பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 85

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பழுதறு தெய்வங் காட்டப் பண்டையி
னுழுவ னலத்தா லோருயி ரென்றுங்
கடுஞ்சூ டந்துங் கைபுனை புனைந்தும்
பூழியம் போனகம் பொதுவுட னுண்டுங்
குழமகக் குறித்துச் சிலமொழி கொடுத்துங்
10
  கையுறை சுமந்துங் கடித்தழை தாங்கியு
முயிரிற் றளர விரங்கியு முணங்கியும்
பனையுங் கிழியும் படைக்குவ னென்று
மிறடியஞ் சேவற் கெறிகவண் கூட்டியும்
புனமுமெம் முயிரும் படர்கரி தடிந்து
15
  மழுங்குறு புனலெடுத் தகிற்புகை யூட்டியு
மொளிர்மணி யூசல் பரியவிட் டுயர்த்து
மிரவினிற் றங்க வெளிவர விரந்து
மிருவியம் புனத்திடை யெரியுயிர்ப் பெறிந்தும்
தெரிந்தலர் கொய்துந் பொழிற்குறி வினவியு
20
  முடலொடும் பிணைந்தகை யாய்துயி லொற்றிச்
செறியிருட் குழம்பகஞ் சென்றுபளிங் கெடுத்த
விற்பொழிற் கிடைக்கு மளவுநின் றுலைந்தும்
பன்னாட் பன்னெறி யழுங்கின ரின்று
முகனைந்து மணத்த முழவந் துவைக்க
25
  வொருகாற் றூக்கி நிலைய மொளிர்வித்து
மூவுட லணைத்தமும் முகத்தொ ரோமுகத்
தெண்கடிப்பு விசித்த கல்லல் செறிய
விருட்குற ளூன்றியெம் மருட்களி யாற்றி
யுருள்வாய்க் கொக்கரை யும்பர்நாட் டொலிக்கக்
30
  கரங்கால் காட்டித் தலைய மியக்கி
யிதழவிழ் தாமரை யெனுந்தகு ணித்தந்
துவைப்பநின் றமைகரத் துக்கவைக டோற்றிக்
கரிக்கா லன்ன மொந்தைகலித் திரங்கத்
துடியெறிந் திசைப்பத் துகளம் பரப்பி
35
  வள்ளம் பிணைத்தசெங் கரடிகை மல்க
வெரியக லேந்திவெம் புயங்கமிசை யாக்கி
யெரிதளிர்த் தன்ன வேணியிற் குழவிப்
பசும்பிறை யமுதொடு நிரம்பிய தென்ன
மதுக்குளிர் மத்தமு மிலைத்தொரு மறுபிறை
40
  மார்பமு மிருத்திய தென்னக் கூன்புறத்
தேனக் கோடுவெண் பொடிப்புலத் தொளிரப்
பொலன்மிளிர் மன்றப் பொதுவக நாடித்
தனிக்கொடி காணவெவ் விடத்துயிர் தழைப்ப
வாடிய பெருமா னமர்ந்துநிறை கூடல்
  கனவினும் வினவா தவரினு நீங்கிச்
சூளும் வாய்மையுந் தோற்றி
நீளவும் பொய்த்தற் கவர்மனங் கரியே.

(உரை)
கைகோள் : கற்பு. தலைவி கூற்று.

துறை: வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல்.

     (இ-ம்) இதற்கு, ழுஎஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவேழு (தொல். அகத். 42) எனவரும் விதி கொள்க.

1 - 8: பழுதறு........................என்றும்

     (இ-ள்) பழுது அறு தெய்வம் காட்ட-குற்றமற்ற ஊழானது கூட்டுவித்தலால்; பண்டையின்-முன்னாளிலே; உழுவல் நலத்தால் ஓர் உயிர் என்றும்-எழுமையும் தொடர்ந்த அன்போடு நம்மிருவர்க்கும் உயிர் ஒன்றென்றும்; கடுஞ்சூள் தந்தும்-கொடிய சூண்மொழி கூறியும்; கைபுனை புனைந்தும்-கையால் அணிகலனணிந்தும்; பூழி அம்போனகம் பொதுவுடன் உண்டும்-வண்டற் சோற்றினை ஆயத்தோடிருந்தருந்தியும்; குழமகக் குறித்துச் சில மொழி கொடுத்தும்-நமது விளையாட்டுப் பாவையாகிய இளமகவைப் பாராட்டி அதற்குச் சில மொழிகளைப் பயிற்றியும்; கையுறை சுமந்தும்- எமக்குக் கையுறையாகச் சிலபொருள்களைச் சுமந்து கொணர்ந்தும்; கடிதழை தாங்கியும்-மணமிக்க தழையை யேந்தி வந்தும்; உயிரின் தளர இரங்கியும்- உயிரோடு தளரும்படி வருந்தியும்; உணங்கியும்-வாடியும்; பனையும் கிழியும் படைக்குவன் என்றும்-பனைமடலாற் குதிரையும் ஓவியக் கிழியும் படைப்பேன் என்று அச்சுறுத்தியும் என்க.

     (வி-ம்.) இவையெல்லாம் களவுக் காலத்தே நிகழ்ந்தவற்றைத் தலைவி நினைந்து கூறுகின்றாள் என்க. தெய்வம்-ஊழ்வினை. உழுவல் நலம் - எழுமையும் தொடர்ந்த அன்பு. சூண்மொழி பொய்ப்பின் அதனை மொழிந்தாற்குப் பெருங்கேடு உண்டாமாதலின் கடுஞ்சூள் எனப்பட்டது. புனை-அணிகலன.் பூழி-புழுதி. போனகம்-சோறு. குழமக-இளங்குழவி. கையுறை-அன்புடையோரைக் காணப்போவார் அவர் பொருட்டுக் கொடு செல்லும் கைப்பொருள். கடி-மணம். உயிரின் என்புழி ஐந்தனுருபு மூன்றனுருபொடு மயங்கிற்று. பனை: ஆகுபெயர். பனைமடலாற் செய்யும் குதிரை என்க. கிழி-தலைவியின் உருவம் வரைந்த படம்.

9 - 14: இறடி...........................எறிந்தும்

     (இ-ள்) இறடி அம் சேவற்கு எறி கவண் கூட்டியும்-தினைப்புனங் காத்தற் பொருட்டுக் கல்லெறிதற்குக் கவண் கட்டிக் கொடுத்தும்; புனமும் எம் உயிரும் படர்கரி தடிந்தும்-தினைப்புனத்தையும் எம்முயிரையும் அழித்தற்கு வந்த யானையைக் கொன்றும்; அழுங்குறு புனல் எடுத்து அகில்புகை ஊட்டியும்-யான் அழுந்திய நீரினின்றும் என்னைக் கரையேற்றிக் குளிர் தீரும்படி அகிற்புகை புகைத்தும்; ஒளிர்மணி ஊசல் பரிய இட்டு உயர்த்தும் - சுடருகின்ற மணிகளையுடைய ஊசலின் கயிறு அற்றபொழுது புதிய கயிறிட்டு ஆட்டியும்; இரவினில் தங்க எளிவர இரந்தும்-இரவின்கண் எம்மிடத்தே தங்கியிருத்தற்கு எளிமையுண்டாக எம்மை வேண்டிக்கொண்டும்; இருவி அம்புனத்திடை எரி உயிர்ப்பு எறிந்தும்-கதிரரியப்பட்டு வறுந்தாளாக நின்ற தினைப்புனத்தின்கண் எம்மைக் காணாமையால் பெருமூச் செறிந்தும் என்க.

     (வி-ம்.) இறடி-தினை. சேவல்-காவல். ழுசேவலாய் வைகுந் தினைப்புனத்திற் புள்ளினுடன்-மாவெலாங் கூடிழு (கந்தபு. வள். 109) என்புழியும் அஃதப்பொருட்டாதல் உணர்க. கவண்-கிளிகடி கருவி. அழுங்குறுதல்: ஒருசொல்: அழுந்துதல். குளிர் போக்குதற் பொருட்டுப் புகையூட்டி என்பது கருத்து. பரிதல்-அறுதல். உயர்த்தல்-ஆட்டல். இரத்தல்- வேண்டிக்கோடல். இருவி-கதிர் கொய்து விடப்பட்ட வறுந்தாள்.

15 - 19: தெரிந்து....................இன்று

     (இ-ள்) அலர் தெரிந்து கொய்தும்-யான் விரும்பும் மலர்களை அறிந்து கொய்து கொணர்ந்து கொடுத்தும்; பொழிற் குறி வினவியும்- பொழிலினிடத்தே பகற்குறி யிடத்தைக் கேட்டும்; உடலொடும் பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி-இரவுக் குறியின்கண் யான் என் உடலோடும் அணைந்த தாயின் துயிலை ஆராய்ந்து நீங்கி; செறி இருள் குழம்பு அகம் சென்று -செறிந்த குழம்பு போன்ற இருளின்கண் நள்ளிரவில் யாம் சென்று; பளிங்கு எடுத்த இல் பொழில் கிடைக்கு மளவும்-பளிக்குப் பாறையால் இயற்றிய எம் இல்லத்தின் புறத்தேயுள்ள அப் பொழிலின்கண் சென்று அவனை எய்து மளவும்; நின்று உலைந்தும்-எம் வருகையை எதிர்பார்த்து நின்று வருந்தியும்; பல் நாள் பல்நெறி அழுங்கினர்-இவ்வாறு களவுக் காலத்தே பலநாள் பலவகையாலும் வருத்தமுற்ற தலைவர்; இன்று-யாம் எளியேமாகிய இக்கற்புக் காலத்தின்கண் என்க.

     (வி-ம்.) தெரிதல்-தன் விருப்பத்தைக் குறிப்பாலுணர்தல். பொழிற்குறி -பகற்குறி. ஆய்-தாய்; என்றது செவிலித்தாயை. துயில் ஒற்றுதல் துயிலுதலை ஆராய்ந்தறிதல். பளிங்கு எடுத்த இல்-படிகக்கல்லால் இயற்றிய வீடு. இற்பொழில்-இல்லின் பக்கத்தேயுள்ள படப்பை. என்வே இரவுக்குறியிடம் என்றாளாயிற்று. இன்று என்றது யாமெளியேமாகிய இக்கற்புக் காலத்தின்கண் என்பதுபட நின்றது.

20 - 23: முகன்.....................................செறிய

     (இ-ள்) ஐந்து முகன் மணத்த-ஐந்து முகங்கள் பொருந்திய; முழவம் துவைக்க-முழவம் என்னும் தோற்கருவி முழங்கா நிற்பவும்; ஒருகால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து-ஒரு காலைத் தூக்கிக் கூத்தினைத் தோற்றுவித்து; மூ உடல் அணைத்த மும்முகத்து ஒரோமுகத்து எண்கடிப்பு விசித்த கல்லல் செறிய மூன்று உடல் பொருந்திய மூன்று முகத்தினுள் ஒவ்வொரு முகத்தினும் எவ்வெட்டுக் கடிப்புக்களால் கட்டப்பட்ட கல்லல் என்னும் தோற்கருவி முழங்காநிற்பவும் என்க.

     (வி-ம்.) முகன்-போலி. முழவம்-ஒருவகைத் தோற்கருவி. இஃது ஐந்து முகத்தையுடையது என்பது பெற்றாம். நிலையம்-கூத்து. கடிப்பு-குறுந்தடி. கல்லல்-இது மூன்று முகமுடைய ஒருவகைத் தோற்கருவி. இம்முகங்களில் எவ்வெட்டுக் குறுந்தடிகள் வைத்து வாரால் இறுக்கப்பட்டிருக்கும் என்பது பெற்றாம்.

24 - 28: இருள்..........................துவைப்ப

     (இ-ள்) இருள் குறள் ஊன்றி-இருண்ட பூதங்கள் தம்முகத்திலே பொருத்தி; எம் அருள் களி ஆற்றி-எமக்குத் திருவருளால் மகிழ்ச்சியுண்டாகும்படி செய்து; உருள்வாய் கொக்கரை-உருண்ட முகத்தையுடைய வலம்புரிச் சங்கத்தை;உம்பர் நாட்டு ஒலிக்க-தேவர் நாடளவும் செல்லுமாறு முழக்க; கரம் கால் காட்டி தலையம் இயக்கி- கையையும் காலையும் காட்டித் தலையம் என்னும் கூற்றைத் தோற்றுவித்து; இதழ் அவிழ் தாமரை என்னும் தகுணித்தம் துவைப்ப-இதழ் விரிந்த தாமரை மலரையொத்த தகுணித்தம் என்னும் இசைக் கருவி முழங்காநிற்ப என்க.

     (வி-ம்.) குறள்-பூதம். பூதம் கொக்கரை என்னும் சங்கை வாயில் ஊன்றி ஒலிக்க என்றவாறு. கொக்கரை-வலம்புரிச் சங்கில் ஒருவகை. உம்பர் நாடு-தேவருலகம். தலையம்-ஒருவகைக் கூத்து.தகுணித்தம்-ஒருவகை இசைக்கருவி.

28 - 32: நின்று.......................ஆக்கி

     (இ-ள்) நின்று அமை கரத்து கவைகள் தோற்றி-நிலைபெற்று அமைந்த கையால் பலவகையாகக் கிளைக்கின்ற ஒலிகள் எழுப்பப்பட்டு; கரிகால் அன்ன மொந்தை கலித்து இரங்க-யானைக் காலையொத்த மொந்தைஎன்னும் இசைக்கருவி மிகவும் முழங்கா நிற்ப; துடி எறிந்து இசைப்ப-உடுக்கை எறியப்பட்டு முழங்கா நிற்பவும்; துகலம் பரப்பி-நுணுகிய ஒலிகளை எழுப்பி; வள்ளம் பிணைத்த செங்கரடிகை-மரக்கால் கட்டிய கரடிகை என்னும் இசைக்கருவி; மல்க-ஆரவாரத்தால் மிகா நிற்ப; எரி அகல் ஏந்தி-மழுவினை ஏந்தி; வெம்புயங்கம் மிசை ஆக்கி-வெவ்விய பாம்புகளை மேலே அணிந்து கொண்டு என்க.

     (வி-ம்.) கையால் முழக்கி ஒலி எழுப்பப்படும் மொந்தை என்க. இது யானைக்கால் போன்றிருக்கும் என்பது பெற்றாம். துடி-உடுக்கை. துகளம்- நுட்பவொலி. வள்ளம்-மரக்கால். கரடிகை-ஒருவகை இசைக் கருவி. இதன் ஒலி கரடி முழக்கம் போறலின் அப்பெயர் பெற்றது. எரியகல்-மழு. புயங்கம்-பாம்பு.

33 - 37: எரி..................ஒளிர

     (இ-ள்) எரிதளர்த்தன்ன வேணியில்-நெருப்புத் தளிர்த்தாலொத்த சடையில்; குழவிப் பசும்பிறை அமுதொடு நிரம்பியது என்ன-இளம்பிறை அமிழ்தத்தோடே நிரம்பியிருந்தாற்போல; மதுகுளிர் மத்தமும் மிலைத்து- தேனோடு குளிர்ந்திருக்கும் ஊமத்தம் பூவையும் அணிந்து; ஒரு மறுபிறை மார்பமும் இருத்தியது என்ன-சடையில் அணிந்த பிறையே யன்றி வேறொரு பிறையை மார்பினிடத்தும் வைத்தாற்போல; கூன் புறத்து ஏனக்கோடு-வளைந்த புறத்தினையுடைய பன்றிக்கொம்பானது; வெண் பொடிப்புறத்து ஒளிர-வெள்ளிய திருநீறு சண்ணித்த திருமேனியில் ஒளி செய்ய என்க.

     (வி-ம்.) எரிதளர்த்தல்-தீ கொழுந்து விட்டெரிதல். இது சடைக்குவமை. அமுதம் நிரம்பிய பிறை, தேன் நிரம்பிய மத்தமலருக்குவமை. மறு ஒரு பிறை எனமாறுக. முன்னரே சடையில் ஒரு பிறை அணிந்திருத்தலின் மற்றொரு பிறை என்றார். பிறை-ஈண்டுப் பன்றிக் கொம்புற் குவமை. வெண்பொடி-திருநீறு.

38 - 43: பொலன்....................................கரியே

     (இ-ள்) பொலன் மிளிர் மன்றப் பொதுவகம்-பொன் ஒளி விசுகின்ற மன்றமாகிய அம்பலத்தின்கண்; தனிக்கொடி நாடிக் காண-ஒப்பற்ற பூங்கொடி போல்பவளாகிய சிவகாமி விரும்பிக் கண்டு மகிழா நிற்ப; எவ்விடத்து உயிர் தழைப்ப ஆடிய பெருமான்- எவ்வுலகங்களிலும் வாழுகின்ற உயிரினங்கள் இன்பத்தாற் பெருகும்படி இன்பக்கூத்தாடிய கடவுள்; அமர்ந்து நிறை கூடல்-விரும்பி நிறைந்திருக்கின்ற மதுரைப்பதியை; கனவினும் வினவாதவரினும் நீங்கி-கனவிடத்தேயும் கேட்டறியாத மடவோர்போல அன்பு சிறிதுமின்றிப் பிரிந்து; சூளும் வாய்மையும் தோற்றி-பண்டு சூண்மொழியும் உண்மை மொழியும் எமக்குச் சொல்லிக்காட்டி; நீளவும் பொய்த்தற்கு - இப்பொழுது அவற்றைப் பெரிதும் பொய்யாக்கியதற்கு; அவர்மனம் கரி- அவர் நெஞ்சே சான்றாவதல்லது யான் பிறிதொரு சான்று பெற்றிலேன் என்க.

     (வி-ம்.) நீங்கி என்றது அன்பின்றி நீங்கி என்பதுபட நின்றது. வினவாதவர் போலப் பொய்த்தற்கு எனத் தொழிலுவமையாக்குக. இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் சூண்மொழியும் வாய்மையும் கூறினனாதலின் ஆங்குப் பிறர் இன்மையின் அவர் மனமே கரி என்றாள். பிறிதொரு கரி பெற்றிலேன் என்பது குறிப்பெச்சம். பொலன்-பொன். தனிக்கொடி: அன்மொழித்தொகை: சிவகாமி என்க. உயிரும் எனல் வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. அமர்ந்து-விரும்பி. கனவினும் வினவாதவர் என்றது நனவிலே கண்டறிதல் கிடக்கக் கனவினும் வினவாதவர் என்பதுபட நின்றது. சூள்- ஆணைமொழி. வாய்மை-உண்மைமொழி. நீளவும் என்றது ஈண்டு மிகவும் என்பதுபட நின்றது. கரி-சான்று. இதனை, பொழில் கிடைக்குமளவும் பன்னாள் பன்னெறி யழுங்கினர், இன்று எவ்விடத் துயிர்தழைப்ப ஆடியபெருமான் கூடல் கனவினும் வினவாதவரினும் நீங்கிச் சூளும் வாய்மையுந் தோற்றி நீளவும் பொய்த்தற்கு அவர் மனங்கரியென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.