பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 72

நேரிசையாசிரியப்பா

 
   
5
  திருமல ரிருந்த முதியவன் போல
நான்முகங் கொண்டறி நன்னர்நெஞ் சிருந்து
வேற்றருட் பிறவி தோற்றுவித் தெடுத்து
நிலமிரண் டளந்த நெடுமுகின் மான
வரக்கர்தங் கூட்டந் தொலைத்துநெய் யுண்டு
10
  களிற்றுரி புனைந்த கண்ணுதல் கடுப்ப
வில்லெடுத் தொன்னலர் புரமெரி யூட்டி
யினைவெவ் வுலகுந் தொழுதெழ திருவேற்
சரவணத் துதித்த பயன்கெழு கூடற்
பரங்குன் றுடுத்த பயன்கெழு கூடற்
15
  பெருநகர் நிறைந்த சிறுபிறைச் சென்னியன்
மாலையன் றேடி மறையறிந் தறியாத்
தன்னுரு வொன்றி லருளுரு விருத்திய
வாதி நாயக னகன்மலர்க் கழலிணை
நண்ணலர் கிளைபோற் றம்மனந் திரிந்துநந்
20
  துறைவன் றணக்க வறிகிலம் யாமே
பிணர்முடத் தாழை விரிமலர் குருகென
நெடுங்கழிக் குறுங்கய னெய்தலுண் மறைந்தும்
புன்னையம் பொதும்பர்க் குழைமுகங் குழைமுகங்
கருந்திரை சுமந்தெறி வெண்டா ளத்தினை
25
  யரும்பெனச் சுரும்பின மலர்நின் றிசைத்துங்
கலஞ்சுமந் திறக்குங் கரியினம் பொருப்பெனப்
பருகிய முகிற்குலம் படிந்துகண் படுத்தும்
பவளமின் கவைக்கொடி வடவையின் கொழுந்தெனச்
சுரவிளை குளிக்குநர் கலனிடைச் செறிந்தும்
30
  வெள்ளிற வுண்ண விழைந்துபுகு குருகினங்
கருங்கழி நெய்தலைக் காவல்செய் கண்ணென
வரவெயிற் றணிமுட் கைதையு ளடங்கியும்
விண்டொட வெழுந்து விழுந்திரைக் குழுவினை
யரிவினைக் கடங்கிய மலையினம் வரவெனக்
  குளிர்மணற் கேணியுட் கொம்பினர் படர்ந்து
முயங்கிய வுள்ளம் போகி
மயங்கிய துறையின மொருங்குழி வளர்ந்தே.

(உரை)
கைகோள் : களவு. தோழிகூற்று

துறை: வாய்மைகூறி வருத்தந்தணித்தல்.

     (இ-ம்.) இதனை, “நாற்றமுந் தோற்றமும்” (தொல்.களவி-23) என வரும் நூற்பாவின்கண் ‘ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட என்பதன்கண் அமைத்துக்கொள்க.

1-4: திருமலர்..............................மான

     (இ-ள்) திருமலர் இருந்த முதியவன் போல - தாமரைப் பூவில வீற்றிருந்த யாவர்க்கும் மூத்தோனாகிய பிரமனைப்போல; நால்முகம் கொண்டு அறி நன்னர் நெஞ்சு இருந்து - நான்கு முகங்களைக்கொண்டு அறிவனவற்றையெல்லாம் அறிந்த நல்ல உள்ளத்திலே உறைந்து; வேறு அருள் பிறவி தோற்றுவித்து எடுத்து-வேறாகிய அருளுக்குரிய பிறப்பினைப் பிறப்பித்துக் காட்டி; நில்ம் இரண்டு அளந்த- நிலவுலகும் வானுலகும் ஆகிய இரண்டனையும் திருவடியால் அள்நத ; நெடுமுகில் மான - ஒருகால் விளர்த்தலும் ஒருகால் கறுத்தலும் இல்லாத பெரிய முகிலாகிய திருமால்போல என்க.

     (வி-ம்.) திருமலர் - ஈண்டுச் சிறப்பால் தாமரை மலரைக் குறித்து நின்றது. அறி நெஞ்சு - அறிவனவற்றையெல்லாம் அறிந்த நெஞ்சு. நிலம் இரண்டு- மண்ணும் விண்ணுமாகிய இரண்டு உலகங்கள். இரண்டும் எனல்வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. நெடுமுகில் என்றமையால் ஒருகால் விளர்த்தலும் ஒருகால் கறுத்தலும் இல்லாத பெரிய முகில் என்று உரைக்கலாயிற்று, முகில்: ஆகுபெயர்.

5-11: அரக்கர்.........................................பெருநகர்

     (இ-ள்) அரக்கர் தம் கூட்டம் தொலைத்து - அரக்கருடைய குலத்தை அழித்து ; நெய் உண்டு - நெய்யை உண்டு ; களிறு உரிபுனைந்த கண்ணுதல் கடுப்ப - யானைத் தோலைப்போர்த்த சிவபெருமான்போல; வில் எடுத்து ஒன்னலர் புரம் எரி ஊட்டி-பகைவருடைய முப்புரங்களையும் எரித்து ; இனைய- இத்தன்மையதாக ; எவ்வுலகும் தொழுது எழு திருவேல் - எல்லா உலகமும் தொழுதெழுதற்குக் காரணமான அழகுள்ள வேற்படையையுடைய ; சரவணத்து உதித்த அறுமுகப் புதல்வன்- சரவணப் பொய்கையிற் பிறந்தருளிய ஆறுமகங்களையுடைய இளைய பிள்ளையாராகிய முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள; பரம் குன்று உடுத்த பயன்கெழு கூடல் பெருநகர்- திருப்பரங்குன்றை அணிந்துள்ள பயன்மிக்க மதுரைமாநகரின்கண் என்க.

     (வி-ம்.) 1-11. பிரமனைப்போல நான்முகங் கொண்டு அறிவன அறிந்து அவன் தாமரைப் பூவிருந்தாற்போல நன்னர் நெஞ்சில் இருந்து திருமால்போல அரக்கரை அழித்து நெய்யுண்டு சிவன்போல ஒன்னலர் புரம் எரயூட்டி எவ்வுலகும் தொழுதெழுதற்குக் காரணமான வேல் என்க. வேலின் செயலுக்கு மும்மூர்த்திகளின் செயல் உவமை. பரங்குன்று-திருப்பரங்குன்று. பயன் - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள், வில் எடுத்து என்பதற்கு மேருவில்லைத் தாங்கி என்றும் ஒளி வீசி என்றும் சிலேடை வகையால் பொருள் கொள்க. புரம் என்பதற்கு முப்புரம் என்றும் பகைவர் ஊர் என்றும் பொருள் கொள்க.

11-15: திறைந்த..............................கிளைபோல்

     (இ-ள்) நிறைந்த சிறு பிறைச் சென்னியவன் - நிறைந்த இளம்பிறை யணிந்த சடையினை உடையவனும் ; மால் அயன்தெடி - திருமாலும் நான்முகனும் தேடாநிற்பவும் ; மறை அறிந்து அறியா - வேதங்கள் அறிந்தும் முழுதும் அறிவொண்ணாத ; தன் உரு ஒன்றில் - தனது திருவுருவத்தின் ஒருபாகத்தே ; அருள் உரு இருத்திய ஆதி நாயகன் - திருவருள் வடிவமாகிய சிபெருமானுடைய ; அகல் மலர் இணை கழல் நண்ணலர் கிளை போல் - விரிந்த செந்தாமரை மலர்போன்ற இரண்டாகிய வீரக்கழலணிந்த திருவடிகளை நினையாத மடவோருடைய சுற்றத்தார் போலவும் ; என்க.

     (வி-ம்.) கூடற்பெருநகர் நிறைந்த பிறைச் சென்னியன் என்க. மால்-திருமால் அயன் - நான்முகன், தேடி - கே, மறை - வேதம், வேதம் இறைவனுண்மையை அறிந்தும் அவனியல்பை முழுதும் உணரமாட்டாமையின் மறை அறிந்து அறியா உரு என்றார். ஒன்று - ஒரு கூற்றில், அருளுரு - அருட்பிழம்பாகிய அம்மை. எனைக் கடவுளர்க்கெல்லாம் முதற்பெருங்கடவுள், ஆதலின் ஆதி நாயகன் என்றார். நண்ணலர் கிளைபோல மனம்திரிந்து எனப் பின்னர் இயைத்துக் கொள்க. நண்ணுதல் -ஈண்டு நினைதல்.

17-25: பிணர்...........................செறிந்தும்

     (இ-ள்) பிணர்முடம் தாழை விரிமலர் குருகு என - பொருக்கமைந்த முடம்பட்ட அடிப்பகுதியினையுடைய வெண்டாழையின் விரிந்த மலரைக் கொக்கென்று கருதி ; நெடுங்கழி குறுங்கயல் நெய்தலுள் மறைந்தும் - நீண்ட கழியிலுள்ள குறிய கயல்மீன்கள் நெய்தல் மலரின்கீழே மறைந்தும், புன்னைஅம்பொதும்பர் குழைமுகம் குழைமுகம்- புன்னைமரச் சோலையின்கண் குழைகின்ற முகத்தினையுடைய தளரின்கண் ; கருதிரை சுமந்து எறி வெள்தாளத்தினை - கரிய கடலலைகள் எடுத்தெறியாநின்ற வெள்ளிய முத்துக்களை ; அரும்பு என கரும்பு இனம் அலர நின்று இசைத்தும் - புன்னை அரும்பென்று கருதி வண்டினங்கள் அவை மலரும்படி நின்று இசை பாடியும் ; கலம் சுமந்து இறக்கும் கரிஇனம் பொருப்ப என - மரக்கலங்கள் சுமந்து கொணர்ந்து கரையின்கண் இறக்குனிற் யானைக் கூட்டங்களை மலைக்கூட்டம் என்று கருதி ; பருகிய முகில்குலம் படிந்து கண்படுத்தும் - கடல்நீரை உண்ட முகிற்கூட்டம் அவற்றின்மேல் படிந்து துயில் கொண்டும் ; மின்பவளம் கவைகொடி வடவையின் கொழுந்து என - மின்னா நின்ற பவளங்களின் கவைத்த கொடிகளை வடவைத்தியின் சுடர்கள் என்று நினைத்து ; சுரிவளை குளிக்குநர் கலன்இடை செறிந்தும் - சுரிந்த சங்கம் குளித்தெடுக்கின்றவர் அவற்றிற்கஞ்சித் தந்தொழிலை விட்டுத் தம்மரக்கலங்களில் எறியும் என்க.

     (வி-ம்.) பிணர் - பொருக்கு, முடம் - வளைவு, குருகு - கொக்கு, குருகென்றமையின் தாழை வெண்டாழை என்பது பெற்றாம். நெடுங்கழிக் குறுங்கயல் என்புழிச் செய்யுளின்ப முணர்க். பொதும்பர் - சோலை, புன்னையம் பொதும்பர் என்புழி அம் : சாரியை குழைமுகம் இரண்டனுன் முன்னது வினைத்தொகை பின்னது எழுனுருபேற்ற பெயர். குழைகின்ற முகம் என்றும் தளிரின்கண் என்றும் பொருள் கூறுக. தரளம் - முத்து, கரும்பு - வண்டு, கலம் - மரக்கலம், கரி - யானை, பொருப்பு - மலை, கண்படுத்தல் - துயிலல், மின்பவளம் : வினைத்தொகை. கவை - கிளை, வடவை - வடவைத்தீ.

26-33: வெள்ளிற................................வளர்த்தே

     (இ-ள்) வெள் இற உண்ண விழைந்து - வெள்ளிய இறால் மீனைத்தின்ன விரும்பி ; புகு குருகு இனம் - செல்கின்ற கொக்கினங்கள் ; கருங்கழிநெய்தலை காவல்செய் கண் என - கரிய கழியின்கண் மலர்ந்துள்ள நெய்தற்பூவை அக்கழியினைக் காவல் செய்கின்றவர்களுடைய கண்கள் என்று நினைத்து ; அரவு எயிறு அணிமுள் கைதையுள் அடங்கியும் - பாம்பின் பற்கள் போன்ற நெருங்கிய முட்களையுடைய தாழைப்புல்லினூடே மறைந்தும் ; விண்தொட எழுந்து விழும் திரைக்குழுவினை-வானத்தைத் தீண்டும்படி எழுந்து விழுகின்ற அலைக்கூட்டத்தை; அரி வினைக்கு அடங்கிய மலை இனம் வரவு என - இந்திரன் மலைகளைச் சிறகரிந்த கொடுந்தொழிலுக்கு அஞ்சிக்கடலினூடு ஒளித்திருந்த மலைக்கூட்டங்களின் வருகை என்று நினைத்து ; கொம்பினர்- பூங்கொம்பு போன்ற மாதர்கள்; குளிர்மணல் கேணியுள் படர்ந்தும் - குளிர்ந்த மணற்கேணியுள் புகுந்து மறைந்தும்; துறைஇனம் - இவ்வாறு நெய்தற்றுறையிள்ளவை ; ஒருங்குழி வளர்ந்து - ஓரிடத்தே வளர்ந்திருந்தும் ; முயங்கிய உள்ளம் போகி - ஒன்றோடொன்று தழுவிய உள்ளம் மாறி மயங்கிய வகை போலவும் என்க.

     (வி-ம்.) இற - இறால்மீன் . காவல்செய்கண் - காவல்செய்கின்றவர்களுடைய கண்கள் , எயிறு - பல், அரி - இந்திரன், அரிவினை - இந்திரன் மலைகளைச் சிறகரிந்த கொடுந்தொழில் கொம்பினர் - பூங்கொடி போன்ற மகளிர் , மயங்கிய- மயங்கியவகை போலவும் என வருவித்தோதுக.

15-19: தம்மனம்............................யாமே

     (இ-ள்) தம்மனம் திரிந்து - தமது மனம வேறுபட்டு ; நம் துறைவன் தணக்க-நம்முடைய தலைவன் நம்மைவிட்டு நீங்குதற்குக் காரணம்; யாம் அறிகிலம் -யாம் இன்னதென்று அறிந்தோமில்லை என்க.

     (வி-ம்.) (14) ஆதி நாயகன் கழவிணை நண்ணலர் கிளைபோல் (33) மயங்கிய துறைவன் மனந்திரிந்து தணக்க அறிகிலம் என இயைத்துக் கொள்க. துறைவன்- நெய்தல் நிலத்தலைவன், தணக்கக் காரணம் அறிகிலம் என வருவித்தோதுக. இனி இதனை, நாயகன் கழலிணை நண்ணலர் கிளை போலவும், துறையினம் குருகின மறைந்து்ம், அரும்பென இசைத்தும், பொருப்பெனப் படுத்தும், கொழுந்தனச் செறிந்தும், கண்ணென வடங்கியும், வரவெனப் படிந்தும், ஒருங்குழி வளர்ந்து முயங்கிய வுள்ளம் போகி மயங்கிய வகைபோலவு்ம், நந்துறைவன் மனந்திரிந்து தணந்ததை யாமறிகிலமென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.