பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 68

நேரிசையாசிரியப்பா

 
   
5
  சிலைநுதற் கணைவிழித் தெரிவைய ருளமென
வாழ்ந்தகன் றிருண்ட நிரைநீர்க் கயத்து
ளெரிவிரிந் தன்ன பலவிதழ்த் தாமரை
நெடுமயல் போர்த்த வுடலொரு வேற்குக்
குருமணி கொழிக்கும் புனன்மலைக் கோட்டுழி
10
  நின்பதி மறைந்த நெட்டிர வகத்துட்
குருகும் புள்ளு மருகணி சூழத்
தேனொடும் வண்டொடுந் திருவொடுங் கெழுமிப்
பெருந்துயி லின்பம் பொருந்துபு நடுநாட்
காணுநின் கனலினுட் கவர்மனத் தவரைக்
15
  கொய்யுளைக் கடுமான் கொளுவிய தேரொடு
பூவுதிர் கானற் புறங்கண் டனனெனச்
சிறிதொரு வாய்மை யுதவினை யாயிற்
சேகரங் கிழித்த நிறைமதி யுடலங்
கலைகலை சிந்திய காட்சிய தென்னக்
20
  கடுமான் கீழ்ந்த கடமலைப் பன்மருப்
பெடுத்தெடுத் துந்தி மணிக்குலஞ் சிதறிக்
கிளைஞர்க ணச்சாப் பொருளினர் போலச்
சாதகம் வெறுப்பச் சரிந்தகழ்ந்த தார்த்துத்
திரள்பளிங் குடைத்துச் சிதறுவ தென்ன
25
  வழியெதிர் கிடந்த வுலமுடன் றாக்கி
வேங்கையும் பொன்னு மோருழித் திரட்டி
வரையர மகளிர்க் கணியணி கொடுத்துப்
பனைக்கைக் கடமா வெறுத்துறு பூழி
வண்டெழுந் தார்ப்ப மணியெடுத் தலம்பி
30
  மயில்சிறை யால வலிமுகம் பனிப்ப
வெதிர்கனைக் குவளை மலர்ப்புறம் பறித்து
வரையுட னிறைய மாலையிட் டாங்கு
நெடுமுடி யருவி யகிலொடு கொழிக்குங்
கைலைவீற் றிருந்த கண்ணுதல் விண்ணவ
  னாடகக் கடவுள் கூட னாயகன்
நிறையுளந் தரித்தவர் போலக்
குறையுள நிங்கி யி்ன்பா குவனே

(உரை)
கைகோள் : களவு. தலைவி கூற்று

துறை : பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல்

     (இ-ம்.) இதற்கு, “மறைந்தவர்க் காண்டல்” (தொல் களவி. 20) எனவரும் நூற்பாவின்கண் ‘பிரிந்தவழிக் கலங்கினும்’ எனவரும் விதிகொள்க.

1-4: சிலை...................................ஒருவேற்கு

     (இ-ள்) சிலைநுதல் கணைவிழி தெரிவையர் உளம் என - வில்லை ஒத்த நெற்றியையும் அம்பையொத்த கண்களையுடைய மகளிர் நெஞ்சம்போல ; ஆழ்ந்து அகன்று இருண்ட நிறைநீர் கயத்துள் - ஆழமுடைத்தாய்ப் பரவிக்கறுத்த நிறைந்த நீரையுடைய வாவியின் கண் ; எரி விரிந்தன்ன பல இதழ்தாமரை - தீ விரிந்தாற் போன்ற பலவாகிய இதழ்களையுடைய தாமரை மலரே கேள் !; நெடுமயல் போர்த்த உடல் ஒருவேற்கு - மிக்க மயக்கத்தால் மூடப்பட்ட உடம்பினையுடைய ஒருத்தியாகிய எனக்கு என்க.

     (வி-ம்.) நுதல் - நெற்றி, இதனை ஆகுபெயராகக் கொண்டு புருவம் எனினும் அமையும். கனை - அம்பு ; தெரிவையர் என்பது ஈண்டுப் பருவப் பெயராகாது மகளிர் என்னும் பொருள் குறித்து நின்றது வாவிக்குத் தெரிவையர் உளம் உவமை. எரி - நெருப்பு இது தாமரை மலருக்குவமை, மயல் - மயக்கம் உடம்பெலாம் பசலை பாய்ந்திருத்தலின் மயல்போர்த்த உடல் என்றாள். ஒருவேன் என்றது களைகணில்லாத தமியளாகிய ஒருத்தி என்பதுபட நின்றது. தாமரை : விளி

5-23: குருமணி......................................உதவினையாயின்

     (இ-ள்) குருமணி கொழிக்கும் புனல்மலைக் கோட்டுழி - ஒளிமிக்க மாணிக்கமணிகளை ஒதுக்குகின்ற அருவிநீரையுடைய மேலைமலைக் குவட்டின்கண் ; நின்பதி மறைந்த நெடு இரவு அகத்துள் - நின் கணவனாகிய ததிரவன் மறைந்தமையாலுண்டான நெடிய இவ்விரவினூடே ; குருகும் புள்ளும் அருகு அணி சூழ - கொக்கும் ஏனைய நீர்ப்பறவைகளும் நின்பக்கத்தே நிரலாகச் சூழாநிற்பவும் ; தேனொடும் ஆண்வண்டோடும் திருமகளோடும் கூடி ; பெருந்துயில் இன்பம் பொருந்துபு நெடுநாள் - பெரிய துயிலால் உண்டாகும் இன்பத்தைப் பொருந்தாநின்ற இந்த இடையாமத்தின்கண்; காணும் நின் கனவினுள் - நீ காணா நின்ற நின்னுடைய கனவின்கண்; கவர் மனத்தவரை - வேறுபட்ட நெஞ்சத்தையுடைய என் காதலரை; கொய்உளை கடுமான் கொளுவிய தேரொடு- கத்தரிகையால் கொய்து மட்டம் செய்யப்பட்ட பிடரிமயிரையுடைய விரைவினையுடைய குதிரைகள் பூட்டிய தேருடனே; பூ உதிர் கானல் புறம் கண்டனன் என - மலர்கள் உதிராநின்ற இந்நெய் நிலப் பரப்பின்கண் வர யான் கண்டேன் என்று; சிறிதே ஒரு வாய்மை உதவினை ஆயின் - சிறியதோர் உண்மையை எனக்குக் கூறுவாயாயின் என்க.

     (வி-ம்.) குரு - நிறம். அஃது ஒளியின் மேனின்றது. “குருவும் கெழுவும் நிறனா கும்மே” (தொல். சூ. எஅக) என்பத தொல்காப்பியம். எனவே குருமணி என்றது ஈண்டு ஒளியிற் சிறந்த மாணிக்க மணியை என்க. புனல் - ஈண்டு அருவிநீர், கோட்டுழி என்புழி உழி எழனுருபு, பதி - கணவன், தாமரைக்குக் கணவன் ஞாயிறு என்பது புலனெறி வழக்கம், குருகு - கொக்கு; நாரையுமாம்; அன்னமுமாம். புள் - ஏனைய நீர்ப்பறவை என்க. தேன் - ஈண்டுப் பெடைவண்டையும், வண்டு ஆண் வண்டையும் குறிப்பாலுணர்த்தின. திரு- திருமகள். அவள் தாமரை மலரின்கண் எழுந்தருளியிருத்தலின் இங்ஙனம் கூறினள். நடுநாள் - இடையாமம். கவர்மனத்தவர் என்றது இப்பொழுது வருவேன் என்று கூறிவைத்து அங்ஙனம் வாராது மாறுபட்ட கொடியோராகிய காதலர் என்பது தோன்ற நின்றது. மான் - ஈண்டுக் குதிரை, கானற்புறம் - நெய்தனிலப்பரப்பு. தாமரையே ! நீ உறங்குகின்றனையல்லவா? இங்ஙனம் உறங்குங்கால் நீ கனவு காண்டல் ஒருதலை, அந்தக்கனவிலுள் என் காதலன் தேரிலேறி இங்கு வருவதாகக் கண்டிருப்பையே. அங்ஙனம் கண்டதுண்டாயில் அவ்வுண்மையை எனக்குக் கூறு என்று வேண்டியபடியாம். அச்சொல் புரைதீர்ந்த நன்மை பயத்தலின் வாய்மை என்றும் கண்டேன் என்பது ஒரே சொல்லாதலின் சிறிது என்றும் கூறினாள். இதனோடு,

“புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல்
 துன்ப முழவாய் துயிலப் பெறுதியால்
 இன்கள்வாய் நெய்தானீ யெய்துங் கனவினுள்
 வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ ” (சிலப்.க. கானல். 33)

எனவரும் சிலப்பதிகாரத்தையும் ஒப்புநோக்குக

14 - 18 : சேகரம்..........................போல

     (இ-ள்) சேகரம் கிழித்த நிறைமதி உடலம் - மூடியினால் கிழிக்கப்பட்ட முழுத் திங்களினது உடம்பு; கலைகலை சிந்திய காட்சியது என்ன - கலைந்த கலைகள் சிதறிய தோற்றம்போல; கடுமான் கீழ்ந்த கடமலை பல்மறுப்பு- சிங்கத்தினால் கிழிக்கப்பட்ட யானயினது பலவாகிய கொம்புகளையும்; எடுத்து எடுத்து உந்தி - தூக்கித் தள்ளி ; மணிகுலம் சிதறி - மணிக்கூட்டங்களை அள்ளிவீசி ; கிளைஞர்கள் நச்சா பொருளினர் போல - சுற்றத்தாரால் விரும்பப்படாத பொருளையுடைய புன்செல்வர்போல என்க.

     (வி-ம்.) சேகரம் - மூடி, கலைகலை : வினைத்தொகை, கிழித்த ; செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது. காட்சியது என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. கடுமான் - சிங்கம் . கடமலை - யானை, மருப்பு - கொம்பு, பொருளையுடைய புன்செல்வர் என்க.

19-28: சாதகம் ............................................. ஆங்கு

     (இ-ள்) சாதகம் வெறுப்ப - சாதகப்பறவைகள் வெறுக்கும்படி ; சரிந்து அகழ்ந்து ஆர்த்து - ஒழுகிப் பெயர்ந்து ஒலித்து, திரள் பளிங்கு - திரண்ட பளிக்குப் பாறைகளை ; உடைத்துச் சிதறுவது என்ன - உடைத்துச் சிதறுகின்றதைப்போல ; வழி எதிர் கிடந்த - வழிக்கு எதிராகக் கிடந்த ; உலமுடன் தாக்கி - கற்றூணோடு மோதி ; வேங்கையும் பொன்னும் ஓர் உழி திரட்டி- வேங்கை மலர்களையும் பொன்னையும் ஓரிடத்தே சேர்த்து ; வரையரமகளிர்க்கு- மலையில் வாழும் தெய்வமகளிர்க்கு ; அணி அணி கொடுத்து - அணிகின்ற அணிகலன்களாக வழங்கி ; பனைகை கடமா - பனைபோன்ற துதிக்கையையுடைய மதயானையின் ; எடுத்துஉறு பூழி - பிடரியிற் படிந்துள்ள புழுதியை ; வண்டு எழுந்து ஆர்ப்ப - அவ்விடத்தே மொய்த்துள்ள வண்டுகள் எழுந்து ஆரவாரிக்கும்படி ; மணி எடுத்து அலம்பி - மணிகளை அகற்றிக் கழுவி ; மயில் சிறை விரித்து ஆல - மயில்கள் சிறகுகளை விரித்துக் கூத்தாடவும் ; வலிமுகம் பனிப்ப - குரங்குகள் குளிரால் நடுங்கவும் ; எதிர் சுனைக்குவளைமலர் புறம்பறித்து- எதிரிலுள்ள சுனையில் மலர்ந்துள்ள குவளை மலர்களைப் புறத்தே பறித்து வீசி ; வரைஉடல் நிறைய - மலையிடன எங்கும் நிரம்பும்படி ; மாலை இட்டாங்கு- மாலைசூட்டினாற்போல என்க.

     (வி-ம்.) சாதகம் - நிலாமுகிப்புள், பளிங்கு - ஈண்டுச் சந்திர காந்தக்கல், இது நிலாவொளியைப் பிரதிபலித்தலின் அதனை உண்ணும் சாதகப்புல் இமடினயுடைத்தல் கண்டு வெறுத்தன என்பது கருத்தாகக் கொள்க. உலம் - திரள்கள். வேங்கை: மலர்க்கு ஆகுபெயர். வரைஅரமகளிர் - மலையில் வாழும் தெய்வமகளிர், அணியணி ; வினைத் தொகை. கடமா - மதயானை, பூழி - புழுதி. பூழியை அலம்பி என இயைக்க. வலிமுகம் குரங்கு

29-34: நெடுமுடி....................................ஆகுவன்

     (இ-ள்) நெடுமுடி அருவி அகிலொடு கொழிக்கும் - நெடிய முகட்டின்கண் அருவி நீரானது அகிற் கட்டைகளையும் பிறவற்றையும் அலைகளாற் கொழித்தற்கிடனாகிய; கைலை வீற்றிருந்த-கைலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற; கண்ணுதல் விண்ணனவன்-கண்ணுதற் கடவுளாகிய; நாடகக் கடவுள்- கூத்தப்பெருமான் என்னும் ; கூடல்நாயகன் - மதுரைப் பெருமானுடைய ; தாமரை உடைத்த காமர் சேவடி - தாமரை மலரைத் தோற்கச் செய்த அழகிய சிவந்த திருவடிகளை ; உளம்நிறை தரித்த அன்பர்போல - உள்ளத்திலே நிறையும்படி வைத்துள்ள அன்பர்போல ; உளம் குறை நீங்கி - மனக்குறை நீங்கி ; இன்பு ஆகுவன் - இன்புருவமாகுவேன் என்க.

     (வி-ம்.) முடி - முகடு, கைலை - சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருமலை. கண்ணுதல் ; அன்மொழித்தொகை , சிவபெருமான். உடைத்த ; உவவுமருபு. காமர் -அழகு.

     இதனை, தாமரை மலரே ! ஒருவேற்கு, நின்பதி மறைந்த நெட்டிரவகத்துள், நின்கனவினுள், கவர்மனத்தவரைக் கானற்புறங் கண்டனனெனச் சிறியதொரு வாய்மை யுதவினையாயின், கைலை வீற்றிருந்த கூடல்நாயகன் காமர்சேவடி யுளந்தரித்தவர்போலக் குறையுள நீங்கியில்பாகுலனென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை