பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 80

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிலைநீர் மொக்குளின் விளைவாய்த் தோன்றி
வான்றவ ழுடற்கறை மதியெனச் சுருங்கிப்
புல்லர்வாய்ச் சூளெனப் பொருளுட னழியுஞ்
சீறுண வின்பத் திருந்தா வாழ்க்கையைக்
கான்றிடு சென்றியிற் கண்டரு வருத்துப்
10
  புலனறத் துடைத்த நலனுறு கேள்வியர்
ஆரா வின்பப் பேரமு தருந்தித்
துறவெனுந் திருவுட னுறவுசெய் வாழ்க்கையர்
வாயினுங் கண்ணினு மனத்தினு மகலாப்
பேரொளி நாயகன் காரொளி மிடற்றோன்
15
  மண்டிரு வேட்டுப் பஞ்சவற் பொருத
கிள்ளியுங் கிளையுங் கிளர்படை நான்குந்
திண்மையுஞ் செருக்குந் தோற்றமும் பொன்றிட
வெரிவா யுரக ரிருணாட் டொருவக்
கொலைகொண் டாழி குறியுடன் படைத்து
20
  மறியப் புதைத்த மறங்கெழு பெருமான்
நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமுங்
கல்வியுந் திருவுங் காலமுங் கொடியு
மாடமு மோங்கிய மணிநகர்க் கூடல்
ஆல வாயினு ளருளுட னிறைந்த
25
  பவளச் சடையோன் பதந்தலை சுமந்த
நல்லிய லூராநின் புல்லமுண் மங்கைய
ரோவிய வில்லமெம் முறையு ளாகக்
கேளாச் சிறுசொற் கிளக்குங் கலதியர்
இவ்வுழி யாயத் தினர்களு மாக
30
  மௌவலிதழ் விரிந்து மணஞ்சூழ் பந்தர்செய்
முன்றிலு மெம்முடை முன்றி லாக
மலர்ச்சுமைச் சேக்கை மதுமலர் மறுத்தவித்
திருமனங் கொள்ளாச் சேக்கைய தாக
நின்னுளங் கண்டு நிகழுண வுன்னி
  நாணா நவப்பொய் பேணியுட் புணர்த்தி
யாழொடு முகமன் பாணனு நீயுந்
திருப் பெறு மயலவர் காண
வரப் பெறு மாதவம் பெரிதுடை யேமே.

(உரை)
கைகோள்: கற்பு. வாயிலோர் கூற்று.

துறை: வாயிலோர் வாழ்த்தல்.

     (இ-ம்) இதற்கு “வாயில் உசாவே தம்முளு முரிய” (தொல். செய்யுளி, 200) எனவரும் நூற்பாவின்கண் தம்முளும் என்புழி வந்த உம்மையை எச்சவும்மையாக்கித் தலைவன், தலைவி கேட்பவும் உரிய எனக்கொண்டு அதனாலமைத்திடுக.

     இனி, “பரத்தை வாயிலென விரு கூற்றும் கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப்பய மிலவே” என்பவாலோ எனின் இதுதானும் தலைவனை நோக்கிக் கூறினும் தலைவி கேட்டு மகிழவும் ஊடாதிருக்கவும் கருதிய கூற்றாகவே கொள்க.

1-6: நிலைநீர்............................கேள்வியர்

     (இ-ள்) நிலைநீர் மொக்குளின்-இயக்கமின்றி நிலைத்துக் கிடக்கும் நீரின்கண் தோன்றுங் குமிழியைப் போன்று; விளைவாய்த் தோன்றி- பழவினையின் பயனாகத் தோன்றி; வான் தவழ் உடல் கறைமதி எனச் சுருங்கி-வானத்தே இயங்குகின்ற உடலின்கண் களங்கமுள்ள நிறைத்திங்கள் போன்று ஒருகாலைக் கொருகாற் றேய்ந்து; புல்லர் வாய்ச் சூள் எனப் பொருளுடன் அழியும்- கீழ்மக்கள் கூறிய சூள் மொழி போன்று பொருளோடே அழிந்தொழியா நின்ற; சிறு உணவு இன்பம் திருந்தா வாழ்க்கை- சின்னஞ்சிறிய நுகர்ச்சிகளாகிய இன்பத்தையே பற்றுக்கோடாகக் கொண்ட திருத்தமில்லாத இவ்வுலகவாழ்க்கையை; கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்து-உண்டு கக்கிய சோற்றைக் கண்டு வெறுக்குமாறு போலே அறிந்து வெறுத்து; புலன் அறத்துடைத்த- தன்மனம் ஐம்புலன்களிலும் செல்லாதபடி பாதுகாத்தற்குக் காரணமான; நலன் உறு கேள்வியர்-நன்மைமிக்க ஞான நூற்கேள்வியையுடையவரும் என்க.

     (வி-ம்.) நிலைநீர்-இயக்கமற்ற நீர். மொக்குள்-குமிழி. இது யாக்கையின் நிலையாமைக்குவமை. பழவினையின் விளைவாய்த் தோன்றி என ஒருசொற் பெய்துரைக்க. “வினையின் வந்தது வினைக்கு விளைவாயது” எனப் பிற சான்றோரும் ஓதுதல் காண்க. நிறைத்திங்களிலே களங்கம் முழுதும் தோன்றுதலின் ஈண்டு உடற்கறை மதி என்று நிறைமதியைச் சுட்டினார். கறை-களங்கம். புல்லர்-கீழ்மக்கள். அவர் கூறும் சூண்மொழி பொருளின்றி அழிதலின், யாக்கையின் அழிவிற்குவமை எடுத்தார். உணவு-ஈண்டு நுகர்ச்சி என்னும் பொருட்டாய் நின்றது. அந்நுகர்ச்சியின்பம் விரைந்து அழிதலின் சீறுணவின்பம் எனப்பட்டது. திருந்துதல்- மெய்யுணர்வு பெறுதல். கான்றிடு சொன்றி-உண்டு கக்கியசோறு. கண்டு-இயல்பினை ஆராய்ந்துணர்ந்து. புலன்- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. அவற்றை அறத் துடைத்தலாவது, அவற்றின்கண் மனஞ் செல்லாதபடி தடுத்து நிறுத்துதல். நலன்-வீட்டின்பம். நூல்-ஞானநூல்.

7-10: ஆரா...............................மிடற்றோன்

     (இ-ள்) ஆரா இன்பம் பேரமுது அருந்தி-தெவிட்டாத பேரின்பமாகிய பெரிய அமிழ்தத்தை உண்டு; துரவு எனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர்- துறவறமென்னும் நங்கையோடே கேண்மை கொண்டு வாழாநின்ற மெய்வாழ்க்கையை யுடையவருமான சான்றோருடைய; வாயினும் கண்ணினும் மனத்தினும்-வாயால் வாழ்த்தும் வாழ்த்தினும் கண்ணாற் காணும் காட்சியினும் நெஞ்சால் நினையும் நினைப்பினும்; அகலாப் பேரொளி நாயகன்-நீங்காத பேரொளிப் பிழம்பாகிய கடவுளும்; கார் ஒளி மிடற்றோன்-கரிய ஒளிதிகழும் மிடற்றினையுடையோனும்; என்க.

     (வி-ம்.) ஆரா இன்பம்-எத்துணை நுகர்ந்துந் தெவிட்டாத இன்பம். துறவு என்னும் விழுச் செல்வத்தோடு எனினுமாம். “வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை, யாண்டும் அஃதொப்ப தில்” எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைக. மெய்யறிவுடையோர் காணுங் காட்சியெல்லாம் கடவுட் காட்சியே யாகலின் கண்ணினும் என்றார். கண்; ஆகுபெயர். காரொளி என்றது நஞ்சினை.

11-16: மண்...............................பெருமான்

     (இ-ள்) மண் திருவோட்டுப் பஞ்சவன் பொருத கிள்ளியும்-மண்ணாகிய செல்வத்தை விரும்பிப் பாண்டியனோடு போர் செய்த சோழனும்; கிளையும்- அவன் சுற்றமும்; கிளர்படை நான்கும்-மனவெழுச்சியையுடைய அவனுடைய நால்வகைப் படைகளும்; திண்மையும் செருக்கும் தேற்றமும்-அவனுடைய வலிமையும் இறுமாப்பும் யானே வெல்வேன் என்னும் தெளிவும்; பொன்றிட- அழிந்தொழியும்படி; எரி வாய் உரகர் இருள் நாட்டு ஒருவ-எரிகின்ற நஞ்சினையுடைய வாயையுடைய நாகருடைய இருண்ட நாட்டின்கண் வீழும்படி; கொலை கொண்டு-கொலைத் தொழிலை மேற்கொண்டு; ஆழி குறியுடன் படைத்து மறிய-ஆழமாகிய மடுவின்கண் முற்பட்டு வீழ்ந்த பாண்டியனுடன் குறிக்கொண்டு தானும் வீழ்ந்தபோது; புதைத்த மறங்கெழு பெருமான்-அதில் புதைந்தொழியும்படி செய்தருளிய வேட்டுருவாய் வந்த பெருமானும் என்க.

     (வி-ம்.) மண்திரு-மண்ணாகிய செல்வம். மண்ணாசையினால் ஒரு வேந்தன் மற்றொரு வேந்தன்மேல் போருக்கெழுதல் வஞ்சித்திணை என்று கூறுப. இதனை,

   “வஞ்சிதானே முல்லையது புறனே” (தொல். சூத்-1007.)

   “எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
    அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே” (தொல். சூ. 1008)

எனவரும் நூற்பாக்களானும் உணர்க. பஞ்சவன்-பாண்டியன். இவனைச் சுந்தரேச பாதசேகர பாண்டியன் என்று திருவிளையாடற் புராணம் கூறும். கிள்ளி-சோழன். கிளை-அவன் சுற்றத்தார். யானை குதிரை தேர் காலாள் என்னும் படை நான்கும் என்க. செருக்கு-இறுமாப்பு. தேற்றம்-தெளிவு. பொன்றுதல்-இறத்தல். உரகர்-நாகர். உரகர் இருள்நாடு; என்றது நாகலோகத்தை. ஆழி-ஆழ்ந்த மடு. மறம்கெழு பெருமான் என்பது பெற்றாம். இந்த வரலாற்றினைத் திருவிளையாடற் புராணத்தில், 37 சோழனை மடுவில் வீட்டிய படலத்தின்கண் விரிவாகக் காண.

17-22: நீர்.....................ஊர

     (இ-ள்) நீர்மா கொன்ற சேயோன் குன்றமும்-கடலின் கண்ணதாகிய சூரபதுமனாகிய மாமரத்தைத் தடிந்த முருகப் பெருமான் எழுதருளியுள்ள திருப்பரங்குன்றமும்; கல்வியும் திருவும் காலமும் கொடியும் மாடமும் ஓங்கிய-கல்வியும் செல்வமும் வாழ்நாளும் கொடியும் மாடங்களும் உயர்ந்துள்ள; மணிநகர்க் கூடல்-நகரங்களுள் மாணிக்கமெனச் சிறந்த நான்மாடக்கூடல் என்னும்; ஆலவாயினுள்-திருவாலவாயின்கண்; அருளுடன் நிறைந்த-திருவருட்பிழம்பாகிய அங்கையற்கண்ணியோடு எழுந்தருளியுள்ள; பவளச் சடையோன்-பவளம்போன்று சிவந்த சடையினையுடைய சிவபெருமானுடைய; பதம் தலைசுமந்த நல் இயல் ஊர-திருவடிகளைத் தலைமேற்கொண்ட நல்ல அழகையுடைய எம்பெருமானே! என்க.

     (வி-ம்.) நீர்-ஈண்டுக் கடல். மா-சூரபதுமனாகிய மாமரம். சேயோன்-முருகப்பெருமாங் ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ (தொல். சூ. 951) எனத் தொல்காப்பியரும் ஓதுதல் காண்க. பாண்டியர்கள் சங்கம் வைத்துச் செந்தமிழ் வளர்த்தலின் கல்வி ஓங்கிய நகரமாயிற்று. திரு-செல்வம். காலம்-வாழ்நாள். அம்மையின் உருவம் திருவருட் பிழம்பேயாகலின் அருளுடன் நிறைந்த சடையோன் என்றார். நல்லியல்-நல்ல அழகு.

22-27: நின்........................ஆக

     (இ-ள்) நின் புல்லம் உள்மங்கையர்-நின்னுடைய புல்லிய நெஞ்சத்தையுடைய பரத்தை மகளிரது; ஓவிய இல்லம்-ஓவியம் எழுதப்பட்ட இல்லம்; எம் உறையுள் ஆக-அவ்வாறு ஓவிய மெழுதப்படாத எம்முடைய இல்லமாகவும்; கேளாச் சிறு சொல் கிளக்கும் கலதியர்-சான்றோரால் கேட்கப்படாத இழி சொற்களைப் பேசுகின்ற கலகமியற்றும் அப்பரத்தையின் தோழிமார்கள்; இவ்வுழி ஆயத்தினர்களும் ஆக-இவ்வில்லத்தின் கண்ணுள்ள என் தோழிமார்களாகவும்; மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ்பந்தர் செய் முன்றிலும்-அப்பரத்தை மகளிருடைய மல்லிகை மலர் மலர்ந்து மணம்பரவுகின்ற பந்தர் அமைந்த முற்றத்தானும்; எம்முடை முன்றில் ஆக-அத்தகைய சிறப்பொன்றுமில்லாத எங்களுடைய முற்றமாகவும் என்க.

     (வி-ம்.) புல்லம்-புன்மை. உள்-நெஞ்சம். பரத்தைமகளிர் காமுகரின் கைப்பொருள் ஒன்றே கருதிப் பொய்யன்பு செய்பவர் என அவரை இகழ்வாள் ‘நின்புல்லம் உள்மங்கையர்’ என்றாள். ஓவியர் எழுதிய சிறப்பொன்றுமேயின்றி அறம் சிறிதும் நிகழாத வெற்றில்லம் என இகழ்வாள் ஓவிய இல்லம் என விதந்தாள். கேளாச் சிறு சொல்-சான்றோர் கேட்கத்தகாத இழிசொல். இழிசொற்பேசும் அத்தோழிகளின் மொழியை நீ எவ்வாறுதான் பொறுத்துக் கொள்கின்றனையோ என இகழ்வாள் ‘கேளாச்சிறு சொற்கலதியர்’ என்றாள். மௌவல்-மல்லிகை. முல்லை எனினுமாம். எம்முடை முன்றில் என்றது அத்தகைய சிறப்பொன்றுமில்லாத முற்றம் என்பதுபட நின்றது.

28-34: மலர்......................உடையேமே

     (இ-ள்) மலர் சுமை சேக்கை-மலர்களைப் பெருஞ்சுமையாகப் பரப்பப்பட்ட அப்பரத்தை மகளிருடைய கட்டில்; மது மலர் மறுத்த திருமணம் கொள்ளா இ சேக்கையதாக-அவ்வாறு தேன் துளிக்கும் மலர் பரப்பப்படாமையால் நின்னுடைய அழகிய நெஞ்சம் விருப்பங் கொள்ளமாட்டாத இந்த எளிய கட்டிலாகவும்; நின் உளங் கண்டு-நின்னுடைய நெஞ்சத்தைக் குறிப்பாலுணர்ந்து; நிகழ் உணவு உன்னி-தனக்குக் கிடைக்கின்ற உணவு ஒன்றையே கருதி; நாணா-நாணாமல்; நவம் பொய் பேணி-புதுமையான பொய்களை விரும்பி; உள் புணர்ச்சி-தன் நெஞ்சினுள்ளே பொருத்திக்கொண்டு; முகமன் யாழொடு பாணனும் நீயும்-நினக்கு முகமன் கூறுதலோடே நின் நெஞ்சத்தைக் கவரும் யாழையுமுடைய நின்னுடைய பாண் மகனும் நீயும்; திருப்பெரும் அயலவர் காண-செல்வவளம் பெற்றுள்ள அயலோர் காணும்படி; வரப்பெறும் மாதவம் பெரிது உடையேம்-இங்கு வருதற்குக் காரணமான பெரிய தவத்தை யாங்கள் மிகவும் உடையேம்; ஆதலால் நின்வரவினைப் பெற்றேம், நீ நீடூழி வாழ்க! என்க.

     (வி-ம்.) காமுகரை வயப்படுத்துதற்கு கட்டிலின்கண் மிகையாக மலர் பரப்புவர் என்பாள். மலர்ச்சுமைச் சேக்கை என்றாள். சேக்கை-படுக்கைக் கட்டில். தலைவியின் கட்டில் அத்தகைய சிறப்பொன்றும் இல்லாதது என்பாள் மதுமலர் மறுத்த சேக்கை என்றாள். திருமனம் என்றது இகழ்ச்சி. இச்சேக்கை என்றது எளிய இக்கட்டில் என்பதுபட நின்றது. நின் பரத்தமைக்கு ஏதுவாக நினக்கு ஒரு பாணனும் அமைந்தான். அவன்றானும் தான் உண்ணும் உனவின் பொருட்டே நின் குறிப்பறிந்து முகமன் கூறிப் பரத்தையர் இல்லிற்கு நின்னை அழைத்துச் செல்வான். மேலும் யாழிசையாலும் நின் நெஞ்சு கவர்வான் என இகழ்வாள் நின்னுளங் கண்டு நிகழ் உணவு உன்னிப் பொய்பேணி முகமன் கூறுதலும் யாழும் உடைய பானன் என்றாள். அயலவர்-அயல் வீட்டினர். நீ வருதற்குக் காரணம் நின்னுடைய அன்பென்று நினைத்தற்கிடனில்லை. ஒரோவழி அதற்குக் காரணம் யாங்கள் செய்த தவமே போலும் என்பாள் வரம்பெறும் மாதவம் உடையேம் என்றாள். நீ நீடுவாழ்க! என்பது குறிப்பெச்சம்.

     இதனை, ஆலவாயினில் அருளுடனிறைந்த பவளச்சடையோன் பதந்தலை சுமந்த நல்லிய லூரனே! பாணனு நீயும் அயலார் காண, எமதுறையுளாகவும் இவ்வுழித் தோழியராகவும் எம்முன்றிலாகவும் மலர்மறுத்த சேக்கையாகவும் நின்னுள்ளத்தி லெண்ணி இங்கே வரப்பெறு மாதவமுடையேம் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.