|
|
செய்யுள் 71
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
ஆயிரம்
பணாடவி யாவுவா யணைத்துக்
கருமுகி னிறத்த கண்ணனிற் சிறந்து
நிலையுட லடங்கத் திருவிழி நிறைத்துத்
தேவர்நின் றிசைக்குந் தேவனிற் பெருகிக்
குருவளர் மரகதப் பறைதழை பரப்பி |
10
|
|
மணிதிரை
யுகைக்குங் கடலினிற் கவினி
முள்ளெயிற் றரவ முறித்துயிர் பருகிப்
பொள்ளென வானத் தசனியிற் பொலிந்து
பூதமைந் துடையுங் காலக் கடையினு
முடறழை நிலைத்த மறமிக மயிலோன் |
15
|
|
புரந்தரன்
புதல்வி யெயினர்தம் பாவை
யிருபா லிலங்க வுலகுபெற நிறைந்த
வருவியங் குன்றத் தணியணி கூடற்
கிறையவன் பிறையவன் கறைகெழு மிடற்றோன்
மலர்க்கழல் வழுத்துகங் காதவர் பாசறை |
20
|
|
முனைப்பது
நோக்கிவேன் முனையவி ழற்றத்துப்
பெரும்பக லிடையே பொதும்பரிற் பிரிந்த
வளைகட் கூறாகிர்க் கூக்குரன் மொத்தையைக்
கருங்கட் கொடியினங் கண்ணறச் சூழ்ந்து
புகையுடல் புடைத்த விடவினை போல |
25
|
|
மனங்கடந்
தேறா மதில்வளைத் தெங்குங்
கருநெருப் பெடுத்த மறமருண் மாலை
நின்வாற் கேவர் நல்குநர் ரின்வரல்
கண்டுட லிடைந்தன காட்டுவல் காண்மதி
மண்ணுடல் பசந்து கறுத்து விண்ணமு |
30
|
|
மாற்றா
தழந்றுகாற் றின்முக மயங்கி
யுடுவெனக் கொப்பு ளுடனிறை பொடித்த
தீங்கிவற் றடங்கிய விருதிணை யுயிர்களுந் தம்முடன்
மயங்கின வொடுங்கின வுறங்கின
வடங்கின வலிந்தன வயர்ந்தன கிடந்தன |
35
|
|
வெனப்பெறின்
மாலை யென்னுயி ருளைப்பது
மவர்திற னிறப்பது மொருபுடை கிடக்க
வுள்ளது மொழிமோ நீயே விண்ணுழை
வந்தனை யென்னில் வருகுறி கண்டிலன்
மண்ணிடை யெனிலோ வவ்வயி னான |
|
|
கூடிரின்
றனையெனிற் குறிதவ றாவாற்
றேம்படர்ந் தனனெனிற் றிசைகுறிக் குநரா
லாதலி னின்வர வெனக்கே
யோதல் வேண்டும் புலன்பெறக் குறித்தே. |
(உரை)
கைகோள் : களவு. தலைவிகூற்று
துறை : பொழுதுகண்டு
மயங்கல்.
(இ-ம்.) இதற்கு,
மறைந்தவற் காண்டல் (தொல். களவி. 20) எனவரும் நூற்பாவின்கண் பொழுதும் ஆறும்
புரைவது அன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும் எனவரும் விதி கொள்க.
1-4:
ஆயிரம்.................................பெருகி
(இ-ள்)
ஆயிரம் பண அடவி அரவுவாய் அணைத்து - ஆயிரமாகிய படக்காட்டினையுடைய ஆதிசேடனென்னும்
பாம்பினை வாயிற் கவ்விக்கொண்டு; கருமுகில் நிறத்த கண்ணனின் சிறந்து - கரிய நிறமுள்ள
முகிலைப்போன்ற நிறமுள்ள கண்ணனைப் போலச் சிறப்புற்று ; நிலை உடல் அடங்க திருவிழி
நிறைத்து - நிலையான தன் உடல் முழுதும் அழகிய கண்களை நிறைத்து ; தேவர் நின்று இசைக்கும்
தேவனில் பெருகி - தேவர்களெல்லாம் எழுந்து நின்று வாழ்த்துதற்குக் காரணமான இந்திரனைப்போலப்
பெருமை பெற்று என்க.
(வி-ம்.)
ஆதிசேடனுக்கு ஆயிரம் படங்கள் உண்மையின் ஆயிரம் பனாடவி அரவு எனப்பட்டது. பணம்.
படம், அடவி: உவமவாகு பெயர், அரவு-ஆதிசேடன், கண்ணன் - மோயோன், அடக்க - முழுவதும்
தேவர் நின்றிகைக்கும் தேவன்- இந்திரன் - பெருகுதல் - பெருமை எய்துதல்.
5-10:
குரு..................................................மயிலோன்
(இ-ள்)
குருவளர் மரகதம் பறை தழை பரப்ப - நிறம் மிகாநின்ற மரகதமணிபோலும் நிறமுடைய இறகுகளைத்
தாழ விரித்து
; மணிதிரை உகைக்கும் கடலினில் கவினி - முத்து முதலிய மணிகளை அலைகளால் ஒதுக்குகின்ற
கடலைப்போல அழகெய்தி ; முள் எயிறு அரவம் முறித்து உயிர் பருகி- முட்போன்ற பற்களையுடைய
பாம்புகளை அலகாற் கொத்தித் துணித்து அவற்றின் உயிர்களைக் குடித்து ; பொள் என
வானத்து அசனியின் பொலிந்து-ஞெரேலென்று வானத்தின் கண்ணதாகிய இடி முழக்கம்போல
முழங்கி ; பூதம் ஐந்து உடையும் காலக் கடையினும் - நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களும்
அழிதற்குக் காரணமான ஊழி இறுதிக்காலத்தினும் அழியாமல் ; உடல்தழை நிலைத்த மறம்
மிகு மயிலோன் - உடல் தளிர்த்து நிலைபெற்ற வலிமை மிக்க மயிலை ஊர்தியாக உடையவனும்
என்க.
(வி-ம்.)
குரு - நிறம், மரகதம் போலும் பறை என்க. பறை - இறகு, தழையைப் பரப்பி எனல் வேண்டிய
வினையெச்சத் தீறுகெட்டது எயிறு - பல், முறித்தல் - துணித்தல், உயிர் பருகி என்றது
. கொன்று என்றவாறு, பூதம் ஐந்தும் எனல் வேண்டிய முற்றும்மை தொக்கது. பூதம் ஐந்தாவன
நிலம், நீர், வளி, தீ வெளி என்பன. கடைக்காலம் என்பது காலக்கடை என மாறி நின்றது.
மயிலோன்-மயிலை ஊர்தியாக உடையவன்.
11-15:
புரந்தரன்.........................................காதலர்
(இ-ள்)
புரந்தரன் புதல்வி-இந்திரன் மகளாகிய தெய்வயானை நாய்ச்சியாரும் ; எயினர் தம்
பாவை - வேடர் மகளாகிய வள்ளி நாய்ச்சியாரும்; இருபால் இலங்க - தன் இண்டு பக்கங்களினும்
விளங்காநிற்ப; உலகு பெற நிறைந்த அருவி அம குன்றத்து - உலகிலுள்ள அடியால் தாம் தரம்
வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளற்பொருட்டு நிறைந்தெழுந்தருளிய அருவி நீரினையுடைய
திருப்பரங்குன்றத்தை; அணி அணி கூடல்-தனக்கு அணிகலனாக அணிந்துள்ள நான்மாடக்வடல்
என்னும் திருப்பகுதிக்கு; இறைவன் - கடவுளும்; பிறையவன்- பிறையை அணிந்தவனும் ; கறைகெழு
மிடற்றேனான் - கறுநிறம் அமைந்த மிடற்றினையுடையவனும் ஆகிய சிவபெருமானுடைய ; மலர்க்
கழல் வழுத்தும் நம் காதலர் . செந்தாமரைமலர் போன்ற வீரக் கழலணிந்த திருவடிகளை
இடையறாது நினைந்து வாழ்த்துகின்ற நம் பெருமான் என்க.
(வி-ம்.)
புரந்தரன் - இந்திரன், எயினர் - வேடர், எயினர் பாவை - வள்ளி, தெய்வயானையும்
வள்ளியும் இருபுடையினும் இலங்க எழுந்தருளிய குன்றம் என்க. உலகு: ஆகு பெயர்; உலகில்
வாழும் அடியார் என்க. அடியார் திருப்பரங்குன்றத்தே எழுந்தருளிய இறைவன்பான் தாம்
வேண்டும் வரங்களைப் பெறுவர் என்பதனை.
|
சீறடியவர் சாறுகொள
வெழுந்து
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்
நாறுகமழ் வீயும் கூறுமிசை முழுவதும்
மணியு்ம் கயிறும் மயிலும் குடாரியும்
பிணிமுக முளப்படப் பிறவு மேந்தி
அருவரை சேராத் தொடுநர்
கனவிற் றொட்டது கைபிழை யாகாது
நனவிற் சேஎப்பநின் னளிபுனல் வையை
வருபுனர் அணிகென வரங்கொள் வோரும்
கருவயி றுறுகெனக் கடம்படு வோரும்
ஐயம ரடுகென வருச்சிப் போகும் (பரி-அ,
)
|
எனவரும் பரிபாடலானு
முணர்க.
கூடிலிறைவன்
- சோமசுந்தரக்கடவுள், கறை - களங்கம், மலர்க்கழல் ; அன்மொழித் தொகை.
15-20:
பாறை..............................................வினைபோல
(இ-ள்)
பாசறை முனைப்பது நோக்கி - பாசறையிலுள்ளோர் எதிர்ப்பதை நோக்கி, வேல் முனை அவிழ்
அற்றத்து - வேலினது நுனி உறையினின்றவிழ்ந்த செவ்வியிலே ; பெரும் பகலிடையே பொதும்பரில்
பிரிந்த-நண்பகற் பொழுதிலேயே மரப் பொந்தினின்றும் வெளிப்பட்ட ; வளை கண் கூர்
உகிர் கூக்குரல் மொத்தையை-வளைந்த கண்களையும் கூரிய நகங்களையும் கூவுகின்ற குரலினையுடைய
காக்கைக் கூட்டங்கள் ; கண் அறச் சூழ்ந்து - சிறிதும் கண்ணோட்டமின்றிச் சுற்றிக்கொண்டு
; புகை உடல் புடைத்த விட வினை போல- புகைபோன்ற நிறத்தினையுடைய அதன் உடலைக் குத்திய
கொடிய செயல்போல என்க.
(வி-ம்.)
பாசறை - படைவீடு, முனைத்தல் - எதிர்த்தல், முனை - நுனி, அற்றம் - செவ்வி, பெரும்பகல்
. நண்பகல், பொதும்பர் - பொந்து, மொத்தை- கோட்டான் ; கூகை, நண்பகலில் கூகைக்குக்
கண் தெரியாது. ஆதலால் அதன் பகையாகிய காக்கை அதனைப் பகலிலே வெளியிடங்களிலே
காணிற் கொன்றுவிடுதல் இயல்பு இனை,
பகல்வெல்லுங்
கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது |
(குறள்
- 481) |
எனவருந் திருக்குறளானும்
உணர்க. கொடி - காக்கை, கண் - கண்ணோட்டம், விடவினை - விடம் போன்ற கொடுந்தொழில்,
விடம் - நஞ்சு.
21-24: மனம்...................................காண்மதி
(இ-ள்)
மனம் கடந்து ஏறாமதில் வளைத்து-மனந்தானும் கடக்க வொண்ணாத மதிலால் உலகை வளைத்து;
எங்கும் கரு நெருப்பு எடுத்த- எல்லாவிடங்களிலும் கரிய நெருப்பினை வளர்த்துள்ள; மறம்
அருள் மாலை- கொடுமையையே வழங்கா நின்ற மாலைக்காலமே கேள் ; நின் வரற்கு ஏவர்
நல்குநர்- இங்ஙனம் கொடுமைசெய்து நீ வருதற்கு யார்தான் நின்னைப் படைத்துவிட்டனரோ?
அறிகின்றிலேன், அதுகிடக்க ; நின்வரல் கண்டு உடல் இடைநத்ன காட்டுவல் காண் -உன்னுடைய
வருகையைக் கண்டு உடல் வருந்தின பொருள்களை யானே நினக்குக் காட்டுவேன் அவற்றை நீ
பார்ப்பாயாக என்க.
(வி-ம்.)
மதில் என்றது எல்லாப் பக்கங்களிலும் செறிந்துள்ள இருட் செறிவினை, கருநெருப்பு :
இல்பொருள் உவமை இஃது இருளுக்குவமை என்க. இத்தகைய கொடுமை செய்யும் நின்னைப் படைத்து
விடுத்தார் யாவர் கொலோ ! என வியப்பாள் நின் வரற்கு ஏவர் நல்குநர் என்றான்.
வால் - வருகை, இடைதல் -வருந்துதல், மதி, முன்னிலையரை - கருநெருப்பெடுத்த மாலை மற
மருள் மாலை எனத் கண்ணழித்து மறத்தன்மையுடைய மாலையே, எனவும், மயக்கும் மாலையே எனவும்
பொருள் கோடலுமாம், இனி இதனோடு,
ஓங்கா நின்ற
விருளாய் வந்துலகை விழுங்கி மேன்மேலும்
வீங்கா நின்ற கருநெருப்பி னிடையே யெழுந்த வெண்ணெருப்பே |
(இரா. பல, மிதிலை,
76) எனவரும் கம்பர் செய்யுளையு்ம் ஒப்பு நோக்குக நின்னால் தோற்றுவிக்கப்பட்ட
தீமைகளின் விளைவினை நீயே காணும் அறிவுடையையல்லை எனினும் யான் காட்டுவேன் கண்டுணர்க
என்பாள் காட்டுவள் காண்மதி என்றாள்.
25-31:
மண்......................................எனப்பெறின்
(இ-ள்)
மண்உடல் பசந்து கறுத்தது-நின் வருகையால் இந்நிலஉலகம் பசப்படைந்து பின் கறுத்தொழிந்தது
; விண்ணமும் ஆற்றாது அழன்று- வானந்தானும் நின் வரவினால் உண்டான துன்பத்தைப் பொறாதுபுழுங்கி;
காற்றின் முக்ம் மயங்கி - காற்றினால் முகம் வேறுபட்டு ; உடு எனக்கொப்புள் உடல்
நிறை பொடித்து - விண்மீன் என்று சொல்லும்படியான கொப்புளங்கள் தன் உடல் நிரம்ப
உண்டாயிற்று ; ஈங்கு இவற்று அடங்கிய இருதிணை உயிர்களும் ; இங்குக் கூறப்பட்ட இரண்டுலகத்தினும்
அடங்கியிருக்கின்ற உயர்திணையும் அஃறிணையுமாகிய இருவேறுவகை உயிரினங்களும் ; தம்
உடல் - தம்முடைய உடல் ; மயங்கின - மயக்கமெய்தினவு்ம் ; ஒடுங்கின - இளைத்தனவும்;
உறங்கின -அறிவகன்று உறங்கினவும் ; அடங்கின- இருக்குமிடம் தெரியாமல் அடங்கினவும்
; அவிந்தன - இறந்தனவும் ; அயர்ந்தன- தம்மையே
மறந்தனவும் ; கிடந்தன- செயலற்றுக்கிடந்தனவும் ; எனப்பெறின்- ஆயின என்று கூறப்படுமாயின்
என்க.
(வி-ம்.)
இவற்று - இவ்விரண்டுலகத்தினும், இருதிணை- உயர்திணை, அஃறிணை, இனி நிலைத்திணையும்
இயங்குதிணையும் எனினுமாம்.
31-37:
மாலை.........................குறிக்குநரால்
(இ-ள்)
மாலை - மாலைக்காலமே ; என்உயிர் உளைப்பதும் - அளியள் தமியள் பெண்ணென்றிரங்காமல்
என்உயிரை வருத்துவதும் ; அவர் திறம் நிற்பதும் -எம்மிருவர்க்கும் - பொதுவாகிய நீ
நடுநில்லாது எம்பெருமான் திறத்திலே நின்று ஒழுகுவதும் அகிய இக் குற்றங்கள் ; ஒருபுடைகிடக்க
- ஒருபுறமிருக்க ; உள்ளது மொழிமோ - யாம் வினவும் ஓர் உண்மையை நீ கூறு வானத்திலிருந்து
வந்தாய் என்று கூறின் ; வருகுறி கண்டிலன் - நீ வந்த சுவடொன்றனையும் யான் கண்டிலேன்;
மண்ணிடை எனிலோ-இம்மண்ணுலகத்திலிருந்தே வந்தாய் என்றாலோ; அவ்வயின் ஆன-அவ்விடத்தினும்
அப்படியே சுவடொன்றும் கண்டிலேன் காண் இனி ; கூடிநின்றனை எனின் - வானுலகத்தினும்
மண்ணுலகத்தினும் ஒருசேரப் பொருந்தி நின்றாய் என்றாலோ ; குறிதவறா ஆல் - உண்மையான
அடையாளம் தவறமாட்டா ; தேம்படர்ந்தனன் என்னில் - இங்ஙனமின்றி யாதானும் ஒரு நாட்டிலிருந்து
வந்தேன் என்று நீ சொல்லுவாயானால் ; திசை குறிக்குநரால் - அந்நாடிருக்கும் திசையினை
இன்னதென்று உலகினர் குறித்துக் கூறுவர் (அங்ஙனம் கூறுவாருமிலர்) என்க.
(வி-ம்.)
மாலை : அண்மை விளி, என் உயிர் உளைப்பதும் என்பது அளியளும் தமியளும் பெண்ணுமாகிய
எனக்கிரங்காமல் என் உயிரை வருத்துவதும் என்பது படநின்றது. இனி அவர்திறம் நிற்பதும்
என்பது எம்மிருவர்களும் பொதுவாகிய நீ நடுநிலைமையிற் பிறழ்ந்து அவர் சார்பில் நிற்பதும்
என்பது படநின்றது. அவர்திறம் நிற்றலாவது அவரை வருத்தாது நிற்றல், வருகுறி - வந்த
சுவடு. விண்ணினு்ம் மண்ணினும் ஒருசேரப் பொருந்தி நின்றாயாயின் அவ்வீரிடத்தும் சுவடிருத்தல்
வேண்டும் அங்ஙனம் இல்லை என்றவாறு. தேம் - நாடு. குறிக்குநர் என்றது குறிப்பார் அங்ஙனம்
குறிப்பாரிலர் என்பதுபட நின்றது.
38-39:
ஆதலின்...................................குறித்தே
(இ-ள்)
ஆதலின் - ஆதலால் ; நின்வரவு எனக்குப் புலன்பெற - நின்வரவு எனக்குப் புலனாகும்படி
; குறித்து ஓதல் வேண்டும் - சுட்டி நீ எனக்குக் கூறுதல் வேண்டும் என்க.
(வி-ம்.)
ஆதலின் என்றது இவ்வாறு நின்வரவு எனக்குப் புலப்படுதலின்மையால் என்றவாறு.
இனி
இதனை, மறமிகு மயிலோன் அருவியங் குன்றத் தணியணி கூடற் கிறையவன் கழல் வழுத்து நங்காதலர்,
பாசறை முனைப்பது நோக்கி, வேன் முனையவி ழற்றத்து, மொத்தையைக் கருங்கண் கொடியினஞ்
சூழ்ந்து புடைத்த விடவினைபோல எங்குங் கருநெருப்பெடுத்த மறமருண்மாலை நின்வரல் கண்டு
உடலுடைந்தன, காட்டுவல் காண்மதி, மண்ணுடல் பசந்தது, கறுத்தது, விண்ணமும் உருவெனக்
கொப்புளுடனிறை பொடித்தது, இவற்றிடங்கிய இருதிணையுயிர்களும் உடல்மயங்கின, எனப்பெறின்,
மாலை என்னுயிருளைப்பதும் அவர் திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க, உள்ளது மொழிமோ,
வருகுறி கண்டிலன், அவ்வயினான, ஆதலின், நின்வர வெனக்கு ஓதல் வேண்டுமென வினை முடிவு
செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|