பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 84

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நாற்கடல் வளைத்த நானிலத் துயிரினை
யைந்தருக் கடவு ளவன்புலத் தினரை
நடந்துபுக் குண்டும் பறந்துபுக் கயின்று
முத்தொழிற் றேவரு முருங்கவுள் ளுறுத்து
நோன்றலைக் கொடுஞ்சூர்க் களவுயிர் நுகர்ந்த
10
  தழல்வேற குமரன் சால்பரங் குன்ற
மணியொடும் பொன்னொடு மார்பணி யணைத்த
பெருந்திருக் கூட லருந்தவர் பெருமா
னிருசர ணகலா வொருமைய ருளமெனச்
சுடர்விளக் கெடுமின் கோதைக டூக்குமின்
15
  பூவும் பொரியுந் தூவுமி னெழுதுமின்
சுண்ணமுந் தாதுந் துணைத்துக டூற்றுமின்
கரும்பெயற் குளிறிற் களிமயி லென்னக்
கிளர்ந்தயர் வாட்குமுன் கிளர்வினைச் சென்றோ
ருடலுயிர் தழைக்கு மருள்வர வுணர்த்த
20
  முல்லையம் படர்கொடி நீக்கிப் பிடவச்
சொரியலர் தள்ளித் துணர்ப்பொலங் கடுக்கைக்
கிடைதர வொருவிக் களவலர் கிடத்திப்
பூவையம் புதுமலர் போக்கியரக் கடுத்த
கழுவிய திருமணி கால்பெற் றென்ன
  நற்பெருந் தூது காட்டு
மற்புதக் கோபத் திருவர வதற்கே.

(உரை)

     கைகோள் : களவு. (களவுக்காலத்தில் கூற்றிற்குரியார் மனையிலுள்ளார் என ஒருசாரார்க்கு இலக்கணம் கூறப்படாமையின் இதனைத் தோழி கூற்றின் வகையாகவே கொள்க)

துறை: மணவரவினைக் குறிப்பானுணர்ந்து மகிழ்ந்துரைத்தல்.

     (இ-ம்) இதனை, “நாற்றமுந் தோற்றமும்” (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண் ‘வகை’ என்பதனாற் கொள்க.

1 - 6: நாற்கடல்............................குமரன்

     (இ-ள்) நால் கடல் வளைத்த நால் நிலத்து உயிரினை-நான்கு திசையினும் கடலால் சூழப்பட்ட நால்வகைப்பட்ட நிலத்தினும் வாழுகின்ற உயிரினங்களையும்; ஐந்தருக் கடவுள் அவன் புலத்தினரை-இந்திரனையும் அவன் நாட்டின்கண் வாழும் தேவர்களையும்; நடந்து புக்கு உண்டும்- நடந்துபோய் அழித்தும்; பறந்து புக்கு அயின்றும்-பறந்து சென்று அழித்தும்; முத் தொழில் தேவரும் முருங்க உள்ளுறுத்தும்-படைத்தலும், காத்தலும், அழித்தலுமாகிய மூன்று தொழில்களையுமுடைய பிரமனும் திருமாலும் உருத்திரனுமாகிய மூன்று தேவர்களும் நெஞ்சழியும்படி அச்சுறுத்திய; நோன்தலை கொடும் சூர்-வலிய தலையையுடைய சூரபதுமனுடைய; களவு உயிர் நுகர்ந்த தழல் வேல் குமரன்- வஞ்சமுடைய உயிரைக் குடித்த தழலுகின்ற வேற்படையினையுடைய முருகக் கடவுள் என்க.

     (வி-ம்.) நான்கு கடல்-நான்கு திசைகளிலும் உள்ள கடல். நால் நிலம்-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என்பன. ஐந்தரு-அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்பன. அயிலுதல்-உண்ணுதல். முத்தொழில்-படைத்தல், காத்தல், அழித்தல் என்பன. முத்தேவர்-பிரமன், திருமால், உருத்திரன் என்போர். முருங்குதல்-அழித்தல். உள்ளுறுத்துதல் என்றது ஈண்டு அச்சுறுத்துதல் என்பதுபட நின்றது. சூர்-சூரபதுமன். குமரன்-முருகக் கடவுள்.

6 - 9: சால்........................உளமென

     (இ-ள்) சால் பரங்குன்றம்-நிறைந்துள்ள திருப்பரங்குன்றத்தினை; மணியொடும் பொன்னொடும் மார்பு அணி அணைத்த-மணிகளாலும் பொன்னாலுமியன்ற மதாணிப் பதக்கமாக அணிந்த; பெருந்திருக்கூடல் அருந்தவர் பெருமான்-மிக்க வளப்பமுள்ள மதுரையின்கண் எழுந்தருளிய செயற்கரிய தவத்தையுடைய மெய்யடியார் பெருமானாகிய சிவபெருமானுடைய; இரு சரண் அகலா ஒருமையர் உளம் என-இரண்டு திருவடிகளையும் விட்டு நீங்காத ஐந்திருளகற்றி ஒன்றாற்றுப் படுத்த ஆர்வலர் நெஞ்சம் போல என்க.

     (வி-ம்.) திருப்பரங்குன்றம் தன்பால் பொன்னும் மணியும் உடைத்தாகலின் அதனை மதுரை என்னும் நங்கைக்கு மார்பு அணியாகக் கூறினர். இவ்வணியை மதாணிப்பதக்கம் என்று கூறுப. பெருமான்-தலைவன். சரண்-திருவடி. ஒருமையர் என்றது ஐம்புலன்களிலும் மனத்தைப் போக்காது இறைவன் திருவடியாகிய ஓரிடத்திலேயே அதனை வைத்துள்ள மெய்யடியாரை. மெய்யடியார் உள்ளம் எவ்வாறு மகிழுமோ அவ்வாறு மகிழ என்க.

13 - 18: கரும்பெயல்.........................ஒருவி

     (இ-ள்) கரும்பெயல் குளிறின் களிமயில் என்ன-கரிய முகில் முழக்கங் கேட்டு மகிழுகின்ற மயிலைப்போல; கிளர் வினை சென்றோர்- மனவெழுச்சியினையுடைய தொழிலை மேற்கொண்டு சென்ற தலைவருடைய; உடல் உயிர் தழைக்கும் அருள் வரவு-தன்னுடைய உடலும் உயிரும் ஒருங்கே தழைத்தற்குக் காரணமான அருளையுடைய வருகையை; கிளர்ந்து அயர்வாட்கு- மிகுதியாகத் தளர்கின்ற தலைவிக்கு; முன் உணர்த்த-எதிரே வந்து அறிவிப்பதற்கு; முல்லை அம்படர்கொடி நீக்கி-முல்லையாகிய அழகாகப் படர்கின்ற கொடிகளை அகற்றி; பிடவு சொரி அலர் தள்ளி-பிடவம் சொரிகின்ற மலர்களையும் விலக்கி; பொலம் துணர் கடுக்கை கிடைதரவு ஒருவி-பொன் போன்ற பூங்கொத்துக்களை யுடைய கொன்றை மரங்கள் இருக்குமிடத்தையும் நீங்கி என்க.

     (வி-ம்.) குளிறு-ஒலி. இனி குளிர் என்றும் பாடம். அதற்கு,முகிலின் குளிர்ச்சியினால் எனப் பொருள் கொள்க. (தலைவியின் உடலும் உயிரும் தழைக்கும் அருள் வரவு என்க.) தலைவனுடைய வரவைத் தலைவிக்கு முன் உணர்த்தும் பொருட்டு என்க. பிடவு-ஒருசெடி. பொலந் துணர் என மாறுக. கிடைதரவு, ஒருசொல். இருப்பிடம் ஒருவுதல்-நீங்குதல்.

18 - 22: களவு அலர்........................அதற்கே

     (இ-ள்) களவு அலர் கிடத்தி-களாமலரை உதிர்த்து; பூவை அம் புதுமலர் போக்கி - காயாவினது புதிய மலரை விடுத்து; அரக்கு அடுத்த கழுவிய திருமணி-அரக்கில் ஒட்டிச் சாணைபிடித்த அழகிய மாணிக்கமணி; கால்பெற்று என்ன - கால் உண்டாகப்பெற்று வந்தாற் போன்ற; அற்புதக் கோபம் திருவரவு அதற்கு-வியத்தகு அழகிய வருகை அத்தலைவர் வரவிற்கு; நல்பெருந் தூது காட்டும்-மிகவும் நன்மையான தூது போலக் காட்டாநிற்கும் என்க.

     (வி-ம்.) (கரு) தலைவன் அருள் வரவு தலைவிக்கு முன்னர் உணர்த்தும் பொருட்டு இந்திர கோபத்தினது வரவு தூது வந்தாற்போலத் தோன்றும் என்பது கருத்து. களவு-களா. அலர்-மலர். பூவை-காயா. கழுவிய மணி-சாணைபிடித்த மாணிக்கமணி. இந்திர கோபப் புழுவிற்குச் சாணை பிடிக்கப்பட்டுக் கால் உண்டாகி ஊர்ந்து வரும் மாணிக்கம் உவமை. இஃது இல்பொருள் உவமை. அற்புதம்-வியப்பு. கோபம்-இந்திர கோபப் புழு. இந்திர கோபம் முல்லைக்கொடி முதலியவற்றை விட்டு வந்த வரவு என்க. அதற்கு என்றது தலைவன் வரவிற்கு-என்றவாறு. தலைவன் கார்காலத் தொடக்கத்தில் வருவேன் என்று கூறிச் சென்றானாதலின் கார் காலத்தில் தோன்றும் இந்திரகோபப்புழுவின் வரவு அவன் வரவினைக் காட்டும் தூதாயிற்று.

என்க. இனி இச்செய்யுள், கற்புக்காலத்து வினைவயிற் சென்ற தலைவன் கூறிய கார்கால வரவுகண்டு தோழி தலைவியை ஆற்றும் பொருட்டு ஆயத்தார்க்குக் கூறியதாகக் கொள்ளின் பெரிதும் பொருந்துவதாம். இக்கருத்திற்குப் பெறற்கரும் பெரும் பொருள் (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் வரும் ‘வகை’ என்பதனைக் கொள்க.

10 - 12: சுடர்........................தூற்றுமின்

     (இ-ள்) சுடர் விளக்கு எடுமின்-மாணிக்க விளக்குகளை ஏந்துவீராக; கோதைகள் தூக்குமின்-மலர் மாலைகளைத் தூங்கவிடுமின்; பூவும் பொரியும் தூவுமின்-மலர்களையும் பொரிகளையும் தூவுவீராக; எழுதுமின்-முன்றிலிலே கோல மிடுவீராக; சுண்ணமுந் தாதுந் துணைத்துகள் தூற்றுமின்-நறுமணச் சுண்ணமும் பூந்துகளும் ஆகிய இருவகைப் பொடிகளையும் யாண்டும் தூற்றுவீராக! என்க.

     (வி-ம்.) சுடர் விளக்கு என்றது மணிவிளக்குகளை. தூக்குதல்-