பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 69

நேரிசையாசிரியப்பா

 
   
5
  எரிதெறற் கரிய பொடிபொறுத் தியங்கினை
முகிறலை சுமந்த ஞிமிறெழுந் திசைக்கும்
பொங்கருட் படுத்த மலர்கால் பொருந்துக
கருங்கடத் தெதிர்ந்த கொடும்புலிக் கொதுங்கினை
வரியுடற் செங்கண் வராலின மெதிர்ப்ப
10
  வுழவக் கணத்த ருடைவது நோக்குக
கொலைஞர் பொலிந்த கொடித்தேர்க் கணங்கினை
வேதியர் நிதிமிக விதிமக முற்றி
யவ்விர தத்துறை யாடுதல்ா கெழுமிப்
பொன்னுருள் வையம் போவது காண்க
15
  வாறலை யெயின ரமர்க்கலிக்க ழுங்கினை
பணைத்தெழு சாலி நெருங்குபு புகுந்து
கழுநீர் களைஞர்தங் கம்பலை காண்க
தழறலைப் பழுத்த பரன்மரம் படுத்தனை
சுரிமுகக் குழுவளை நிலவெழச் சொரிந்த
20
  குளிர்வெண் டரளக் குவாலிவை காண்க
வலகைநெட் டிரதம் புனலெனக் காட்டினை
வன்மீ னெடுங்கயல் பொதுவினை யகத்துக்
கிடங்கெனப் பெயிரிய கருங்கடல் காண்க
காகளம் பூசற் றுடியொலி யேற்றனை
25
  குடுமியஞ் சென்னியர் கருமுகில் விளர்ப்பக்
கிடைமுறை யெடுக்கு மறையொலி கேண்மதி
யமரர்கண் முனிக்கணத் தவைமுன் றவறு
புரிந்துட னுமைகண் புதைப்பமற் றுமையு
மாடகச் சயிலச் சேகரந் தொடர்ந்த
30
  வொற்றையம் பசுங்கழை யொல்கிய போல
வுலகுயிர்க் குயிரெணுந் திருவுரு வணைந்து
வளைக்கரங் கொடுகண் புதைப்பவவ் வுழியே
யுவகிரு டுரக்குஞ் செஞ்சுடர் வெண்சுடர்
பிரமனுட் பட்ட நிலவுயி ரனைத்துக்
35
  தமக்கெனக் காட்டு மொளிக்கண் கெடுலு
மற்றவர் மயக்கங் கண்டவர் கண்பெறத்
திருநுதல் கிழித்த தனிவிழி நாயகன்
றாங்கிய கூடற் பெருநக
ரீங்கிது காண்முகத் தெழினகைக் கொடியே.

(உரை)
கைகோள் : களவு, தலைவன் கூற்று

துறை : பதிபரிசுரைத்தல்

     (இ-ம்.) இதனை, “ ஒன்றாத் தமரினுந் ” (தொல். அகத். சக) எனவரும் நூற்பாவின்கண் ‘அப்பாற் பட்ட ஒரு திறத்தானும்’ என்பதன்கண் அமைத்துக்கொள்க.

35 : முத்து..............................கொடியே

     (இ-ள்) முத்துளழில் - முத்துப்போன்ற அழகையுடைய ; நகைக்கொடியே - பற்களையுடைய பூங்கொடிபோல்வாய் என்க.

     (வி-ம்.) எழில் - அழகு, நகை : பல், கொடி : ஆகுபெயர்

1-4 : எரி ....................................... நோக்குக.

     (இ-ள்) எரி தெறற்கு அரியபொடி பொறுத்து இயங்கினை - நீ இதுகாறும் தீயும் வெப்பத்தால் வெல்லதற்கரிய இப்பாலை நிலத்துப் பாற்பொடியின் வெப்பத்தினை எங்ஙனமோ பொறுத்துக்கொண்டு என்னொடு நடந்தனை ; முகில் தலை சுமந்த - முகில்களைத் தன் தலையிலே சுமந்துள்ள ; ஞிமிறு எழுந்து இசைக்கும் பொங்கருள் - வண்டுகள் எழுந்து முரலுகின்ற இச்சோலையினிடத்தே ; படுத்த மலர்கால் பொருந்துக - நிலத்திலே பரப்பப்பட்டுள்ள மலரின்மேல் நின்காலை வைத்திடுக; கருங்கடத்து எதிர்ந்த கொடும்புலிக்கு ஒதுங்கினை - நீ இதகாறும் கரிய பாலைக்காட்டினிடத்து எதிர்த்த கொடிய புலிக்கு அஞ்சி ஒதுங்கா நின்றனையல்லையோ; வரியுடல் செங்கண் வரால் இனம் எதிர்ப்ப- வரிகளையுடைய உடலினையும் சிவந்த கண்களையுமுடையவரால் மீன் கூட்டங்கள் தம்மைத் தாக்குதலாலே; உழவக் கணத்தர் உடைவது நோக்குக - ஈண்டு உழவர் கூட்டத்திலுள்ளோர் புறமிட்டோடுவதைக் காண்பாயாக என்க.

     (வி-ம்.) எரி - நெருப்பு. நெருப்பாலும் வெல்லுதற்கரிய வெப்பத்தையுடைய பொடி என்க. இயங்குதல் - கடத்தல், முகில் தலைசுமந்த பொங்கர்-சோலை, படுத்த மலர்-பரப்பப்பட்ட மலர். கடம்காடு, அஞ்சி ஒதுங்கின என்க. வரி.-கோடு, வரால்- ஒருவகை மீன். கணத்தர் - கூட்டத்தார். உடைதல் - புறமிட்டோடுதல்

7 - 13 : கொலைஞர்.................................காண்க.

     (இ-ள்) கொலைஞர் பொலிந்த கொடித்தோர்க்கு அணங்கினை - நீ இதுகாறும் மறவர் ஏறிவந்த கொடியுயையுடைய தேர்களைக் கண்டு அஞ்சி வருத்தமுற்றனை இனி ; வேதியர் நிதி மிக விதிமகம் முற்றி - மறையோர் உலகின்கண் செல்வம் பெருகும் பொருட்டு விதிகளையுடைய கேள்விகளைச் செய்துமுடித்து ; அவ்விரதம் துறையாடுதல் கெழுமி-அந்த நோன்பின் பொருட்டு நீராடுதலைச் செய்து ; பொன்உருள் வையம் போவது காண்க- பொன்னாலியன்ற உருள்களையுடைய தேரில் ஏறிச் செல்வதனைக் கண்டு மகிழ்வாயாக ; ஆறுஅலை எயினர் அமர்கலிக்கு அழுங்கினை - நீ இதுகாறும் வழிபறிப்போராகிய எயினரது போரொலிக்கு அஞ்சினை வருந்தினை ; பணைத்துஎழு சாலி நெருங்குபு புகுந்து- இனி நீ அடி பருத்து வளர்ந்த நெற்பயிர்களினூடே நெருங்கிப்புகுந்து ; கழுநீர் கலைஞர் கம்பலை காண்க - செங்கழுநீராகிய களைகளைப் பறிக்கும் உழத்தியருடைய ஆரவாரத்தைக் காண்பாயாக என்க.

     (வி-ம்.) கொலைஞர் - ஈண்டு எயினர். அணங்குதல் - வருந்துதல், வேதியர் வேள்வி செய்தலால் உலகில் வளம் பெருகும் என்பது பற்றி வேதியர் நிதிமிக மகம் முற்றி என்றார். நிதி - செல்வம், “கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே செற்றார் ” எனப் பிற சான்றோரும் ஒதுதலுணர்க மகம் - வேள்வி முற்றுதல் செய்துமுடித்தல். துறையாடுதல் - நீராடுதல் கெழுமி - பொருந்தி. வையம் - தேர், வண்டியுமாம். ஆறலை எயினர் - வழிபறிக்கும் பாலைநிலமாக்கள், அமர்க்கலி- போரொலி சாலி - நெற்பயிர், கழுநீர் - செங்கழுநீர், கலைஞர் - களைபறிப்போர், கம்பலை - ஆரவாரம்.

14-22: தழல்.................................கேண்மதி

     (இ-ள்) தழல் தலை பழுத்தபால் முரம்பு அடுத்தனை - நீ இதுகாறும் தீப்பிழம்பு தம்மிடத்தே கனிந்துள்ள பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலத்தின்மேல் நடந்துவந்தனை, இனி ; சுரி முகம் குழுவளை நிலவு எழச் சொரிந்த -சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் நிலவொளி தவழும்படி ஈன்ற ; குளிர் வெள் தரளம் குவால் இவை காண்க - குளிர்ந்த வெண்முத்துக் குவியலாகிய இவற்றைக் கண்டு மகிழ்வாயாக ; அலகை நெடு இரதம் புனல் எனக் காட்டினை - நீ பாலையின்கண் பேய்த்தேராகிய நெடிய கானலைக் கண்டு மயங்கி உதோ காண்ிமின் நீர்நிலையை என்று எனக்குக் காட்டா நின்றனை ; வல்மீன் நெடகயல் பொதுவினை அகத்துக்கிடங்கு எனப் பெயரிய கருங்கடல் காண்க - ஈண்டு முதலையும் நெடிய கயல்மீனும் பொதுவாகத் தொழில் கூறப்பட்ட கரிய கடலைக் கண்டு மகிழ்வாயாக; காகளம் பூசல் துடி ஒலி ஏற்றனை. நீ இதுகாறுங் காகள வோசையையும் போர்ப்பறை முழக்கினையும் செவியேற்று அஞ்சினை இனி ; குடுமிஅம் சென்னியர் கருமுகில் விளர்ப்பக் கிடைமுறை யெடுக்கும் மறையொலி கேள்மதி- குடுமியையுடைய அழகிய தலையினையுடைய பார்ப்பனர் கரிய முகில்களும் நாணும்படி வேதப்பள்ளியில் முறைப்படி ஓதாநின்ற வேதங்களினது ஓசையைக் கேட்டு மகிழ்வாயாக என்க.

     (வி-ம்.) தழல் - தீ, தலை - உச்சியுமாம், பரல் - பருக்கை, முரம்பு- மேட்டுநிலம் வளை - சங்கு. தரளக் குவால் - முத்துக் குவியல், நெடிய அலகை இரதம் என்க. அலகை இரதம் - பேய்த்தேர், அஃதாவது கானல் நீர், வன்மீன்- முதலை, கயல் - ஒருவகை மீன், வன்மீன் என்றதனால் கயலை மென்மீன் எனக்கொள்க, எனவே வன்மீனும் மென்மீனும் பொதுவாகக் கொண்டு வினைசெய்தலையுடைய அகத்தையுடைய கிடங்கு என்க, கிடங்கு-அகழி. அதன் பெருமைகூறுவான் கிடங்கெனப் பெயரிய கருங்கடல் என்றான். காகளம்- ஊதுகொம்பு. துடி - ஒருவகைத்தோற்கருவி. இது போர்க்களத்தே முழக்கப்படுதலால் பூசற்றுடி என்றான் குடுமி - உச்சிக்குடுமி, இதனைச் சிகையென்பர், முகில் நம்முடைய முழக்கம் இவ்வேத முழக்கத்திற்கு நிகராகாது என்று நாணும் என்பது கருத்து கிடை - பள்ளி, மதி : முன்னிலையசை.

23-28: அமரர்.................................புதைப்ப

     (இ-ள்) அமரர்கள் முனிக்கணத்து அவை முன்தவறு புரிந்து - தேவர்களும் முனிவர்குழாமு்ம் முன்னொரு காலத்தே தவறு செய்யத் தொடங்கியபடியால்; உடன் உமைகண் புதைப்ப-உடனே உமையம்மையார் கண்களை மூடாநிற்ப; உமையும் ஆடகச் சயிலச் சேகரந் தொடர்ந்த - அவ்வுமையு்ம் பொன்மலைக் குவட்டினைத் தொடர்ந்த ; ஒற்றை அம் பசுங்கழை ஒல்கிய போல - ஒன்றாகிய அழகிய மூங்கிலானது அசைவதுபோல ; உலகு உயிர்க்கு உயிர் எனும் - உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் உயிர் என்று சொல்லப்படுகின்ற ; திருவுரு அணைந்து வளைக்கரங் கொடு கண் புதைப்ப - அழகிய இறைவனுடைய திருமேனியை அணைந்து வளையலணிந்த தன் கைகளால் இறைவனுடைய கண்களை மூடாநிற்ப என்க.

     (வி-ம்.) கணத்து அவை - கணமாகிய கூட்டம், அமரரும் முனிவரும் தவறாக உமை கண்களை மூட என்க. ஆடகச் சயிலச் சேகரம் - பொன்மலைக் குவடு, கழை - மூங்கில், இது உமைக்கு உவமை. ஓல்குதல் - அசைதல். இறைவன் உயிர்களுக்கெல்லாம் உயிராய் மருகுவன் என்பதனை.

“உருவொடு கருவி யெல்லாம் உயிர்கொடு நின்று வேறாய்
 வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன்
 தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான்
 வருபவ னிவைதா னாயும் வேறுமாய் மன்னி நின்றே” (சித்தி. 93)

எனவரும் சித்தியாரானும் உணர்க.

28-35: அவ்வுழியே......................காண்

     (இ-ள்) அவ்வுழியே - அப்பொழுதே; உலகு இருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர் பிரமன் உள்பட்ட நில உயிர் அனைத்தும் - உலகின்கண் பரந்த இளை அகற்றும் ஞாயிறும் திங்களும் பிரமன் முதலிய நிலைபேறுடைய உயிர் இனங்கள் எல்லாம் ; தமக்கு எனக் காட்டும் ஒளிக்கண் கெடலும் - தத்தமக்காகத் தனித்தனியே பொருள்களைக் காட்டும் ஒளியையுடைய கண் மழுங்கிப்போதலும்; அவர் மயங்கங் கண்டு - தேவர் முதலிய அவர்களின் மயக்கத்தை அறிந்து; அவர் கண்பெற - அவர்களெல்லாம் மீண்டும் கண்ணொளியைப் பெறும்படி; திருநுதல் கிழித்த தனி விழி நாயகன் - அழகிய நெற்றியினிடத்தே திறக்கப்பட்ட ஒப்பற்ற நெருப்புக்கண்ணையுடைய இறைவனாகிய சோமசுந்தரக்கடவுளால்; தாங்கிய கூடல் பெருநகர் இது ஈங்கு காண்க - பாதுகாத்தருளப் பட்ட பெரிய நகரம் இஃதாகும் இவ்விடத்தே அதனைக் கண்டு மகிழ்க என்க.

     (வி-ம்.) செஞ்சுடர் - ஞாயிறு வெண்சுடர் - திங்கள், காட்டும் - உலகப் பொருள்களைக் காட்டா நின்ற, அவர் - ஞாயிறு முதலியோர், மயங்குதல்- குருட்டுத்தன்மையால் அறிவுமயக்கங் கொள்ளுதல், நுதல்கிழித்த விழி தனிவிழி எனத் தனித்தனி கூட்டுக. நுதலைக் கிழித்துத் தோற்றுவித்த விழி என்க. மதுரைமாநகர் இதனை ஈங்குக் காண்க என்க.

     இதனை நகைக்கொடியே பொடி பொறுத்தியங்கினை ; மலர்கால் பொருந்துக. புலிக் கொதுங்கினை; ஈண்டு உழவக்கணத்தர் உடைவது நோக்குக கொலைஞர். தேர்க்கணங்கினை ஈண்டு வையம்போவது காண்க. எயினர், அமர்க்கலிக்கு அழுங்கினை ; ஈண்டுத் தரளக்குவால் இவை காண்க. நீ பேய்த்தேர் புனல் எனக் காட்டினை ; ஈண்டுக் கடல் காண்க. துடி ஒலி ஏற்றனை ; ஈண்டு மறை ஒலிகேள். இது கூடற்பெரு நகர் ; இதனை ஈங்குக் காண்க. என வினைமுடிவுசெய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.