|
|
செய்யுள்
9
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
தன்னுழைப்
பலவுயிர் தனித்தனி படைத்துப்
பரப்பிக் காட்டலிற் பதும னாகியு
மவ்வுயி ரெவ்வுயி ரனைத்துங் காத்தலிற்
செவ்விகொள் கருமுகிற் செல்வ னாகியுங்
கட்டிய கரைவரம் புட்புக வழித்து |
10
|
|
நீர்தலை
தரித்தலி னிமல னாகியுந்
தருவு மணியுஞ் சங்கமுங் கிடைத்திலி
னரிமுதி ரமரர்க் கரச னாகியு
மூன்றழ னான்மறை முனிவர் தோய்ந்து
மரைநீ ருகுத்தலின் மரையோ னாகியு |
|
|
மீனுங்
கொடியும் விரிதிணை யைந்துந்
தேனுறை தமிழுந் திருவுறை கூடலி
மணத்தலின் மதிக்குல மன்னவ னாகியு
நவமணி
யெடுத்து நற்புலங் காட்டலின் |
15
|
|
வளர்குறி
மயங்கா வணிக னாகியும்
விழைதரு முழவும் வித்து நாறுந்
தழைதலின் வேளாண் டவலை னாகியும்
விரிதிரை வையைத் திருநதி சூழ்ந்த
மதுரையம் பதிநிறை மைம்மலர்க் களத்த |
20
|
|
னிணையடி
வழுத்தா ரணைதொழி லென்னக்
கைதையெங் கரைசெய் பொய்தற் பாவையோ
டிருந்திரை யெடுக்கப் பொருதிரை யெடுத்தும்
பூழிப் போனகம் புதுவுட ணுண்டுஞ்
சாய்தாட் பிள்ளை தந்து கொடுத்து |
25
|
|
முடவுடற்
கைதை மடன்முறித் திட்டும்
கவைதுகிர்ப் பாவை கண்ணி சூட்ட
குவலயத் திருமலர் கொணர்ந்து கொடுத்து
நின்றா னுண்டொரு காளை
யென்றா லித்தொழில் செய்வது புகழே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவி கூற்று.
துறை: அரத்தொடுநிற்றல்
(இ-ள்) இதற்கு வரைவிடை
வைத்த எனவரும் (தொல். கல. 21) நூற்பாவின்காண் உரையெனத் தோழிக்குரைத்தற்கண்ணும்
தானே கூறுங் காலமுளவே என்னும் விதிகொள்க.
1-2:
தன்னுழை................................ஆகியும்
(இ-ள்) தன் உழை
பலஉயிர் தனித்தனி படைத்து-தன்னிடத்தே பலவேறு உயிர்னங்களையும் தனித்தனியே படைத்து;
பரப்பிக்காட்டலில் பதுமன் ஆகியும்-தன் பரப்பெல்லாம் பரவச்செய்து காட்டுதலால்
படைப்புக்கடவுளாகிய மலரோனை ஒத்தும் என்க.
(வி-ம்.)
இதுமுதல் 18 ஆம் அடிவரையில் வையை நதியின் வருணனை. அந்நதி தனக்குள்ளே மீன்முதலிய
நீர்வாழ்வனவாகிய உயிர்களைப் படைத்து யாண்டும் பரப்புதலால் மலரோனை ஒத்துளது என்க.
பதுமன்-தாமரைமலரில் உறையும் பிரமன், இனி உலகிலுள்ள ஏனைய உயிர்களையும் நீரே உண்டாக்குதலின்
பதுமனாகியும் என்னும் உவமை நன்கு பொருந்துதல் உணர்க.
3-4:
அவ்வுயிர்........................................செல்வனாகியும்
(இ-ள்) அவ்வுயிர்
எவ்வுயிர் அனைத்தும் காத்தலின்-தன்னுட் டோன்றிய நீர்வாழ்வனவாகிய அவ்வுயிர்களோடு
நிலப்பகுதியில் தோன்றிய ஓரறிவுயிர் முதல் எல்லா உயிர்களையும் உணவு முதலியவற்றால்
பாதுகாத்தலாலே: செவ்விகொள் கருமுகில் செல்வனாகியும்-அம்மலரோன் படைக்கும் உயிர்களனைத்தையும்
பாதுகாக்கும் கார்ப் பருவத்துக் கரிய முகிலை ஒத்த செல்வனாகிய திருமாலை ஒத்தும் என்க.
(வி-ம்.) அவ்வுயிர்
என்றது நீர்வாழ்வனவற்றை. எவ்வுயிர் என்றது ஏனைய உயிர்களை. அவை ஓரறிவுயிர் முதலியன.
அவ்வுயிரும் ஏனைய எவ்வுயிரும் ஆகிய அனைத்தும் என்க. கருமுகிற் செல்வன்-திருமால்.
செவ்வி-பருவம்.
5-6:
கட்டிய....................................ஆகியும்
(இ-ள்) கட்டிய கரை
வரம்பு உட்புக அழித்து-தான் வரம் பிகந்து ஓடாமல் கட்டப்பட்ட கரையாகிய எல்லை தன்னுள்
மூழ்கி விடும்படி அழித்து; நீர் தலைதரித்தலின் நிமலன் ஆகியும் நீரைத் தலையின்மேற்
சுமத்தலால் மலரோனும் திருமாலும் படைப்பும் காப்பும் என வைத்த கரையின் எல்லை தன்னுள்ளே
ஒடுங்கும்படி அழித்துக் கங்கையைத் தலையிற் சுமந்த சிவபெருமானை ஒத்தும் என்க.
(வி-ம்.) வரம்பு-கரை.
நீர் என்புழி வையைக்கு நீரும் சிவபெருமானுக்குக் கங்கை நீரும் என்க. நிமலன்-அழுக்கற்றவன்;
என்றது சிவபெருமானை.
7-8:
தருவும்.........................................ஆகியும்
(இ-ள்) தருவும் மணியும்
சங்கமும் கிடைத்தலின்-சோலைகளையும் மணிகளையும் பெற்றிருத்தலினாலே; அரிமுதிர் அமரர்க்கு
அரசன் ஆகியும்-கண்கள் மிகுந்த தேவர் கோமானாகிய இந்திரனை ஒத்தும் என்க.
(வி-ம்.) தரு என்புழி
வையைக்குச் சோலை என்க. இந்திரனுக்குக் கற்பகத் தருக்கள் என்க. மணி யாற்றிற்கு
முத்து முதலியனவும் இந்திரனுக்குச் சிந்தாமணியும் கொள்க. சங்கம்-இந்திரனுக்கு சங்கநிதி
என்க. அரி-கண். முதிர்தல் ஈண்டு மிகுதி குறித்து நின்றது. ஆயிரங்கண்கள் உடைமைய்ன்
அங்ஙனம் கூறினர்.
9-10:
மூன்று.........................ஆகியும்
(இ-ள்)
மூன்று அழல் நால் மறை முனிவர் தோய்ந்து-மூன்று வகைப்பட்ட தீயினையும் நான்கு மரைகளையும்
உடைய முனிவர்கள் மூழ்கும்படி; மரைநீர் உகுத்தலின்-மறைத்தல் செய்கின்ற
நீரை வழங்குதலால்; மறையோன் ஆகியும்-அந்தணனை ஒத்தும் என்க.
(வி-ம்.) மூன்றழல-காருகபத்தியம்,
தென்றிசையங்கி, ஆகவநீயம் என்பன. நான்மறை-தைத்திரியம், பௌடிகம், தலவகாரம்,
சாமவேதம் என்பன. இனி இருக்கும் யசுவம், சாமமும், அதர்வணமும் எனினுமாம், தோய்ந்து
என்னும் செய்தென் எச்சத்தைத் தோய எனச் செயவென் எச்சமாகக் கொள்க. மறைநீர்
என்புழி மறையோ திவிடும் நீர் என்றும் பொருள்களை மறைக்கும் வெள்ளம் என்றும் ஏற்றபெற்றி
கொள்க. யாற்றுக்கு மூன்றுஅழல் அதன் மருங்கில் வேள்வி செய்தலால் கொள்க. மறையோன்-அந்தணன்.
11-13
மீனும்....................ஆகியும்
(இ-ள்) மீனும் கொடியும்
விரி திணை ஐந்தும் தேன் உறைதமிழும்-மீன்களும் கொடிகளும் குறிஞ்சி முதலாக விரிந்த
நிலமைந்தும் தேன்போன்ற இனிமை உறைகின்ற தமிழ் மொழியும்; திருஉறை கூடலும் மணத்தலின்-செல்வம்
தங்குதற்கிடனாகிய மதுரைமா நகரும் பொருந்துதலாலே; மதிக்குல மன்னவன் ஆகியும்-திங்கட்
குலத்திற் றோன்றிய பாண்டிய மன்னனை ஒத்தும் என்க.
(வி-ம்.) வையைக்கு
மீனும் கொடியும் என்புழி கொடி தாமரை முதலியவற்றின் கொடி என்றும், பாண்டியனுக்குக்
கொள்ளுங்கால் மீன் இலச்சினையும் மீனக்கொடியும் என்றும் கொள்க. ஐந்து திணை-குறிஞ்சி,
முல்லை, பாலை, மரும், நெய்தல் என்பன. தேன்-இனிமை. தமிழ் நாட்டின் கண்ணதாகலின்
வையை யாற்றிற்குத் தமிழும் உரிமையுடைத்தாயிற்று. மதிக்குலமன்னனவன்-பாண்டியன்:
14-15;
நவமணி........................ஆகியும்
(இ-ள்)
நவமணி எடுத்து நல்புலம் காட்டலின்-ஒன்பது வகை மணிகளையும் அவை தோன்றுமிடங்களினின்றும்
எடுத்துக் கொணர்ந்து நல்ல நாட்டின்கண் உள்ளார்க்குக் காட்டுதலாலே; வளர்குறி மயங்கா
வணிகன் ஆகியும்-அந்நவமணிகளின் இலக்கணத்தை அறிதலின்கண் மயங்காத வணிகனை ஒத்தும்
என்க.
(வி-ம்.) நவமணி-ஒன்பதுவகை
மணி, யாறு குறிஞ்சி நிலத்தினின்றும் மணிகளை வரன்றிக் கொடுவருதலும், வணிகன் அவற்றை
அவை தோன்றும் நாட்டிலிருந்து கொடுவருதலும் காண்க. இதனோடு,
மணியும் பொன்னு
மயிற்றிழைப் பீலியும்
அணியு மானைவெண் கோடு மகிலுந்தன்
இணையி லாரமு மின்னகொண் டேகலான்
வணிக மாக்களை யொத்ததல் வாரியே (கம்ப-பால, ஆற்றுப்.எ) |
எனவரும் செய்யுளையும்
ஒப்புக்காண்க. புலம்-நாடு: ஆகுபெயர் நாட்டிலுள்ளார் என்க. குறி-இலக்கணம்.
14-17: விழைதரும்...............ஆகியும்
(இ-ள்) விழைதரும்
உழவும் வித்தும் நாறும் தழைதலின்-எல்லோரானும் விரும்பப்படுகின்ற உழவுத் தொழிலும்
விதைகளும் பயிரும் தன்னால் யாண்டும் தழைதலாலே; வேளாண் தலைவன் ஆகியும்-வேளாளர்
தலைவனை ஒத்தும் என்க.
(வி-ம்.) உழவு எல்லோராலும்
விரும்பப்படுதலால் விழை தரும் உழவு என்றார். நாறு-நாற்று; ஈண்டு ஆகுபெயராய்ப் பயிர்களைக்
குறித்தது நின்றது. உழவு முதலியன தழைதற்கு யாறும் வேளாளனும் காரணங்களாதல் உணர்க.
18-20:
விரிதிரை..............................தொழிலென்னன
(இ-ள்) விரிதிரை
வையைத் திருநதி சூழ்ந்த-விரிகின்ற அலைகளையுடைய வையையாகிய அழகிய பேரியாறு சூழ்ந்த;
மதுரை அம்பதி நிறைமைமலர் களத்தன்-மதுரை என்னும் அழகிய நகரின்கண் நிறைந்து எழுந்தருளியுள்ள
குவளை மலர் போன்ற மிடற்றினையுடைய இறைவனுடைய இணை அடி வழுத்தார். அணை தொழில் என்ன-இரண்டாகிய
திருவடிகளைப் புகழ்ந்து வணங்காத மடவோர் பொருந்திய தொழிலே போல என்க.
(வி-ம்.) பதுமனும்
முகிற் செல்வனும் நிமலனும் அமரர்க்கரசனும் மறையோனும் மன்னவனும் வணிகனும் வேளாண்
டலைவனும் ஆகிய இவரையெல்லாம் தனித்தனி ஒத்துத் திரை விரிகின்ற வையை நதி என்க.
மைமலர்-குவளைமலர், பதி இறை என்றும் பாடம். இதற்குப் பதியிற்றங்கா நின்ற எனப்
பொருள் கொள்க.
21-22;
கைதை...............எடுத்தும்
(இ-ள்) கைதை அங்கரை
செய் பொய்தல் பாவையோடு இருந்திரை எடுக்க-தோழி! முன்பு ஒருநாள் யாம் தாழைகளடர்ந்த
அழகிய கடற்கரையின்கண்ணே விளையாடுதற்கு மணலால் இயற்றிய சிறுவீட்டின்கண் நமது பைஞ்சாய்ப்
பாவையோடு (நீ பூக்கொய்யப் பிரிகின்ற காலத்தே கீழ்க்காற்று மிகுதலால்) கரையேறா
நின்ற அலையினையுடைய கடல் என்னையும் கவர்ந்து கொண்டு போகா நிற்ப; பொரு திசை
எடுத்தும்-தாக்கா நின்ற அக்கடலினின்றும் என்னை எடுத்தும் என்க.
(வி-ம்.) இருந்திரை-கடல்.
இருதிரை என்றும் பாடம். கைதை-தாழை. பொய்தல்-விளையாட்டு. பொருதிரை-பொருதுந்திரை.
எடுத்தும்-என்னைக் கரையேற்றி உய்யக்கொண்டும் என்றவாறு. பாவையோடு என்றதனால் என்னையும்
என்று வருவித்தோதுக.
23-25:
பூமி....................................இட்டும்
(இ-ள்)
பூழிப்போனகம் புதுவுடன் உண்டும்-புழுதியால் யாம் சமைத்த சிறுசோற்றைப் புதுமையுண்டாக
நம்மோடு உண்டு
விளையாடியும்; தாள்சாய்ப் பிள்ளை தந்து கொடுத்தும்-கால்களையுடைய கோரைப் பாவையைச்
செய்து கொணர்ந்து எனக்கு வழங்கியும்; முடவுடல் கைதை மடல் முறித்து இட்டும்-வளைந்த
உடலினையுடைய தாழை மலரைக் கொய்து கொணர்ந்து கொடுத்தும் என்க.
(வி-ம்.) பூமி-புழுதி.
போனகம்-உணவு. புதுமையுடன் எனல் வேண்டிய மௌவிகுதி கெட்டது. சாய்-கோரை. கோரையாற்
செய்த பிள்ளை என்றது பாவையை. மடல்-மலர்.
26-27:
கவை............................கொடுத்தும்
(இ-ள்)
கவை துகிர்ப்பாவை கண்ணி சூட்ட-கவையினையுடைய நம்பவளப் பாவைக்கு மாலைசூட்டற் பொருட்டு;
குவலயத் திருமலர் கொணர்ந்து கொடுத்தும்- குவலையாகிய அழகிய மலர்களைக் கொணர்ந்து
வழங்கியும் என்க.
(வி-ம்.) துகிர்ப்பாவை-பவளப்பாவை.
குவலயமலர்-குவளை மலர்.
28-29:
நின்றான்......................................புகழே
(இ-ள்) நின்றான்
ஒருகாளை உண்டு-நம்மோடு விளையாடி நின்றவன் ஒருகாளை உளன் அல்லனோ; என்றால் இத்தொழில்
செய்வது புகழே-என்று கருதுமிடத்து இவ்வாறு என் பொருட்டு வெறியாடுதல் நங்குடிக்குப் புகழாகுமோ?
ஆகாதன்றே; ஆதலாலினி உனக்குத் தக்கதனை நீ செய்வாயாக என்க.
(வி-ம்.)
என்னைத் திரையினின்று எடுத்தும் நம்மோடு பீனகம் உண்டும் பாவை கொடுத்தும் மடல்
முறித்திட்டும் சூட்ட மலர்கொடுத்தும் விளையாடி நின்றான் ஒருகாளை உண்டென்றால் இத்தொழில்
புகழாகுமோ? என இயைபு காண்க. எனவேஅந்தக் காளைக்கு யான் கற்புக்கடம் பூண்ட செய்தியை
இனி நீ நமர்க்கு அறிவுறுத்தி மேலே செயவேண்டியவற்றைச் செய்வாயாக என்பது குறிப்புப்பொருள்.
மைமலர்க்களத்தன் இணையடி வழுத்தாக் கீழ்மக்கள் செய்யுந் தொழில்போல, (வெறியாடலாகிய)
இத்தொழில் செய்வது நமக்குப் புகழாகுமா? என இயையும். மெய்ப்பாடும் பயனும் அவை.
|