவையும் கைப்பீலியும் பாயுடையும் உறியும் பிறவும் உடைய வேடம் என்க. காணா
. கண்டு. கையகன்றிடல் - எல்லை கடத்தல்.
18-25:
எடுத்தடை......................................கடலும்
(இ-ள்)
எடுத்து அடைகல் மலர் அவை தொடுத்துச் சாத்திய - பொறுக்கிச் சேர்த்து வைத்த கல்லாகிய
மலர்களைத் தொடர்ச்சியாக எறிந்து வழிபாடு செய்த ; இணையாப் பேரொளி கூடல்மாமணி
- ஒப்பில்லாத பேரொளியாகிய மதுரையிலுள்ள கடவுள் மணி ; குலம்மலைக் கன்னி என்று
அருள் குடியிருக்கும் - மேன்மையாகிய மலைமகள் என்று பெயர் கூறப்பட்டுத் திருவருள் பரியாதிருக்கின்ற
; விதிநிறை தவறா ஒருபங்கு உடைமையும் - வேதத்தால் விதிக்கப்பட்ட பெருமை தவறாத
ஒரு பாகமுடைய தன்மையும் பறவை செல்லாது நெடுமுகனாகிய அன்னப்பறவை செல்லாமல் நெடிய
வான முகட்டைக் கடந்து அப்பாற் சென்ற திருமுடியினின்னும் வீழ்கின்ற அழகிய கங்கையாற்றின்
துறையும் ; நெடும்பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் அருங்கரை இறந்த ஆகமக் கடலும் -
பயில்வோர் நெடுங்காலமாகிய பல்லூழி காலம் நினைப்புடனே நீந்திச் சென்றாலும் அருமையாகிய
கரைகாணக் கூடாத சிவாகமம் என்னும் கடலும் என்க,
(வி-ம்.)
அடைகல் - சேர்த்து வைத்த கல், சாக்கிய நாயனரால் கல்மலரால் வழிபாடு செய்யப்பட்ட
கூடல் மாமணி என்க, மணி - மாணிக்கம். கடவுளருள் வைத்து மாணிக்கம் போன்ற கடவுள்
என்பது கருத்து. மலைக்கன்னி - பார்ப்பதி. நின்ற - பெருமை. பறவை - இறைவனுடைய முடியைக்
காணச்சென்ற நான்முகனாகிய அன்னப் பறவை எனக். சேகரம் - முடி. திருநதி என்றது கங்கைப்
பேரியாற்றினை. ஆகமம் - சிவாகமம்.
26-31:
இளங்கோ......................................திரிந்தே
(இ-ள்)
இளம் கோவினர்கள் இரண்டு அறிபெயரும் - இளங் கடவுளராகிய படைத்தல் அழித்தல் என்னும்
இரு தொழிலையும் அறிந்த நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் ; அன்னமும் பன்றியும்
ஒல்லையில் எடுத்து - அன்னமாகவும் பன்றியாகவும் விரைந்து உருவெடுத்துக்கொண்டு ; பறந்தும்
அகழ்ந்தும் படி இது என்னா - விண்ணில் பறந்தும் மண்ணைத் தோண்டியும் அளவு இஃதாம்
என்று ; அறிவு அகன்று உயர்ந்த கழல்மணி முடியும் - கூறவியலாதபடி அவர்களுடைய அறிவினையும்
கடந்து அப்பாற்பட்டுள்ள வெற்றிக் கழலணிந்த திருவடிகளையும் அழகிய முடியினையும் ; உடைமையன்
பொற்கழல் பேணி அருள் திரிந்து அடையலர் மனம்போல - உடையவனது பொன்னடியை வழிபட்டு
அவன் அருளை அடையாமல் மாறுபட்டு அவ்வடியை அடையாத மடவோர் நெஞ்சு போல என்க.
(வி-ம்.)
முழு முதற்கடவுளின் ஆனைவழி நின்று தொழில் செய்தலின் நான்முகனும் திருமாலும் இளங்கோவினர்
எனப்பட்டனர். இரண்டு - படைப்பும் அழிப்புமாகிய இரண்டு தொழில்கள். அன்னமும் பன்றியுமாக
உருவெடுத்து என்க. படி - ஒப்புமாம். கழலும் மணிமுடியும் என்க.
12: நின்..........................ஆகுவன்
(இ-ள்)
நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன் - நின்னைப் பிரிதலுக்கு நினையா நின்ற நெஞ்சமுடையேன்
ஆக என்க.
(வி-ம்.)
கழல்பேணி அடையலர் மனம்போல மனன் உளனாகுவன் என இயைத்துக்கொள்க.
இதனை,
திருந்திழையே ! பெருந்திருவைக் கறுத்தும், நாடும் பொருளும் பெறின், கண்சிவந்து களைந்தும்,
நிதியுந்தனமும் புகின் கதவடைத்தும், அமுத முதவுழி யூற்றியும், செய்தாருளரேல், கூடன்
மாமணியாகிய வுடைமையன் கழல்பேணி, அடையலரது, அருள் திரிந்த மனம்போல நிற்பிரிவுள்ளு
மனனுளனாவேனெ வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|