பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 67

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிரைவளை யீட்டமுந் தரளக் குப்பையு
மன்னக் குழுவுங் குருகணி யினமுங்
கருங்கோட்டுப் புன்னை யரும்புதிர் கிடையு
முடவெண் டாழை யூழ்த்தமுண் மலரு
மலவன் கவைக்கா லன்னவெள் ளலகும்
10
  வாலுகம் பரப்பி வலைவலி தொற்றினர்க்
கீதென் வறியா தொன்றிவேள் ளிடையா
மாதுடைக் கழிக்கரைச் சேரியோர் பாங்கர்ப்
புள்ளொடு பிணங்கும் புட்கவ ராது
வெள்ளிற வுணங்கல் காவ லாக
15
  வுலகுயிர் கவருங் கொடுநிலைக் கூற்ற
மக்ளெனத் தரித்த நிலையறி குவனேல்
விண்குறித் தெழுந்து மேலவர்ப் புடைத்து
நான்முகற் றாங்குந் தேனுடைத் தாமரை
யிதழுங் கொட்டையுஞ் சிதறக் குதர்ந்து
20
  வானவ ரிறைவன் கடவுகார் பிடித்துப்
பஞ்செழப் பிழிந்து தண்புனல் பருகி
மைந்தெனப் பெயரிய நெடுமர மொடித்துக்
கண்ணுளத் தளவா வெள்ளுண வுண்டு
பொரியெனத் தாரகைக் கண்னுடல் குத்தி
25
  யடுந்திற வினைய கொடுந்தொழில் பெருக்கிய
மாயா வரத்த பெருங்குரு கடித்து
வெண்சிறை முடித்த செஞ்சமைடப் பெருமான்
கூடற் கிறையோன் குறியுருக் கிடந்த
விருபத முள்வைத் தவர்போன்
  மருவும லொருவு மதியா குவனே

(உரை)
கைகோள் : கற்பு. தலைவன் கூற்று

துறை : ஊடனீட வாடியுரைத்தல்

     (இ-ம்.) இதற்கு, “ கரணத்தின் அமைந்து முடிந்த காலை ” (தொல்.கற்பி.இ) எனவரும் நூற்பாவின்கண் பயங்கெழு துணையணை புல்லிய புல்லா துயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கென முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென சீறடி புல்லிய விரவினும் என்னும் விதிகொள்க.

1 - 8 : நிரைவளை ..................................... பாங்கர்

     (இ-ள்) நிரைவளை யீட்டமும் - வரிசையான சங்குக் கூட்டமும் ; தரளக்குப்பையும்-முத்துக்குவியலும் ; அன்னக் குழுவும் - அன்னக் கூட்டங்களும் ; அணி குருகு இனமும் - அழகிய கொக்குக் கூட்டங்களும் ; கரும்கோட்டுப் புன்னை அரும்பு உதிர் கிடையும் - கரிய கிளைகளையுடைய புன்னையினது மலரினின்றும் பூந்துகள் உதிர்ந்து கிடக்கும் இடங்களும் ; முடவெண்தாழை ஊழ்த்த முள்மலரும் - முடம்பட்ட வெண்டாழையானது அரும்பிய முட்கள் பொருந்திய மலர்களும் ; அலவன் கவைகால் அன்ன வெள் அலகும் - நண்டினது பிளவுபட்ட கால்போன்ற வெள்ளைநிறமுடைய பலகறையும் ; வாலுகம் பரப்பி வலைவலிது ஒற்றினர்க்கு - மணன்மேட்டில் விரித்து வலையை வலிதாக ஈர்த்துக்கட்டின நெய்தல்நில மாக்களுக்கு ; ஈதுஎன அறியாது - இன்னதென்று அறியப்படாமல் ; ஒன்றி வெள்ளிடையாம் - வரம்பின்றி ஒன்றுபட்டு வெளியிடமாகிய ; மாதுஉடை கழிக்கரை - அழகுடைய உப்பங்கழியினது கரையின்கண்ணுள்ள ; சேரி ஓர் பாங்கர் - பாதவர் சேரியின் ஒரு பக்கத்திலே என்க.

     (வி-ம்.) வளை - சங்கு. குப்பை - குவியல், குருகு - கொக்கு ; நாரையுமாம், கோடு - கிளை, கிடை - இடம் தாழை முடம்பட்டிருத்தல் இயல்பு. அலவன் - நண்டு, கவைக்கால் - பிளவுபட்ட கால், அலகு - பலகறை ; அஃதாவது, கவடி. வாலுகம் - மணல்மேடு, ஒற்றினர்க்கு ; வினையாலணையும் பெயர், ஒன்றுதல் - வரம்பின்றி ஒன்றுபட்டிருத்தல், மாது - அழகு, கழி - நெய்தல்நில நீரோடை சேரி - பரதவர்சேரி. வளையீட்டம் முதலியன ஒன்றிக் கழிக்கரையிலுள்ள சேரி என இயைக்க.

9-12: புன்னொடு ...................................... அறிகுவனேல்

     (இ-ள்) புள்ளொடு பிணங்கும் புள் கவராது - சேவற் பறவைகளோட ஊடுகின்ற பெடைப் பறவைகள் கவர்ந்து செல்லாதபடி ; வெள்நிற உணங்கல் காவலாக - வெண்ணிறமுடைய இறாமீனினது உணங்கலுக்குக் காவலாக இருப்பவள் போல ; உலகு உயிர் கவரும் கொடுநிலைக்கூற்றம் - உலகத்திலுள்ள உயிர்களைக் கவர்ந்து செல்கின்ற கொடுங்குணமுடைய கூற்றுவனே ; மகள்எனத் தரித்த நிலை அறிகுவனேல் - பெண்ணென்று கண்டோர் கருதும்படி வேடம் பூண்டு நின்ற நிலைமையை யான் முன்பே அறிந்திருப்பேனாயின் என்க,

     (வி-ம்.) புள்ளொடு பிணங்கும் என்றமையால் முன்னின்ற புள் சேவற்புள்ளென்றும் பின்னின்ற புள் பெடைப்புள்ளென்றும் கொள்க. சேவலோடு ஊடினமையால் பெடைப்புட்கள் தாமே இரை கவர்தல் வேண்டின என்க. இற - இறாமீன், உணங்கல் - வற்றல், கூற்றம் - மறலி.

13-24: விண்.....................................இறையோன்

     (இ-ள்) விண்குறித்து எழுந்து - விண்ணுலகத்தைக் குறித்து மேலெழுந்து ; மேலவர்ப் புடைத்து - ஆண்டு வாழும் தேவர்களைத் தாக்கி ; நான்முகன் தாங்கும் தேன்உடை தாமரை நான்கு முகங்களையுடைய பிரமனைத் தாங்காநின்ற தேனையுடைய தெய்வத்தாமரையினது ; இதழும் கொட்டையும் சிதறக்குதர்ந்து - இதழ்களும் பொருட்டும் சிதறிப்போகும்படி அழித்து ; வானவர் இறைவன் கடவுகார் பிடித்து - தேவர்கள் அரசனாகிய இந்திரன் நடத்துகின்ற முகில்களைப் பிடித்து ; பஞ்சு எழப் பிழிந்து தண்புனல் பருகி - பஞ்செழும்படி பிழிந்து அவற்றின் கண்ணுள்ள குளிர்ந்த நீரைப் பருகி ; ஐந்துஎனப் பெயரிய நெடுமரம் ஒடித்து - ஐந்தரு என்று பெயருள்ள நெடிய கற்பக மரங்களை முறித்து ; கண் உளத்து அளவா - கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பொருந்தாத ; எள் உணவு உண்டு - இகழப்படும் உணவை உண்டு ; தாரகைக் கணன் பொரிஎன உடல்குத்தி - விண்மீன் கூட்டங்கள் நெற்பொரிபோலச் சிதறும்படி அவற்றின் உடலிலே குத்தி ; அடும்திறல் இனைய கொடுந்தொழில் பெருக்கிய - கொல்லும் ஆற்றலையுடைய இவைபோன்ற கொடுந்தொழில்களைப் பெருகச்செய்த ; மாயா வரத்த பெருங்குருகு அடித்து- அழியாத வரத்தினையுடைய பெரிய குருகாகிய அசுரனைக் கொன்று ; வெள்சிறை முடித்த - அக்குருகினது வெள்ளிய சிறகினைச் சூடிய ; செஞ்சடைப் பெருமான் கூடற்கு இறையோன் - சிவந்த சடைசேர் கடவுளாகிய மதுரைப் பெருமானது என்க.

     (வி-ம்.) தேவர்களைத் தாக்கித் தாமரையை அழித்து மேகத்தைப் பிழிந்து மரம் ஒடித்து எள்ளுணவு உண்டு விண்மீன்களைக் குத்தி இங்ஙனம் அழிக்கும் திறலாகிய கொடுந்தொழிலையுடையவனும் கொக்குவடிவமாகியவனும் ஆகிய அசுரன் என்க. மேலவர் - தேவர், கொட்டை - பொருட்டு, குதர்தல் - அழித்தல், வானவர் இறைவன் - தேவர்க்கு அரசன் ஐந்தாகிய கற்பகத்தருக்களுக்கு எண்ணால் வரு பெயர். ஆதலின் ஐந்தெனப் பெயரிய என்றார். கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பொரந்தாத உணவு, எள்ளுணவு, எனத் தனித்தனி கூட்டுக, எள்ளுணவு- சான்றோரால் இகழப்படும் உணவு. அஃதாவது ஊனுணவு. தாரகை - விண் மீன், அக்கொக்கினது வெள்சிறை என்க. குருகு - கொக்கு, கொக்காகி உலகினை அழித்துவந்த அசுரன் ஒருவனைக்கொன்று இறைவன் அவ்வசுரக் கொக்கினது இறகினைச் சடையில் சூடினான் என்பது வரலாறு.

24-26: குறி...................................மதியாகுவனே

     (இ-ள்) குறி உரு கடந்த - அடையாளமும் உருவமும் இல்லாத ; இருபதம் உள்வைத்தவர்போல் - இரண்டு திருவடிகளையும் நெஞ்சத்தின்கண் வைத்த அடியார்போல ; மருவுதல் ஒருவும் மதி ஆகுவன் - இக்கூற்றுவனைச் சேர்தலினின்றும் நீங்காநின்ற நல்லறிவுடையேன் ஆகுவேன்மன் என்க.

     (வி-ம்.) குறி - பெயர், உரு - வடிவம், உள் - நெஞ்சம், கூடற்பெருமானுடைய அடியை நெஞ்சில் வைத்தோர் அவரொடு இரண்டற மருவுதல்போல மருவுதலை நீங்கும் அறிவுடையேன் ஆவேன் என்பது கருத்து. எனவே என் உயிர் கவர்தற்பொருட்டுப் பெண்வேடங் கொண்டு கூற்றுவன் வந்துள்ளான், யான் இவ்வுண்மை அறியாமல் மயங்கிப் பெண்ணென்றே கருதிக்கூடி அறிவுகெட்டேன் என்று இரங்கினானாம். இது கற்புக்காலத்தில் தன் பரத்தமை காரணமாக ஊடிய தலைவியை ஊடல்தீர்க்கும் தலைவன் களவுக்காலத்து நிகழ்ச்சி ஒன்றனை நினைந்து கூறியவாறு என்க. இக்கருத்தினை

“பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
 பெண்டகையாற் பேரமர்க் கட்டு ”
(குறள். 1083)

எனவும்,

“வலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றின் மலர்கை யேந்தி
 விலைமீனுணங்கற்பொருட்டாக வேண்டுருவங்கொண்டுவேறோர்
 கொலைவே னெடுங்கட் கொடுங்கூற்றம் வாழ்வ
 தலைநீர்த்தண் கான லறியே னறிவேனே லடையேன் மன்னோ”
                  (சிலப்.க. புகார்க்காண்டம், கானல்வரி, 2)

எனவும் வரும் இலக்கியங்களையும் நோக்குக.

     இனி இனை, கழிக்கரைச் சேரியோர் பாங்கர், உணங்கல் காவலாகக், கொடுநிலைக் கூற்ற மகளெனத் தரித்தநிலை யறிகுவனேல், கூடற்கிறையோனது இருபத முன்வைத்தவர்போல் மருவுதலொருவு மதியாகுவனென வினைமுடிவு செய்க. மெ்ய்ப்பாடும் பயனும் அவை.