செய்யுள்
7
நேரிரையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பொடித்தரும்
பாதசின் முலைக்கொடி மடந்தையண்
மணிமிளிர் பெருங்கட் கிமைகாப் பென்ன
விழித்துழி விழித்து மடங்குழி யடங்கியுந்
தன்னைநின் றளித்த வென்னையு மொருவுக
பன்மணிக் கலன்க ளுடற்கழ களித்தெனச் |
10
|
|
சுற்றுடுந்
தோங்கிய வாயமுந் துறக்குக
பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய
மூவிரு திருமுகத் தொருவே லவற்கு
வானுற நிமிர்ந்த மலைத்தலை முன்றின்
மனவணி மடந்தை வெறியாட் டாளன் |
15
|
|
வேன்மகன்
குறத்தி மாமதி முதியோர்
தொண்டகந் துவைப்ப முருகியங் கறங்க
வொருங்குவந் திமையா வருங்கடன் முற்றிய
பின்னர்நின் றேற்றகைத் தாயையும் பிழைக்குக
கருந்தலைச் சாரிகை செவ்வாய்ப் பசுங்கிளி |
20
|
|
தூவியந்
தோகைவெள் ளோதிமந் தொடருழை
யிவையுட னின்பமு மொருவழி யிழக்குக
சேயித ழிலவத் துடைகாய்ப் பஞ்சினம்
புகைமுரிந் தெழுந்தென விண்ணத் தலமரக்
குழைபொடி கூவையிற் சிறைசிறை தீந்த |
25
|
|
பருந்து
மாந்தையும் பார்ப்புடன் றவழ
வுடைகவட் டோமை யுயர்சினை யிருக்கும்
வலைகட் கூகை மயங்கிவாய் குழற
வாசையிற் றணியா வழற்பசி தணிக்கக்
காளிமுன் காவல் காட்டிவைத் தேகுங் |
|
|
குழிகட்
கரும்பேய் மகவுண் முகிழ்ப்ப
வேமுடற் சின்னம் வெள்ளிடை தெறிப்ப குற்றிலை வாகைநெற் றொலிப்ப
திசைநின் றெழாது தழன்முகந் தேறிச் |
30
|
|
சுடலையிற்
சூறை யிடையிடை யடிக்கும்
பேரழற் காணினு காடுமென் னுளத்தினு
மொருபாற் பசுங்கொடி நிறைபாட் டயரப்
பாரிடங் குனிப்ப வாடிய பெருமான்
வையைகந் துருவினர் மலரா வறிவினைப் |
35
|
|
புலனிரை
மறைத்த புணர்ப்பது ப்லக்
குளிர்கொண் டுறையுந் தெளிநீர் வாவியை
வள்ளைசெங் கமலங் கள்ளவி ழாம்பற்
பாசடை மறைக்குங் கூடற் பெருமான்
செந்தாள் விடுத்துறை யந்தர்க டம்மினு |
40
|
|
மூவாத்
தனிநிலைக் கிருவரு மோருயிர்
இரண்டெனக் கவைத்தநல் லாண்டரு டோழியைச்
செருவிழு மிச்சையர் தமதுடல் பெற்ற
வின்புக நோக்கா வியல்பது போல
மருங்குபி னோக்கா தொருங்குவிட் டகலப் |
45
|
|
பொருந்திய
தெப்படி யுள்ளம்
மருந்தழற் சுரத்தி லொருவனன் பெடுத்தே. |
(உரை)
கைகோள், களவு. நராய் கூற்று
துறை: நற்றாய்
வருந்துதல்
(இ-ம்.) இதற்கு, தன்னும் அவனும்.....................அவ்வழி யிரிய
(தொல். 36) என்னும் நூற்பாவின்கண் அன்னபிறவும் என்ற விதி கொள்க.
1-4:
பொடி........................................ஒருவுக
(இ-ள்)
மணிமிளிர் பெருங்கட்கு இமைகாப்பு என்ன-கருமணி திகழ்கின்ற பெரிய கண்ணை இமைகள்
பாதுகாக்குமாறுபோலே; பொடித்து அரும்பாத சில் முல்லைக்கொடி மடந்தையள்- வெளிப்பட்டு
முகிழாத இரண்டு முலைகளையுமுடைய பூங்கொடி போன்ற மடப்பமுடைய என்மகள்; விழித்துழி விழித்தும்-விழித்த
விடத்தே விழித்தும்; அடங்குழி அடங்கியும்- அவள் துயிலுங்காற் சிறிது துயின்றும்;
நின்று தன்னை அளித்த-நீங்காது இருந்து தன்னைப் பாதுகாத்த; என்னையும் ஒருவுக-தாயாகிய
என்னைத் தானும் பிரிந்து செல்லினும்செல்க என்க.
(வி-ம்.) பொடித்து-தோன்றி.
இரண்டாதலின் சின்முலை என்றாள். மடந்தையாள் என்பது பருவங் குறியாது மகள் என்னும்
பொருட்டாய் நின்றது. மணி-கண்ணின் உள் கருமணி. காப்பு-காத்தல் அடங்குழி-உறங்குங்கால்
அளித்த. பாதுகாத்த. என்னையும் என்பது தாயாகிய என்னையும் என்பதுபட நின்றது. உம்மை
உயர்வு சிறப்பும் எண்ணும்மையும் ஆம்.
5-6:
பன்மணி........................................துறக்குக
(இ-ள்) உடற்கு பன்மணிக்
கலன்கள் அழகு அளித்து ஓங்கியதென-அன்றியும் உடலுக்குப் பல்வேறு மணிகளால் இயன்ற அணிகலன்கள்
அதனைச் சூழ்ந்து அழகளித்து மேம்பட்டாற்போல; சுற்று உடுத்து அழகளித்த ஓங்கிய ஆயமும்
துறக்குக-தன்னைப் பக்கங்களிலே சூழ்ந்து அணிசெய்து மேம்பட்ட தோழியர் குழாத்தைத்தானும்
பிரியினும் பிரிக என்க.
(வி-ம்.) பன்மணிக்கலங்கள்
தோழையர் குழுவுக்குவமை. ஓங்கிய என்னும் சொல்லை உவமைக்கும் அழகளித்து என்னும் சொல்லைப்
பொருளுக்கும் கூட்டுக. சுற்று-பக்கம். ஆயம்-தோழியர் குழு. அணிகலன்கள் தாமும் அழகாயிருந்து
உடலுக்கும் அழகு செய்து அதனைப் பிரியாது இருப்பது போலே தோழியரும் தாமும் அழகியராயிருந்து
தலைவியையும் அழகு செய்து அவளைப் பிரியாதிருப்பர் என்பது கருத்து.
7-14:
பிணிமுகம்.................................பிழைக்குக
(இ-ள்)
பிணிமுகம் மஞ்ஞை மூவிரு திருமுகத்து செருமுகத்தேந்திய ஒரு வேலவற்கு-அல்லதூஉம் பிணிமுகம்
என்னும் யானையினையும் மயிலினையும் அழகிய ஆறுமுகங்களையும் போர் முனையிலே ஏந்தி ஒப்பற்ற
வேற்படையினையுமுடைய முருகவேளுக்கு வெறியாடும் பொருட்டு; வான்உற நிமிர்ந்த மலைத்தலை
முன்றில்-வானைத் தீண்டும்படி உயர்ந்துள்ள மலையுச்சியின்கண் அமைந்த முற்றத்தின்கண்
களனிழைத்து; மனவு அணி மடந்தை வெறியாட்டாளன்-சங்குமணி அணிந்த மனைவியோடே வரும்
தெய்வம் ஏறி ஆடுபவனும்; வேல்மகன்-வேலனும்; குறத்தி-கட்டுவிச்சியும்; மாமதி முதியோர்-
மிக்க அறிவினையுடைய முதுபெண்டிரும்; தொண்டகம் துவைப்ப- தொண்டகப் பறை முழங்கவும்;
முருகு இயம் கறங்க- முருகவேளுக்குரிய வெறியாட்டுப்பறை முழங்கவும்; ஒருங்குவந்து- ஒருங்கே
கூடி; இமையா அரு கடன் முற்றிய பின்னர்-அம் முருகவேளுக்குக் குறைவில்லாத வழிபாட்டினைச்
செய்து முடித்த பின்னர்; நின்று ஏற்ற கைத்தாயையும் பிழைக்குக - தன்னை
எதிர்பார்த்து நின்று கைகளாலே தன்னைத் தழுவிக்கொண்ட செவிலித்தாயைத் தானும் பிரிந்து
செல்லினும் செல்க என்க.
(வி-ம்.) பிணிமுகம்-முருகனுக்குரிய
யானை. சேயுயர் பிணிமுகமூர்ந்த எனப் பரிபாடலினும், ஓடாப் பூட்கைப் பிணிமுகம்
வாழ்த்தி எனத் திருமுருகாற்றுப் படையினும் வருதல் காண்க. இனி, பிணிமுகம் மயில்
என்பாருமுளர். ஆகலின் அவர் கருத்திற்கியையப் பிணி முகமாகிய மஞ்ஞை எனினுமாம். மலைத்தலை
முன்றில்-மலையுச்சியில் அமைந்த முற்றம். இது வெறியாடுகளம் என்க. மனவு-அக்குமணி.
மணிப்பொதுவுமாம். மனவணிந்த மடந்தை என்றது வெறியாட்டாளன் மனைவியை. வேன்மகன்-பூசாரி.
குறத்தி-கட்டுவிச்சி முதலியோர். தொண்டகம் முருகியம் என்பன குறிஞ்சிப் பறவைகள்.
இமையா-குறையாத. அருங்கடன்-செய்தற்கரிய வழிபாடு.பின்னர் நின்றேற்ற என்புழி பின்னரிற்
பெற்ற என்றும் பாடம். நின்றேற்ற என்றது, வழிபாடு முடிந்தவுடன் எதிர்பார்த்து நின்று
கைகளாற் றழுவிக் கொண்ட என்றவாறு. கைத்தாய்-செவிலித்தாய். ஈண்டு செவிலித்தாய்
தலைவியின் வேறுபாடு கண்டு ஐயுற்று வேலனை வினாய வழி அவன் இது தெய்வத்தாலுற்ற குறை
என்றானாக; அதுகேட்ட அவள் அத்தெய்வக்குறை தீரும் பொருட்டு அவ்வேலன் முதலியோரை
அழைத்து வெறியாட்டு நிகழ்வித்து அவ்வழிபாடு முடிந்தவுடன் தலைவியை அக்குறை தீர்ந்தாளாகக்
கருதி ஆர்வத்துடன் இரு கைகளாலும் தழுவிக்கொண்ட அவ்வன்புச் செயலை நற்றாய் எடுத்துக்கூறி
இரங்குகின்றாள் என்க.
15-17:
கருத்தலை................................இழக்குக
(இ-ள்)
கருந்தலைச் சாரியை-அல்லதூஉம் கரிய தலையினையுடைய நாகணவாய்ப் புள்ளும்; செவ்வாய்ப்
பசுங்கிளி- சிவந்த வாயினையுடைய பச்சைக்கிளியும்; தூவி அந்தோகை- தூவியாகிய அழகிய
தோகையையுடைய மயிலும்; வெள் ஓதிமம்- வெள்ளை அன்னமும்; தொடர்உழை-தன்னை யாண்டும்
தொடர்ந்து வரும் மான்குட்டியும்; இவையுடன் இன்பமும் ஒருவழி இழகுக- ஆகிய இவற்றோடே
அவள் ஆடி நுகரும் இன்பங்களையும் ஒருசேர இழப்பினும் இழக்க என்க.
(வி-ம்.)
சாரியை-நாகணவாய்ப்புள். தூவியந்தோகை: பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
தூவியாகிய அழகிய தோகையையுடைய மயில் என்க. ஓதிமம்-அன்னம். உழை- மாங் இவையுடன்
ஆடுதலால் வரும் இன்பமும் என்க. ஈண்டு நாகணவாய்ப்புள் முதலிய இவ்வஃறிணைத் தோழருடன்
விளையாடும் இன்பத்தையும் இழக்கத் துணிந்தாளே! வன்கண்ணள் என்று நற்றாய் இரங்குகின்றாள்.
என்க.
18-19:
சேயிதழ்......................................அலமர
(இ-ள்)
சே இதழ் இலவத்து உடை காய்ப் பஞ்சினம் புகை முரிந்து எழுந்து எனவிண்ணத்து அலமர-சிவந்த
மலர்களையுடைய
இலவமரத்தின்கண் முதிர்ந்து வெடித்த காயினுள் பஞ்சுக்கூட்டம் தீயின்கண் உண்டாகிய
புகை உடைந்து எழுந்து சுழன்றாரற் போல வானின்கண் சுழலா நிற்பவும் என்க.
(வி-ம்.) இலவம்-ஒருவகை
மரம். உடைக்காய்:வினைத்தொகை. முரிந்தெழுதல்-உடைந்தெழுதல். விண்ணத்து, அத்து;
சாரியை. அலமரல்-சுழலல். இலவம் பஞ்சு விண்ணிற் சுழலுதற்குத் தீயின்கண் எழும்புகை
உடைந்து சுழலுதல் உண்மை.
20-21:
குழை...................................தவழ
(இ-ள்)
குழை பொடி கூவையின் சிறை-இலைகரிந்த கூவையின் பக்கத்தில்; சிறை ட்க்ஹீய்ந்த பருந்தும்
ஆந்தையும்- சிறகுகள் கரிந்துபோன பருந்துகளும் ஆந்தைகளும்; பார்ப்புடன் தவழ-தத்தம்
குஞ்சுகளோடு பறத்தலாற்றாது நிலத்திலே தவழாநிற்பவும் என்க.
(வி-ம்.) குழை-இலை.
பொடிதல்-கரிந்து போதல். கூவை-கிழங்குடைய ஒரு செடி. தீந்தன என்றும் பாடம்.
22-23:
உடை.......................................குழற
(இ-ள்) உடைகவட்டு
ஓமை உயர்சினை இருக்கும்-பிளந்த கிளையினையுடைய ஓமைமரத்தின் உயர்ந்த கிளையில்
இருக்கிற; வளைகண் கூகை மயங்கி வாய்குழற-வளைந்த கண்களையுடைய கூகைகள் வெப்பத்தால்
மயங்கி வாய்குழறா நிற்பவும் என்க.
(வி-ம்.) ஓமை-ஒருவகை
மரம். வெப்பத்தால் மயங்கி என்க.
24-27:
ஆசை...........................................தெறிப்ப
(இ-ள்) குழிகண் கரும்பேய்-குழிந்த
கண்களையுடைய கரிய பெண் பேய்கள்; ஆசையின் தணியா அழல்பசி தணிக்க-அவாப்போல்
என்றும் தணியாத தீயையொத்த தமது பசியைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு; காளி முன்
காவல் காட்டி வைத்து ஏகும்-காளிக்கு முன்னர்க் காவலாகக் காட்டி வைத்துப்போற்றுகின்ற;
மகவுகண் முகிழ்ப்ப-பிள்ளைப் பேய்கள் தங்கண்களை மூடிக்கொள்ளும்படி; வேம் உடல் சின்னம்
வெள் இடைதெறிப்ப-அங்கு வேவா நின்ற பிணத்தின் உடற் குறைகள் வெட்ட வெளியிலே தெறியா
நிற்ப என்க.
(வி-ம்.) ஆரா இயற்கை
அவா என்பது பற்றித் தணியாத பசிக்கு உவமை எடுத்தார். பேய்கள் இரைதேடப் புறப்படும்
போது தம் மகவினைக் காளியின் முன்றிலே போகட்டுக் காளியைக் காக்கும்படி வேண்டிச்
செல்கின்றன என்க. கடும்பேய் என்றும் பாடம். உடல்-ஈண்டுப்பிணம்.
28: நெடு..........................................ஒலிப்ப
(இ-ள்) நெடுந்தாள்
குறுஇலை வாகை நெற்று ஒலிப்ப-நெடிய காலையும் குறிய இலைகளையுமுடைய வாகை மரத்தின் நெற்றுக்கள்
ஒலியா நிற்பவும் என்க.
(வி-ம்.) நெடுந்தாள்
குறுஇலை என்புழிச் செய்யுளின்பமுணர்க. நெற்று-முதிர்ந்துலர்ந்த
காய்.
29-33:
திசை......................................பெருமான்
(இ-ள்) சுடலையில்
சூறை திசை நின்று எழாது தழல் முகந்து ஏறி இடை இடை அடிக்கும் பேர் அழல் கானினும்-சுடுகாட்டிகண்
சூரைக்காற்றுத் திக்குகளினின்றும் எழாமல் இடை இடையே தோன்றித் தீயினை அள்ளிக்கொண்டு
வானிலுயர்ந்து வாய்விட்டுச் சுழலுதற்கிடனான பெரிஅ அழற்காட்டின் கண்ணும்; நாடும் என்
உள்ளத்தினும்-விரும்புகின்ற அடியேனுடைய நெஞ்சிடத்தினும்; ஒருபால் பசுங் கொடி நிறைபாட்டு
அயர-தன்னிடப்பாகத்திலிருக்கும் பசிய பூங்கொடி போல்வாளாகிய உமையம்மையார் தன்
ஆடலுக்கேற்ப இலக்கணம் நிறைந்த வெண்டுறைப் பாட்டைப் பாடவும்; பாரிடங் குனிப்ப
ஆடிய பெருமான்-பேய்க்கூட்டங்கள் களிக்கூத்தாடவும்; கூத்தாடிய பெருமானும் என்க.
(வி-ம்.) சுடலை-சுடுகாடு,
சூறை-சுழல்காற்று. திசைநின்றெழாது என்றது ஞெரேலென ஒவ்வோரிடத்தே தோன்றி என்றவாறு.
சுடுகாட்டினும் என் உள்ளத்தினும் ஒப்ப நின்று ஆடிய பெருமான் என்றவாறு. ஒருபால்-இடப்பாகம்.
பசுங்கொடி-உமையம்மையார். நிறைபாட்டு: வினைத்தொகை. இறைவன் கூத்தாடுங்கால் அம்மை
பாடுவாள் என்னுமிதனை,
ஆறறி
யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக்
கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கிளி
மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி; |
(கலி. க. கட.) எனவரும்
கலித்தொகையாலும் உணர்க. அயர, குனிப்ப, ஆடிய பெருமான் என்க. பாரிடம்-பேய்
34-39:
வையகத்து...............................................தம்மினும்
(இ-ள்)
வையகத்து உருவினர் மலரா அறிவினை-நிலவுலகத்தில் உடல்கொண்டு பிறகும் மாந்தருடைய
கல்வி கேள்விகளால் மலராத சிற்றறிவினை; நிரை புலன் மறைத்த புணர்ப்பது போல-நிரல்பட்ட
சுவை முதலிய ஐம்புலன்களும் மறைத்த செயல் போல; குளிர் கொண்டு உறையும் தெளிநீர்
வாவியை-குளிர்ச்சியைக் கொண்டு உறைகின்ற தெளிந்த நீரையுடைய குளத்தை; வள்ளை செங்கமலம்
கள் அவிழ் ஆம்பல் பாசடை மறைக்கும்-வள்ளைக் கொடி செந்தாமரை, தேன்றுளிக்கும் ஆம்பல்
முதலிய இவற்றின் பசிய இலைகள் மறைத்தற்குக் காரணமான; கூடற்பெருமான்-மதுரை மாநகரத்தில்
எழுந்தருளிய பெருமானும் ஆகிய இறைவனுடைய; செந்தாள் விடுத்து உறை அந்தர்கள் தம்மினும்-செவ்விய
திருவடிகளை மறந்து வாழுகின்ற அறிவில்லாதவர் தம்மைக் காட்டினும் என்க.
(வி-ம்.) உருவினர்-உருக்கொண்டு
பிறக்கும் மாந்தர். மலரா அறிவு-கல்வி கேல்விகளால் விரியாத புல்லறிவு. புலன்-சுவை
ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்துமாம். புணர்ப்பு-செயல். அது: பகுதிப்பொருள் விகுதி.
கள்-தேங் ஆம்பல்-அல்லி. புல்லறிவினைப் புலன்கள் தம்முள் மறைப்பதுபோல் வள்ளை
முதலியன நீரை மறைக்கும் குளத்தையுடைய கூடல் என்க. மலர்ஆ அறிவினை எனக் கண்ணழித்துக்கொண்டு
மலர்ச்சி ஆகா நின்ற அறிவினை என்பர் உரையாசிரியர். அந்தர்-குருடர் ஈண்டு அறிவில்லாதார்
என்க.
40-41.
மூவா................................தோழியை
(இ-ள்) மூவாத்தனி
நிலைக்கு இருவரும் ஓர் உயிர்-செயலின்கண் இருவரும் ஒருவருக் கொருவர் முந்தாக ஒப்பற்ற
தன்மையுடைமையால் இருவருக்கும் உயிர் ஒன்றேயாகவும்; இரண்டு அனக் கவைத்த-இவர்க்கு
உடல்மட்டும் இரண்டு என்னும்படி வேறுபட்டு; ஆண்டு அருள் நல் தோழியை-தன்னைப் பாதுகாத்து
அருள் செய்த நன்மையையுடைய தன் உசாத்துணைத் தோழியை என்க.
(வி-ம்.) மூவா-முந்தாத.
தனி நிலைக்கு மூன்றாவதன்கண் நான்கனுருபு மயங்கிற்று. தனி நிலையால் என்க. இருவரும்
ஓருயிராகவும் உடலால் மட்டும் இரண்டென கவைத்த தோழி என்க. கவைத்த தோழி-ஆண்டருள்
தோழி நற்றோழி எனத்தனித்தனி கூட்டிக் கொள்க தோழியைப் பிரியலாகமைக்கு இருவருக்கும்
உயிர் ஒன்று என்றும் ஆண்டருளியவள் என்றும் நற்றோழி என்றும் ஏதுக் கூறினாள்.
42-43:
செரு.................................போல
(இ-ள்) செரு விழும்
இச்சையர்-போரின் கண் அழுந்திய அவாவினையுடைய மறவர்; தமது உடல் பெற்ற இன்புகள்
நோக்கா இயல்வது போல-தம்முடைய உடம்பினாலே நுகர்ந்த இன்பங்களைப் பொருளாகக் கருதாத
தன்மை போல என்க.
(வி-ம்.)
போர் மறவர் தாம் நுகரும் ஐம்புல இன்பங்களையும் பொருளாகக் கொள்ளாமல் போரொன்றனையே
குறிக்கொண்டு சென்றாற்போல
என்பது கருத்து. தலைவி தலைவன் ஒருவனையே விரும்பி ஈண்டுத் தோழியோடு பண்டு நுகர்ந்திருந்த
இன்பங்கள் அனைத்தையும் துறந்து போனாள் என்பது கருத்து.
44: மருங்கு........................................விட்டு
(இ-ள்) பின் மருங்கு
நோக்காது ஒருங்கு விட்டு அகல-அவள் தன் பின் புறத்தையும் பக்கத்தையும் நோக்காமல்
எம்மோடு ஒருங்கஎ விட்டு நீங்குதற்கு என்க.
(வி-ம்.) பின் மருங்கு
நோக்காது என மாறுக. பின் நோக்குதலாவது சிந்தனையால் பின் புறத்தே நோக்கி நற்றாய்
முதலியோரை நினைவு கூர்தல். மருங்கு நோக்குதலாவது தன் பக்கத்தே கண்ணல் நோக்குதல்.
அங்ஙனம் நோக்குழித் தன் நிழல்போல எப்பொழுதும் இருக்கின்ற தோழியைக் காணுவள்.
கண்டக்கால் அவளைப் பிரிந்து போதல் இயலாது. ஆகவே அவள் பிரியுங்கால் பின்னும்
மருங்கும் நோக்காமலே பிறிந்தனள் என அவள் வன்கண்மையை வியந்தபடியாம்.
44-46:
அகல.............................................எடுத்தே
(இ-ள்) ஒருவன் அன்பு
எடுத்து-பிறள் மகன் ஒருவன் காட்டிய ந்பை மேற்கொண்டு; அருந்தழல் சுரத்தில்-பொருத்தற்கரிய
தீயையொத்த பாலை நிலத்தின் கண்ணே; அகல உள்ளம் பொருந்தியது எப்படி-செல்ல அவள்
நெஞ்சம் ஒருமித்தது எங்ஙனம் ஆற்றுவேன்? என்க.
(வி-ம்.)
மடந்தை என்னை நீங்கினும் நீங்குக. ஆயத்தை நீங்கினும் நீங்குக. செவிலியைப் பிரிகினும்
பிரிக, நாகணவாய்ப்புள் முதலியவற்றின் இன்பத்தை இழப்பினும் இழக்க; உயிரொன்றாகிய
இத்த்ழியைப் பிரிதற்கு எப்படித்தான் துணிந்தனளோ? என்று வியந்தவாறு. இனி யான்
எங்ஙனம் ஆற்றுகேன் என்பது குறிப்பெச்சம். அவள் பிரியலாகாமைக்கு மற்றுமோர் ஏதுக்
கூறுவாள் அருந்தழற் சுரத்தில் அகல என்றாள். ஒருவன் என்றது பிறள்மகன் ஒருவன் என்பது
பட நின்றது.
இனி
இதன்கண் என்னையும் ஒருவுக என்றது, தன்னைக் குறித்துக் கூறியது. அருந்தழற் சுரத்தில்
என்றது, அச்சம் சார்தல் என்க, கருந்தலை.............இழக்குக என்றது, யாம் இவற்றைக்
கண்டு வருந்த இவற்றை எமக்கு ஒழித்து நீரிலா ஆரிடைப் போயினள் என்றவாறு. தோழி
தேஎத்தும் எனப் பொதுப்படக் கூறியதனால் செவிலி முதலியோரைக் குறித்துக் கூறினமையும்
கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|