|
|
செய்யுள்
83
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கடுவினை
யங்குரங் காட்டியுள் ளழுக்கா
றெண்டிசைச் சாகைகொண் டிருண்மனம் பொதுளிக்
கொடுங்கொலை வடுத்துக் கடும்பழிச் சடையலைந்
திரண்டைஞ் ஞூறு திரண்டவக் காவதஞ்
சுற்றுடல் பெற்றுத் துணைப்பதி னாயிர |
10
|
|
மற்றது நீண்டு மணியுடற் போகி
யைம்பது நூறுட னகன்றுசுற் றொழுக்கிப்
பெருங்கள விணர்தந் தவைகீழ்க் குலவிய
விடமாக் கொன்ற நெடுவேற் குளவன்
குன்றமர் வள்ளியங் கொடியொடு துவக்கிப் |
15
|
|
பன்னிரு கண்விழித் தென்வினை துரக்கு
மருட்பரங் குன்ற முடுத்தணி கூடற்
குறும்பிறை முடித்த நெடுஞ்சடை யொருத்தனைத்
தெய்வங் கொள்ளார் சிந்தைய தென்னக்
கிடந்தவல் லிரவிற் கிளர்மழை கான்ற |
20
|
|
வயலு மும்பரு மடக்குபுன லொருவித்
தேவருள் கல்லார் சிந்தையிற் புரண்ட
கவலையுங் காற்குறி கண்டுபொழிற் றுள்ளு
மிமையாச் சூரும் பலகண் டொருங்காத்
துடியிற் கண்ணிற் றுஞ்சாக் கண்ணினர் |
25
|
|
கடியுந் துனைவிற் கையகன் றெரிமணித்
தொகையிருள் கொல்லு முன்றிற் பக்கத்
திணைமுகப் பறையறை கடிப்புடைத் தோகை
வயிற்று ளடக்கி வளைக்கிடை கிடக்கு
முழக்கிமெய் கவரு முகக்கொலை ஞாளி |
30
|
|
யதிர்குரைப்
படக்கி யிற்புறத் தணைந்தநம்
பூம்புன லூரனைப் பொருந்தா நெடுங்க
ணன்னையிற் போக்கிய வரும்பெருந் தவறு
மாலையுங் கண்ணு மேனியு முள்ளமு
மயங்காத் தேவர் மருந்துவாய் மடுக்க |
|
|
முகங்கவிழ் வேலையி லறங்குடி போகிய
மாயவல் லரக்கர் தட்டிக்
காய்பா ருகுத்த விதியொத் ததுவே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவி கூற்று
துறை: காப்புச்
சிறைமிக்க கையறு கிளவி.
(இ-ம்)
இதற்கு இருவகைக் குறி பிழைப்பாகிய விடத்தும் (தொல். களவி. 16) எனவரும்
விதி கொள்க.
1
- 9: கடுவினை.................................குளவன்
(இ-ள்)
கடுவினை அங்குரம் காட்டி-நஞ்சையொத்த மாயையாகிய முளையைத் தோற்றுவித்து; உள் அழுக்காறு
சாகை எண்திசை கொண்டு-தன் நெஞ்சத்தின்கண்ணுள்ள போறாமையாகிய கிளைகளை எட்டுத்திசைகளிலும்
பரப்பி; இருள் மனம் பொதுளி-இருண்ட நெஞ்சமாகிய தளிர்களைத் தளிர்த்து; உடல் சுற்று-தன்
உடலின் சுற்றளவு; இரண்டு ஐஞ் ஞூறு திரண்ட அக் காவதம் பெற்று-ஆயிரங்காத தூரம் திரட்சியாகப்பெற்று;
மற்றது-அந்த மரமானது; துணைப்பதினாயிரம் நீண்டு- இருபதினாயிரம் காவத தூரம் உயர்ந்து;
மணி உடல் போகி-அழகிய உடலானது சென்று; சுற்று-சுற்றிலும்; ஐம்பது நூறுடன் அகன்று ஒழுக்கி-ஐயாயிரம்
காததூரம் அகலப் பரப்பி; பெருங்களவு இணர்தந்து-மிக்க வஞ்சகமாகிய பூங் கொத்துக்களை
ஈன்று; கொடுங் கொலை வடுத்து(3) -கொடிய கொலையாகிய பிஞ்சுகளை அரும்பி; அவை-அக்கிளை
முதலியவைகள்; கீழ் குலவிய- தலைகீழாகப் பொருந்தியதாகி; கடும்பழிசடை அலைந்து(3)-மிகுந்த
பழியாகிய வேர்கள் மேலே அலையப்பெற்ற; விடம் மாக் கொன்ற-நஞ்சையொத்த சூரபத்மனாகிய
மாமரத்தைத் தடிந்த; நெடுவேல் குளவன்-நெடிய வேற்படையினையுடைய முருகக் கடவுள் என்க.
(வி-ம்.)
அங்குரம்-முளை. அழுக்காறு-பொறாமை. சாகை-கிளை. பொதுளல்-தளிர்த்தல். வடுத்தல்-வடுவிடுதல்.
வடு-மாம் பிஞ்சு. சடை-வேர்.
சடை போறலின் சடையெனப்பட்டது. காவதம்-ஓரளவு. உடல் சுற்று என மாறுக. துணை இரண்டு
எனவே துணைப்பதினாயிரம் என்றது இருபதினாயிரம் என்றவாறு. இணர்-பூங்கொத்து. விடமா-விடம்
போன்ற சூரபத்மனாகிய மாமரம் என்க. குளவன்-முருகக் கடவுள்.
10
- 14: குன்று........................என்ன
(இ-ள்)
குன்று அமர் வள்ளி அம் கொடியொடு துவக்கி-குன்றின்கண் அமர்ந்திருந்த அழகிய வள்ளி
என்னும் கொடியாலே கட்டுண்டு; பன்னிரு கண் விழித்து-தன்னுடைய பன்னிரண்டு கண்களாலும்
நோக்கி; என்வினை துரக்கும்-எனது இருவினைகளையும் போக்கா நின்ற; அருள் பரங்குன்றம்
உடுத்து அணி கூடல்-அடியார்க்கு வரமருளுகின்ற திருப்பரங்குன்றத்தால் சூழ்ந்து அணி செய்யப்பட்ட
மதுரையின்கண் எழுந்தருளிய; குறும் பிறை முடித்த நெடுஞ்சடை ஒருத்தனை-குறிய பிறையினை
அணிந்த நெடிய சடையினையுடைய ஒப்பற்றவனாகிய சிவபெருமானை; தெய்வங் கொள்ளார் சிந்தையது
என்ன-தெய்வம் என்று மதியாத மடவோருடைய நெஞ்சுபோல என்க.
(வி-ம்.)
மலைகளை விரும்பும் வள்ளி எனினுமாம். துவக்கி- துவக்கப்பட்டு. அஃதாவது கட்டுண்டு என்றவாறு.
கட்டுண்டு-விழித்து என மற்றொரு பொருளும் தோன்றுதல் காண்க. குறும்பிறை நெடுஞ்சடை
என்புழிச் செய்யுளின்ப முணர்க. நெடுஞ்சடை ஒருத்தன் என்றது சிவபெருமானை.
15
- 21: கிடந்த.....................கையகன்று
(இ-ள்)
கிடந்த வல் இரவில்-இருண்டு கிடந்த பெரிய இராக் காலத்தில்; கிளர்மழை கான்ற-நிறைந்த
மழையைப் பொழிந்த; அயலும் உம்பரும் அடக்குபுனல் ஒருவி-திசைகளையும் வானத்தையும் தனக்குள்
அடக்கிய நீரைக் கடந்து; தே அருள் கல்லார் சிந்தையின் புரண்ட-தெய்வத்தின் அருளை
உணராரது நெஞ்சுபோல் மாறுபட்ட; கவலையும் கால்குறி கண்டு-கிளை வழிகளையும் காற்குறியாற்
கண்டு; பொழில் துள்ளும் இமையாச் சூரும் பல கண்டு-சோலைகளிலே விளையாடாநின்ற கண்ணிமைத்தலில்லாத
தெய்வங்கள் பலவற்றையுங் கண்டு; ஒருங்காத் துடியின் கண்ணில்-அடங்காத குறிஞ்சிப்பறையின்
ஓசையால்; துஞ்சாக் கண்ணினர் கடியுந் துனைவில் கையகன்று-உறங்காத கண்ணையுடைய காவலர்
காவலையும் விரைந்து நீங்கி என்க.
(வி-ம்.)
தெய்வங்கொள்ளார் மனம்போல இருண்டு கிடந்த வல் இரவு என்க. கிளர்மழை: வினைத்தொகை.
அயல்-திசை. உம்பர்- வானம். தே-தெய்வம். கவலை-கிளைவழி. காற்குறி- காற்சுவடு.
சுவட்டைக் காலாற் றடவிப் பார்த்து அறிந்து என்பது கருத்து. துள்ளுதல்-ஈண்டு விளையாடுதல்.
துடிக்கண் போலத் துஞ்சாக் கண்ணினர் என உவமையாக்கினுமாம். கடி-காவல். துனைவு-விரைவு.
21
- 26: எரிமணி............................அடக்கி
(இ-ள்)
எரிமணித் தொகை இருள் கொல்லும் முன்றிற் பக்கத்து- ஒளிர்கின்ற மணிக்கூட்டங்கள்
இருளை அகற்றுகின்ற முற்றத்தின் முன்னர்; இணைமுகப்பறை அறை கடிப்பு உடை தோகை-இரட்டை
முகங்களையுடைய பறைகளை யடிக்கும் குறுந்தடியையொத்த தன்னுடைய வாலை; வயிற்றுள் அடக்கி
வளைகிடை கிடக்கும்-தன் வயிற்றினுள்ளே அடக்கிக்கொண்டு வளைந்து படுத்திருக்கும்;
முழக்கி மெய்கவரும் கொலைமுக ஞாளி-குரைத்து உடம்பில் தசையைக் கவருகின்ற கொலைத்
தொழிலையுடைய முகத்தினையுடைய நாயினது; அதிர் குரைப்பு அடக்கி-நெஞ்சு அதிர்தற்குக்
காரணமான குரைப்பொலியினை அடக்கி என்க.
(வி-ம்.)
எரிமணி: வினைத்தொகை. எரிமணித் தொகை இருள் கொல்லும் முன்றில் என்றது-மணிகளும்
அவர் வரவிற்கு இடையூறு ஆயின என்று வருந்தியபடியாம். இணை முகப்பறை-பம்பை முதலியன.
கடிப்பு-குறுந்தடி. இது நாயின் வாலுக்குவமை. தோகை-வால். நாய் கடிப்புப் போன்ற வாலை
வயிற்றினுள் அடக்கிக் கொண்டு வளைந்து படுத்திருக்கும் என்னும் இவ்வியற்கை நவிற்சியணி
நினைந்தின்புறற்பாலது. மெய்கவர்தல்- உடம்பிற்றசையைக் கவர்தல். ஞாளி-நாய். அதிர்
குரைப்பு; வினைத்தொகை. குரைப்படக்குதலாவது நாயினோடு கேண்மை கொண்டு அது குரைத்திடாதபடி
செய்தல்.
26
- 28: இற்புறத்து.........................தவறு
(இ-ள்)
இற்புறத்து அணைந்த நம் பூம்புனல் ஊரனை-நமது வீட்டின் பின்புறத்துள்ள இரவுக்குறியின்கண்
வந்த நம்முடைய நீரால் சூழப்பட்ட ஊரையுடைய பெருமானை; பொருந்தா நெடுங்கண் அன்னையின்-துயிலாத
நெடிய நம்தாய் அறிவாளென்று அஞ்சி; போக்கிய அரும் பெருந்தவறு-யாம் சென்று எதிர்
கொள்ளாமல் விடுத்த நீக்கற்கரிய பெரிய இவ்விடையூறானது (எவ்வாறிருந்த தென்னின்)
என்க.
(வி-ம்.)
அவன் அன்புடைமையின் பெருமை இறைச்சியிற் றோன்ற நம்பூம்புனல் ஊரன் என்றாள். எதனையும்
கூர்ந்து பார்க்கும் இயல்புடையாள் என்பாள் நெடுங்கண் அன்னை என்றாள். அன்னையின்
போக்கிய என்றது அன்னை காண்பளென்று அஞ்சிப்போகச் செய்த என்றவாறு. போக்கிய
என்றது நாம் சென்று எதிர் கொள்ளாமல் விடுத்த என்பது பட
நின்றது. போக்கிய தவறு-போக்குதற்குக் காரணமான இடையூறு. ஈண்டு இடையூறு தாய் துஞ்சாமை
என்க.
29
- 33: மாலையும்..........................ஒத்தது
(இ-ள்)
மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும் மயங்காத்தேவர்- அணிந்த மாலையும் கண்ணும் உடலும்
நெஞ்சும் வேறுபடாத தேவர்கள்; மருந்து வாய் மடுக்க-தாம் உண்ணுதற்குரிய அமிழ்தத்தை
வாயால் உண்ணும் பொருட்டு; முகம் கவிழ் வேலையில்-தலையைக் குனிந்த சமயத்தில்; அறம்குடி
போகிய மாயவல் அரக்கர்-அறப்பண்பு தம்மை விட்டுத் துவரப்போய் விட்ட மாயம் வல்லவரான
அரக்கர்கள்; தட்டிக் காய் பார் உகுத்த விதி ஒத்தது- கையால் தட்டிக் காய்ந்த நிலத்தின்கண்
சிந்தும்படி செய்த முறையை ஒத்திருந்தது என்க,.
(வி-ம்.)
தாய் துஞ்சாமை என்னும் இவ்விடையூறு எதனை ஒக்கும் என்னில் தேவர்கள் அமிழ்தம் உண்ண
முகங்கவிழ்ந்த பொழுது அரக்கர் அவ்வமிழ்தக் கலத்தைக் கையாற் றட்டி நிலத்திற்
கவிழ்த்துக் கெடுத்தது போன்றிருந்தது என்றவாறு. இதன்கண் தலைவிக்குவமை தேவர். தலைவனுக்
குவமை அமிழ்தக் கலம். தாய்க்குவமை அறங்குடிபோகிய மாயவல் அரக்கர். இவ்வுவமை பெரிதும்
இன்பம் பயத்தலுணர்க. வெயிலால் காய்ந்து வெடித்த நிலம் என்பது தோன்ற காய்பார்
என்றாள். விதி-முறை; யாம் என் செய்கேம் என்பது குறிப்பெச்சம்.
இதனை, விடமா
கொன்ற நெடுவேற் குளவன் பன்னிருகண் விழித்து என்வினை துரக்கு மருட்பரங்குன்ற முடுத்தணிகூடல்
நெடுஞ்சடையொருத்தனைக் கொள்ளார் சிந்தையதென்ன, வல்லிரவில், அயலுமும்பரு மடக்குபுன
லொருவி, கல்லார் சிந்தையிற் புரண்ட கவலையுங் காற்குறி கண்டு, சூரும் பலகண்டு கடியுங்
கையகன்று, ஞாளியதிர் குரைப்படக்கி, இற்புறத்தணைந்த நம்புனலூரனைப் பொருந்தா நெடுங்கணன்னையில்
போக்கிய அரும் பெருந்தவறு, தேவர் மருந்து வாய் மடுக்க முகங்கவிழ் வேலையில் அரக்கர்
தட்டியுகுத்த விதியொத்ததென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|