பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 88

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வேலியங் குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம்
பெருவெள் ளிடையிற் சிறுகாற் பட்டென
நிறைநாண் வேலி நீங்கித் தமியே
யோருழி நில்லா தலமரல் கொள்ளுமென்
னருந்துணை நெஞ்சிற் குறும்பயன் கேண்மதி
10
  மண்ணுளர் வணங்குந் தன்னுடைத் தகைமையு
மிருளறு புலனுமெய்ப் பொருளுறுங் கல்வியு
மமரர்பெற் றுண்ணு மமுதுருக் கொண்டு
குறுஞ்சொற் குதட்டிய மழலைமென் கிளவியில்
விளரியுள் விளைக்குந் தளர்நடைச் சிறுவனு
15
  நின்னலம் புகழ்ந்துணு நீதியுந் தோற்றமுந்
துவரத் தீர்ந்தநங் கவர்மனத் தூரன்
பொம்மலங்கதிர்முலை புணர்வுறுங் கொல்லெனச்
சென்றுசென் றிரங்கலை யன்றியுந் தவிர்மோ
நெட்டுகிர்க் கருங்காற் றோன்முலைப் பெரும்பே
20
  யமர்பெற் றொன்னல ரறிவுறப் படரப்
பேழ்வா யிடாகினி காறொழு தேத்திக்
கையடை கொடுத்தவெண் ணிணவாய்க் குழலி
யீமம் பெருவிளக் கெடுப்ப மற்றதன்
சுடுபொடிக் காப்புட றுளங்கச் சுரிகுர
25
  லாந்தையுங் கூகையு மணிதா லுறுத்த
வொரிபாட் டெடுப்ப வுவணமுங் கொடியுஞ்
செஞ்சிவிச் சேவற் கவர்வாய்க் கழுகு
மிட்டசெம் பந்த ரிடையிடைக் காலெனப்
பட்டுலர் கள்ளியம் பாற்றுயில் கொள்ளுஞ்
30
  சுள்ளியுங் கானிடைச் சுரர்தொழு தேத்த
மரகதத் துழாயு மந்நிறக் கிளியுந்
தோகையுஞ் சூலமுந் தோளின்முன் கையின்
மருங்கிற் கரத்தினில் வாடா திருத்திப்
போர்வலி யவுணர் புகப்பெரு துடற்றிய
35
  முக்கட் பிறையெயிற் றெண்டோட் செல்வி
கண்டுளங் களிப்பக் கனைகழற் றாமரை
வானக வாவி யூடுற மலர
வொருதா ளெழுபுவி யொருவத் திண்டோள்
பத்துத் திசையு ளெட்டவை யுடைப்ப
    வொருநடங் குலவிய திருவடி யுரவோன்
கூடலம் பதியகம் பரவி
நீடநின் றெண்ணா ருளமென நீயே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழி கூற்று.

துறை: வருத்தந்தணித்தல்.

     (இ-ம்.) இதனை “பெரற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் ‘பிற’ என்பதன்கண் அமைத்துக் கொள்க.

1 - 5: வேலி..................................நெஞ்சம்

     (இ-ள்) வேலி அம் குறுஞ்சூல் விளைகாய் பஞ்சு இனம்-வேலிப்பருத்தியினது குறிய பிஞ்சு முதிர்ந்த காய் வெடித்துழி அதனுள் அடங்கிய பஞ்சுக்கூட்டங்கள்; பெரு வெள்ளிடையில் சிறுகால் பட்டென-பெரிய வெளியிடத்தே மெல்லிய தென்றற் காற்றில் அகப்பட்டாற் போல; நிறை நாண் வேலி நீங்கி- என்னுடைய நிறையும் நாணமுமாகிய பாதுகாவல் பறந்தொழியா நிற்ப; தமியே ஒருவழி நில்லாது அலமரல் கொள்ளும் என் அருந்துணை நெஞ்சம்-தனித்து ஒரு நிலையில் நில்லாமல் சுழலா நின்ற எனது பெரிய துணையாகிய நெஞ்சமானது என்க.

     (வி-ம்.) வேலி-வேலிப்பருத்தி என்னும் ஒருவகைக் கொடி. இதன் காய் முதிர்ந்து வெடிக்குங்காலதனகத்துள் பஞ்சுகள் சிறு சிறு விதைகளுடன் காற்றிற் பறந்து செல்லும் இயல்புடையது. அதனை ஈண்டுத் தன்னை விட்டு ஒழிந்து போன நிறைக்கும் நாணுக்கும் உவமையாக்கினாள் என்க. சிறுகால் என்றது தென்றற்காற்றினை. சிறுமை-ஈண்டு மென்மை முறித்து நின்றது. இதனை வடநூலார் மந்த மாருதம் என்ப. நிறை-மனம் புலன்களிற் செல்லாமல் தடுக்கும் ஆற்றல். நாண்-பெண்மைக் குணங்களில் ஒன்று. நிறை நாண் என்பவற்றில் ஈற்றில் எண்ணும்மைகள் தொக்கன. அலமரல்-சுழலுதல். நீக்கி: எச்சத்திரிபு.

5 - 10: நிற்குறும்............................................சிறுபனும்

     (இ-ள்) நிற்கு உறும் பயன்-உன்பால் பொருந்தத்தக்க பயனை; நீ கேண்மதி-நீ கேட்பாயாக; மண் உளர் வணங்கும் தன்னுடைத்தகைமையும்- மண்ணுலகத்தில் வாழும் மாந்தர்கள் வனங்கத்தகுந்த தனது பெருமையும்; இருள் அறு புலனும்-மாசற்ற அறிவுடைமையும்; மெய்ப்பொருள் உறும் கல்வியும்-உண்மைப் பொருளை எய்துதற்கேற்ற மெய்க் கல்வியும்; அமரர் பெற்று உண்ணும் அமுது உருக்கொண்டு-தேவர்கள் பெற்று உண்ணாநின்ற அமிழ்தத்தின் சுவையுடைத்தாய்; குறுஞ்சொல் குடட்டிய மழலை மெல் கிளவியில்-இளஞ்சொல்லாகிய குழறிய மென்மையாகிய வேட்கையை விளைக்கின்ற; தளர் நடைச் சிறுவனும்-தளர்ந்த நடையையுடைய மைந்தனும் என்க.

     (வி-ம்.) நிற்கு-நினக்கு. மதி: முன்னிலையசை. தகைமை- பெருந்தன்மை. இருள்-அறியாமை. மெய்ப் பொருள்-இறைப்பொருல். குறுஞ்சொல்-இளஞ்சொல். மழலை-எழுத்துருவம் பெறாத மென்சொல். விளரி-வேட்கைப் பெருக்கம் (சூ. நிக. கக. ளகரவெ. 15)

11 - 14: நின்னிலம்..................தவிர்மோ

     (இ-ள்) புகழ்ந்து நின் நலம் உணும்-புகழ்ந்து பேசி நினது இன்பத்தை நுகர்ந்த; நீதியும் தோற்றமும் மாண்பும் துவரத் தீர்த்த- மெய்ம்மையும் மாண்பும் முற்றும் துறந்த; நம் கவர் மனத்து ஊரன்- நம்முடைய இரண்டுபட்ட நெஞ்சத்தையுடைய தலைவன்; பொம்மல் அம் கதிர் முலை புணர்வுறும் கொல் என-நமது பருத்த அழகிய ஒளியுடைய முலைகளைத் தழுவுவனோ வென்று; நீ சென்று சென்று இரங்கலை-நீ அடிக்கடி வருந்தாதே கொள்; அன்றியுந் தவிர்ம்- அவன் பிரிந்து போவதன்றியும் பிரியாது தங்குவன்காண் என்க.

     (வி-ம்.) பொம்மல்-பருமை. கொல்: ஐயத்தின்கண் வந்தது. அன்றியும்-பிரிதலன்றியும், தவிர்ம்-தவிர்வன்.

15 - 21: நெட்டுகிர்....................உறுத்த

     (இ-ள்) நெடு உகிர் கருங்கால் தொல்முலை பெரும்பேய்-நெடிய நகத்தினையும் கரிய காலையும் தோலாகித் தூங்கும் முலையினையும் உடைய பெரிய பேய்கள்; அமர் பெற்று ஒன்னலர் அறிவுறப்படர-போர்க்களம் கிடைக்கப்பெற்றுப் பகைவர் அறியும்படி செல்லா நிற்பவும்; பேழ்வாய் இடாகினி தொழுது ஏத்தி-பெரிய வாயையுடைய இடாகினிப்பேய் திருவடிகளை வனங்கி வாழ்த்தி; கையடை கொடுத்த வெள் நிணம் வாய்குழவி- அடைக்கலமாகக் கொடுத்த வெள்ளிய நிணத்தை கவ்விய வாயையுடைய குழந்தை; ஈமம் பெருவிளக்கு எடுப்ப-நன் காடானது பெரிய விளக்கை ஏந்தா நிற்ப; அதன் கடு பொடி காப்பு உடல் துளங்க- அச்சுடுகாட்டின்கண் பிணஞ்சுடுதலால் உண்டாகும் சாம்பல் சூழ்டலால் உடல் வருந்தவும்; சுரிக்குரல் ஆந்தையும் கூகையும் அணி தால் உறுத்த-அப்பேய்க்குழந்தைக்குச் சுரிந்த குரலையுடைய ஆந்தையும் கோட்டானும் அழகாகத் தாலாட்டவும் என்க.

     (வி-ம்.) உகிர்-நகம். தோல் முலை-தோலாகித் தூங்கும் முலை. போர்-போர்க்களம். இடாகினி-பேய்களுள் வைத்து அடிமையாகிய பெண் பேய். ஒன்னலர்-பகைவர். குழவி என்றது பேயின் குழந்தையை. ஈமம்: ஆகுபெயர். கூகை-கோட்டான.் தாலுறுத்தல்-தாலாட்டுதல்.

22 - 26: ஓரி...........................கானிடை

     (இ-ள்) ஓரி பாட்டு எடுப்ப-முது நரிகல் ஊளையிடவும்; உவணம் கொடியும் செஞ்செவி கவர்வாய் சேவல் கழுகும்-பருந்தும் காக்கையும் சிவந்த செவியையும் பிளவாகிய வாயையுமுடைய சேவலோடே கூட்ய பென் கழுகுகளும்; இட்டசெம்பந்தர் இடை இடை கால் என-பறத்டலாலே இமைத்த செவ்விய பந்தருக்கு நடுவே நடுவே நடப்பட்ட கால்களைப்போல; பட்டு உலர் கள்ளியம்பால் துயில் கொள்ளும்-பட்டுப்போய் உலர்ந்துள்ள கள்ளியினிடத்துத் துயில் கொள்ளும்; சுள்ளிய அம்கானிடை- இலையுதிர்ந்த சுள்ளிகள் பொருந்திய பாலை நிலத்தின்கண் என்க.

     (வி-ம்.) போர்க்களம் கிடைத்தமையால் இடாகினிப் பேய் காளியை வாழ்த்தி அடைக்கலமாகக் கொடுத்துப் போன பேய்க்குழந்தை ஆந்தையும் கூகையும் தாலாட்டவும் முதுநரி பாடவும் பருந்து முதலியன இட்ட பந்தலின்கீழ் அதன் கால்கல் போலத் தோன்றும் கள்ளியினிடத்தே உறங்கும் என்றவாறு. ஓரி-கிழநரி. உவணம்-பருந்து. கொடி-காக்கை. சேவலும் கழுகும் என்றதனால் சேவற்கழுகும் பெண்கழுகும் என்க. பருந்து முதலியன நெருங்கிப் பறத்தலால் பந்தர்பொலத் தோன்றுதலின் அவையிட்ட பந்தர் என்றார். சுள்ளி-இலையுதிர்ந்து வற்றிய மரக்கொம்பு.

26 - 32: சுரர்........................களிப்ப

     (இ-ள்) சுரர் தொழுது ஏத்த-தேவர்கள் வாங்கி வாழ்த்தாநிற்பவும்; மரகதத் துழாயும் அந்நிறக் கிளியும் தோகையும் ச்லமும்-மரகதமணி போன்ற நிறமுடைய துளப மலையையும் அப்பச்சைநிறக் கிளியையும் மயிலிஅகுகளையும் சூலப்படையையும் முறையே; தோளில் முன்கையில் மருங்கில் கரத்தினில் வாடாது இருத்தி-தோளினிடத்தும் முன்கையிலும் இடையிலும் கையிலும் நீங்காமலிருத்தி; போர்வலி அவுணர் புக-போராற்றுதலில் வலிமைமிக்க அரக்கர்கள் எதிர்ந்த போது; பொருது உடற்றிய- போர் செய்து அழித்த; முக்கண் பிறை எயிறு எண் தோள் செல்வி-மூன்று கண்களையும் பிறை போன்றுவளைந்த பற்கலையும் எட்டுத்தோள்களையுமுடைய செல்வியாகிய காளியம்மை; கண்டு உளம் களிப்ப-நோக்கி நெஞ்சம் மகிழும்படி என்க.

     (வி-ம்.) சுரர்-தேவர். மரகதம்-ஒருவகை மணி. இது துழாய்க்கும் கிளிக்கும் நிறம்பற்றி வண்ட உவமை. அந் நிறம்-அப் பச்சை நிறம். துழாயைத் தோளிலும் கிளியை முன்கையிலும் தோகையை மருங்கிலும் சூலத்தைக் கையிலும் இருத்தி என்றவாறு. இது முறை நிரனிறை. அவுணர்-அரக்கர். செல்வி-காளி.

32 - 35: கனை..............................உடைப்ப

     (இ-ள்) கனைகழல் தாமரை வானகம் வாவியூடு உறமலர-தனது மறைச்சிலம்பொலிக்கின்ற திருவடியாகிய ஒரு தாமரைப் பூ வானத்திலுள்ள கங்கையினிடத்தே பொருந்தி மலரா நிற்பவும்; ஒரு தாள் எழுபுவி ஒருவ-ஒரு திருவடியானது கீழேழுலகங்கலையும் கடந்து அப்பாற் செல்லவும்; திண்தோள் பத்துத்திசையுள்-திண்ணிய தோள்கள் பத்துத்திசைகளுள் வைத்து; எட்டவை உடைப்ப-எட்டுத்திசைகளையும் ஊடுருவிச் செல்லா நிற்பவும் என்க.

     (வி-ம்.) கனைகழல்; வினைத்தொகை. தாமரை: ஆகுபெயர். வாவி-கங்கை. எழுபுவி-கீழேழுலகங்கள். பத்துத்திசை-கிழக்குத்திசை முதலிய எட்டும் மேலும் கீழும் என்க. எட்டவை-எட்டாகிய அவை. அவை-அத்திசைகள். உடைத்தல்-ஊடுருவிப்போதல்.

36 - 38: ஒருநடம்......................உளமென

     (இ-ள்) ஒருநடம் குலாவிய-ஒப்பில்லாத இன்பக் கூத்தாடியருளிய; திருவடி உரவோன்-திருவடியையுடைய வாலறிவனுடைய; கூடலம் பதியகம் பரவி-நான்மாடக் கூடலாகிய மதுரையைப் போற்றி; நீடு நின்று எண்ணார் உளம் என-ஒழியாமல் நிலைபெற்று நினையாத மடவொருடைய நெஞ்சத்தைப்போல என்க.

     (வி-ம்.) ஒருநடம்-ஒப்பில்லாத கூத்து. உரவோன்-அறிஞன்: ஆற்றலுடையோன் எனினுமாம் திருவடி உரவோன் கூடலம் பதியகம் எண்ணார் உளம் இரங்குதல் போல இரங்கலை என இயையும். இதனை, திருவடி உரவோன் கூடல் பரவி யெண்ணாருளமென நீயே நெஞ்சிற் குறும்பயன் கேள். கவர்மனத்தூரன் கதிர் முலை புணருங் கொல்லென இரங்கலை. அன்றியுந் தவிர்வன் என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.