பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 82

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வடமொழி விதித்த விசைநூல் வழக்குட
னடுத்தன வெண்ணான் கங்குலி யகத்தினு
நாற்பதிற் றிரட்டி நாலங் குலியினுங்
குறுமையு நெடுமையுங் கோடல் பெற்றைதா
யாயிரந் தந்திரி நிறைபொது விசித்துக்
10
  கோடி மூன்றிற் குறித்துமணி குயிற்றி
யிருநிலங் கிடத்தி மனங்கரங் கதுவ
வாயிரத் தெட்டி லமைந்தன பிறப்புப்
பிறவிப் பேதத் துறையது போல
வாரியப் பதங்கொ ணாரதப் பேரியாழ்
15
  நன்னர்கொ ளன்பா னனிமுகம் புலம்ப
முந்நான் கங்குலி முழுவுடற் சுற்று
மைம்பதிற் றிரட்டி யாறுடன் கழித்த
வங்குலி நெடுமையு மமைத்துட் டூர்ந்தே
யொன்பது தந்திரி யுறுத்திநிலை நீக்கி
20
  யறுவாய்க் காயிரண் டணைத்துவரை கட்டித்
தோள்கால் வதிந்து தொழிற்படத் தோன்றுந்
தும்புருக் கருவியுந் துன்னிநின் றிசைப்ப
வெழுவென வுடம்புபெற் றெண்பதங் குலியின்
றந்திரி நூறு தழங்கிய முகத்த
25
  கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல
நிறைமதி வட்டத்து முயலுரி விசித்து
நாப்ப ணொற்றை நரம்பு கடிப்பமைத்
தந்நரம் பிருபத் தாறங் குலிபெற
விடக்கரந் துவக்கி யிடக்கீ ழமைத்துப்
30
  புறவிரன் மூன்றி னுனிவிர லகத்து
மறுபத் திரண்டிசை யனைத்துயிர் வணங்கு
மருத்துவப் பெயர்பெறும் வானக் கருவி
தூங்கலுந் துள்ளலுந் துவக்கிநின் றிசைப்ப
நான்முகன் முதலா மூவரும் போற்ற
35
  முனிவரஞ் சலியுடன் முகம னியம்பத்
தேவர்க ளனைவருந் திசைதிசை யிறைஞ்ச
வின்பப் பசுங்கொடி யிடப்பாற் படர
வெள்ளியங் குன்றம் விளங்கவீற் றிருந்த
முன்னவன் கூடன் முறைவணங் காரென
40
  வரவப் பசுந்தலை யரும்பவிழ் கணைக்கா
னெய்தற் பாசடை நெடுங்காட் டொளிக்குங்
கண்ணெனக் குறித்த கருங்கயற் கணத்தை
வெள்ளுடற் கூர்வாய்ச் செந்தாட் குருகின
மரவெயி றணைத்தமுள் ளிலைமுடக் கைதைகள்
45
  கான்றலர் கடிமலர்க் கரந்துறைந் துண்ணுங்
கருங்கழி கிடந்த கானலங் கரைவாய்
மெய்படு கடுஞ்சுள் மின்னெனத் துறந்தவர்
சுவலுளைக் கவனப் புள்ளியற் கலிமா
னோக்க மறைத்த பரிதிகொ ணெடுந்தேர்ப்
50
  பின்னொடு சென்றவென் பெரும்பீழை நெஞ்சஞ்
சென்றுழிச் சென்றுழிச் சேறலு முளவோ
வவ்வினைப்பயனுழி யருந்தவம் பெறுமோ
விடைவழி நீங்கியென் னெதிருறுங் கொல்லோ
வன்றியு நெடுநா ளமைந்துடன் வருமோ
  யாதென நினைக்கிலன் மாதோ
பேதை கொள்ளா தொழிமனங் கடுத்தே.

(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று.

துறை: நெஞ்சொடு வருந்தல்.

     (இ-ம்) இதற்கு, “வரைவிடைவைத்த காலத்து வருத்தினும்” (தொல். களவி. 21) எனவரும் விதிகொள்க.

1-7: வடமொழி...........................கதுவே

     (இ-ள்) வடமொழி விதித்த இசை நூல் வழக்குடன்- வடமொழியின்கண் வகுக்கப்பட்ட இசைநூல் முறைப்படி; அடுத்தன எண் நான்கு அங்குலி அகத்தினும் நாற்பதிற்று இரட்டி நூல் அங்குலியினும்-பொருந்தியனவாகிய முப்பத்திரண்டு விரல் அளவினும் எண்பத்து நான்கு விரல் அளவினும்; குறுமையும் நெடுமையும் கோடல் பெற்று ஐதாய்-முறையே குறுக்கமும் நீட்சியும் கொள்ளுதலை யுடைத்தாய் அழகுடையதாய்; ஆயிரம் தந்திரி நிறைபொது விசித்து- ஆயிரம் நரம்புகள் நிறைவுறச் சமனாக இறுக்கப்பட்டு; கோடி மூன்றில் குறித்துமணி குயிற்றி-மூன்று மூலையாகச் செய்து மணிகள் பதித்து; இரு நிலம் கிடத்தி-பெரிய பூமியிலே வைத்து; மனம் கரம் கதுவ-நெஞ்சும் கையும் விடாது பற்ற என்க.

     (வி-ம்.) முப்பத்திரண்டு விரல் அளவு அகலமும் எண்பத்து நான்கு விரல் அளவு நீளமும் உடையதாய் அழகுடையதாய் முக்கோண வடிவுடையதாய்ச் செய்து ஆயிரம் நரம்பு கட்டி மணிகள் பதித்து அழகு செய்து நிலத்தின்மேல் வைத்து விரலால் வருடி என்பது கருத்து. அங்குலி- விரலளவு. குறுமை-அகலம். நெடுமை-நீளம். ஐது-அழகுடையது. தந்திரி-நரம்பு. விசித்தல்-இறுக்குதல். குயிற்றுதல்-பதித்தல். நெஞ்சால் நினைந்து விரலால் வருடுதலின் மனங்கரங்கதுவ என்றார்.

8 - 11: ஆயிரத்து........................புலம்ப

     (இ-ள்) பிறவிப் பேதம் துறையது போல-பிறப்பின் வேறுபாட்டின் வகை போல; ஆயிரத்து எட்டில் அமைந்தன பிறப்பு ஆரிய பதங்கொள் நாரதம் பேர்யாழ் - ஆயிரத்தெட்டு வகையாக அமைந்தனவாகிய சிறப்பினையுடைய ஒலிகளமைந்த வடசொற்களைக் கொண்டிருக்கின்ற நாரதம் என்னும் பேரியாழ்; நன்னர் கொள் அன்பால் நனிமுகம் புலம்ப-நலங்கொண்டுள்ள அன்புடனே மிகுதியும் வாயாற் பாடவும் என்க.

     (வி-ம்.) ஒலியின் பிறப்பு வேறுபாட்டிற்கு உயிர்களின் பிறப்பு வேறுபாடுகள் உவமை. பிறவிப்பேதத்துறை-பிறவி வேற்றுமை வகைகள் என்க. ஆயிரத்து எட்டு வகைப் பிறப்புடைய ஒலிகள் என்க. அவ்வொலிகள் வடசொல்லால் அமைக்கப்பட்டிருத்தலின் ஆரிய பதங்கொள் என்றார். இனி இதனைப் பேரியாழ் என்றும் கூறுப. இப்பேரியாழைப்பற்றிச் சிலப்பதிகாரத்தின்கண் அடியார்க்கு நல்லார் கூறுகின்ற விளக்கம் வருமாறு: “பெருங்கலமாவது- பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிரு சாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிரு சாணும், இப்பெற்றிக் கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்து இயல்வது; என்னை! ‘ஆயிர நரம்பிற் றாதியா ழாகும், ஏனை யுறுப்பு மொப்பன கொளலே, பத்தர தளவுங் கோட்டின தளவும், ஒத்த வென்ப விருமூன் றிரட்டி, வணர்சாணொழித்தென வைத்தனர் புலவர் என நூலுள்ளும், ‘தலமுத லூழியிற் றானவர் தருக்கறப், புலமக ளாளர் புரிநரப் பாயிரம், வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்ச் செலவு முறை யெல்லாஞ் செய்கையிற் றெரிந்து, மற்றை யாழும் கற்றுமுறை பிழையான்’ எனக் கதையினுள்ளும் கூறினாராகலான்; பேரியாழ் முதலிய ஏனவும் இறந்தன வெனக் கொள்க.” (சிலப். உரைப்பாயிரம்) நாரதனால் செய்யப்பட்டதாகலின் இது நாரதம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. நாரதம் என்னும் பேரியாழ் என்க. இறையன்பு என்பது தோன்ற நன்னர் கொள் அன்பு என்றார். முகம் என்றது யாழ் நரம்பினை. புலம்புதல்-இசைத்தல்.

12 - 18: முந்நான்கு....................கருவியும்

     (இ-ள்) முந்நான்கு அங்குலி முழுவுடல் சுற்றும்-பன்னிரண்டு விரலளவாகிய முழுவுடல் சுற்றமைந்த குறுக்கமும்; ஐம்பதிற்று இரட்டி ஆறுடன் கழித்த அங்குலி நெடுமையும் அமைத்து- தொண்ணூற்று நான்கு விரலளவு நெடுமையுமாக அமைத்து; உள் தூர்த்து-உள் அடைத்து; ஒன்பது தந்திரி உறுத்தி-ஒன்பது நரம்புகளைப் பொருத்தி; நிலை நீக்கி-நிலைகளை நீக்கம் செய்து; அறுவாய்க்கு-வரையறுத்த நிலையில்; அ இரண்டு அணைத்து- இவ்விரண்டாகச் சேர்த்து; கால் தோள் வைத்து-காலிலும் தோளிலும் பொருந்த வைத்து; தொழில்பட-நரம்புகளை வருடுதலாலே; தோன்றும் தும்புரு கருவியும்-இசை தோன்றுகின்ற தும்புரு என்னும் யாழும் என்க.

     (வி-ம்.) தும்புரு யாழ் பன்னிரண்டு விரல் சுற்றளவுள்ளதும் தொண்ணூற்று நான்கு விரல் அளவு நீளமும் உடையதாய்ச் செய்து ஒன்பது நரம்புகள் கட்டப்பட்ட தென்பதும் அவற்றுள் சுதி நரம்பு தனித்திருப்ப ஏனைய எட்டு நரம்புகளும் இரண்டிரண்டாக இணைத்துக் கட்டப்பட்டிருக்கு மென்பதும் இதனை இயக்குங்கால் பதுமாசனத்திலிருந்து தொடையிலும் தோளிலும் பொருந்தவைத்து இயக்கப்படும் என்பது முணர்க. நிலை என்றது சுதி நரம்பினை. இந்த யாழிற்குத் தும்புரு யாழ் என்பது பெயர் என்க. கருவி-யாழ்.

18 - 21: துன்னி................முரல

     (இ-ள்) துன்னி நின்று இசைப்ப-முன்கூறப்பட்ட நாரதயாழோடு பொருந்தி நின்று பாடவும்; எழுஎன உடம்பு பெற்று-வயிரமான உடல் பெற்று; எண்பது அங்குலியின்-எண்பது விரலளவு நீட்சியுடனே; நூறு தந்திரி தழங்கிய முகத்த- நூறு நரம்புகள் கட்டப்பெற்று இசைக்கின்ற முகத்தினையுடைய; கீசகம் பேரியாழ் கிளையுடன் முரல-கீசகம் என்னும் பெயரினையுடைய யாழ் பண்ணோடு பாடாநிற்பவும் என்க.

     (வி-ம்.) துன்னுதல்-பொருந்துதல். கீசகயாழ் வயிரமான உடல் பெற்று என்பது விரலளவு நீளமுடைத்தாய் நூறு நரம்புகளுடையதாய் அமைந்திருக்கும் என்க. கிளை-பண். முரலுதல்-பாடுதல்.

22 - 29: நிறைமதி......................இசைப்ப

     (இ-ள்) நிறைமதி வட்டத்து-முழுத்திங்கள் போன்ற வட்டவடிவ முடையதாய்; முயல் உரி விசித்து-முயலின் தோலால் கட்டி; நாப்பண் ஒற்றை நரம்பு கடிப்பமைத்து-நடுவிடத்தே ஒற்றை நரம்பாகிய மார்ச்சனையை அமைத்து; அ நரம்பு இருபத்தாறு அங்குலி பெற-அந்த நரம்பு இருபத்தாறு விரல் அளவுடையதாம்படி; இடக்கரம் துவக்கி-இடக்கையாற் கட்டி; இடக்கீழமைத்து- இடப்பக்கத்தே வைத்து; புறவிரல் மூன்றின்-மூன்று விரற்புறங்களானும்; நுனிவிரல் அகத்தும்-நுனிவிரலாலும்; அறுபத்து இரண்டு இசை-அறுபத்திரண்டு வகைப்பட்ட இன்னிசையை; அனைத் துயிர் வணங்கும்-எல்லா உயிராலும் வணங்கப்படுகின்ற; மருத்துவம் பெயர் பெறும்-மருத்துவயாழ் என்னும் பெயரையுடைய; வானக்கருவி-தேவயாழானது; தூங்கலும் துள்ளலும் துவக்கி நின்று இசைப்ப-தூங்கலோசையையும் துள்ளலோசையையும் தழுவி நின்று பாடாநிற்பவும் என்க.

     (வி-ம்.) தேவயாழ் வட்ட வடிவிற்றாய் முயலின் தோலாற் கட்டப்பட்டு நடுவிடத்தே ஒரு நரம்பினை இருபத்தாறு விரலளவுள்ள தாய்ப் பத்தரின்மேல் செங்குத்தாக நிறுத்தப்பட்ட தண்டில் கட்டி இடது பக்கத்தில் வைத்துக் கொண்டு வலக்கையின் மூன்று புறவிரல்களானும் நுனி விரல்களானும் வருடி இயக்கப்படும் என்பதும் அதன்கண் தூங்கலோசை துள்ளலோசை என்னும் இசை விகற்பங்களைத் தழுவி அறுபத்திரண்டு வகை இசை தோன்றும் என்பதும் இதனை மருத்துவயாழ் என்றும் கூறுப என்பதும் உணர்க.

30 - 35: நான்முகன்...........................வணங்காரென

     (இ-ள்) நான்முகன் முதலா மூவரும் போற்ற-நான்முகன் முதலிய மூன்று தேவர்களும் வாழ்த்தாநிற்ப; முனிவர் அஞ்சலியுடன் முகமன் இயம்ப-துறவோர் வணக்கத்தோடே முகமன் மொழிகளைக் கூறா நிற்ப; தேவர்கள் அனைவரும் திசை திசை இறைஞ்ச-முப்பத்து முக்கோடி தேவர்களும் திசைகள் தோறும் நின்று வணங்கா நிற்பவும்; இன்பப் பசுங்கொடி இடப்பால் படர-உயிர்கள் இன்புறுதற்குக் காரணமான பசிய பூங்கொடியை யொத்த பார்வதி தன்னிடப்பக்கத்தில் வீற்றிருப்ப; அம் வெள்ளிக்குன்றம் விளங்க வீற்றிருந்த-அழகிய வெள்ளிமலை தெய்வ ஒளியால் விளங்கும்படி எழுந்தருளியுள்ள; முன்னவன் கூடல்-முதல்வனாகிய சிவபெருமானுடைய மதுரை நகரத்தை; முறை வணங்கார் என-நூல் முறைப்படி வணங்காத மடவோரைப் போல என்க.

     (வி-ம்.) மூவர்-நான்முகன், திருமால், உருத்திரன் என்க. அஞ்சலி-வணக்கம். இன்பப் பசுங்கொடி-உயிர்கள் இன்புறுதற்குக் காரணமான பார்வதி. முன்னவன்-தலைவன். முறை-நூன்முறை.

36 - 41: அரவம்........................உண்ணும்

     (இ-ள்) அரவப் பசுந்தலை அரும்பு அவிழ் கணைக்கால் நெய்தல் பாசடை-பாம்பினது பசிய தலையினை யொத்த அரும்புகள் மலரப்பெற்ற திரண்ட தண்டினையுடைய அல்லியினது பசிய இலைகளாகிய; நெடுங்காடு ஒளிக்கும்-நெடிய காட்டிலே மறைகின்ற; கண் எனக் குறித்த கருங்கயல் கணத்தை-மாதர் கண்ணென்று புலவர்களால் கூறப்பட்ட பெரிய சேல் மீன்களை; வெள் உடல் கூர்வாய் செந்தாள் குருகு இனம்-வெள்ளிய உடலையும் கூர்த்த அலகினையும் சிவந்த காலினையுமுடைய நாரைக் கூட்டங்கள்; அரவு எயிறு அணைத்த முள் இலை முடக்கைதைகள்-பாம்பின் பல்லைப்போற் பொருந்திய முள்ளையுடைய மடலையுடைய வளைந்த தாழைகளினிடத்தே; கான்று அலர்கடிமலர் கரந்து உறைந்து உண்ணும்-மணம் பரப்பி மலருகின்ற மலர்களோடு மலர்களாய் மறைந்திருந்து கொத்தி உண்ணுகின்ற என்க.

     (வி-ம்.) பாம்பின் தலை அல்லி அரும்பிற்குவமை. கணைக்கால்-திரண்ட தண்டு. புலவர், ‘மாதர்கண்’ என்று உவமையாக எடுத்துக் கூறும் சேல் மீன் என்க. கூர்வாய்-கூரிய அலகு. பாம்பின் பல் தாழை முள்ளிற்குவமை. கைதை-தாழை. நாரைகள் வெண்டாழை மலர்களோடே மலர் போலத் தோன்றும்படி இருந்து சேல் மீன்களைச் செவ்வி நோக்கிக் கொத்தித் தின்னும் என்றவாறு. வெண்டாழை மலர் நாரை போறலின் கரந்துறைதற்கு ஏதுவாயிற்று.

42 - 46: கருங்கழி...............................நெஞ்சம்

     (இ-ள்) கருங்கழி கிடந்த கானலங்கரைவாய்-பெரிய கழி சூழ்ந்து கிடந்த கடற்கரையில்; மெய்படு கடும் சூள் மின் எனத் துறந்தவர்-வாய்மையாதற்குரிய பெரிய சூள்மொழியை மின்னல் போல விரைவில் மறந்து விட்டவரது; சுவல் உளை கவனம் புள் இயல் கலிமா-பிடரி மயிரினையும் விரைந்து செல்லுதலில் பறக்கும் பறவையின் இயல்பினையுமுடைய கனைக்கின்ற குதிரைகள் பூட்டப்பட்ட; நோக்கம் மறைத்த பரிதிகொள் நெடுந்தேர்- பார்க்கின்ற கண்களை ஒளியால் மறைக்கின்ற உருளையையுடைய பெரிய தேரின்; பின்னொடு சென்ற என் பெரும் பீழை நெஞ்சம்-பின்னாற் சென்ற என்னுடைய பெருந்துன்பமுடைய மனம் என்க.

     (வி-ம்.) கழி-நெய்தனில நீரோடை. கானல்-கடற்கரைச் சோலை. மெய்யாதற்குரிய சூள் என்க. மிகவும் விரைந்து மறந்தார் என்பாள் மின் எனத் துறந்தவர் என்றாள். கவனம்-விரைவு. விரைவினால் புள்ளியலுடைய மான் என்க. புள்ளியல்-பறக்கும் பறவை போல விரைந்து செல்லுதல். “உள்ளம் போல உற்றுழி யுதவும் புள்ளியற் கலிமா” எனத் தொல்காப்பியரும் (தொல். கற்பி. 53) ஓதுதல் காண்க. நோக்கம்-பார்வை. பேரொளியினால் பார்க்க வொண்ணாதபடி செய்யும் உருளை என்றவாறு. பரிதி-உருளை. பீழை-துன்பம்.

47 - 52: சென்றுழி............................கடுத்தே

     (இ-ள்) சென்றுழி சென்றுழி-அந்தத் தேர் சென்ற விடந்தொறும் சென்ற விடந்தொறும்; சேறலும் உளவோ-செல்லுதலும் உண்டோ; அ வினைப்பயன் உழி அருந்தவம் பெறுமோ-அல்லது அவர் சென்ற தொழில் முடியுமளவும் செய்தற்கரிய தவத்தைச் செய்யுமோ; இடைவழி நீங்கி என் எதிர் உறுங் கொல்லோ-அல்லது அவரைப் பின் தொடர மாட்டாமல் நடுவழியிலே விட்டு மீண்டும் என் எதிரே வருமோ; அன்றியும் நெடுநாள் அமைந்து உடன் வருமோ-அங்ஙனமின்றி நெடுநாள் அவருடனேயே இருந்து அவர் வருங்கால் கூட வருமோ; எது என மனம் கடுத்து நினைக்கிலன்- இவற்றுள் எதனைச் செய்யுமோ என்று என் நெஞ்சே யான் ஐயுறுதலால் முடிவாக ஒன்றையும் நினைக்கின்றிலேன்; பேதை கொள்ளாது ஒழி-ஆதலால் நீ பேதைமைப்படாமல் நிற்பாயாக; என்க.

     (வி-ம்.) அவர் தேர்ப்பின் சென்ற என்மனம் செல்லுமோ? தவம் செய்யுமோ? மீண்டும் என் எதிர் வருமோ? அவருடன் வருமோ இவற்றுள் எதனைச் செய்யும் என யான் அறிகின்றிலேன் என்றவாறு. இதன்கண் செல்லுதலும் தவம் செய்தலும் மீளலும் செய்யாத மனம் அவற்றைச் செய்வது போலக் கூறுவதனை,

நோயு மின்பமு மிருவகை நிலையிற்
காமங் கண்ணிய மரபிடை தெரிய
வெட்டன் பகுதியும் விளங்க வொட்டிய
வுறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன்
மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ்
சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச்
செய்ய மரபிற் றொழிற்படுத் தடக்கியு
மவரவ ருறுபிணி தமபோற் சேர்த்தியு
மறிவும் புலனும் வேறுபட நிறீஇ
யிருபெயர் மூன்று முரிய வாக
வுவம வாயிற் படுத்ததுலு வுவமமோ
டொன்றிடத் திருவர்க்கு முரியபாற் கிளவி” (தொல். பொருளி. 2)

எனவரும் வழுவமைதியால் அமைத்துக் கொள்க. உழி-இடம். கடுத்தல்- ஐயுறுதல். “கடுத்தபின் றேற்றுதல் யார்க்கு மரிது” (குறள். 693) என்புழியும் அஃதப் பொருட்டாதல் உணர்க. மனந்தானும் பற்றுதல் முதலிய தொழில் வேறுபாட்டால் மனம் சித்தம் புத்தி அகங்காரம் எனப் பலவகைப் படுதலின் என்மனம் என் செய்யுமோ என்று அறிகின்றிலேன். ஆதலால் மனமே! பேதை கொள்ளாதொழி எனக் கூறுதல் முரணன்மை யுணர்க.

     இதனை, முன்னவன் கூடல் வணங்காரென, கருங்கயற் கணத்தைச் செந்தாட் குருகினம் உண்ணும் கானலங்கரைவாய்க் கடுஞ்சூள் மின்னெனத் துறந்தவர் பரிதிகொ ணெடுந்தேர் பின்னொடு சென்ற நெஞ்சம், சேறலு முளவோ, அருந்தவம் பெறுமோ, இடைவழி நீங்கி எதிருறுங் கொல்லோ அன்றி யுடன்வருமோ, யாதென நினைக்கிலன், ஒழியென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.