பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 100

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வளைந்துநின் றுடற்று மலிகுளிர்க் குடைந்து
முகிற்றுகின் மூடி மணிநெருப் பணைத்துப்
புனமெரி காரகிற் புகைபல கொள்ளும்
குளவின்வீற் றிருந்த வளர்புகழ்க் குன்றமும்
புதவுதொட் டெனத்தன் புயன்முதிர் கரத்தனை
10
  வரன்முறை செய்த கூன்மதிக் கோவும்
தெய்வ மறைந்த செந்தமிழ்ப் பாடலும்
ஐந்தினிற் பங்குசெய் தின்புவளர் குடியுந்
தவலருஞ் சிறப்பொடு சால்புசெய் தமைந்த
முதுநகர்க் கூடலுண் மூவாத் தனிமுத
15
  லேழிசை முதலி லாயிரங் கிளைத்த
கானங் காட்டும் புள்ளடித் துணையினர்
பட்டடை யெடுத்துப் பாலையிற் கொளுவிக்
கிளையிற் காட்டி யைம்முறை கிளத்திக்
குரலும் பாணியு நெய்தலிற் குமட்டி
20
  விளரி யெடுத்து மத்திமை விலக்கி
யொற்றைத் தாரி ஒருநரம் பிரட்ட
விழுந்து மெழுந்துஞ் செவ்வழி சேர்த்திக்
குருகுவிண் ணிசைக்கு மந்தரக் குலிதம்
புறப்படு பொதுவுடன் முல்லையி கூட்டி
25
  விரிந்தவுங் குவிந்தவும் விளரியில் வைத்துத்
தூங்கலு மசைத்தலுந் துள்ளலு மொலித்தலு
மாங்கவை நான்கு மணியுழை யாக்கிப்
பூரகங் கும்பகம் புடையெழு விளரி
துத்தந் தாரங் கைக்கிளை யதனுக்
30
  கொன்றினுக் கேழு நின்றுநனி விரித்துத்
தனிமுக மலர்ந்து தம்மிசை பாடக்
கூளியுந் துள்ள வாடிய நாயக
னிணையடி யேத்து மன்பினர்க் குதவுந்
திருவறம் வந்த வொருவன் றுதுக
35
  ளின்பமு மியற்கையு மிகழாக் காமமு
மன்புஞ் சூளு மளியுறத் தந்தென்
னெஞ்சமுந் துயிலு நினைவு முள்ளமு
நாணமுங் கொண்ட நடுவின ரின்னுங்
கொள்வது முளதோ கொடுப்பது முளதோ
    செய்குறி யினிய வாயிற்
கவ்வையிற் கூறுவிர் மறைகள்விட் டெமக்கே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று

துறை: தூதுகண்டழுங்கல்

     (இ-ம்.) இதனை “அவனறிவு ஆற்ற அறியு மாகலின்” எனவரும் நூற்பாவின்கண் வரும் ‘ஆவயின் வரூஉம் பல்வேறு வகை’ என்பதனாலமைத்துக் கொள்க.

1 - 4: வளைந்து........................குன்றமும்

     (இ-ள்) வளைந்து நின்று உடற்றும் மலி குளிர்க்கு உடைந்து-தன்னைச் சூழ்ந்து இடையறாது நிலைபெற்று வருத்தாநின்ற மிக்க குளிருக்கு ஆற்றாமல் வருந்தி; முகில் துகில் மூடி-முகிலாகிய போர்வையைப் போர்த்துக் கொண்டு; மணி நெருப்பு அணைத்து-தன்பாலுள்ள மணிகளாகிய நெருப்பினை அணைத்து மேலும்; புனம் எரி கார் அகில்புகை பல கொள்ளும்-குன்றவர்தம் தினைப்புனத்திலே தீக் கொளுவிச் சுடாநின்ற கரிய அகிற் புகைகளையும பலகாலும் கொள்ளா நின்ற; குளவன் வீற்றிருந்த-முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள; புகழ் வளர் குன்றமும்-புகழ் ஓங்குதற்குக் காரணமான திருப்பரங்குன்றமும் என்க.

     (வி-ம்.) பனிபடுபருவம் வளைந்து நின்றுடற்றுதலால் உண்டாகின்ற மலிகுளிர் என்றவாறு. மலிகுளிர்: வினைத்தொகை. முகிலாகிய துகில் என்க. துகில்-ஈண்டுப் போர்வை; மணியாகிய நெருப்பு என்க. அவை ஒளியுடையனவாதலின் நெருப்பாக உருவகிக்கப்பட்டன. புனம்-தினைப்புனம்; காடுமாம். காரகில்-கரிய அகின்மரம். பல என்றது காலப்பன்மை மேற்று. குளவன்-முருகப் பெருமான். குளிர்க்குடைந்து, மூடி அணைத்து, புகைகொள்ளும் குன்றம் எனவும், குளவன் வீற்றிருந்த குன்றம் எனவும், புய்கழ்வளர் குன்றம் எனவும் தனித்தனி கூட்டுக. குன்றம்-திருப்பரங்குன்றம்.

5 - 9: புதவு...................அமைந்த

     (இ-ள்) புதவு தொட்டு என-ஒருநாள் கீரந்தை என்பானுடைய வீட்டுக் கதவினை அவன் இல்லாத பொழுது தட்டிய குற்றத்திற்காக; தன்புயல் முதிர் கரத்தினை-தன்னுடைய முகில் போன்று கைம்மாறு வேண்டாத வள்ளண்மையின் மிக்க கையினை; வரன் முறை செய்து-வாள் கொண்டு துணித்துக் கோன்முறை செய்தருளிய; கூன்மதிக் கோவும்-வளைந்த திங்கள் மரபிற்றோன்றிய பொற்கைப் பாண்டியனும்; தெய்வம் அறைந்த தீந்தமிழ்ப்பாடலும்-சோமசுந்தரக் கடவுளாற் கூறப்பட்ட வளமான தமிழ்ச் செய்யுளும்; ஐந்தினில் பங்கு செய்து இன்புவளர் குடியும்-தாம் அறநெறிநின் றீட்டிய பொருளைத் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்னும் ஐந்து வகையானும் கூறு செய்து இல்லறமோம்பி அவ்வறத்தான் வரும் இன்பத்தை வளர்க்கின்ற நல்ல குடிமக்களும்; தவல் அரும் சிறப்பொடு சால்பு செய்து அமைந்த-கெடுதலில்லாத சிறப்போடே இருந்து பெருமை செய்து பொருந்துதற்கிடனான; என்க.

     (வி-ம்.) புதவு-கதவு. தொட்டென-தொட்டதன் பொருட்டு. மதுரையில் ஒருகாலத்தே கீரந்தை என்னும் மறையவன் தீர்த்த யாத்திரை செல்பவன் தன் மனைவி தனித்திருக்க அஞ்சுவாளை நோக்கி “அஞ்சேல், நம்மன்னன் செங்கோல் நின்னைப் பாதுகாக்கும்” என்று தேற்றிச் சென்றானாக; அவன் கூற்றை ஒற்றியுணர்ந்த அரசன் அவன் வருந்துணையும் யாருமறியாமல் இரவில் அவன் வீட்டை மாறுவேடத்தோடே காத்து வந்தனன.் யாத்திரை சென்ற பார்ப்பனன் ஒருநாள் மீண்டு வந்தமை யுணராத அரசன் அற்றைநாளும் இரவில் அவ்வீட்டைப் புறநின்று காவல் செய்துழி, வீட்டிற்குள் ஆளரவம் கேட்டு ஐயுற்று கதவினைத் தட்டினன.் தட்டலும் கீரந்தை, யார்? என வினவ, அரசன் அந்தோ! அவன் மனைவியை ஐயுறும்படி செய்தொழிந்தேனே! என் றவலமுற்று அவன் ஐயுறாமைப் பொருட்டு அச்சேரியிலுள்ள பார்ப்பனர் வீடுதோறும் கதவினைத் தட்டிச் சென்றனன். மறுநாள் கீரந்தை யுள்ளிட்ட பார்ப்பனரெல்லாம் அரசனை அணுகி முறைவேண்டினர். அது கேட்ட அரசன் அக்குற்றம் செய்தது என்னுடைய கையே என்று கூறி அக் கையினைத் தன்வாளாற் றுணித்தெறிந்தான் என்பது வரலாறு. அத்தகைய நீதிவழுவா மன்னர் உறைந்தமையாலே மதுரைநகர் பெருமையுடையதாயிற்று என்பது கருத்து. இவ்வரலாற்றினை,

உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
அரைச வேலி யல்ல தியாவதும்
புரைதீர் வேலி யில்லென மொழிந்து
மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி
இன்றவ் வேலி காவா தோவெனச்
செவிசூட் டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சஞ் சுடுதலி னஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை யமரர் கோமான்
உச்சிப் பொன்முடி யொளிவளை யுடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்
திறைக்குடிப் பிறந்தோர்க்கு”           (23: 42 - 53.)

எனவரும் சிலப்பதிகாரத்தாமுணர்க.

     மதிக்கோ-திங்கள் மரபிற் றோன்றிய அரசன்; பொர்கைப் பாண்டியன். தெய்வம்-சோமசுந்தரக் கடவுள். தமிழ்ப்பாடல் என்றது “கொங்குதேர் வாழ்க்கை” முதலியவற்றை. ஐந்து: “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்” என்னும் ஐந்துநெறி. தவல்-கெடுதல். சால்பு-பெருமை. குன்றமும் கோவும் பாடலும் இருந்து சால்பு செய்து அமைந்த (கூடல்) என்க. கல்.-45

10: முதுநகர்................................தனிமுதல்

     (இ-ள்) முதுநகர்க் கூடல்-பழைய நகரமாகிய மதுரையின்கண்; மூவாத் தனிமுதல்-மூவாமையையுடைய ஒப்பற்ற முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானும், என்க.

     (வி-ம்.) மூவாமையையுடைய முதல், தனிமுதல் எனத் தனித்தனி கூட்டுக.

11 - 12: ஏழிசை.....................துணையினர்

     (இ-ள்) ஏழ்இசை முதலில் ஆயிரம் கிளைத்த-குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் இந்த ஏழிசைகளாகிய வேரிலிருந்து எண்ணிறந்த பண்கள் கிளைத்தெழுதற்குக் காரணமான; கானம் காட்டும் புள் அடித் துணையினர்- இசைத்தமிழை உலகிற்குணர்த்திய பறவையின் அடிபோன்ற அடிகளையுடைய இரட்டையராகிய தும்புருவும் நாரதரும் என்க.

     (வி-ம்.) ஆயிரம் என்றது மிகுதிக்கொரு எண் காட்டியபடியாம்; எண்ணிறந்த என்பது கருத்து. ஆயிரம்-எண்ணால் வரு பெயர்; ஆயிரம் பண்கள் என்க. கானம்-இசை. தும்புரு நாரதர் என்று எப்பொழுதும் இணைத்தே கூறப்படுதலின் துணையினர் என்றார். இனி அடித்துணையினர் என்றலுமொன்று.

13: பட்டடை........................கொளுவி

     (இ-ள்) பட்டடை எடுத்து-இளி என்னும் இசையைக் குரலாகக் கொண்டு தொடங்கி; பாலையில் கொளுவி-கோடிப்பாலை முதலிய ஏழு பாலைப்பண்களையும் யாழிலே தோற்றுவித்து என்க.

     (வி-ம்.) “பட்டடை என்பது நரம்புகளில் இளிக்குப்பெயர். என்னை? எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின்” என்பது அடியார்க்கு நல்லார் உரைவிளக்கம் (சிலப். 3: 63.)

     இளிமுறையாக ஏழுபாலையினையும் யாழிற் கொளுவி என்க. இனி அவை பிறக்குமாறு:- இளி குரலாயது கோடிப்பாலை; விளரி குரலாயது விளரிப்பாலை; தாரம் குரலாயது மேற் செம்பாலை; குரல் குரலாயது செம்பாலை; துத்தம் குரலாயது படுமலைப்பாலை; கைக்கிளை குரலாயது செவ்வழிப்பாலை; உழை குரலாயது அரும்பாலை என இங்ஙனம் வலமுறையே கூறிக் காண்க.

14: கிளையில்.....................கிளத்தி

     (இ-ள்) கிளையிற் காட்டி-குரல் இளி துத்தம் விளரி கைக்கிளை என்னும் கிளை நரம்புகள் ஐந்தினையும் தனிதனியே இறுவாயாகக் காட்டி; ஐம்முறை கிளத்தி-தனித்தனியே ஐந்து முறையாக இசைத்தும்; (அவற்றிற் றொன்றும் பண்களையும் பாடி) என்க.

     (வி-ம்.) ஐந்தாம் நரம்பு கிளை நரம்பு என்று கூறப்படும்; என்னை? ஏழா நரம்பு இணைநாலுட் பாகும், ஐந்துகிளை ஆறும் மூன்றும் பகையே” என இவ்வாசிரியரே கூறுதலும் காண்க. இன்னும் “கிளைஎனப் படுவ கிளைக்குங் காலை, குரலே இளியே துத்தம் விளரி கைக்கிளை எனவைந் தாகும்” இவை ஐந்தாகவே ஐம்முறை கிளைத்தல் வேண்டிற்று. இவை இவை கிளக்குங்காலை பலவேறு பண்கள் தோன்றும். எனவே, கிளையிகாட்டி ஐம்முறை கிளத்திப் பல்வேறு பண்களையும் தோற்றுவித்து என்பது கருத்தாயிற்று. அவையிற்றை இசைநூலுட் காண்க.

15: குரலும்............குமட்டி

     (இ-ள்) குரலும் பாணியும்-குரல் என்னும் இசையையும் அதற்குரிய தாளத்தையும் நெய்தலில்; குமட்டி-நெய்தற் பண்ணிலே சேர்த்தும், என்க.

     (வி-ம்.) குரல்-முதனின்ற இசை. பாணி-தாளம்; நெய்தல். ஒருவகைப் பண். குமட்டுதல்-சேர்த்துதல்.

16 - 18: விளரி............................சேர்த்தி

     (இ-ள்) விளரி எடுத்து மத்திமை விலக்கி-விளரி குரலாகத் தொடங்கிப் பகை நரம்பாகிய உழையை விடுத்துத் தாரம் பெற்ற இரண்டலகில் ஒன்றை விளரியொடு கூட்டி; ஒற்றைத் தாரி ஒரு நரம்பு இரட்ட-(அத் தாரங்கொண்ட இரண்டலகில்) விளரிக் கீந்த ஓரலகு ஒழிய எஞ்சி நின்ற ஒற்றையாகிய தாரபாகம் குரலோடிணைந்து துத்தமாக ஒலியாநிற்ப; எழுந்தும் விழுந்தும் செவ்வழி சேர்த்தி-ஆரோசையாகவும் அமரோசையாகவும் இசைத்துச் செவ்வழி என்னும் பண்ணாக்கி, என்க.

     (வி-ம்.) விளரிப்பாலையில் செவ்வழிப்பண் பிறத்தலால் விளரி எடுத்து.............. செவ்வழி சேர்த்தி என்றார். இதனை “கானல் வரிப் பாடலினுள்ளே” நுளையர் விளரி நொடிதரு தீம்பாலை இளிகிளையிற் கொள்ள ‘இறுத்தாயன் மாலை’ என்னுமிடத்து இளங்கோவடிகள் குறித்தது விளரிப்பாலையிலுதித்த செவ்வழிப் பண்ணினை” எனவும், விளரிப் பாலையிலுதித்த செவ்வழிப் பண் என்றும், விபுலாநந்தவடிகளார் தம் யாழ் நூலிலே (பண்ணியல் பக்கம் 174, 77) கூறுதலானும் உணர்க. எழுந்தும் விழுந்தும் என மாறுக. எழுதல் ஆரோசையாக்குதல்; விழுதல் அமரோசையாக்குதல் என்க.

19 - 20: குருகு......................கூட்டி

     (இ-ள்) குருகு விண் இசைக்கும் மந்தரப் புலிதம்-பறவை விண்ணில் இசைத்தாற் போன்றிசைக்கும் நாலலகு கொண்ட உழை என்னும் இசையோடு; புறப்படு பொதுவுடன்-வெலிப்படாநின்ற பொதுவாகிய இசைகளோடே; முல்லையில் கூட்டி-முல்லைப்பண்ணை இசைத்தும் என்க.

     (வி-ம்.) குருகு-கொக்கு. உழையின் இசை குயிலின் இசை போறலின் ‘குருகு விண்ணிசைக்கும் மந்தரப்புலிதம்’ என்றார். புலிதம் நான்கு மாத்திரை அளவிற்றாய காலம். ஈண்டு உழைக்கு நான்கு மாத்திரை கூறுதலாலே, புலவர் பெருமான் ந. மு. வெங்கடசாமி நாட்டாரவர்கள் “இனித் தமிழிலே குரல் முதலாகவும் வடமொழியிலே சட்சம் முதலாகவும் ஏழு சுரங்களும் கூறப்படுதலின், குரலும் சட்சமும் ஒன்றெனவும் துத்தமும் ரிஷபமும் ஒன்றெனவும் இவ்வாறே ஏனையவும் முறையே ஒவ்வொன்றும் எனவும் கருதுதல் கூடும். ஆயின் இவற்றிற்குக் கூறப்படும் அலகும் ஒலியும் பிறப்பிடமும்வேறுபடுதலின்.............குரல் என்பதனைச் சட்சம் என்று கொள்ளாது மத்திமம் எனக் கொள்ளின் இரண்டிலும் சுருதி அளவுகள் ஒத்துவிடுகின்றன” என விளக்கும் ஆராய்ச்சியுரைக்கு ஈண்டு மந்தரப்புலிதம் என்பது ஆக்கமாதல் உணர்க. குலிதம் என்றும் பாடவேற்றுமையுளது.

     பொது-பொதுவாகிய இசைகள் அவையாவன;- ஆறும் மூன்றும் அல்லாதனவாகிய இசைகள்-விளரியும் துத்தமும் அல்லாதன என்க.

21 - 23: விரிந்தவும்...................ஆக்கி

     (இ-ள்) விளரியில் விரிந்தவும் குவிந்தவும் வைத்து-விளரியின்கண் ஆரோசைகளையும் அமரோசைகளையும் இணைத்து, தூங்கலும் அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும் ஆங்கு அவை நான்கும் அணி உழை ஆக்கி-தூங்கல் அசைத்தல், துள்ளல், ஒலித்தல் என்னும் இசைக்கரணங்கள் நான்கையும் அழகிய உழை இசையினின்றியற்றி என்க.

     (வி-ம்.) விளரியினின்று ஆரோசையும் அமரோசையும் பாடிப் பின்னர் மத்திமையாகிய உழையிடத்தே நின்று தூங்கல் முதலிய நால்வகை இசைகரணங்களையும் செய்து என்றவாறு.

     விரிந்த-ஆரோசைகள். குவிந்த-அமரோசைகள்.

     அணி உழை-கேள்விக்கினிய மந்தர விசை.

24 - 26: பூரகம்..............விரித்து

     (இ-ள்) பூரகம் கும்பகம் புடை எழு விளரி-இசையினைப் பூரித்தற்கும் கும்பித்தற்கும் இடனான அவ்வுழையினோடே அதன் அயலே எழாநின்ற விளரியும், துத்தம் தாரம் கைக்கிளை யதனுக்கு-துத்தமும் தாரமும் கைக்கிளையுமாகிய இவ்வைந்தனுக்கும் நிரலே, ஒன்றினுக்கு ஏழு நனிநின்று விரித்து-ஒவ்வொன்றற்கும் எழு ஏழு இசைகளாக, அஃதாவது:- உழை குரலாகச் செம்பாலைக்கு உழைபெய்தும், விளரி குரலாக விளரிப்பாலைக்கு விளரி பெய்தும், துத்தம் குரலாகச் செவ்வழிக்குத் துத்தம் பெய்தும், தாரம் குரலாகக் கோடிப்பாலைக்குத் தாரம் பெய்தும், கைக்கிளை குரலாகப் படுமலைப் பலைக்குக் கைக்கிளை பெய்தும் அவ்வவ்விசைகளின்கண் பெரிதும் உறைத்து நின்று நூன்முறையானே விரித்து என்க.

27 - 30: தனிமுகம்......................தூதுகள்

     (இ-ள்) தனிமுகம் மலர்ந்து தம் இசை பாட-ஒப்பற்ற தம்முடைய முகம் இன்பத்தாலே மலராநிற்பத் தமக்கே சிறப்புரிமையுடைய இசைகளைப் பாடாநிற்பவும்; கூளியும் துள்ள-பேய்கள் தாமும் மகிழ்ந்து கூத்தாடாநிற்பவும், ஆடிய நாயகன்-திருக்கூத்தாடியருளியவனும் ஆகிய இறைவனுடைய; இணை அடி ஏத்தும் அன்பினர்க்கு உதவும்-இரண்டாகிய திருவடிகளைப் பாடிப் பரவும் மெய்யடியார்க்கு வேண்டுவனவெல்லாம் குறிப்பறிந்து வழங்குகின்ற; திரு அறம் வந்த ஒருவன்-அழகிய கடவுளறம் கைவந்த ஒப்பற்றவனாகிய எம்பெருமான் விடுத்த; தூதுஅள்-தூதர்களே! என்க.

     (வி-ம்.) ஞான ஒளி மெய்ப்பாடாகத் தோன்றுதலுண்மையின் அம்முனிவர் முகத்தைத் தனிமுகம் என்றார். தும்புருகானம், நாரதகானம் என இசையை அவர்க்குரிமைப்படுத்தோதுதலுண்மையின் தம்மிசை என்று கிழமைப் பொருள் தோன்றக் கூறினர்.

     கூளி-பேய். துள்ளுதல்-கூத்தாடுதல். இணையடி யேத்தும் அன்பினர் என்றது இறைபணிநின்ற மெய்யடியாரை. அவர்க்குச் செய்யுந் தானம் நனி சிறந்தமையின் அதனைத் திருவறம் என்று சிரப்பித்தார். இதனை,

“சிவஞானச் செயலுடையோர் கையில் தானம்
     திலமளவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து
பவமாய்க் கடலினழுந் தாதவகை யெடுத்துப்
     பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை யறுக்கத்
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
     சரியைகிரி யாயோகந் தன்னிலுஞ் சாராமே
நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
     நாதனடிக் கமலங்கள் நணுகுவிக்குந் தானே”
                                  (சூத். 8. செய்-26)

எனவரும் சிவஞான சித்தியாரானும் உணர்க.

     வருதல்-கைவருதல். அஃதாவது, பயின்றடிபட்டு இயற்கையாகி விடுதல். தூதர் பலராகலின்-தூதுகளே! என்று பன்மையில் விளித்தாள்.

     தூதுகல்: அண்மை விளி.

31 - 34: இன்பமும்...................நடுவினர்

     (இ-ள்) இன்பமும் இயற்கையும் இகழாக் காமமும் அன்பும் சூளும் அளியுறத் தந்து-பேரின்பத்தையும் எனக்கியல்பாகிய சிறப்புக்களையும் ஒருகாலத்தும் இகழ்தற்கியலாத காமத்தையும் அதற்குக் காரணமான தமது அன்பினையும், யான் ஐயுற்று வருந்தாதபடி நின்னைப் பிரியேன் என்னும் தேற்றுரை கூறிப் பிரியேன் இன்னன் ஆவேன் என்னும் சூள் மொழொயையும் அருளோடே எனக்கு வழங்கி இவற்றிற்குப் பண்டமாற்றாக; என் நெஞ்சமும் துயிலும் நினைவும் உள்ளமும் நாணமும்கொண்ட-என் நெஞ்சத்தையும் துயிலையும் நினைவுகளையும் உள்ளத்தையும் கைக்கொண்டு சென்ற நடுவுநிலையினை உடையவர்; என்க.

     (வி-ம்.) இயற்கை என்றது, குலமகளாகிய என்னியல்பினை என்றவாறு. எனவே பண்டு என்னியல்பிற்கேற்ப ஒழுகினன் என்றாளாயிற்று. சூள்-வஞ்சின மொழி. மனம் சித்தம் புத்தி அகங்காரம் என மனந்தானே செயல்வகையாற் பலவாதல்பற்றி நெஞ்சும் நினைவும் உள்ளமும் கொண்டான் என்றாள். நடுவினர் என்றது இகழ்ச்சி. கொண்ட, என்றது அவற்றிகுப் பண்டமாற்றாகக் கைக்கொண்ட என்பதுபட நின்றது.

34 - 37: இன்னும்.............எமக்கே

     (இ-ள்) இன்னும் கொள்வதும் உளதோ-என்பால் இன்னும் கைக்கொள்வதற்குரிய பொருளும் உளதோ?; கொடுப்பதும் உளதோ-அன்றி அவர்தாம் எனக்கு வழங்குதற்குரிய பொருள் ஏதேனும் அவர்பால் உளதோ? யான் அறிகின்றிலேன்; செய்குறி இனிய ஆயின்-அவர் நும்பாற் கூறி விடுத்த குறிப்புமொழிகள் தாம் என் துயர்போக்கி எனக்கு இனியனவாயிருக்குமாயின்; மறைகள்விட்டு எமக்குக் கவ்வையில் கூறுவிர்-அவற்றை நீயிர் மறைத்துக் கூறாமல் எமக்கு வெளிப்படையாகவே கூறுவீராக! என்பதாம்.

     (வி-ம்.) ஒரோவழி அவர் நும்மை எம்பால் தூடு விட்டதற்குக் காரணம் இன்னும் எம்பால் நலம் ஏதேனுமிருப்பின் அதனையும் கைக்கொண்டு வருதற்கோ? என்பாள் இன்னும் கொள்வது முளதோ என்றாள். கொடுப்பது-அவர் வரவுரைத்தல். குறி-குறிப்பு மொழி. இனியவாதல்-துயர்போக்கி நலந்தருதல். அஃதாவது அவர் வரவுரைக்கும் மொழிகள் என்க. கவ்வை என்பது ஈண்டு வெளிப்படக் கூறுட்க்ஹல் என்னும் பொருள்பட நின்றது.

     இனி இதனை, “ஒருவன் தூதர்களே எமக்கு இன்ப முதலியவற்றைத் தந்து நெஞ்சமுதலியவற்றைக் கைக்கொண்டு சென்ற தீஓர் இன்னும் எம்பால் கொள்வதும் அன்றி எமக்குக் கொடுப்பதும் உளதோ அவர் நும்பாற் செய்குறி இனியவாயின் மறைகள் விட்டு எமக்கு வெளிப்படக் கூறுவீராக!; என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.