பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 79

நேரிசையாசிரியப்பா

 
   
5
  உலர்கவட் டோமைப் பொரிசினைக் கூகையும்
வீசுகோட் டாந்தையுஞ் சேவலோ டலமரத்
திரைவிழிப்பருந்தினம் வளையுகிர்ப் படையாற்
பார்ப்பிரை கவரப் பயனுற முலகிற்
கடனறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத்
10
  தழலுணக் கொடுத்த வதனுண விடையே
கைவிளக் கெடுத்துக் கரையினங் கரையப்
பிணம்பிரித் துண்ணுங் குணங்கினங் கொடுப்பச்
சூற்பே யேற்ப விடாகினி கரப்பக்
கண்டுளந் தளிர்க்குங் கருணையஞ் செல்வி
15
  பிறைநுத னாட்டி கடுவளர் கண்டி
யிறானற வருவி யெழுபரங் குன்றத்
துறைசூர்ப் பகையினற் பெறுதிரு வயிற்றின
ளொருபாற் பொலிந்த வுயர்நகர்க் கூடற்
கடுக்கையஞ் சடையினன் கழலுளத் திலர்போற்
20
  பொய்வரு மூரன் புகவரு மிற்புக
வென்னுளஞ் சிகைவிட் டெழுமனற் புக்க
மதுப்பொழி முளரியின் மாழ்கின தென்றாற்
றோளிற் றுவண்டுந் தொங்கலுண் மறைந்துந்
தைவர லேற்றுங் கனவினுந் தடைந்துந்
25
  திரைகடற் றெய்வமுன் றெளிசூள் வாங்கியும்
பொருட்கான் றடைந்தும் பாசறைப் பொருந்தியும்
போக்கருங் கடுஞ்சுரம் போகமுன் னிறந்துங்
காவலிற் கவன்றுங் கல்வியிற் கருதியும்
வேந்துவிடைக் கணங்கியும் விளைபொருட் குருகிய
  நின்ற விவட் கினி யென்னாங்
கன்றிய வுடலுட் படுநனி யுயிரே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழி கூற்று

துறை: பொறையுவந்துரைத்தல்.

     (இ-ம்) இதனை, “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் பிற என்பதனாலமைத்துக் கொள்க.

1-5: உலர்........................கழித்து

     (இ-ள்) உலர்கவட்டு ஓமைப் பொரி சினை-உலர்ந்த கொம்பினையுடைய ஓமை என்னும் மரத்தினது பொரிந்த கிளையிலுள்ள; கூகையும்-கோட்டானும்; வீசு கோட்டு ஆந்தையும்- அம்மரத்தினது நெடிய கிளையிலுள்ள ஆண்டலைப்புள்ளும்; சேவலொடு அலமர-தத்தஞ் சேவற்பறைவைகளோடு பறந்து சுழலாநிற்ப; திரை விழிப் பருந்து இனம்-திரைந்த விழியினையுடைய பருந்துகள்; வளை உகிர்ப் படையால் பார்ப்பு இரைகவர-வளைந்த நகமாகிய படைக்கலன்களால் அவற்றின் குஞ்சுகளாகிய இரையைக் கவர்ந்திடும்படி; பயன் உறு உலகில்-பயன் தருகின்ற பாலை நிலத்தின்கண்; கடன் அறும் யாக்கை கவர்கடன் கழித்து-வந்த வினைப்போக மற்றமையால் உயிர் கழிந்த உடலின் பொருட்டுச் செய்யக்கடவ கடன்களைச் செய்து முடித்து, என்க.

     (வி-ம்.) உலர்கவடு: வினைத்தொகை. ஓமை-ஒரு பாலை நிலத்துமரம். பொரிசினை-வினைத்தொகை. கூகையும் கோட்டானும் பாலைக்கருப் பொருளாகிய பறவைகள். கூகைகோட்டான் என்னும் பறவைகளின் பார்ப்புக்களைப் பருந்து இரையாகக் கவரும் என்க. திரைவிழி-தோல்திரைந்த விழி. உகிர்-நகம். இவ்வகைப் பயன் அன்றிப் பிற பயன் தராத பாலை என்பது கருத்து. பாலை நன்காடுடைமையின் கடன் அறும் யாக்கை கவர் கடன் கழித்து என்றார். கடன்-வினை நுகர்ச்சி.

6-10: தழல்......................செல்வி

     (இ-ள்) தழல் உணவுக் கொடுக்க-தீயுண்ணும்படி வழங்காநிற்ப; அதன் உணவு இடை-அந்நெருப்பு உண்ணும் உணவின் நடுவே; கை விளக்கு எடுத்து கரை இனம் கரைய-கையில் விளக்கு ஏந்திப் பசியால் அழுகின்ற தம்மக்கள் அழா நிற்பவே; பிணம் பிரித்து உண்ணும் குணங்கு இனம் கொடுப்ப- அப்பிணத்தை மூடு பிரித்துண்ணும் இயல்புடைய பேய்கள் பிணத்தின் தசையினை வழங்குதலாலே; சூல்பேய் ஏற்ப-அவற்றில் சூல் கொண்ட பேய்கள் அவற்றைக் கையில் ஏற்றுக்கொள்ள; இடாகினி கரப்ப-இடாகினிப் பேய்கள் அத்தசையினைப் பறித்து, மறைத்துக் கொள்ளலை; கண்டு உளம் தளிர்க்கும்- கண்டு நெஞ்சங்களிக்கும்; கருணைஅம் செல்வி-அருளுடைய அழகிய காடுகிழாளாகிய செல்வியும் என்க.

     (வி-ம்.) உணவிடை-உண்ணும் பொழுதில். கரையினம்-அழும் மக்கள். விளக்கு-ஈண்டுக் கொள்ளி. குணங்கு-பேய். சூல் பேய் ஏற்ப இடாகினிப்பேய் அதனைப் பறித்துக் கரப்ப வென்க. இடாகினி-ஒருவகைப் பேய். இக்காட்சியைக் கண்டு செல்வி களிப்பாள் என்பது கருத்து; செல்வி-செல்வியும்.

11-15: பிறை....................போல்

     (இ-ள்) பிறை நுதல் நாட்டி-பிறைபோலும் தன் நெற்றியிற் கண்ணுடையாளும்; கடு வளர் கண்டி-நஞ்சு திகழும் மிடற்றினையுடையாளும்; இறால் நறவு அருவி எழு பரங்குன்றத்து உறை-தேனடையினின்றுமொழுகும் தேன் அருவியாகப் பெருகியோடா நின்ற திருப்பரங்குன்றத்தின்கண் எழுந்தருளிய; சூர்ப் பகையினன்-சூரனுக்குப் பகைவனாகிய முருகக் கடவுளை; பெறு திரு வயிற்றினள்-பெற்ற பெருமையுடைய அழகிய வயிற்றையுடையாளும் ஆகிய கொற்றவை; ஒரு பால் பொலிந்த-ஒரு பக்கத்தில் விளங்கிய; உயர் நகரக் கூடல்-சிறந்த நகரமாகிய மதுரைமா நகரின்கண் எழுந்தருளிய; கடுக்கை அம்சடையினன்- கொன்றைமலர்மாலை யணிந்த சடையையுடைய சிவபெருமானது; கழல் உளத்து இலர் போல்-கழலணிந்த திருவடியை நெஞ்சினினையாத மடவோர் போல என்க.

     (வி-ம்.) நாட்டி-நாட்டத்தை (கண்ணை)யுடையாள்; கடு-நஞ்சு. கண்டி- கண்டத்தையுடையாள். கண்டம்-மிடறு. இறால்-தேனடை. சூர்-சூரன். சூர்ப்பகையினன்; முருகன். வயிற்றினள் ஒருபாற் பொலிந்த சடையினன்: கூடல் சடையினன் எனத் தனித்தனி கூட்டுக. கடுக்கை: ஆகுபெயர். கழலுமது.

16-18: பொய்....................என்றால்

     (இ-ள்) பொய் வரும் ஊரன்-பொய்ம்மொழிதல் கை வந்த தலைவன்; புக அரும் இல்புக-சான்றோர் புகுதற்கொண்ணாத பரத்தையர் இல்லத்தில் புகுதலாலே; என் உளம் சிகை விட்டு எழும் அனல் புக்க-என்னெஞ்சம் கொழுந்துவிட்டெரிகின்ற நெருப்பிலிடப்பட்ட; மதுபொழி முளரியின் மாழ்கினது என்றால்-தேன் பொழிகின்ற தாமரைமலர்போலக் கருகியதானால் என்க.

     (வி-ம்.) பொய் வருதல்-பொய்ம்மொழிதலின் வன்மையுறுதல். அரும்இல் என்புழி-அருமை, மாட்டாமை மேற்று. இல்- பரத்தையரில்லம்; சிகை-கொழுந்து. மாழ்குதல்-ஈண்டுக் கருகுதல்.

16-22: தோளில்.................................தடைந்தும்

     (இ-ள்) தோளில் துவண்டும்-அத்தகைய தலைவனுடைய தோளின்கட் கிடந்து புரண்டும்; தொங்கலுள் மறைந்தும்- அவனணிந்த மாலையினூடே மறைந்தும்; தைவரல் ஏற்றும்-அவன் வருடுதலை ஏற்றுக்கொண்டும்; கனவினும் தடைந்தும்-அவனைக் கண்ட கனவினும் செல்லற்க என்று தடுத்தும்; திரைக்கடல் தெய்வமுன் தெளிசூள் வாங்கியும்-அலையையுடைய கடற் றெய்வத்தின் முன்னர் நெஞ்சு தெளிதற்குக் காரணமான சூண்மொழி கூறுவித்தும்; பொருள்காண் தடைந்தும்- பொருளீட்டற்குக் காட்டுவழியிலே போகாமல் தடுத்தும் என்க.

     (வி-ம்.) துவளுதல்-புரளுதல். தொங்கல்-மாலை. தைவரல்- வருடுதல். தடைதல்-தடுத்தல். கடற்றெய்வம்-வருணன். தெளிசூல்: வினைத்தொகை. பொருளிற்கு என நான்கனுருபு விரிக்க.

22-26: பாசறை.........................இவட்கு

     (இ-ள்) பாசறை பொருந்தியும்-அவன் போர் மேற்கொண்டு பாசறைக்குச் சென்ற போது ஆற்றியிருந்தும்; போக்கு அருஞ்சுரம்- ஊடு போதலரிய பாலை நிலத்தில்; போக-அவன் செல்லத் துணிந்த பொழுது; முன் இறந்தும்- போகுமுன்பே சாக்காடென்னும் மெய்ப்பாடெய்தியும்; காவலில் கவன்றும்- அவன் நாடுகாத்தற் பொருட்டுப் பிரிந்த பொழுது பெரிதும் கவலைப்பட்டிருந்தும்; கல்வியில் கருதியும்-அவன் ஓதற் பொருட்டுப்பிரிந்த பொழுது அவனையே நினைந்திருந்தும்; வேந்து விடைக்கு அணங்கியும்- முடிவேந்தனால் தூதுவிட்ட காலை அவன் பிரிவுக்கு வருந்தியும்; விளை பொருட்கு-அறம் விளைதற்குக் காரணமான பொருட்பிரிவின்கண்; உருகியும்- மனமுருகி இருந்தும்; நின்ற இவட்கு, இங்ஙனமாகத் தனது கடமையிலே நிலைத்துநின்ற எம்பெருமாட்டிக்கு என்க.

     (வி-ம்.) பாசறைக்குச் சென்றபோது அதற்கிணங்கி ஆற்றியிருந்தும் என்க. சுரம்-பாலைவழி. இறத்தல், சாக்காடென்னும் மெய்ப்பாடுறுதல்; அதாவது மூர்ச்சித்து விழுதல். காவல்-நாடு காத்தல். கல்வி-ஓதற்பிரிவு. விடை- தூதுவிடுத்தல். இவள் என்றது தலைவியை.

26-27: இனி..............................உயிரே

     (இ-ள்) கன்றிய உடலுள்-இவ்வாறெல்லாம் பொறுத்துப் பொறுத்து முன்னரே நொந்திருக்கின்ற உடம்பினுள்ளே; படும் நனி உயிர்-இருக்கின்ற சிறிய வுயிர்; இனி என் ஆம்-இப்போது யாதாய் முடியுமோ; யான் அறிகின்றிலேன் என்க.

     (வி-ம்.) பாசறைப்பிரிவும் நாடுகாவற் பிரிவும் ஓதற்பிரிவும் தூதுபோதற் பிரிவும் பொருட்பிரிவும் அறங்கருதிய பிறிவுகளாதலின் அவற்றைப் பொறுத்திருத்தல் தலைவிக்குக் கடனாயிற்று. பரத்தையிற் பிரிவு அறத்தொடுபடாத பிரிவாகலின் இப்பிரிவினை இவள் பொறாள்; இறந்துபடுவள் என்பாள் இவள் உயிர் இனி என்னாம்? என்றாள்.

     அவளெய்தும் பிரிவுத் துன்பம் நோக்குழி அவள் உயிர் ஆற்றவுஞ் சிறிது என்றிரங்குவாள் நனியுயிர் என்றாள். ஈண்டு நனி சிறுமையின் மிகுதி குறித்து நின்றது. இறந்துபடுவள் என்பது குறிப்பெச்சம்.

     இனி, இதனை, கருணைச் செல்வியாகிய திருவயிற்றினள் ஒருபாற் பொலிந்த கூடற் பெருமானது கழல் நினையார்போல் பொய்ம்மொழி புகன்ற ஊரன் தகாத வில்லிடத்தே புகுதலால் என்னுளம் அனற்புக்க முளரியின் மாழ்கின என்றால், அவ்வூரன் பிரியாத காலத்தில் துவண்டும் மறைந்தும் ஏற்றும் தடைந்தும் வாங்கியும் நின்றாற்போலப் பிரிந்த காலத்தில் தடைந்தும் பொருந்தியும் இறந்தும் கவன்றும் கருதியும் அணங்கியும் உருகியும் நின்ற இவட்குக் கன்றிய உடலுள்ளே சிறிய வுயிர் என்னாகுமென வினைமுடிவு செய்க.

     மெய்ப்பாடும் பயனும் அவை.