பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 73

நேரிசையாசிரியப்ப

 
   
5
  ஆடகச் சயிலத் தோருடல் பற்றிக்
கலிதிரைப் பரவையுங் கனன்றெழு வடவையு
மடியினு நடுவினு மணைந்தன போலப்
பசுந்தழைத் தோகையுஞ் செஞ்சிறைச் சேவலுந்
தாங்கியு மலர்க்கரந் தங்கியு நிலைத்த
10
  பேரொளி மேனியன் பாருயிர்க் கோருயிர்
மாவுடைக் கூற்ற மலரயன் றண்டங்
குறுமுனி பெருமறை நெடுமறை பெறாமுதல்
குஞ்சரக் கோதையுங் குறமகட் பேதையு
மிருந்தன விருபுறத் தெந்தையென் னமுதம்
15
  பிறந்தருள் குன்ற மொருங்குறப் பெற்ற
மாதவக் கூடன் மதிச்சடைக் கரண
னிருபதந் தேறா விருளுள மாமென
விவளுளங் கொட்ப வயலுளங் களிப்ப
வரும்பொருட் செல்வி யெனுந்திரு மகட்கு
20
  மானிட மகளிர் தாமுநின் றெதிர்ந்து
புல்லிதழ்த் தாமரை யில்லளித் தெனவு
முலகுவிண் பனிக்கு மொருசய மகட்குத்
தேவர்தம் மகளிர் செருமுக சேர்ந்து
வீரமங் கிந்தபின் விளிவது மானவு
25
  மிருளுட வரக்கியர் கலைமகட் கண்டு
தென்றமிழ் வடகலை சிலகொடுத் தெனவு
நீரர மகளிர் பரந்தளங் கன்னியர்க்
காரெரி மணித்திர ளருளிய தெனவுஞ்
செம்மலர்க் குழலிவன் போயறி வுறுத்தக்
  கற்றதுங் கல்லா துற்ற வூரனை
யவடர விவல்பெறு மரந்தையம் பேரினுக்
கொன்றிய வுவம மின்றிவ னுளவான்
மற்றவ டரநெடுங் கற்பே
யுற்றிவன் பெற்றா ளேன்பதுந் தகுமே

(உரை)
கைகோள் : கற்பு. தோழி கூற்று

துறை: அயலறிவுரைத்தவ ளழுக்கமெய்தல்

     (இ-ம்.) இதனை, “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்தகிளவி ’ என்பதனால் முடித்துக்கொள்க.

     குறிப்பு:- இச் செய்யுளுக்கு எடுத்துக்காட்டாக வந்த திருக்கோவையார் செய்யுள் தலைவி கூற்றாகவும், இது தோழி கூற்றாகவும் அமைந்திருத்தல் காண்க.

1-6: ஆடகம்...............................மேனியன்

     (இ-ள்) ஆடகம் சயிலத்து ஓர் உடல் பற்றி கலிதிரை பரவையும் கனன்று எழுவடவையும் - பொன்மலையினது ஒப்பற்ற உடலைப்பற்றி ஆரவாரியாநின்ற அலைகளையுடைய கடலும் எரிந்தெழாநின்ற வடவைத்தீயும்; அடியிலும் நடுவிலும் அணைந்தன போல-அம்மலையினது அடிப்பகுதியிலும் நடுப்பகுதியிலும் பொருந்தியிருந்தன போல ; பசுந்தழை தோகையும்-பசிய தழைத்த தோகையினையுடைய மயிலும் - செஞ்சிறைச் சேவலும் - சிவந்த சிறகினையுடைய கோழிச்சேவலும் ; தாங்கியும் மலர்க்கரம் தங்கியு்ம் - முறையே சுமந்தும் தாமரைமலர் போன்ற கையின்கண் தங்கியும் ; நிலைத்த பேரொளி மேனியன்-நிலைபெற்றுள்ள மிக்க ஒளியையுடைய திருமேனியை உடையவனும் என்க.

     (வி-ம்.) ஆடகச்சயிலம் - பொன்மலை, இது முருகப்பெருமானுக்குவமை. கவிதிரை பரவை - ஆரவாரிக்கும் அலைகளையுடைய கடல், இஃது அவன் ஊர்தியாகிய மயிலுக்குவமை. வடவை - வடவைத் தீ. இஃது அவன் கையிலேந்திய கொடியின் கண்ணதாகிய கோழிச் சேவலுக்குவமை. பொன்மலையின் கீழிருந்து அலைகடல் அதனைத் தாங்கினாற் போலவும் மயிலால் சுமக்கப்பட்டு ஒருகையில் சேவற் கொடியை யுயர்த்ள்ள பேரொளி மேனியனாகிய முருகப்பெருமான் தோன்றுவான் என்பது கருத்து. பசுந்தழைத்தோகை எனும் பன்மொழித்தொடர் மயில் என்னும் பொருட்டு, சேவல் சிவந்த சிறகினையுடைமையின் வடவைத்தீ உவமையாயிற்று.

6-13: பாருயிர்.............................என

     (இ-ள்) பார் உயிர்க்கு ஓர் உயிர் - உலகின்கணுள்ள உயிரினங்களுக் கெல்லாம் ஒரே உயிராக அமைந்தவனும்; மாஉடைக் கூற்றம் - மாமரமாகிய சூரபதுமனைக் கொல்லுகின்ற கூற்றவனும் ; மலர் அயன் தண்டம் - தாமரைமலரின் மேலிருக்கும் நான்முகனைத் தண்டித்தவனும்; குறுமுனி பெருமறை-அகத்திய முனிவர் பயின்ற பெரிய மந்திரப்பொருளானவனும்; நெடுமறை பெறாமுதல் - நெடிய வேதம் அறியப்பெறாத முதற் கடவுளும்; குஞ்சரக்கோதையும் குறமகட்பேதையும் இருந்தன இருபுறத்து எந்தை-தெய்வயானை நாய்ச்சியாரும் வள்ளிநாய்ச்சியாரும் வீற்றிருக்கப்பெற்றனவாகிய இரண்டு பக்கங்களையுமுடைய எம்தந்தையானவனும்; என் அமுதம்-என்னுடைய அமிழ்தமானவனும் ஆகிய முருகப்பெருமான்; பிறந்து அருள் குன்றம் ஒருங்கு உறப்பெற்ற - தோன்றியருளிய திருப்பரங்குன்றமானது தன்னுடன் இருக்கப்பெற்ற; மாதவக்கூடல்-பெரிய தவத்தால் பெறுதற்குரிய மதுரையின்கண் எழுந்தருளியுள்ள; மதிச்சடைக்காரணன்- பிறையணிந்த சடையையுடைய உலகிற்கு நிமித்தகாரணனா யிருக்கின்ற சோமசுந்தரக் கடவுளின் ; இருபதம் தேறா - இரண்டு திருவடிகளின் பெருமையையும் தெளியாத ; இருள்உளம் ஆம் என - இருண்ட நெஞ்சம் ஆகுமென்று சொல்லும்படி என்க.

     (வி-ம்.) இறைவன் உயிர்களுக்கெல்லாம் உயிராய் இருத்தலின் பாருயிக்கோருயிர் என்றார். மா - மாமரமாகிய சூரபதுமன். அயன் - நான்முகன், குறுமுனி - அகத்தியன், மறைஅறியப்பெறாமுதல் என்க. குஞ்சரக்கோதை- தெய்வயானை - துறமகட் பேதை - வள்ளி, தெய்வயானையும் வள்ளியும் இருக்கப் பெற்றனவாகிய இருபால் எந்தை என்க. எந்தை - எந்தந்தை, பிறத்தல்-தோன்றுதல். காரணன் - நிமித்த காரணன். இருளுளம் : வினைத்தொகை.

14-20: இவள்......................................மானவும்

     (இ-ள்) இவள் உளம் கொட்ப - எந்தலைவியாகிய இவளுடைய நெஞ்சம் சுழலவும்; அயல் உளம் களிப்ப - அயலாராகிய பரத்தையர் நெஞ்சம் மகிழா நிற்பவும்; அரும்பொருள் செல்வி எனும் திருமகட்கு - பெறுதற்கரிய பொருள்களுக்கெல்லாம் தெய்வம் சொல்ப்படுகின்ற திருமகளுக்கு ; மானிடப் பெண்கள் எதிர்சென்று நின்று - எளியோராகிய மானிடப் பெண்கள் எதிர்சென்று நின்று ; புல் இதழ்தாமரை இல் அளித்து எனவும் - புறவிதழையுடைய தாமரைப்பூவால் இருப்பிடம் சமைத்துக் கொடுத்து இதன்கண் குடியிருந்திடுக என வழங்கினாற்போலவும் ; உலகு விண் பனிக்கும் ஒரு சமயகட்கு - நிலவுலகத்தையும் வானுலகத்தையும் நடுங்கச் செய்கின்ற ஒப்பற்ற வெற்றியையுடைய கொற்றவைக்கு; தேவர்தம் மகளிர் செருமுகம் நேர்ந்து வீரம் ஈந்தபின் விளிவது மானவும் - தேவ மகளிர் போர்முகத்தே வந்து அவ்விடத்தே வீரத்தைக் கொடுத்த பின்வு இறப்பது போலவும் என்க.

     (வி-ம்.) இவள் என்றது, தலைவியை, அயல் : ஆகுபெயர், அயலராகிய பரத்தையர் என்க. அரும்பொருட்செல்வி என்றதனால் நல்கூர்ந்த மானிட மகளிர் எனப்துங் கொள்க. உலகுவின் : உம்மைத் தொகை. நடுங்கச் செய்கின்ற சயமகள் என்க. சயமகள் - கொற்றவை. செருமுகம் - போர்க்களம், வீரம் - மறப்பண்பு. விளிவது - இறப்பது.

21-24: இருள்...............................எனவும்

     (இ-ள்) இருள் உடல் அரக்கியர் - இருளையொத்த உடம்பினையுடைய அரக்கமகளிர் ; கலைமகள் கண்டு - கலைகட்கெல்லாம் தெய்வமாகிய நாமகளைக் கண்டு அவட்கு ; தென்தமி்லும் வட சொல்லாகிய ஆரியத்திலும் ஒருசில சொறக்ளைக் கற்பித்தாற் போலவும் ; நீர் அர மகளிர் - நீரில்வாழும் தெய்வ மகளிர் ; பாந்தள் அம் கன்னியர்க்கு - நாக மகளிர்க்கு ; ஆர் எரிமணி திரள் அருளியது எனவும் - பொருந்திய நெருப்புப் போன்ற நாகமணிக் குவியலை வழங்கியது போலவும் என்க.

     (வி-ம்.) கல்வியறிவில்லாத அரக்கியர் கலைமகளுக்குத் தென் கலையும் வடகலையும் கற்பித்தாற்போல என்க. நீரர மகளிர் தம்பால் இல்லாத நாகமணியை நாககன்னியர்க்கு வழங்கினாற்போலவும் என்க.

25-28: செம்மலர்....................................இன்று

     (இ-ள்) செம்மலர் குழல் இவள் - சிவந்த மலரணிந்த கூந்தலையுடைய இத்தோழியானவள் ; போய் அறிவுறுத்த - செவ்வணி அணிந்து சென்று அறிவியா நிற்ப; கற்றதும் கல்லாது உற்ற ஊரனை - தான் கற்ற மெய்ந்நூற் பொருளை அறிந்தும் அறியாமல் அப்பரத்தையர் சேரியிலிருந்த தலைவனை ; அவள் தர - அப்பரத்தை நன்கொடையாக வழங்கா நிற்ப ; இவள் பெறும் அரந்தை அம் பேறினுக்கு-இத் தலைவி பெறா நின்ற துன்பத்திற்குக் காரணமான இப்பேற்றினுக்கு; ஒன்றிய உவமம் இன்று - பொருந்திய உவமம் ஒன்றேனும் இல்லை ஆயினும் என்க.

     (வி-ம்.) செம்மலர் - தோழி செவ்வணி அணிந்து செல்வது தோன்ற செம்மலர்க் குழலிவள் என்றார். கற்றிருந்தும் அதற்குத்தக ஒழுகும் ஒழுக்கம் கல்லாதவள் என்பாள் கற்றதும் கல்லாது உற்ற ஊரன் என்றாள். அவள் என்றது இழிந்தவளாகிய அப்பரத்தை என்பது படநின்றது. இவள் என்றது ஏசாச்சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடிமகள் என்பதுபட நின்றது. கணவனை எய்துதல் பேறேயாயினும் பரத்தை வழங்கப் பெறுதலின் துன்பம் தருவதொன்றாய் இருந்தது என்பாள் இவள் பெறும் அரந்தைபேறு என்றாள். திருமகளுக்குவறிய மானிட மகளிர் இல் அளித்தலும் சமயகட்குத் தேவ மகளிர் வீரமளித்தலும் அரக்கியர் கலைமகட்குக் கலைபயிற்றலும் நீரரமகளிர் நாக கன்னியர்க்கு நாகமணி வழங்குதலும்போல என முற் கூறிய உவமைகள் இப்பரத்தை வழங்க இத்தலைவி பெறும் பேற்றினுக்கு இல்பொருள் உவமையாகச் சொல்லப்பெறுவன அன்றி பொருந்தக் கூறும் உவமை ஒன்றும் இல்லை எனப்ாள் ஒன்றிய உவமம் இன்று என்றான்.

28-30: இவண்.................................தருமே

     (இ-ள்) இனி இவண் உள-இனி இப்பேற்றினுக்கு ஒரு காரணம் உளது என்னின் ; மற்றவன் தர - இழிந்தோளாகிய அப்பரத்தை வழங்குவாளேனும் ; இவள் நெடுங் கற்பே சென்று பெற்றான் என்பது தரும் - இப்பெருமகள் தானும் தனது நெடிய கற்பே காரணமாகக் கொண்டு தன் தோழியைரைச் செவ்வணி அணிவித்துச் செலுத்தித் தன் தலைவனைப் பெற்றாள் என்பது ஒருவாறு பொருந்தும் என்க.

     (வி-ம்.) பரத்தையர் வழங்கத் தலைவி தன் கணவனைப் பெறும் பேற்றினுக்கு உவமை கூறுதற்கு இல்லையாயினும் காரணம் கூறத்தகும். அஃதாவது அவள் கற்பே காரணமாக இப்பேற்றினை அவள் பெறுகின்றாள் என்று கூறலாம் என்பது கருத்து. தோழியின் செலவினை வேற்றுமை கருதாமல் தலைவி சென்றதாகக் கூறினான்.

     இனி இதனை, மாதவக்கூடல் மதிச்சடைக் காரணன் பதம் தேறா இருள உளம்போல் இவள் கொட்ப, அயல் களிப்ப, திருமகட்கு மானிட மகளிர் இல்லளித்தனவும், சயமகட்குத் தேவமகளிர் வீரம் அளித்தனவும், கலைமகளுக்கு அரக்கர் மகளிர் கலை கொடுத்தனவும், பாந்தளங் கன்னியர்க்கு நீரரமகளிர் மணி அருளிய தெனவும் பொருந்தா உவமை கூறுவதன்றி ஊரனை அவள்தர இவள் பெறும் பேற்றுக்குப் பொருந்தும் உவம் இன்று.

     இனி கூற்றுனவாயின் இவள் கற்பே துணையாகச்சென்று இப்பேற்றினைப் பெற்றாள் என்பது தகும் என வினைமுடிவு செய்க. மெ்ய்ப்பாடு - அழுகை, பயன்- தலைவியைத் தேற்றுதல்.