பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 99

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வடவனத் தொருகாண் மாறுபட் டெதிர்ந்து
வழிநடந் தனது மரக்கா லன்றி
முதற்றொழிற் பதுமன் முன்னா வவ்வுழி
மான்றலைக் கரத்தினிற் கூட்டினை வயக்கித்
தூக்கல் வளையுடன் றொடர்ப்பத மெறிந்து
10
  மற்றதன் றாளம் புத்திரி யாக
நிமிர்த்தெறி காலிற் கடைக்கண் கிடத்திப்
பாணியிற் சிரம்பதித் தொருநடை பதித்துக்
கொடுகாட் டிக்குக் குறியடுத் தெடுக்கும்
புங்கவம் வாரம் புடைநிலை பொறுத்துச்
15
  சச்ச புடத்திற் றனியெழு மாத்திரை
யொன்றைவிட் டொருசீ ரிரண்டுற வுறுத்தி
யெடுத்துத் துள்ளிய வினமுத் திரைக்கு
மங்கலப் பாணி மாத்திரை நான்குடன்
சென்றெறிந் தொடுங்குந் துறமிடை திருத்தி
20
  ஞெள்ளலிற் குனித்த விருமாத் திரைக்குப்
பட்டடை யெடுக்கப் புலிதம் பரப்பிப்
புறக்கான் மடித்துக் குவித்தெறி நிலையம்
பதினான் கமைத்து விடுமாத் திரைக்கு
வானமும் பிதாவும் பாணியில் வகுத்து
25
  வட்டங் கொடுக்கு மிந்திரை பணிக்கு
மாத்திரை யாறுடன் கும்பம் பதித்து
வலவை யிடாகினி மண்ணிருந் தெடுத்த
காலுடன் சுழல வாடிய காளி
நாணிநின் றொடுங்கத் தானுமோர் நாடகம்
30
  பாண்டுரங் கத்தொரு பாடுபெற் றமைந்த
மோகப் புயங்க முறைத்துறை தூக்கி
யதற்குச் சாரணி யருட்கர மொன்றிற்
பாணி யிரண்டுந் தாள மாக்கி
யொருதாண் மிதித்து விண்ணுற விட்ட
35
  மறுதாண் மலரின் மலர்க்கரந் துடக்கிப்
பார்ப்பதிப் பாணியைத் துடிமணி யெடுப்பச்
சுருதியைத் தண்டி வலிகொண் டமைப்ப
முதலே ழதனை யொன்றினுக் கேழென
வீணை பதித்துத் தானந் தெரிக்க
40
  முற்றுடி மணியி லொற்றிய பாணியை
நாதங் கூட்டி மாத்திரை யறுத்து
மாங்கனி யிரண்டி லாங்கனி யொன்றால்
முன்னொரு நாளின் முழுக்கதி யடைந்த
வம்மைப் பெயர்பெறு மருட்பேய் குனிப்பப்
45
  பூதமுங் கூளியும் வாடிய பெருமான்
மதுரையம் பதியெனு மொருகொடி மடந்தை
சீறிதழ்ச் சாதிப் பெருமணம் போல
நின்னுள நிறைந்த நெடுங்கற் பதனால்
50
  வினையுடன் புணர வருமுயிர் பற்றிப்
புண்ணியந் தொடரும் புணர்ச்சி போலக்
காலமுற் றொடுங்கு நீண்முகிற் கூட்டமு
மணிதரு தெருவிற் கொடிதரு தேரு
நாற்குறிப் புலவர் கூட்டெழு நனிபுகழ்
55
  மருந்தயில் வாழ்க்கையர் மணிநக ருருவின
வுருளெழு பூழியு மவ்வுருள் பூண்ட
கலிமான் றுகளுங் கதிர்மறை நீழலி
னின்றுமுன் னிட்ட நிறையணி பொறுத்துப்
பருங்குலைக் கயத்துட் கருந்தாட் கழுநீர்
    நிறைவினுட் பூத்த தாமரை யொன்றென
நின்னுயி ராய நாப்பண்
மன்னுக வேந்தன் வரவினுக் கெழுந்தே.

(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று

துறை: தேர்வரவு கூறல்

     (இ-ம்.) இதனை “பெறற்கரும் பெரும் பொருள்” எனவரும் (தொல். கற்பி. 9.) நூற்பாவின்கண் மரபுடை எதிரும் பிறவும் என்புழி வரும் பிற என்பதனாலமைத்துக் கொள்க.

1 - 5: வடவனத்து................................எறிந்து

     (இ-ள்) ஒருநாள் வடவனத்து மாறுபட்டு எதிர்ந்து-பண்டொரு காலத்தே திருவாலங்காட்டின்கண் தன்னோடு மன மாறுபட்டு எதிர்த்து; தனது வழி மரக்கால் நடம் அன்றி-தனக்கேயுரிய மரபினையுடைய மரக்கால் என்னும் கூத்தினை விடுத்து; முதல் தொழில் பதுமன் முன்னா அவ்வுழி-முத்தொழிலுள் வைத்து முதற்றொழிலாகிய படைத்தற்றொழிலையுடைய பிரமன் முதலிய அமரர்கள் குழுமிய அவையின்கண்; மான் தலைக் கரத்தினில் கூட்டினை வயக்கி-மான்றலை என்னும் முத்திரையையுடைய பிண்டிக் கையை இரட்டைக் கையாக்கி; தூக்கல் வளையுடன் தொடர்பதம் எறிந்து-தூக்குதலும் வளைத்தலும் ஆகிய காற்கரணங்களோடே கூடிய காலைவீசி என்க.

     (வி-ம்.) வடவனம்-திருவாலங்காடு. மாறுபடுதல்-மனம் மாறுபடுதல். (சிவபெருமானாகிய) தன்னோடு மாறுபட்டு எதிர்ந்து என்றவாறு. வழி நடம்-வழிவழியாகத் தான் ஆடுகின்ற கூத்து. காளிக்குரிய கூத்து மரக்கால் எனப்படும். இனி வழி நடம் என்பதற்கு அசுரர் மாயத்தினாலே தான் செல்லும் வழியில் பாம்புந் தேளும் வரவிடுகையாலே அவ்வழியிலே அவற்றால் இன்னலுறாமல் காலிலே மரத்தைக் கட்டி நின்றாடுங் கூத்து எனினுமாம். காளி மரக்கால் மேனின்று ஆடுமிதனை,

“ஆய்பொன் னிரிச்சிலம்புஞ் சூடகமு
     மேகலையு மார்ப்ப வார்ப்ப
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை
     மரக்கான்மேல் வாளமலை ஆடும்போலும்,
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை
     மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின்
காயா மலர்மேனி ஏத்திவானோர்
     கைபெய் மலர்மாரி காட்டும்போலும்” (வேட்டுவவரி 12.)

எனவரும் சிலப்பதிகாரத் தானுமுணர்க. இன்னும், மரக்கால் கூத்துக் காளிக்குரியது என்பதனை,

     “மாயவ ளாடல் மரக்கால் அதற்குறுப்பு, நாமவகையிற் சொல்லுங்கானான்கு” எனவும், “கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன், குடைதுடிமா லல்லியம் கும்பம் சுடர்விழியால், பட்டமதன்பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கன் கொட்டியிவை காண்பதினோர் கூத்து” எனவும் வரும் பழம் பாடல்களானும் உணர்க. (சிலப்- 3: 145. உரைமேற்கோள்).

     முதற் றொழில் என்றது படைத்தற் றொழில். பதுமன் முன்னாக என வேண்டிய ஆக்கச் சொல் ஈறு தொக்கது. பதுமன் முன்னாகத் தேவர்கள் குழுமிய அவ்வுழி என்க. அவ்வுழி- அவ்விடம். மான்றலைக்கரம்-கூத்தியற்றுவோர் பிடிக்கும் ஒருவகைக் கையாகிய முப்பத்து மூன்றனுள் ஒன்று; இதனை,

     “மான்றலையாவது பெருவிரலும் சிறுவிரலும் ஒழிந்த மூன்றும் தம்மில் ஒத்து ஒன்றி முன்னே இறைஞ்சி நிற்பது.” “மான்றலை என்பது வகுக்குங் காலை, மூன்றிடை விரலும் நிமிர்த்தக மிறைஞ்சிப், பெருவிரல் சிறுவிரல் என்றிவை நிமிர்ந்து வருவ தென்ப வழக்கறிந் தோரே” (சிலப். 3-12) எனவரும் அடியார்க்கு நல்லார் உரையானும் மேற்கோளானும் உணர்க.

     கூட்டினை வயக்கி என்புழி கூடு என்றது-இரட்டைக்கையை. மான்றலையாக இரண்டு கைகளிலும் முத்திரை பிடித்து இரண்டையும் இணைத்து என்றவாறு. கூடையில் வயக்கி என்றும் பாடம். கூடை எனினும் மூடி எனினும் ஒக்கும். தூக்கலும் வளைதலுமாகிய தொழிலோடே தொடர்ந்த பதம் என்க. எறிதல்-வீசுதல்.

6 - 8: மற்றதன்.......................................பதித்து

     (இ-ள்) மற்று அதன் தாளம் புத்திரியாக-அக்கூத்தின் தாளம் புத்திரி தாளமாக; நிமிர்ந்து எறிகாலில் கடைக்கண் பதித்து- முன்னர்த் தூக்கி வளைத்த காலை நிமிர்த்து வீசி அக்காலினைக் கடைக்கணாற் பார்த்து என்க.

     (வி-ம்.) அதன்-அக்கூத்தின். புத்திரி-சத்புத்திரிகா தாளம். என்னை"

“தத்தத்தீந் தொந்தமெனத் தாண்டவஞ்செய் கிறசபை
 அந்தர்முக மைந்தனிட மாமுறையே-உற்கடிதம்
 சம்பத்து வேட்டமுடன் ‘சட் பிதா புத்திரிகம்’
 சச்சபுடம் சாசபுட மாம்”       (பரத சாத்திரம், தாளவி - 2)

என்பனவாகலின் என்க.

     இத்தாளத்திற்கு அலகு (மாத்திரை) - 12 என்ப. புலுதம் -1 இலகு -1 குரு -2 புலுதம் 1 ஆக அலகு 12- ஆதலிணர்க.

“சட்பிதா புத்திரிகம் புலுதம் லகு குரு
 இலகுவொடு புலுதம் மாகு மைந்தனுள்
 குரு இரண்டு அல்லன ஒவ்வொன் றாகும்”
                           (பரத சாத்திரம், தாளவி - 13)

எனவரும். காலிற் கடைக்கண் கிடத்தி என்றது, காலைக் கடைக்கண்ணால் பார்த்து என்றவாறு.

8 - 10: பாணியில்...........................பொறுத்து

     (இ-ள்) பாணியில் சிரம் பதித்து-கையிலே தலையினைத் தாங்கி, ஒருநடை பதித்து-அதற்கு ஐவகை நடையினுள் வைத்து ஒரு நடையை மேற்கொண்டு; கொடுகொட்டிக்குக் குறி அடுத்து-இறைவன் ஆடுதற்குரிய கொடு கொட்டி என்னும் கூத்திற்குரிய அடையாளங்களையொட்டி எடுக்கும்; புங்கவம் வாரம் புடை நிலை பொறுத்து-அக் கொடுகொட்டியின் உறுப்புக்களாகிய புங்கவமும் வாரமும் புடையும் நிலையும் ஆகிய நான்குறுப்புக்களையும் மேற்கொண்டு என்க.

     (வி-ம்.) மான்றலைக்கரத்தினிற் கூட்டினை வயக்கலும், தூக்கல் வலையுடன் தொடர்ப்பதம் எறிதலும். அதற்குச் சத்பிதா புத்திரிகம் என்னும் தாலத்தைக் கொட்டலும், பின்னர்க் காலை நிமிர்த்து எறிதலும், அக்காலிற் கடைக்கண் கிடைத்தலும், பாணியிற் சிரம்பதித்தலும், அதற்கென ஒரு நடை பதித்தலும், இறைவன் ஆடும் கொடுகொட்டிக்குரிய அடையாளங்கள் என்பது பெற்றாம். ஈண்டுக் காளி தனக்குரிய மரக்காற் கூத்தினைவிட்டு இறைவனுக்குரிய கொடுகொட்டியினை அவனோடு மாறுபட்டு எதிர்ந்து ஆடுகின்றாள் என்பது நினைவிற்கொள்ளவேண்டும். ஒருநடை என்றது ஈண்டு (இது வெகுளிக் கூத்தாகலின்) அதற்கியன்ற திசிரநடையை என்க.

     கொடுகொட்டி சிவபெருமான் ஆடுங்கூத்தென்பதனை, “அரன் பாண்டரங்கம் கொட்டியிவை” எனவும், “கொடுவிடையோன் ஆடிற்று” எனவும் வருவனவற்றால் உணர்க.

     “புங்கவம், வாரம், புடை, நிலை” என்பன அக்கொடுகொட்டியின் உறுப்புக்கள். என்னை, “கொட்டி கொடுவிடையோன் ஆடிற்று அதற்குறுப்பு ஒட்டிய நான்கா மெனல்” என்பவாகலின் என்க. இவற்றை இக்காலத்தார் “அடவு” அல்லது “அடைவு” என்று வழங்குப.

11 - 15: சச்சபுட.................................திருந்தி

     (இ-ள்) சச்சபுடத்திர்குத் தனி எழு மாத்திரை-திசிர நடையாகிய ஒரு நடைக்குச் சச்சபுடம் என்னும் தாலத்திற்குச் சிறப்பாக எழாநின்ற அலகு எட்டனுள்; ஒன்றைவிட்டு ஒரு சீர் இரண்டு உற உறுத்தி-ஓரலகினைத் தள்ளி ஒரு சீரை இரண்டு கூறாக வகுத்து; எடுத்துத் துள்ளிய இனமுத்திரைக்கு-மேற்கொண்டு ஆடிய கூத்திற்குப் பிடித்த முற்கூறப்பட்ட மான்றலைக் கைக்கு இனமாகிய முத்திரைக்கு; மங்கலப் பாணிக்கு மாத்திரை நான்குடன்-மங்கலமாகிய தாளத்திற்கு நான்கு அலகுகளோடே; சென்று எறிந்து ஒடுங்கும்-சென்றும், காலை வீசியும் மீளும்; துறுமிடை (") திருத்தி-துறுமிடையை (")த் திருத்தமுறச் செய்தும்; என்க.

     (வி-ம்.) மங்கலப்பாணி-மங்கலமாகிய தாளம். மங்கலம்-ஈண்டு ஆக்கம். இனமுத்திரைக்கு ஆக்கமான தாளம் என்க. இனி, பாணி-பாட்டு எனினுமாம். துறுமிடை என்பது காலின் தொழில் விகபத்தில் ஒன்றின் பெயர்போலத் தோன்றுகின்றது. ஆராய்ந்து கொள்க. செல்லுதலும் காலை விசுதலும் மீண்டும் புறப்பட்ட விடத்திற்கே வருதலுமாகிய துறுமிடையை என்க. திருத்தி-திருத்தமுறச்செய்து.

16 - 17: ஞெள்ளலில்......................பரப்பி

     (இ-ள்) ஞெள்ளலில் குனித்த இரு மாத்திரைக்கு-ஞெள்ளல் என்னும் மூன்றாங்காலத்திற் றெழில் செய்தற்கு; பட்டடை எடுக்க-அடிமனை-கோலுதற்பொருட்டு; புலிதம் பரப்பி-முற்படப் புலிதம் என்னும் இரண்டாங்காலத்தைப் பெரிதும் விரித்து என்க.

     (வி-ம்.) ஞெள்ளல்-அறுவகை மார்க்கங்களுள் ஒன்று. ஞெள்ளல் என்பதனை இக்காலத்தார் சித்திரகளை என வழங்குவர். இஃது இரண்டலகினையுடைய மூன்றாங்காலமாகும். பட்டடை அடிமணை-மூன்றாங்காலத்தில் ஆடுதற்கு இரண்டாங் காலம் அடிமணை யாதலின் அதனைப் பட்டடை என்றார். புலிதம்-நாலகுகொண்ட இரண்டாங் காலம். பரப்புதலாவது அதன் உறுப்புக்களைப் பலபடியாக விரித்தல். இங்ஙனம் விரித்தலை இக்காலத்தார் பிரத்தாரம் என்பர். புலிதம் என்பதனை இக்காலத்தார் வார்த்திகளை என வழங்குவர். விரிக்கப்படுவதாகலின் அப்பெயர் வழங்குவதாயிற்று என்க.

18 - 20: புறக்கால்.........................வகுத்து

     (இ-ள்) புறக்கால் மடித்துக் குவித்து எறி நிலையம்-(முற்கூறிய சென்றெறிந்து ஒடுங்குதலாகிய துறுமிடையைத் திருத்தமுற ஆடிய பின்னர்) புறக்காலை மடித்துக் குவித்து வீசுவதாகிய கூத்திற்கு; பதினான்கு அமைத்துவிடும் மாத்திரைக்கு-பதினான்கு அலகுகள் அமைத்து அவற்றுள் கழிமானமாக விடும் இரண்டு அலகிற்கு; பாணியில் வனமும் பிதாவும் வகுத்து-தாளங்களுள் வனமாலியும் சத்பிதா புத்திரிகமும் ஆகிய தாளங்களை நிரலே வகுத்துக்கொண்டு, என்க.

     (வி-ம்.) முன்பு சென்றெறிந்தொடுங்கும் துறுமிடையை ஆடிய பின்பு புறக்கால் மடித்துக் குவித்தறிதலாகிய நிலையத்தை யியற்றி என்க. நிலையம்-கூத்து இனி, புறக்கால் மடித்துக்குவித்து எறியும் காற் றொழிற்கு நிலையம் என்பது பெயர் எனக் கோடலுமாம். நிலையம்-நிலையத்திற்கு என நான்கனுருபு விரித்தோதுக. பாணி-தாளம். பிதா-சட்பிதா புத்திரிகம் என்னும் தாளம். இதற்கு மாத்திரை 12. எனவே விடுமாத்திரை இரண்டாயின. வனமாலி-ஒருவகைத் தாளம். இதற்கு அலகு-7. இவற்றை,

“சற்பிதா மின்கால் தகணம் ஓரணியே
 நற்புலிதம் மாத்திரை நன்மூன் றாமே”             (தாளவி-3)

எனவும்,

“வன்ன மாலி மறைசுழி யிருகோல்
 இன்னகொம் பிணைகுரு ஏழே மாத்திரை”    (தாளவி - 26).

எனவும் வரும் பரத சங்கிரக நூற்பாக்களால் உணர்க. (தாளவியல்).

21 - 22: வட்டம்.....................................பதித்து

     (இ-ள்) வட்டம் கொடுக்கும் இந்திரைபணிக்கு-வட்ட வடிவத்தைத் தோற்றுவிப்பதாகிய “இந்திரை” என்னும் தொழிலுக்கு; மாத்திரை ஆறுடன்-ஆறு மாத்திஐ யளவிற்றாகிய உற்கடிதம் என்னும் தாளத்தோடே; கும்பம் பதித்து-கும்பம் என்னும் இணைக்கை முத்திரை பிடித்து என்க.

     (வி-ம்.) வட்டங்கொடுத்தல்-வட்டவடிவினைத் தோற்றுவித்தல். இதற்கு ‘இந்திரை’ என்பது பெயர் என்பது பெற்றாம். பணி-தொழில். ஆறு மாத்திரை கூறலின் தாளம் உற்கடிதம் என்பது பெற்றாம். கும்பம்-குடம். குடம் போலுதலின், கும்பம் என்றார். இதனைப் ‘புட்பாஞ்சலி’ என்றுங் கூறுப. இதனை, “புட்பாஞ்சலியாவது இரண்டு கையும் குடங்கையாய் வந்து ஒன்றாவது; என்னை" “புட்பாஞ்சலியே பொருந்தவிரு குடங்களையும் கட்டி நிற்கும் காட்சிய தென்ப” எனவரும் அடியார்க்கு நல்லார் (சிலப்: 3-18) உரையானுமுணர்க. குடங்கை எனினும் கும்பக்கை எனினும் ஒக்கும்.

23 - 25: வலவை.......................ஒடுங்க

     (இ-ள்) மண் இருந்து எடுத்த காலுடன்-நிலத்தினின்றுந் தூக்கிய காலுடனே; ஆடிய-கூத்தாடிய; வலவை இடாகினி காளி நாணி நின்று ஒடுங்க-வலவை என்றும் இடாகினி என்றும் கூறப்படுகின்ற பெயர்களையுடைய காளியானவள் நாணமுற்றுக் கூத்தாடுதலொழிந்து தலைகவிழ்ந்து ஒடுங்கி நிற்கும்படி என்க.

     (வி-ம்.) ஆடிய-கூத்தாடிய. வலவை, இடாகினி என்பன காளியின் வேறு பெயர்கள். நின்று என்றது தலைகவிழ்ந்து நின்று என்பதுபட நின்றது.

25 - 27: தானுமோர்........................................தூக்கி

     (இ-ள்) தானுமோர் நாடகம் பாண்டரங்கத்தொடு பாடுபெற்று அமைந்த-தானும் ஒரு கூத்தாகிய தனது பாண்டரங்கம் என்னும் கூத்தோடொத்த சிறப்புற்றுத் தனக்குப் பொருந்திய; மோகப் புயங்கம் முறைத் துறை தூக்கி-மோகப்புயங்கம்’ என்னும் கூத்தினை நூன்முறைப்படியே ஆடத்தொடங்கி; என்க.

     (வி-ம்.) நாடகம்-ஈண்டுக் கூத்து என்னும் பொருட்டாய் நின்றது. பாண்டரங்கம்-சிவபெருமானுக்குச் சிறந்துரிமையுடையதொரு கூத்து. இதனை, “பாண்டரங்கம் முக்கணா னாடிற் றதற்குறுப்பு, ஆய்ந்தன ஆறா மெனல்” என்பதனாலுணர்க (சிலப். 3- 14 அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்.)

     இனி, புயங்கம் என்பதும் சிவபெருமான் கூத்தனுள் ஒன்றாதலை,

“ஆதி யனுப்பிர காசமும் பீடம்புட் பாஞ்சலிமிக்
 காது புயங்கமும் தேசியும் தேசியொத் துக்கருதும்
 நீதி நிழல்வைப்பு வகுப்புடன் வாக்கியம் நேர்கவுத்தம்
 ஓதனுக் குத்தெண்ட பாதமு மீரெட்டென் றோதினரே”

எனவரும் பரதசங்கிரகச் செய்யுளானும் உணர்க. (தாண்டவம் - 1) முறை-நூன்முறை. தூக்குதல்-மேற்கோடல்.

28 - 31: அதற்கு......................................துடக்கி

     (இ-ள்) அதற்குச் சார் அணி அருட் கரம் ஒன்றில்-அக்கூத்திற்குப் பொருந்த முத்திரைபிடித்து அழகியதாகிய அருட்கை ஒன்றினாலே; பாணியிரண்டும்-அக்கூடத்திற்குரிய தாளம் இரண்டனையும்; தாளமாக்கி-தாளமாக இயக்கி; ஒருதாள் மிதித்து- ஒரு திருவடியை நிலத்திலே ஊன்றி; விண் உற விட்ட மறுதாள் மலரில்-வானத்திலே பொருந்த நீட்டிய மற்றொரு திருவடியாகிய செண்டாமரை மலரின்கண்; மலர்க் கரந் துடக்கி-அச் செண்டாமரை மலரை ஒத்த மற்றொரு கையைச் சேர்த்தியும் என்க.

     (வி-ம்.) அதற்கு-அக்கூத்திற்கு. சார்கரம், அருட்கரம், அணிகரம் எனத் தனித்தனி கூட்டுக. சார்கரம்: வினைத்தொகை. அக்கூத்தைச் சார்ந்த முத்திரைகொண்ட கை என்றவாறு. அருட்கரம் என்றது அபயக்கையை ஒற்றைக்கையில் தாளமாக்கி என்றது அத்தாளம் அமைய அக்கையை இயக்கி என்றவாறு. பாணி-புயங்கக் கூத்திற்கு இரண்டு தாளம் உரியன வாதலின் பாணியிரண்டும் தாளமாக்கி என்றார். இக்கூத்திற்கு நான்கு தாளம் உரியன என்று பரத சங்கிரதம் கூறும்; எனவே பன்னியீரிரண்டும் எனப் பாடமிருத்தல் கூடும் என்று கருதலாம். என்னை"

“புயங்கந் தனக்குப் புகல்சமதா ளத்தொ
 டியங்குசிங்க நாதணி டேங்கி-வியன்கொடுகம்
 வைத்தா னிவைநான்கும் வண்பொதிய மாமுனிவன்
 இத்தா ரணிமகிழ வே”

என்பவாகலின் (பரத சங்கிரகம். தாண்டவம்-12).

32 - 35: பார்ப்பதி.............................தெரிக்க

     (இ-ள்) பார்ப்பதிப் பாணியைத் துடிமணி எடுப்ப- ஆனந்தக்கூத் தியற்றுங்கால் உமையம்மையார் தருதற்கியன்ற தாளத்தை இவ்வெகுளிக் கூத்தாகிய புயங்கத்திற்குத் தான் பிடித்துள்ள உடுக்கையிற் கட்டப்பட்ட ஒலிமணியே கொடாநிற்பவும்; தண்டி சுருதியை வலிகொண்டு அமைப்ப-அதற்குரிய சுருதியை யாழ் வலிவுத்தானத்தே அமைத்துக் கொடாநிற்பவும்; முதல் ஏழதனை ஒன்றினுக்கு ஏழு என வீணைபதித்து தானம் தெரிக்க- இசைமுதலாகிய குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழிற்கு குரல் குரலாகிய அரும்பாலைக்குக் குரல் பெய்தும் துத்தம் குரலாகச் செவ்வழிப்பாலைக்குத் துத்தம் பெய்தும் இங்ஙனமே ஒவ்வொன்றிற்கும் ஏழு ஏழு இசை வகுத்துத் தும்புருவம் நாரதரும் தத்தம் யாழிலே அமைத்துத் தானங்களைக் காட்டா நிற்பவும் என்க.

     (வி-ம்.) இறைவன் இன்பக் கூத்திடுங்கால் பார்வதி பாணி தருவாளாகலின் அதனைப் பார்ப்பதிப்பாணி என்றார். இது வெகுளிக் கூத்தாகலின் அமையார் தரும் அப்பாணியை இறைவன் ஏந்திய உடுக்கையின் மணியே கொடுப்பதாயிற்று என்க. பார்ப்பதி பாணி தருவாள் என்பதனை,

படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி யாடுங்காற் கோடுயர் அகல்குறிக்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ;
மண்டமர் பலகடந்து மதுகையா னீறணிந்து
பண்டரங்க மாடுங்காற் பணைமொழி லணைமென்றோள்
வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ;
கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரளத்
தலையங்கை கொண்டுநீ காபால மாடுங்கான்
முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ:”

எனவரும் (கடவுள் வாழ்த்து) கலியானும் உணர்க.

     தண்டி-யாழ்.வீணைபதித்து என்பதற்கு, தும்புருவும் நாரதரும் என எழுவாய் வருவித்தோதுக. ஏழ்-குரல் முதலிய ஏழிசை. தானம்-வலிவு மெலிவு சமன் என்பன.

36 - 37: முற்றுடி..........................அறுத்து

     (இ-ள்) முன் துடி மணியில் ஒற்றிய பாணியை-முன்னே உடுக்கைமணியில் ஒற்றப்பட்ட தாளத்தை; நாதங் கூட்டி-ஒலி கூட்டி; மாத்திரை அறுத்து-அலகறுத்து என்க.

     (வி-ம்.) முற்கூறப்பட்டமையின் முற்றுடிமணியில் ஒற்றிய பாணி என்றார். நாதம்-ஒலி.

38 - 42: மாங்கனி...............................பெருமான்

     (இ-ள்) முன் ஒரு நாள் மாங்கனி இரண்டில் ஆம் கனி ஒன்றால்-பண்டொரு நாள் காரைக்காலில் தன் கணவன் உய்த்த மாங்கனி இரண்டனுள் ஒன்றை அடியார்க்கு வழங்கிவிட்டமையால் பின்னர் உண்ணவந்த கணவன் ஒரு கனியைத் தின்றுவிட்டு மற்றொரு கனியையுங் கொடுவா! என்றபொழுது இறைவனருளாலே உருவாகிய ஒரு மாங்கனி காரணமாக; முழுக்கதி அடைந்த- முழுமையான வீட்டுலகினைப் பெற்ற; அம்மைப் பெயர் பெறு மருள் பேய் குனிப்ப-காரைக்காலம்மையார் என்னும் பெயரைப்பெற்ற மருட்கையையுடைய பேயும் மகிழ்ச்சியாலே கூத்தாடாநிற்பவும்; பூதமும் கூளியும் நடிப்ப-பூதகனங்களும் பேய்க்கூட்டமும் களித்துக் கூத்தாடாநிற்பவும்; அமரர் கண் களிப்ப ஆடிய பெருமான்- ஆங்குக் குழுமியிருந்த பிரமனை யுள்ளிட்ட தேவர்களும் கண்டு கண்களிக்கவும் கூத்தாடிய சிவபெருமான் எழுந்தருளிய என்க.

     (வி-ம்.) 1-முதல-42 வரையில் வடவனத்து ஒருநாள் மாறுபட்டு எதிர்ந்து வயக்கி எறிந்து, கிடத்திப் பதித்துப் பொறுத்து உறுத்தித் திருத்திப் பரப்பி அமைத்து வகுத்துப் பதித்து ஆடிய காளி நாணி நின்று ஒடுங்கத் தானுமோர் நாடகம் மோகப் புயங்கம் தூக்கி ஆக்கி மிதித்துத் துடக்கி எடுப்பவும் களிப்பவும் ஆடிய பெருமான் என இயைத்துக் கொள்க; முழுக்கதி என்றது சாயுச்சிய பதவியை. அம்மைப்பெயர்: காரைக்காலம்மையார் என்னும் பெயர். இறைவன் அம்மையே என்றழைத்தமையால் அதுவே பெயராயிற்று. இவ்வரலாற்றினைத் திருத்தொண்டர்புராணத்தில் காரைக்காலம்மையார் புராணத்தில் காண்க. இறைவன் கூத்தினைக் கண்கூடாகக் கண்டு மருட்கை எய்துதலின் மருட்பேய் என்றார். இனிக் கண்டோர் மருளுதற்குக் காரணமான பேய் எனினுமாம். குனித்தல்-ஆடுதல். கூளி-பேய். பெருமான்-சிவபெருமான் என்க.

43: மதுரை.................................மடந்தை

     (இ-ள்) மதுரை அம்பதி எனும்-மதுரை என்னும் அழகிய திருநகரத்தை ஒத்த நலமுடைய; ஒருகொடி மடந்தை-ஒப்பற்ற பூன்கொடியை ஒத்த வளப்பமுடைய எம்பெருமாட்டியே கேள்! என்க.

     (வி-ம்.) மதுரை தன்கண் உறைவோர்க்குக் கண்டு கேட்டு உண்டு உற்று உயிர்த்து உணரும் ஐம்புலவின்பங்களையும் வழங்குமாப் போலவே நின் கணவனுக்கு அவ்வைம்புலவின்பங்களையும் ஒருங்கே வழங்கும் பெண்மை நலமுடையை என்பாள் மதுரையம்பதி எனும் மடந்தை என்றாள். மடந்தை: விளி.

44 - 45: சீறிதழ்................................கற்பு அதனால்

     (இ-ள்) சீறிதழ் சாதி-சிறிய இதழ்களையுடைய சாதி முல்லை மலருக்கு இயற்கையாயமைந்த; பெருமணம் போல-பெரிய மணம் அதன் அகமெலாம் அமைந்து கமழமாறுபோல; நின் உளம் நிறைந்த நெடுங் கற்பதனால்-உயர்குடிப் பிறப்பினைளாகிய நினக்கு இயற்கையாயமைந்த நின் உள்ள மெல்லாம் நிறைந்த நெடிய கற்புடைமை காரணமாக; என்க.

     (வி-ம்.) சாதி-சாதிமுல்லைப் பூ. தலைவியின் உயர்குடிப் பிறப்பினை இதனாற் குறித்தனள். மேலும் முல்லைப்பூ கற்பிக்கறிகுறியாகலானும் அம்மலரையே உவமையாகேடுத்தாள். ஆடவர் மேற்கொண்ட வினைமுற்றி வெற்றியுடன் மீளுதற்குக் காரணம் அவர் தம் மனைவியர் கற்புடைமையே என்பது நம் முன்னோர் கொள்கை. ஆதலின் தலைவன் பொருளீட்டி இனிதின் மீண்டு வருதற்கு அவளுடைய கற்பையே ஏதுவாக்கினாள். இதனை,

சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே!
வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேந்தொடா
கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்:
காந்தள் கடிகமழும் கண்வாங் கிருஞ்சிலம்பின்
வாங்கமை மென்றோட் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்
தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்,”

எனவரும் கலியானும் (குறிஞ்சி - 3) இந்நூலாசிரியர் இயற்றிய “ஏழ்கடல்.................களிறே” எனவரும் (61) செய்யுளானும் உணர்க.

46 - 47: வினை...............................போல

     (இ-ள்) வினை உடல் புணர வரும் உயிர் பற்றி-இருவினை காரணமாகத் தோன்றிய உடலைச் சேர்தற்கு வருகின்ற உயிரினைத் தொடர்ந்து; புண்ணியம் தொடரும் புணர்ச்சிபோல-முற்பிறப்பிலே செய்த அறம் தொடர்ந்துவந்து அவ்வுயிரினைப் பொருந்துமாறுபோலே நின்னைப் பொருந்துதற்கு என்க.

     (வி-ம்.) பிரிந்துபோன தலைவன் தலைவியை நாடி மீண்டு வருதற்கு இறந்த உயிரினைத் தொடர்ந்து மறுமையில் அவ்வுயிர் செய்த அறம் தொடர்ந்து வருதல் உவமை. பொருந்துதற்கு வரும் வேந்தன் வரவு (58) எனச் சென்றியையும்.

     வினை உடல் தோன்றுதற்குக் காரணமாகலின் வினையுடல் என்றார். புண்ணியம்-அறம். உயிர் தலைவிக்கும் புண்ணியம் தலைவனுக்கும் உவமைகள்.

48 - 54: காலம்.....................நின்று

     (இ-ள்) காலம் உற்று ஒடுங்கும் நீள் முகில் கூட்டமும்-நம்பெருமான் குறித்துச்சென்ற கார்காலத்தே தோன்றிப் பின்னர் மறையும் நெடிய முகிற் கூட்டமும்; அணிதரு தெருவில்- அணிசெய்யப்பட்ட தெருவின்கண்; கொடிதரும் தேரும்- கொடிகளையுடைய தேர்க்குழாமும் குழுமி; நாற்குறிப் புலவர் கூட்டெழும் நனி புகழ்-ஆசுகவி, சித்திரகவி, மதுரகவி, வித்தாரகவி, என்னும் நான்குவகைப்பட்ட பெயர்களையுடைய நல்லிசைப்புலவர் குழுமிப் பாடும் பெரும் புகழையுடைய; மருந்து அயில் வாழ்க்கையர் மணி நகர் உருவின-அமுதமுண்ணும் வாழ்க்கையினையுடைய அமரர்கள் உறைகின்ற அழகிய நகரத்தையும் ஊடுருவிச் சென்றனவாகிய; உருள எழு பூமியும் அவ்வுருள் பூண்ட கலிமான் துகளும்-அத்தேர்களின் உருளைகளால் எழுகின்ற புழுதியும், அவ்வுருகளையுடைய தேர்களிற் பூட்டிய குதிரைகள் குளம்பால் எழுப்பிய புழுதியும்; கதிர்மறை நீழலின் நின்று- ஞாயிற்றுமண்டிலத்தை மறைத்தலாலே உண்டான நீழலிலே இனிதே நின்று என்க.

     (வி-ம்.) காலம்-கார்காலம். நாற்குறி-நால்வகைப் பெயர்கள். அவை: ஆசுகவி, சித்திரகவி, மதுரகவி, வித்தாரகவி, என்பன. கூட்டெழுதல்: ஒருசொல். முகிற் கூட்டமும் தேரும் குழுமின என ஒருசொற்பெய்க. இதனால் நம்பெருமான் குறித்துச்சென்ற பருவம் தப்பாமே வந்தனன் என ஓகை கூறினாளாயிற்று. அத்தேரின் உருள்கெழு பூமி என்றும் ஒருசொற் பெய்க. மருந்து-அமிழ்தம். உருவின-ஊடுருவினவாகிய. கலிமான்-குதிரை. குதிரைகளும் கனைத்து ஆரவாரிக்கின்றன என்பாள் கலிமான் என்றாள். கதிர் ஞாயிற்றுமண்டிலம்.

54 - 58: முன்னிட்ட..........................எழுந்தே

     (இ-ள்) முன் இட்ட நிறை அணி பொறுத்து-நீ பண்டு களைந்திட்ட நிறைந்த அணிகலன்கள் அனைத்தையும் அணிந்துகொண்டு; பருங்குலைக் கயத்துள் கருந்தாள் கழுநீர் நிறைவினுள்-பரிய கரைகளையுடைய குளத்தின்கண் மலர்ந்துள்ள கரிய நாளங்களையுடைய செங்கழுநீர் மலர்க்கூட்டத்தினூடே; பூத்த தாமரை ஒன்று என-மலர்ந்த ஒற்றைத்தாமரை மலர் போன்று; நின் உயிர் ஆயம் நாப்பண்-நின்னுடைய உயிர் போன்ற தோழியர் குழுவினிடையே; வேந்தன் வரவினுக்கு எழுந்து மன்னுக- நம்பெருமானை வரவேற்கும் பொருட்டு விரைந்து எழுந்து வந்து நிற்பாயாக! என்க.

     (வி-ம்.) குலை-கரை. கயம்-குளம். தாள்-நாளம். கழுநீர்- செங்கழுநீர்மலர்: ஆகுபெயர். இது தோழியர் குழுவிற்குவமை. ஒற்றைத்தாமரை, தலைவிக்குவமை. ஆயம்-தோழியர்குழு. நாப்பண்-நடு. வேந்தன்-தலைவன். வரவினுக்கு- வரவேற்கும்பொருட்டு.

     இனி இதனை, “மடந்தையே! நீ கதிர்மறை நீழலின்கண் அணி பொறுத்து நின் ஆயம் நாப்பண் எழுந்து வேந்தன் வரவினுக்கு மன்னுக!” என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.