பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 70

நேரிசையாசிரியப்பா

 
   
5
  புட்பெயர்க் குன்றமு மெழுவகைப் பொருப்பு
மேல்கூடற் கவிழ்முகப் பொரியுடன் மாவு
நெடுங்கடற் பரப்பு மடுந்தொழி வரக்கரு
மென்னுளத் திருளு மிடைபுகுந் துடைத்த
மந்திரத் திருவேன் மதங்கெழு மயிலோன்
10
  குஞ்சரக் கொடியொடும் வள்ளியங் கொழுந்தொடும்
கூறாக் கற்பங் குறித்துநிலை செய்த
புண்ணியங் குமிழ்ந்த குன்றுடைக் கூட
னிறைந்துறை கறைமிடற் றறங்கெழு பெருமான்
போரு ளளித்த மாதவர் போல
15
  முன்னொரு நாளி லுடலுயிர் நீயென
வுள்ளங் கரிவைத் நுரைசெய்த வூரர்
தம்மொழி திரிந்து தவறுநின் றுளவே
லவர்குறை யன்றா லொருவன் படைத்த
காலக் குறிகொ வன்றியு முன்னைத்
20
  தியங்குட லீட்டிய கருங்கடு வினையாற்
காலக் குறியை மனந்தடு மாறிப்
பின்முன் குறித்தநம் பெருமதி யழகுகொ
னனவிடை நவிற்றக் கனவிடைக் கண்ட
வுள்ளெழு கலக்கத் துடன்மயங் கினமாற்
25
  குறித்தலிவ் விடைநிலை யொன்றே
மறிக்குலத் துழையின் விழிநோக் கினளே.

(உரை)
கைகோள் : களவு தலைவி கூற்று

துறை : தேறாதுபுலம்பல்

     (இ-ம்.) இதற்கு “மறைந்தவற் காண்டல்” (தொல், களவி, 20) எனவரும் நூற்பாவின்கள் ‘நொந்து தெளிவு ஒழிப்பினும்’ எனவரும் விதி கொள்க.

22: மறி.................................நோக்கினனே

     (இ-ள்) மறிக்குலத்து - மான் கூட்டத்தினுள் வைத்து ; உழையின் விழி நோக்கினளே-மருண்டு நோக்குகின்ற பெண்மான் விழிகளைப்போன்ற விழிகளை யுடையோய் என்க.

     (வி-ம்.) மறி - மான், உழை - பெண்மான், உழையின் விழி போன்ற நோக்கினையுடையோய் என்க.

1-5: புன்....................................வேல்

     (இ-ள்) புள் பெயர் குன்றமும் - குருகு என்னும் பறவையினது பெயரையுடைய மலையும்; எழுவகைப் பொருப்பும் - எழு வகைப்பட்ட வேறு மலைகளும்; கடல்மேல் கவிழ்முகம் பொரி உடல் மாவும் - கடலின்மேல் கவிழ்ந்த தலையினையும் பொருக்குடைய உடலைமுடைய மாமர வடிவமான சூரபதுமனும்; நெடுங்கடல் பரப்பும் - கொல்லுந் தொழிலையுடைய அரக்கரும்; என் உனத்து இருளும் - என் நெஞ்சத்தின்கண் உள்ள மலமாகிய இருளும்; இடை புகுந்து உடைத்த மந்திரத் திருவேல் - ஆகிய இவற்றினிடையே புகுந்து அழித்தொழித்த மறைமொழியினையுடைய அழகிய வேற்படையினையும் என்க.

     (வி-ம்.) புள் : குருகு (கிரவுஞ்சம்) கவிழ்முகம் - கவிழ்ந்த தலை, கடல்மேல் என மாறுக. பொரி - பொருக்கு, அடுந்தொழில் - கொல்லுந்தொழில், இருளும் ஆகிய இவற்றின் புகுந்து என்க. மந்திரவேல் - மந்திர சக்தியினையுடைய வேல்.

5-10: மதம்...............................போல

     (இ-ள்) மதம் கெழு மயிலோன் - வலிமை பொருந்திய மயிலூர் தியையுமுடைய முருகக்கடவுள்; குஞ்சரக் கொடியொடும் வள்ளி அம் கொழுந்தொடும்-தெய்வயானை நாய்ச்சியாரோடும் இளைய வள்ளி நாய்ச்சியாரோடும்; குறித்துக் கூறாக்கற்பம் நிலை செய்த-வரையறுத்துக் கூறப்படா ஊழிதோறும் நிலைபெற்றிருந்த; புண்ணியம் குமிழ்த்த குன்று உடை கூடல் - அறமே திறண்டு வடிவங் கொண்டாற்போன்ற திருப்பரங்குன்றமென்னும் மலையை ஒருபாலுடைய மதுரை நகரத்தின்கண்; நிறைந்து உறை கறைமிடற்று அறம்கெழு பெருமான்- நிறைந்து எழுந்தருளியிருக்கின்ற நஞ்சு பொருந்திய மிடற்றினையுடைய அறவாழி அந்தணனாகிய சிவபெருமான் ; பேர் அருள் அளித்த மாதவர் போல - தனது பெரிய திருவருளை வழங்கப்பெற்ற பெரிய தவத்தினையுடைய மெய்யடியார் போல என்க.

     (வி-ம்.) மதம் - வலிமை, மயிலோன் - மயிலூர்தியையுடைய முருகக்கடவுள், குஞ்சரக்கொடி-தெய்வயானை நாய்ச்சியார், வள்ளியங் கொழுந்து - வள்ளிநாய்ச்சியார், பூங்கொடி போன்ற தெய்வானையும் கொழுந்துபோன்ற வள்ளியும் என்க. கொடியோடும் கொழுந்தொடும் என்புழிச் செய்யுளின்ப முணர்க. குறித்துக் கூறாக்கற்பம் என மாறுக. நிலைசெய்தல்- நிலைத்திருத்தல். புண்ணியங் குமிழ்த்தாற்போன்று, கறை - களங்கம், பெருமான்- சிவபெருமான், மாதவர்-பெரிய தவத்தினையுடைய மெய்யடியார்

11-13: முன்.................................உளவேல்

     (இ-ள்) முன் ஒரு நானில் - முன்னர் ஒரு நாளிலே ; உள்ளம் கரி வைத்து உடல் உயிர் நீ என உரைசெய்த ஊரர்; தமது நெஞ்சத்தையே சான்றாக வைத்து எனதுடலுக்கு நீயே உயிர் என்று உறுதி கூறிய நம்பெருமான்; தம்மொழி திரிந்து- தமது சொல்லினின்றும் மாறுபட; தவறு நின்று உளவேல் - அது காரணமாக அவர்பால் குற்றம் உண்டாருமாயின் என்க.

     (வி-ம்.) முன்னொருநாள் என்றது நானும் தலைவனும் ஊழ்வினை காரணமாக எதிர்ப்பட்ட இயற்கைப் புணர்ச்சிக் காலத்தை என்க. கரி - சான்று, திரிந்து - திரிய

14-18: அவர்...................................கொல்

     (இ-ள்) அவர்குறை அன்றே - அஃது அவருடைய குற்றம் ஆகாது; ஒருவன் படைத்த காலக்குறிகொல் - ஒருவனாகிய பிரமனாலே படைக்கப்பட்ட காலத்தின் இயல்போ ; அன்றியும் - அல்லாமலும் ; முன்னைத் தியங்கு உடல் ஈட்டிய கருங்கடு வினையால் - முற்பிறப்பிலே மயங்கிய நம்முடலானது செய்த கரிய தீவினையினால் வந்த ; காலக்குறியை - காலத்தின் குறிப்பினை ; மனந் தடுமாறி மனம் குழம்பி ; பின்முன் குறித்த - பின்னும் முன்னும் நினைத்த ; நம் பெருமதி அழகு கொல் - நமது பெரிய அறிவினது அழகு இருந்தபடியோ? யான் அறிகின்றிலேன் என்க.

     (வி-ம்.) “முன்னொருநாள் என்றது தானும் தலைவனும் ஊழ்வினை காரணமாக எதிர்ப்பட்ட இயற்கைப் புணர்ச்சிக் காலத்தை என்க.

     (வி-ம்.) “ஊழி (பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்காழி எனப்படுவார்” (குறள்-989) என்பது பற்றி அவர் வாய்மையினின்றும் பிறழார் என்பாள் அவர் குறை அன்று என்றாள். “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்” (குறள்.380) என்பதுபற்றி முன்னை உடல் ஈட்டிய கடுங்கடு வினையால், மனந் தடுமாறிப் பின்முன் குறித்த நம் பெருமதி அழகுகொல் என்றாள் அழகு; இகழ்ச்சிக் குறிப்பு

19-21: நனவு.....................................ஒன்றே

     (இ-ள்) நனவு இடை நவிற்ற - நனவிலே சொல் ; கனவு இடை கண்ட- அதைக் கனவின்கண் கண்டதாலே; உள் எழு கலக்கத்துடன்-நெஞ்சத்திலே தோன்றா நின்ற கலக்கத்தோடே; மயங்கினம் ஆல்-யாம் இங்ஙனம் மயங்கினோம் ஆதலால் ; குறித்த இடைநிலை - யாம் துன்பமாக நினைந்த இப்பொழுது உயிருடன் நிலைத்திருத்தல் ஒன்றுமே ஆற்றுதற்கரிதாய் இருந்தது என்க.

     (வி-ம்.) நனவு - விழிப்பு நிலையின்கண் நிகழும் நிகழ்ச்சி, உள் - நெஞ்சம். இடைநிலை - உயிருடன் நிலைத்திருக்கும் இந்நிலை. ஆற்றுதற்கரிதாய் இருந்தது என்பது குறிப்பெச்சம்.

     இதனை, நோக்கினளே ! மயிலோன் குன்றுடைக் கூடற்பெருமானளித்த மாதவர் போல, முன்னொருநா ளிவ்வுள்ளங் கரிவைத்து உரைசெய்த வூரர் தம்மொழி திரிந்து தவறு நின்றுளவேல், அவர் குறையன்றால், காலக்குறிகொல், அன்றியும் நம் பெருமதி யழகுகொல், உள்ளெழு கலக்கத்துடன் மயங்கினமால், இவ்விடைநிலை யொன்றே ஆற்றுதற்கரிதாய் இருந்து என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.