பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 81

நேரிசையாசிரியப்பா

 
   
5
  உள்ளிருந் தெழுந்து புறம்புநின் றெரியு
மளவாத் திருமணி யளித்த லானுங்
கொலைமுதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து
கொழுஞ்சினை மொடைந்து குளிரொடு பொதுளிய
நெடுமரத் திளங்கா நிலைத்த லானும்
10
  பாசடை யும்பர் நெடுஞ்சுனை விரிந்த
பேரிதழ்த் தாமரை பெருக லானு
நெடுவிசும் பணவும் பெருமதி தாங்கி
யுடையா வமுத முறைத லானு
மிளமையுந் தொங்கலு மின்பமு மொருகால்
15
  வாடாத் தேவர்கண் மணத்த லானும்
நூறுடை மகத்திற் பேறுகொண் டிருந்த
புரந்தரன் போலும் பொன்னெயி லெறிந்த
மணிவேற் குமரன் றிருவளர் குன்றம்
பேரணி யுடுத்த பெருநகர்க் கூடல்
20
  கோயில்கொண் டிருந்த குணப்பெருங் குன்ற
மருந்தவக் கண்ணினோ டடைந்தமா முனிபாற்
பேரிருண் மாயைப் பெண்மக விரக்க
வுவர்முதல் கிடந்த சுவையே ழமைத்துக்
கொடுத்தமெய்ப் பிண்டக் குறியுடன் றொன்றிய
25
  வெழுநிறச் சகரர்க ளேழணி நின்று
மண்புக மூழ்கிய வான்பரி பிணிக்கப்
பன்முக விளக்கிற் பரிதியிற் றோட்டிய
வேலைக் குண்டகழ் வயிறலைத் தெழுந்த
பெருங்கார்க் கருங்கடு வரும்பிய மிடற்றோ
30
  னெறிந்துவீ ழருவியு மெரிமணி யீட்டமு
முள்ளுதோ றுள்ளதோ றுணாவமு துறைக்குந்
திருமுத் தமிழும் பெருகுதென் மலயத்
தாரப் பொதும்ப ரடைகுளிர் சாரற்
சுரும்புடன் விரிந்த துணர்மலர்க் கொடியே
35
  விண்விரித் தொடுக்கு மிரவிவண் கவிகைக்
கிட்டுறை காம்பென விட்டெழு காம்பே
மரகதஞ் சினைத்த சிறைமயில் குலமே
நீலப் போதும் பேதமையும் விழித்த
பொறியுட லுழையே யெறிபுன மணியே
40
  பாசிழைப் பட்டு நூற்கழி பரப்பிய
கிளைவாய்க் கிடைத்த வளைவாய்க் கிளியே
மைந்தர்கண் சென்று மாதருட் டடைந்த
பொழிமதுப் புதுமலர்ப் போக்குடைச் சுரும்பே
வெறிமுதிர் செம்மன் முறிமுகங் கொடுக்குஞ்
45
  சந்தனப் பொதும்பர்த் தழைசினைப் பொழிலே
கொள்ளையஞ் சுகமுங் குருவியுங் கடிய
விருகாற் கவணிற் கெரிமணி சுமந்த
நெடுங்காற் குற்றுழி நிழல்வைப் பிதணே
நெருநற் கண்டவெற் குதவிய வின்ப
50
  மிற்றையிற் கரந்த விருண்மன மென்னே
விவணிற் கவைத்த வேலாக் கடுங்கண்
கொடுத்துண் டவர்பின் கரந்தமை கடுக்கு
மீங்கிவை கிடக்க வென்னிழ லிரும்புனத்
திருந்தோ ளிருந்தே னிலதா னீரு
  நின்புன மல்லவின் றென்புலன் வெளிப்பட
வறைதல் வேண்டு மப்புன நீரேன்
முன்னங் கண்டவ னன்றென்
றுன்னா வுதவுத லுயர்ந்தோர் கடனே.

(உரை)
கைகோள்: களவு. தலைவன் கூற்று.

துறை: வறும்புனங்கண்டு வருந்தல்.

     (இ-ம்) இதற்கு, “பண்பிற் பெயர்ப்பினும்” (தொல். களவி. 12) எனவரும் நூற்பாவின்கண் பரிவுற்று மெலியினும் எனவரும் விதிகொள்க.

1-7: உள்.......................................பெருகலானும்

     (இ-ள்) உள் இருந்து எழுந்து புறம்பு நின்று எரியும்-உண்ணின்று மேலெழுந்து பக்கங்களிலே சுடர் வீசுகின்ற; அளவாத் திருமணி அளித்தலானும் - விலைமதிக்கப்படாத அழகிய மாணிக்கத்தைப் பாதுகாத்தலானும்; கொலை முதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து- கொலைத்தொழிலில் முதிர்ந்த மதயானைகள் மிகுந்த இடங்கள்தொறும் சென்று; கொழுஞ்சினை மிடைந்துகுளிரொடு பொதுளிய-தழைந்த கிளைகள் செறிந்து குளிர்ச்சியோடு தழைத்த; நெடுமரத்து இளங்கா நிலைத்தலானும்- நெடிய மரங்களையுடைய பசிய பொழில்கள் நிலைபெற்றிருத்தலானும்; உம்பர் நெடுஞ்சுனை பாசடை விரிந்த-மேலிடத்தில் பெரிய சுனையின்கண் பசிய இலைகளோடு விரிந்த; பேரிதழ் தாமரை பெருகலானும் - பெரிய இதழ்களையுடைய தாமரைமலர்கள் மிகுதலானும் என்க.

     (வி-ம்.) புறம்பு-பக்கங்கள். எரிதல்-சுடர்வீசுதல். அளவாத என்னும் பெயரெச்சத்தீறு தொக்கது. அளவாத்திருமணி விலைமதிக்கப்படாத அழகிய மாணிக்கம் என்க. கடமான்-மதயானை. மிடைதல்-செறிதல். பொதுளல்-தளர்தல்.

8-15: நெடுவிசும்பு......................கூடல்

     (இ-ள்) நெடுவிசும்பு அணவும் பெருமதி தாங்கி-பெரிய வானத்தை அளாவுகின்ற பெரிய மதியினைப் பொறுத்து; உடையா அமுதம் உறைதலானும்- அழியாமைக்குக் காரணமான அமிழ்தம் தன்னிடத்தே நீங்காதிருத்தலானும்; இளமையும் தொங்கலும் இன்பமும் ஒருகால் வாடா தேவர்கள் மணத்தலானும் - தமதிளமைப் பருவமும், மலர்மாலையும், மகிழ்ச்சியும், ஒரு காலத்தும் கெடாத அமரர்கள் பொருந்தியிருத்தலானும்; நூறு உடை மகத்தில் பேறுகொண்டு இருந்த புரந்தரன் போலும்-நூறு என்னும் எண்ணையுடைய வேள்வி செய்து முடித்தமை காரணமாகத் தேவர்களுக்கு அரசனாகும் பேற்றைக் கொண்டிருந்த தேவேந்திரனைப்போலும் இருக்கின்ற; பொன் எயில் எறிந்த மணிவேல் குமரன் திருவளர் குன்றம்-பொன் மதில் சூழ்ந்த மயேந்திர புரியை அழித்த அழகிய வேற்படையினையுடைய முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள செல்வம் வளரா நின்ற திருப்பரங்குன்றத்தை; பேரணி உடுத்த பெருநகர்க் கூடல்-பேரணி கலனாகக்கொண்டுள்ள பெரிய நகரமாகிய மதுரையின்கண் என்க.

     (வி-ம்.) திருப்பரங்குன்றத்துக்கு இந்திரன் உவமை. இந்திரனுக்கும் குன்றத்திற்கும் பொதுத்தன்மைகள் வருமாறு: மணியுடை மையும் இளங்கா உடைமையும் தாமரை மலர்கள் மிக்கிருத்தலும் பெருமதி தாங்கியிருத்தலும் அமுதம் இருத்தலும் இளமை முதலியன வாடாவிருத்தலும் தேவர் மணந்திருத்தலும் என்க. இவற்றுள் இளங்கா இந்திரனுக்குக் கற்பகச் சோலையும் குன்றத்திற்கு மரச்சோலையும் என்க. தாமரை மிகுதற்கு இந்திரனுக்குக் கூறுங்கால் உவமையாகு பெயராகக் கொண்டு தாமரை மலர் போன்ற கண்கள் மிகுதலானும் என்றும், குன்றத்திற்குக் கொள்ளுங்கால் முதலாகுபெயராகக் கொண்டு தாமரை மலர் மிகுதலானும் என்றும் கொள்க. இனி நெடுவிசும்பு அணவும் பெருமதி தாங்கி என்பதற்கு இந்திரனுக்குக் கொள்ளுங்கால் நெடிய வானுலகத்தை ஆளுதற்குரிய அரசனாதற்குரிய பேரறிவினைத் தாங்கி என்றும், குன்றத்திற்குக் கொள்ளுங்கால் வானத்தை அளாவியுள்ள திங்களைத் தாங்கி என்றும் சிலேடை வகையாற் பொருள் கொள்க. நூறு குதிரை வேள்வி செய்து முடித்துத் தேவேந்திரனாதல் வேண்டும் ஆகலின் நூறுடை மகத்திற் பேறு கொண்டிருந்த புரந்தரன் என்றார்.

16-22: கோயில்.....................பிணிக்க

     (இ-ள்) கோயில் கொண்டிருந்த குணப்பெருங் குன்றம்- திருக்கோயில் கொண்டருளிய பெரிய குணமாலை; அருந்தவக் கண்ணினோடு-செயற்கரிய தவமாகிய கண்ணோடே; அடைந்த மாமுனிபால்-காட்டிலிருந்த பெரிய காசிப முனிவனிடத்து; பேரிருள் மாயை பெண்-மிக்க இருளையொத்த மாயை என்னும் பெண்ணானவள்; மகவு இரக்க-பிள்ளை வேண்டுமென்று வேண்டிக்கொள்ள; உவர் முதல் கிடந்த சுவை ஏழமைத்து-உவர்ப்பு முதலாக உள்ள எழுவகைச் சுவையும் அமைத்து; கொடுத்த மெய்ப்பிண்டம்-வழங்கிய அவ்வுண்மைப் பிண்டத்தின்; குறியுடன் தோன்றிய எழுநிறச் சகரர்கள்- அடையாளங்களுடனே பிறந்த ஏழு நிறத்தினையுடைய சகரர்களும்; ஏழ் அணி நின்று-ஏழு வரிசையாக நின்று; மண்புக மூழ்கிய வான்பரி பிணிக்க-பாதலத்தில் ஒளிக்கப்பட்ட சிறப்புள்ள வேள்விக்குதிரையைக் கண்டு பிடித்துக் கட்டும் பொருட்டு என்க.

     (வி-ம்.) குணப்பெருங் குன்றம் என்றது நிலைபேருடைமை, அசையாமை முதலியவையுடைமை பற்றி என்க. “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது” (29) என்னுந் திருக்குறளுரையானும் இஃதினிது விளங்கும். உவர்த்தல்-உப்புக் கரித்தல். பிணித்தல்-கட்டல்.

23-25: பன்முகம்.........................மிடற்றோன்

     (இ-ள்) பல் முகம் விளக்கின்-பல முகங்களையுடைய விளக்குபோல; பரிதியின் தோட்டிய-சக்கரப்படையினால் தோண்டப்பட்ட; குண்டு அகழ்வேலை-ஆழமாகிய பரந்த கடலின்; வயிறு அலைத்து எழுந்த-வயிற்றைத் துன்புறுத்தித் தோன்றிய; பெருங்கார் கருங்காடு அரும்பிய மிடற்றோன்-மிகுந்த கரிய நிறத்தையுடைய நஞ்சு காணப்படும் மிடற்றினை யுடையவனது என்க.

     (வி-ம்.) பரிதி-சக்கரப்படை. கடு-நஞ்சு. சகரர் வேள்விக்குதிரையைக் கண்டு பிடித்துக் கட்டும் பொருட்டுத் தோண்டிய வேலை என்க.

26-30: எறிந்து......................கொடியே

     (இ-ள்) எறிந்து வீழ் அருவியும்-ஒலித்தெழுகுகின்ற அருவி நீரும்; எரிமணி யீட்டமும்-சுடர் விடுகின்ற மணிக்கூட்டமும்; உள்ளுதோறு உள்ளுதோறும் உணா அமுது உறைக்கும்- நினைக்கும்தோறும் நினைக்கும் தோறும் உண்ணத்தகுந்த அமிழ்தம் சுவராநின்ற; திரு முத்தமிழ்- அழகிய இயல் இசை நாடகமென்னும் மூன்று தமிழும்; பெருகு தென்மலயத்து ஆர்ப்பொதும்பர்- பெருகுதற்கிடமாகிய தெற்கின்கணுள்ள பொதிகை மலையிலுள்ள சந்தனச் சோலைகள்; அடைகுளிர் சாரல்-நெருங்கிய குளிர்ந்த சாரலின்கண்; சுரும்புடன் துணர் மலர் விரிந்த கொடியே- வண்டுகளுடனே பூங்கொத்துக்கள் மலர்ந்த கொடியே! என்க.

     (வி-ம்.) எறிதல்-ஒலித்தல். எரிதல்-சுடர் வீசுதல். உள்ளுதல்-நினைத்தல். உறைத்தல்-துளித்தல். மலயம்-பொதியமலை. ஆரம்-சந்தன மரம். துணர்- பூங்கொத்து.

31-33: விண்.........................குலமே

     (இ-ள்) விண் பிரித்து ஒடுக்கும் இரவி வண் கவிகைக்கு-விண்ணிலே ஒளியைப் பரப்பிச் சுருக்கா நின்ற ஞாயிறாகிய நல்ல குடைக்கு; இட்டு உறை காம்பு என- அமைந்திருக்கும் காம்பு போல; விட்டு எழுகாம்பே- மேலோங்கி எழுந்த மூங்கிலே!; மரகதம் சினைத்த சிறை மயில் குலமே- மரகதமணி கிளைத்தெழுந்தாற் போன்ற சிறகினையுடைய மயிலினங்களே என்க.

     (வி-ம்.) ஞாயிற்றுக்குக் குடை உவமை. மூங்கில் அக்குடைக் காம்பிற் குவமை. சினைத்தல்-கிளைத்தல். சிறை-சிறகு.

34-39: நீல.........................சுரும்பே

     (இ-ள்) நீலப்போதும் பேதையும் விழித்த பொறி உடல் உழையே-கருங்குவளை மலரும் மகளிர் கண்ணும் போன்று விழிக்கின்ற புள்ளிகளமைந்த உடலையுடைய மானினமே!; எறிபுன மணியே-தினை அரிந்து விடப்பட்ட புனத்திலுள்ள மணிகளே!; பாசிழை பட்டுநூல் கழிபரப்பிய கிளைவாய் கிடைத்த வளைவாய்க் கிளியே-பச்சை நிறமுடைய பட்டு நூலைக் கழியின்கண் பரப்பி வைத்தாற் போன்று மூங்கிலின்கண் இருக்கின்ற வளைந்த வாயையுடைய கிளிகளே!; மைந்தர்கண் சென்று மாதருள் தடைந்த-ஆடவருடைய கண்கள் சென்று மகளிரிடத்தே தடைப்பட்டாற்போல; மதுமொழி புதுமலர் போக்கு உடை கரும்பே-தேன் சொரிகின்ற நாள்மலரிடத்துச் சென்று மொய்த்தலையுடைய வண்டுகளே! என்க.

     (வி-ம்.) கழி என்றது ஒரு நெயவுக் கருவியை. கிளை- மூங்கில். கிடைத்தல்-இருத்தல். வளைவாய்; வினைத்தொகை, மூங்கிலிலிருக்கும் கிளிகளுக்குக் கழியிற் பரப்பிய பச்சைப் பட்டு நூல் உவமை. மலரிடத்துத் தாதூதும் வண்டுக்கு மாதர் அழகிடத்தே சென்று தடையுண்ட ஆடவர் கண்கள் உவமை. புதுமலர்-அன்றலர்ந்த மலர்.

40-44: வெறி.........................இதணே

     (இ-ள்) வெறி முதிர் செம்மல் முறிமுகம் கொடுக்கும்- மணமுதிர்ந்த பழம்பூவைத் தளிர் முகத்தினாலே சொரியா நின்ற; சந்தனப் பொதும்பர் தழைசினை பொழிலே-சந்தன மரங்களிலே தழைத்துள்ள கிளைகளையுடைய சோலையே; கொள்ளை அம் சுகமும் குருவியும் கடிய-தினைக்கதிரைக் கொள்ளை கொள்ளும் அழகிய கிளிகளையும் குருவிகளையும் ஓச்சுதற்கு; இருகால் கவணிற்கு எரி மணி சுமந்த-இரண்டு கால்களையுடைய கவண் என்னும் கருவியில் வைத்து வீசுதற்கு வேண்டிய சுடர்மணிகளைச் சுமந்துள்ள; நெடுங்கால் குறுஉழி நிழல் வைப்பு இதணே-நீண்ட கால்களையும் குறுகிய இடத்தையுமுடைய நிழல்தரும் பரணே! என்க.

     (வி-ம்.) வெறி-மணம். செம்மல்-பழம்பூ. கடிதல்-ஓச்சுதல். கால்-கவண் சுற்றும் கயிறு. எறிமணி: வினைத்தொகை; உழி-இடம். இதன்-பரண்.

45-49: நெருநல்................................கிடக்க

     (இ-ள்) நெருநல் கண்ட எற்கு-நேற்றுக் கண்ட எனக்கு; உதவிய இன்பம்-தந்த இன்பத்தை; இற்றையில் கரந்த இருள் மனம் என்னே-இற்றைநாள் தாராமலொளித்த இருண்ட அவளுடைய நெஞ்சம் இருந்தவாறு என்னோ அதுதானும்; இவண் நிற்க வைத்த ஏலாக்கடுங்கண்-இவ்விடத்தே இவ்வாறு யான் மயங்கி நிற்கும்படி செய்த தகாத இக் கொடுமை எவ்வாறிருக்கின்ற தென்னின்; கொடுத்து உண்டவர் பின் கரந்தமை கடுக்கும்-நாளும் வறியோர்க்கு வழங்கியுண்ணும் சான்றோர் பின்னொருநாள் வழங்காது ஒளித்த தன்மையை ஒக்கும்; ஈங்கு இவை கிடக்க-இவ்விடத்தே இவை இங்ஙனமிருப்ப என்க.

     (வி-ம்.) நெருநல்-நேற்று. எற்கு-எனக்கு. கரத்தல்-ஒளித்தல். என்னே என்றது இருந்தவாறென்னையோ? என்று வியந்தபடியாம். ஏலா-பொருந்தாத. அஃதாவது தகாத என்றவாறு.

“சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
 தாங்காது மன்னோ பொறை”        (குறள். 990)

என்பது பற்றி இவ்வேலாக் கடுங்கண் கொடுத்துண்டவன் பின் கரந்தமைகடுக்கும் என்றான். கடுங்கண்-கொடுமை. கடுக்கும்-ஒக்கும்.

49 - 54: என் நிழல்......................கடனே

     (இ-ள்) என் நிழல் இரும்புனத்து இருந்து ஒளிர் அருந்தேன்- என் நிழல்போல இந்தப் பெரிய தினைப்புனத்தின்கண் என்னுடன் இருந்து திகழ்ந்த பெறுதற்கரிய தேனை ஒத்த என் காதலி; இலதால்-இப்பொழுது இங்கு இலள் ஆதலால்; நின் புலம் அல்ல என்று-ஏடா! இதுதான் நின்னுடைய தினைப்புனம் அல்ல என்று; என்புலம் வெளிப்பட-எனதறிவிற்கு விளங்கும்படி; நீரும் அறைதல் வேண்டும்-நீங்களும் எனக்குச் சொல்லுதல் வேண்டும், இன்றேல்; அப்புனம் நீரேன்-அந்தத் தினைப்புனமே இஃதாக; நீங்களும் அதன்கண் இருப்பீரேயாயின்; முன்னம் கண்டவன் அன்று என்று உன்னா-என்னை முன்னம் இங்குவர யாம் கண்டவன் இவனல்லன் என்று நினையாமல்; உதவுதல் உயர்ந்தார் கடன்; அவள் சென்ற வழியைச் சொல்லுதல் உயர்ந்தோராகிய நுங்கள் கடமையே யாகுங்காண் என்க.

     (வி-ம்.) நீயிரும் வஞ்சிப்பீராயின் இது நின்புலம் அல்ல என்று அறைதல்வேண்டும் என்பான் நீரும் உம்மை கொடுத்தோதினான். அப்புனம் நீரேல் என்புழி இப்புனம் அப்புனமாக நீர் அப்புனத்திலுள்ள நீரேயாயின் எனப் பொருள் விரித்தோதுக. யான் நும்மை ஐயுறுமாறு போலே என்னை நீயிரும் ஐயுறுதல் கூடுமன்றோ? அங்ஙனம் ஐயுறாதொழிக: என்பான் முன்னம் கண்டவன் அன்று என்று உன்னாது உதவுதல் கடன் என்றான். உதவுதல்-தலைவி சென்ற வழி கூறி உதவி செய்தல்.

     இனி இதனை, துணர்மலர் விரிந்த கொடியே! காம்பே! மயிற்குலமே! எறிபுன மணியே! வளைவாய்க் கிளியே! சுரும்பே! பொழிலே! இதணே! நெருநற் கண்ட வெற்கு உதவியவின்பம் இற்றையிற் கரந்த விருண்மனமென், நிற்கவைத்த வேலாக்கடுங்கண் கொடுத்துண்டவர் பின் கரந்தமை கடுக்கும், இவை கிடக்க, இரும்புனத்திருந் தொளிரருந்தேனிலதால், நின்புல மல்லவென்று என்புலம் வெளிப்பட நீரும் அறைதல் வேண்டும். அப்புனம் நீரேல், முன்னங் கண்டவன் அன்றென்றுன்னாது உதவுதல் உயர்ந்தோராகிய நுங் கடனென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.