பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 77

நேரிசையாசிரியப்பா

 
   
5
  மருவளர் குவளை மலர்ந்துமுத் தரும்பிப்
பசுந்தாட் டோன்றி மலர்நனி பறித்து
நெட்டெறி யூதை நெருப்பொடு கிடந்து
மணிப்புறங் கான்ற புரிவளை விம்மி
விதிப்பவன் விதியா வோவநின் றெனவென்
10
  னுள்ளமுங் கண்ணு நிலையுறத் தழீஇயின
னுவணக் கொடியின னுந்திமலர் தோன்றிப்
பார்முதற் படைத்தவ னடுத்தலை யறுத்துப்
புனிதக் கலனென வுலகுதொழக் கொண்டு
வட்டமுக் கோணஞ் சதுரங் கார்முக
15
  நவத்தலைத் தாமரை வளைவாய்ப் பருந்தெனக்
கண்டன மகந்தொறுங் கலிபெறச் சென்று
நறவிரந் தருளிய பெரியவர் பெருமான்
கூக்குரல் கொள்ளக் கொலைதரு நவ்வியும்
விதிரொளி காற்றக் கனல்குளிர் மழுவு
20
  மிருகரந் தரித்த வொருவிழி நுதலோன்
கூடலொப் புடையாய் குலவுடுத் தடவுந்
தலைமதில் வயிற்றுட் படுமவ ருயிர்க்கணந்
தனித்தனி யொளித்துத் தணக்கலு மரிதெனப்
போக்கற வளைந்து புணரிரு ணாளுங்
  காவற் காட்டின வழியுந்
தேவர்க் காட்டும் பாசறை யினமே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவன் கூற்று

துறை: மறவாமை கூறல்.

     (இ-ம்) இதற்கு, “கரணத்தின் அமைந்து முடிந்த காலை” (தொல். கற்பி-5) எனவரும் நூற்பாவின்கண் ‘காமக்கிழத்தி மனையோள் என்று இவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் எனவரும் விதிகொள்க.

7-13: உவண.....................பெருமான்

     (இ-ள்) உவணக்கொடியினன் உந்திமலர் தோன்றி- கருடக்கொடியையுடைய திருமாலினது திருவுந்தித்தாமரை மலரிலே பிறந்து; பார்முதல் படைத்தவன்-நிலமுதலிய உலகங்களைப் படைத்த பிரமனுடைய; நடுத்தலை அறுத்து-ஐந்து தலைகளுள் வைத்து நடுவிருந்த தலையினைக் கிள்ளி; உலகு புனிதக்கலன் எனத் தொழக் கொண்டு-சான்றோர் தூய கலம் என்று தொழும்படி கைக்கொண்டருளி; வட்டம் முக்கோணம் சதுரம்-வட்டவடிவமாகவும் முக்கோணவடிவமாகவும் சதுரவடிவமாகவும்; கார்முகம் நவத்தலை தாமரை வளைவாய் பருந்து என-வில்வடிவாகவும் ஒன்பது கோணவடிவாகவும்; கண்டன மகந்தொறும்-செய்யப்பட்டனவாகிய குறிகளையுடைய வேள்விகள் தோறும்; கலிபெறச் சென்று; வேதமுழக்கமுண்டாகப் போய்; நறவு இரந்து அருளிய- அவியுணவைக் கேட்டருளிய; பெரியவர் பெருமான்-நீத்தோர் பெருமானும் என்க.

     (வி-ம்.) உவணம்-கருடன். உந்தி-கொப்பூழ். பார்-நிலவுலகம். புனிதம்-தூய்மை. உலகு: ஆகுபெயர். வட்டம் முதலிய வடிவாக இயற்றப்பட்ட வேள்விக்குழி என்க. கார்முகம்-வில். நவத்தலை- ஒன்பதுகோணம். தாமரை: ஆகுபெயர். வளைவாய்: வினைத்தொகை. மகம்-வேள்வி. நறவு-அவியுணவு பிரமனுடைய தலையை அறுத்துக் கலனாகக்கொண்டு நறவு இரந்தருளிய பெருமான் நீத்தோர் பெருமான் எனத் தனித்தனி கூட்டுக. பெரியவர்-நீத்தோர்.

14-17: கூக்குரல்.........................ஒப்புடையாய்

     (இ-ள்) கூக்குரல் கொள்ள-கூவுகின்ற குரலொலியானது உலகமெல்லாம் பரவும்படி; கொலைதரு நவ்வியும்- கொலை செய்யவந்த மானையும்; விதிர் ஒளி காற்ற கனல்-யாவரும் நடுங்கும்படி ஒளிவீசுதலால் அழற்கடவுளும்; குளிர்-குளிர்தற்குக் காரணமான; மழுவும்-மழுவையும்; இருகரம் தரித்த-வலக்கையிலும் இடக்கையிலும் ஏந்திய; ஒருவிழி நுதலோன்-ஒரு கண்பொருந்திய நெற்றியையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள; கூடல் ஒப்பு உடையாய்-மதுரைமாநகரத்தை ஒத்த தோழியே கேள்! என்க.

     (வி-ம்.) கூக்குரல்-கூவுகின்ற குரல். கொள்ளுதல்-பரவுதல். நவ்வி-மான். காற்றுதல்-வீசுதல். ஒளி வீசுதலால் தீக்கடவுளும் குளிர்தற்குக் காரணமான மழு என்க. இருகரந் தரித்த ஒருவிழி நுதலோன் என்புழிச் செய்யுளின்ப முணர்க.

17-22: குலம்........................பாசறையினுமே

     (இ-ள்) குலம் உடு தடவும்-கூட்டமான விண்மீனைத் தீண்டாநின்ற; மதில்தலை வயிற்றுள்-மதிலின் உச்சியிலும் அதன் அகத்தினும்; படும் அவர் உயிர்க்கணம்-துன்பப்பட்டிருந்த அப்பகைவருடைய உயிர்கள்; தனித்தனி ஒளித்து தணக்கலும் அரிது என-யாம் தனித்தனியே மறைந்து ஓடிப்போதலும் அரிதென்று கருதும்படி; போக்கு அற வளைந்து-அவர் தப்பிப்போகாதபடி மதிலைச் சூழ்ந்து; புணர் இருள் நாளும்- முற்றுகையிட்டிருந்த இருளையுடைய இரவிலும் பகலிலும்; காவல் காட்டின வழியும்- காவல் காத்தவிடத்தும்; தேவர் காட்டும் பாசறையினும்-தேவரைக் காட்டுகின்ற பாசறையிடத்தும் என்க.

     (வி-ம்.) உடு-விண்மீன். தலைமதில்-தலையாய மதில் எனினுமாம். அவர்-நொச்சிமறவர். போக்கு-தப்பிப்போதல். புணர்தல்-முற்றுகையிட்டு இருத்தல். இருளும் நாளும் என உம்மை விரித்தோதுக. இருள்-இரவு. நாள்-பகல். பாசறையிலுள்ளோர் போர்க்களம் புக்குழிப் பகைவர்க்கஞ்சாது விழுப்புண்பட்டிருந்த பொழுது தேவர் ஆவராதலால் தேவர்காட்டும் பாசறை என்றார்.

1-6: மருவளர்...................தழீஇயினள்

     (இ-ள்) மருவளர் குவளை மலர்ந்து-கண்களாகிய மணமிக்க குவளைமலர்ந்து; முத்து அரும்பி-பற்களாகிய முத்துக்கள் தோன்றி; பசுந்தாள் தோன்றி மலர் நனி மறித்து-கைகளாகிய பசிய தண்டினையுடைய காந்தள்மலர் பெரிதும் வளைந்து; நெட்டு எரி ஊதை நெருப்பொடு கிடந்து-வேகமாய் வீசாநின்ற பனிக்காற்றாகிய நெருப்போடு கிடந்து; மணிபுறம் கான்ற புரிவளை விம்மி- மணிகளைப் புறத்திலே உமிழ்ந்த கழுத்தாகிய வரை பொருந்திய சங்கு விம்மி; விதிப்பவன் விதியா-பிரமன் விதித்தற்கிசையாத; ஓவம் நின்றென- ஓவியம் நிலைபெற்றிருந்தாற்போல; என் உள்ளமும் கண்ணும்-என் நெஞ்சத்தையும் கண்ணையும்; நிலையுறத் தழீயிஇனள்- விட்டு நீக்காமல் தழுவியிருந்தனள், ஆதலால் எம்முள் பிரிவு என்பது ஒன்றில்லைகாண் என்க.

     (வி-ம்.) இவள் இரவும் பகலும் யாம் காத்த விடத்தும் பாசறையிடத்தும் குவளைமலர் போன்ற கண்கள் மலர்ந்தவளாய் முத்துப் போன்ற பற்கள் தோன்றப்பெற்றுக் காந்தட்பூப்போன்ற கைகளினால் முகத்தைத் தாங்கி உதைபோன்ற நெட்டுயிர்ப்பாகிய நெருப்போடே சங்கம் போன்ற கழுத்து விம்ம அழுது ஓவியம்போல என்நெஞ்சினும் கண்ணினும் இடையறாது இருந்தாள். ஆதலால் இவளை யான் பிரிந்தறியேன் என்பது கருத்து. எனவே தான் பிரிந்துழித் தலைவி ஆற்றாமையால் வருந்தியிருக்கும் நிலைமையை யான் இடையறாது என் மனக்கண்முன்னே கண்டிருந்தேன். ஆதலாற்றான் விரைந்து மீள்வேனாயினேன் எனத் தலைவியைத் தான் மறவாமையை உணர்த்தினாளாயிற்று.

     இதனை, அறுத்துக்கொண்டு சென்று தரித்த நுதலோன் கூடலொப்புடையாய், புணரிருணாளும் வழியும் பாசறையினும் மலர்ந்து அரும்பி மறித்துக்கிடந்து விம்மி ஓவநின்றென வுள்ளமுங் கண்ணுந் தழீஇயினளென வினைமுடிவுசெய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.