பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 74

நேரிசையாசிரியப்பா

 
   
5
  மலரவன் பனிக்குங் கலினுங் குலமீ
னருகிய கற்புங் கருதியுண் ணடுங்கித்
திருமகண் மலர்புகு மொருதனி மடந்தையின்
றிருகட லோருழி மருவிய தென்னச்
செருப்படை வேந்தர் முனைமேற் படர்ந்தநங்
10
  காதலர் முனைப்படை கனன்றுடற் றெரியான்
முடம்படு நாஞ்சிற் பொன்முகங் கிழித்த
நெடுங்சால் போகிக் கடுங்கய றுரக்கு
மங்கையர் குழைபெறு வள்ளையிற் றடைகொண்
டவர்கருங் கண்ணெனக் குவளைதழை பூத்த
15
  விருளகச் சோலையு ளிரவெனத் தங்கிய
மற்றதன் சேக்கையுள் வதிபெறுஞ் செங்கால்
வெள்ளுட லோதிமந் தன்னுடைப் பெடையெனப்
பறைவரத் தழீஇப்பெற் றுவைதங் கம்பலைக்
காற்றா தகன்று தேக்குவழி கண்ட
20
  கால்வழி யிறந்து பாசடை பூத்த
கொள்ளம் புகுந்து வள்ளுறை வானத்
தெழின்மதி காட்டி நிறைவளை சூலுளைந்
திடங்கரு மாமையு மெழுவெயிற் கொளுவு
மலைமுது கன்ன குலைமுக டெறி
25
  முழுமதி யுடுக்கண மகவயின் விழுங்கி
யுமிழ்வன போலச் கரிமுகச் சூல்வளை
தரளஞ் சொரியும் பழனக் கூடற்
குவளைநின் றலர்ந்த மறையெழு குரலோ
னிமையவர் வேண்ட வொருநகை முகிழ்ப்ப
  வோருழிக் கூடா தும்பரிற் படர்ந்து
வானுடைத் துண்ணு மறக்கொலை யாக்கர்முப்
பெருமதில் பெற்றன வன்றோ
மருவல ரடைத்தமுன் மறங்கெழு மதிலே.

(உரை)
கைகோள் : கற்பு. தோழிகூற்று

துறை: பிரிந்தமைகூறல்.

     (இ-ம்.) இதனை, “மரபுநிலை திரியாமாட்சியவாகி விரவும் பொருளும் விரவு மென்ப” (தொல்.அகத்-45) எனவரும் நூற்பாவினால் அமைத்துக்கொள்க.

1-3: மலரவன்..........................மடந்தை

     (இ-ள்) மலரவன் பனிக்கும் கவினும் - நான்முகன் இவ்வடிவு நம்மால் படைத்தற்கு அரிது என்று அஞ்சுதற்குக் காரணமான பேரழகும் ; குலமீன் அருகிய கற்பும் - வடமீனாகிய அருந்ததியினுடைய கற்பும் குறைந்ததென்று கூறுதற்குக் காரணமான சிறந்த கற்பும்; கருதி உள் நடுங்கி - நினைத்துப் பார்த்து இப்பேறு நம்மாற் பெறுதற்கியலாதென மனம் நடுங்கி ; திருமகள் மலர்புகும் ஒருதனி மடந்தை - திருமகளானவள் தாமரை மலரில் ஒளிதற்குக் காரணமான ஒப்பற்ற மங்கையே என்க.

     (வி-ம்.) மலரவன் - நான்முகன், பனித்தல் - நடுங்குதல், குலமீன் கற்பு என்க. கவினும் கற்புங் கண்டு கருதிப்பார்த்துத் திருமகள் நடுங்கி மலர்புகுதற்குக் காரணமான மடந்தை என்க. மடந்தை: விளி.

3-6: இன்று...................................காதலர்

     (இ-ள்) இன்று - இற்றைநாள் ; இருகடல் ஓர்உழி மருவியது என்ன- இரண்டுகடல்கள் ஓரிடத்திலே சேர்ந்தாற் போலச்சேர்ந்த ; செருபடை வேந்தர்- போர்செய்தற்குரி படைகளையுடைய வேந்தருடைய ; முனைமேல் படர்ந்த நங்காதலர் - போரைக் கருதிச்சென்ற நம் தலைவருடைய என்க.

     (வி-ம்.) ஓருழி - ஓரிடத்தில், செரு - போர், முனை - போர் முனை, படர்தல் - செல்லுதல்.

6-9: முனை.........................கொண்டு

     (இ-ள்) முனைப்படை கனன்று - கூர்மை பொருந்திய படைக்கலமானது வெகுண்டு ; உடற்றும் - போர்செய்கின்ற ; எரியால் - நெருப்பால் ; முடம்படு நாஞ்சில் பொன்முகம் கிழித்த - வளைவுள்ள கலப்பையிற் பொருந்திய இரும்பாற் செய்த கொழுவினது நுனியாற் கிழிக்கப்பட்ட ; நெடுஞ்சால் போகி - நெடிய படைச்சாலின் வழியாகச் சென்று ; கடுங்கயல் துரக்கும் மங்கையர் - வேகமுள்ள கயல்மீன்கள் தம்மை ஓட்டுகின்ற மகளிருடைய ; குழைபெறு வள்ளையில்- பொற்குழையணிந்த செவியினையொத்த வள்ளைத்தண்டின்கண் ; தடைகொண்டு- தடைபட்டு என்க.

     (வி-ம்.) சால் - படைச்சால், அஃதாவது கலப்பை உழுத சுகடு - குழை: ஆகுபெயர் - குழையணிந்த செவி என்க. வள்ளை . ஒருவகை நீர்க்கொடி.

10-14: அவர்................................பெற்று.

     (இ-ள்) அவர் கருங்கண் என - அம்மகளிருடைய கண்ணைப்போல; தழைகுவளை, பூத்த - தழைத்த குவளை மலர்ந்த ; இருள் அகச்சோலையுள்- இருண்டுள்ள சோலையினுள் ; இரவு எனத் தங்கிய - இராப்பொழுதென்று கருதித் தங்கப் பெற்றவை ; அதன் சேக்கையுள் வதிபெறும் செங்கால் வெள்ளுடல் ஓதிமம் -அச்சோலையில் கட்டிய கூட்டினுள் உறைகின்ற சிவந்த காலினையும் வெள்ளிய உடலையுமுடைய அன்னமானது; தன்னுடைய பெடையென-தன்னுடைய பெடையன்னம் என்று கருதி ; பறைவரத் தழீஇப்பெற்று - சிறகில் அகப்படத் தழுவிப் பெற்று என்க.

     (வி-ம்.) அவர் - அம்மங்கையர், தழைகுவளை பூத்த என்க. இரவு - இராப்பொழுது, தங்கிய : பலவறிசொல், வதிதல் - தங்குதல், ஓதிமம் - அன்னம். பெடை - பெண் அன்னம், பறை - சிறகு.

14-18: உவை......................................காட்டி

     (இ-ள்) உவை தம் கம்பலைக்கு ஆற்றாது - அவ்வன்னங்களின் ஆரவாரத்தைப் பொறாமல் ; அகன்று - அவ்விடத்தினின்று நீங்கி ; தேக்கு வழிகண்ட கால்வழி இறந்து - அச்சோலையின் தேன் பெருக்கமானது தனக்கு வழியுண்டுபண்ணிய வாய்க்கால் வழியே சென்று ; பாசடை பூத்த கொள்ளம் புகுந்து -பாசிமலர்ந்த குழைந்த சேற்றில் புகுதாநிற்ப ; வள்துறை வானத்து எழில்மதி காட்டி -மிக்க நீர்த்துளியைச் சிந்துகின்ற வானத்தின்கண் எழாநின்ற அழகிய திங்களைக் காட்டி என்க.

     (வி-ம்.) உவை - அவை, கம்பலை - ஆரவாரம், தேம் + கு = தேக்கு. தேன் தனக்கு வழிகண்ட கால் என்க, கால் - வாய்க்கால், பாசடை - பாசி, கொள்ளம்- குழைசேறு, உறை - மழைத்துளி திங்களை உவமையாகக் காட்டி என்க. (8) கயல் சால் போகி வள்ளையில் தடைகொண்டு சோலையுள் இரவெனத் தங்கப்பெற்றவை அதன் சேக்கையுள் வதியும் அன்னத்தால் தழுவப்பெற்று அவற்றின் கம்பலைக்குவெகுருவிக் கால்வழிசென்று (17) (புகுந்து) புகுதாநிற்ப என புகுந்தென்னும் செய்தேனெச்சத்தை செயவெனெச்சமாக்கி ; இயைத்துக்கொள்க.

18-23: நிறை............................கூடல்

     (இ-ள்) நிறைசூல்வளை உளைந்து - நிரம்பிய சூலினையுடைய சங்கு வயிறு வருந்தி ; இடங்கரும் ஆமையும் - முதலையும் ஆமையும் ; எழுவெயில் கொளுவும் - காலையில் எழாநின்ற இளவெயில் காய்கின்ற ; மலைமுதுகு அன்ன- மலையினது முதுகையொத்த ; குலைமுகடு ஏறி - செய்கரையின் உச்சியில் ஏறி; முழுமதி உடுகணம் அகவயின் விழுங்கி உமிழ்வனபோல - முழுத்திங்கள் விண்மீன் கூட்டங்களைத் தன்னுள்ளே விழுங்கி மீண்டும் உமிழப்படுகின்றன போல ; கரிமுகம் சூல்வளை தாளம் சொரியும் - கரிந்த முகத்தையுடைய சூல்கொண்ட அச்சங்குகள் முத்துக்களை ஈனுதற்கிடனான ; பழனம் கூடல் - கழனிகளையுடைய மதுரையினிடத்தே என்க.

     (வி-ம்.) முழுமதி - முழுத்திங்கள், உடுக்கணம் - விண்மீன் கூட்டம், உமிழ்கின்றன - உமிழப்படுகின்றன. தரளம் - முத்து, (கஅ) நிரைவளை எழில்மதி காட்டி முகடேறித் தரளம் சொரியும் கூடல் என முடித்துக்கொள்க.

24-25: குவளைப்............................முகிழ்ப்ப

     (இ-ள்) குவளை நின்று அலர்ந்த - குவளைமலர் தங்கி விரிந்தாலொத்த; மறைஎழு குரலோன் - வேதம் பிறத்தற்கு இடமாகிய மிடற்றினையுடைய சிவபெருமான் ; இமையவர் வேண்ட - தேவர் வேண்டுதலால் ; ஒரு நகை முகிழ்ப்ப-ஒரு புன்முறுவல் தோற்றுவிப்ப என்க.

     (வி-ம்.) குவளைமலர் இறைவனுடைய மிடற்றில் அமைந்த கறைக்கு உவமை. குரல்-மிடறு. ஒரு நகை என்றது சினத்தாற்றோன்றிய புன்முறுவலை.

26-29: ஓருழி........................................மதிலே

     (இ-ள்) ஓருழி கூடாது - ஓரிடத்தே பொருந்தியிராமல ; உம்பரின் படர்ந்து- வானத்திலே யாண்டும் இயங்கி ; வான் உடைந்து உண்ணும் மறக்கொலை அரக்கர் -தேவர்களை அழித்துக் கொள்ளைகொண்டுண்ணுகின்ற கொடிய கொலைத்தொழிலை யுடைய அரக்கர்களுடைய ; முப்பெருமதில் பெற்றன அன்றோ - மூன்றாகிய பெரிய மதில்கள் பட்டபாடுபடும் அல்லவோ, முன் அந்நெருப்புக்கெதிரே ; மருவலர் அடைந்த-பகைவரால் அடைக்கப்பட்ட; மறம் கெழுமதில்- வலிமைபொருந்திய மதில்கள் என்க.

     (வி-ம்.) (5-6) செருப்படைவேந்தர் முனைமேல் படர்ந்த நங்காதல் முனைப்படைகனன்று உடற்று எரியால் (26) மருவலர் அடைந்த மதில் (24) குரலோன் நகைமுகிழ்ப்ப (25) அரக்கர் முப்பெருமதில் (27-28) பெற்றன அன்றோ என இயையும். ஓருழி - ஓரிடம் வான் : ஆகுபெயர், முப்பெருமதில் - திரிபுரம். மருவலர் - பகைவர் நந்தலைவர் வினைமுற்றிக் கடிதில்மீன்வர் என்பதுபட மருவலர்மதில் முப்புரங்கள் பட்டபாடுபடும் என்றாள்.

     இதனை, மடந்தையே ! முனைமேற் படர்ந்த காதலரது படையுடற்று மெரியால் எதிரே மருவலரடைந்த மறங்கெழு மதிலானது கூடல் மறையெழு குரலோன் ஒருநகை முகிழ்ப்ப அரக்கர் மும்மதில் பெற்றபடியாகுமன்றோவென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.