பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 90

நேரிசையாசிரியப்பா

 
   
5
  இலவலர் தூற்றி யனிச்சங் குழைத்துத்
தாமரை குவித்த காமர் சீறடித்
திருவின ளொருநகை யரிதினிற் கேண்மோ
வெல்லாந் தோற்ற விருந்த தோற்றமுந்
தன்னுட் டோன்றித் தானாதிற் றோன்றாத்
10
  தனிநடை நிறையு மொருடனிக் கோலத்
திருவடி வாகிப் பழமறை வேதிய
னான்மறைத் தாபதர் முத்தழற் களம்புக்
கரக்கர்துய்த் துடற்று மதுவே மானப்
பாசடை மறைத்தெழு முளரியங் கயத்துட்
15
  காரா னினங்கள் சேடெறிந் துழக்குங்
கூடற் கிறையவன் காலற் காய்ந்தோன்
றிருநடங் குறித்தநம் பொருபுன லூரனை
யெங்கையர் குழுமி யெமக்குந் தங்கையைப்
புணர்த்தினன் பாண்டொழிற் புல்லனென் றிவனைக்
20
  கோலிற் கரத்திற் றோலிற் புடைப்பக்
கிளைமுட் செறித்த வேலியம் படப்பைப்
படர்காய்க் கணைந்தபுன் கூழையங் குறுநரி
யுடையோர் திமிர்ப்ப வருமுயிர்ப் பொடுக்கி
யுயிர்பிரி வுற்றமை காட்டியவர் நீங்க
  வொட்டங் கொண்டன கடுக்கு
நாட்டவர் தடைமயற் றுதிர்த்து நடந்ததுவே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவிகூற்று

     (இச்செய்யுளுக்கு எடுத்துக்காட்டிய திருக்கோவையார்ச் செய்யுள் கூற்றுவகையால் மாறுபட்டிருத்தலுணர்க.)

துறை: பாணனைப் பழித்தல்.

     (இ-ம்.) இதனை, அவனறிவு வற்றவறியுமாகலின் எனவரும் நூற்பாவின்கண் (தொல். கற்பி-6) பல்வேறு வகையினும் வாயிலின் வரூஉம் வகை’ என்பதன்கம் அமைத்துக்கொள்க.

1 - 7: இலவு....................வேதியன்

     (இ-ள்) இலவு அலர் தூற்றி அனிச்சம் குழைத்து தாமரை குவித்த காமர் சிறு அடி-இலவ மலரைப் பழித்து அனிச்சமலரை வாடச்செய்து தாமரைப்பூவைக் குவியச்செய்த அழகிய சிறிய காலையுடைய; திருவினள்-செல்வியே!; ஒரு நகை அரிதினிற் கேண்மோ-நகைத்தற்குரிய ஒரு நிகழ்ச்சியை அருமையாகக் கேட்பாயாக; எல்லாம் தோற்ற இருந்த தோற்றமும்- உலகங்களெல்லாம் தன்பால் தோன்றும்படி தான் போக்கு வரவற்றிருந்த காட்சியும்; தன் உள்தோன்றி தான் அதில் தோயாத தனி நடை நிறையும்-எப்பொருளும் தன்னிடத்திருந்து தோன்றிஇராநிற்பவும் தான்மட்டும் அப்பொருளில் தோயாத தனித்த ஒழுக்கத்தையுடைய நிறைவுடைமையும்; ஒரு தனி கோலத்து- ஒப்பில்லாத ஒரே வடிவில்; இருவடிவு ஆகி-அம்மையும் அப்பனுமாகிய இரண்டு வடிவம் பெற்று; பழமறை வேதியன்- பழமையான வேதப்பொருளாய் உள்ளவன் என்க.

     (வி-ம்.) இலவமலரும் அனிச்சமலரும் தாமரைமலரும் தோழியுன் சிற்றடி நிறத்திற்கும் மென்மைக்கும் அழகிற்கும் தோற்றன என்பது கருத்து. காமர்-அழகு. திருவினள்-செல்வி: அண்மைவிளி. திருவினள் என்றது தொழியை. எல்லாம் என்பது உயிர்ப்பொருளும் உயிரில்பொருளும் ஆகிய இருவகைப்பொருளும் கலந்த உலகமெல்லாம் என்றவாறு. இருந்த தோற்றம்-தான்மட்டும் போக்குவரவின்றி எங்கும் நிறைந்திருந்த காட்சி என்றவாறு. தன்னுள் தோன்றியும் என உம்மை விரித்தோதுக. அதில் என்புழி அது சாதியொருமை. அதில் தோன்றுதல்-அதனைப்பற்றியிருத்தல். தனிநடை-தனக்கே சிறந்துரிமையுடைய ஒழுக்கம். நிறை-நிறைவு. அஃதாவது அங்கிங்கெனாதபடி யெங்கும் நிறைந்திருத்தல். இருவடிவு-அப்பனும் அம்மையுமாகிய இரண்டு வடிவங்கள். வேதியன்-வேதப்பொருளாய் உள்ளவன்.

8 - 9: நான்மறை.........................மான

     (இ-ள்) நால்மறை தாபத முத்தழல் களம்புக்கு-நான்கு வேதங்களையும் உணர்ந்த இருடிகளினுடைய மூன்றுவகைத் தீயினையுடைய வேள்வியில் புகுந்து; அரக்கர் துய்த்து உடற்றும் அதுவே மான-அரக்கர்கள் ஆங்குத் தேவர்களுகிடும் அவியுணவை உண்டழிக்கின்ற அந் நிகழ்ச்சியே போல என்க.

     (வி-ம்.) நால்மறை-இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன. தாபதர்-தவவொழுக்கமுடையோர். நான்மறைத்தாபதர் முத்தழல்களம் என்புழிச் செய்யுளின்ப முணர்க. முத்தழற்களம் என்றது வேள்விச்சாலையை. முத்தழல், மூன்றுவகைத் தீ. அவை: ஆகவனீயம், தக்கணாக்கினி, காருகபத்தியம் என்பன.

10 - 13: பாசடை.................................ஊரனை

     (இ-ள்) பாசடை மறைத்து எழும் முளரி அம்கயத்துள்-பசிய தாமரை இலைகளை மறையும்படி மிகுதியாகப் பூத்தெழுந்த தாமரை மலர்களையுடைய பொய்கையில்; காரான் சேடு இனங்கள்- எருமைகள் அவற்றின் கடாக்களும்; எறிந்து உழக்கும்-வீழ்ந்து கலக்காநின்ற; கூடற்கு இறைவன்-மதுரைக்குத் தலைவனும்; காலற் காய்ந்தோன்-கூற்றுவனைச் சினந்துதைத்தவனுமாகிய கடவுளினது; திருநடம் குறித்த நம் பொருபுனல் ஊரனை-திருக்கூத்தினை நினையா நின்ற நம்முடைய அலைமோதும் நீர் நிரம்பிய ஊரினையுடைய தலைவனுக்கு என்க.

     (வி-ம்.) பாசடை-பச்சைஇலை. ஈண்டுத் தாமரை இலை என்க. முளரி-ஆகுபெயர். கயம்-பொய்கை. காரான்-எருமை. சேடு-கடா. காரானும் சேடும் என்க. காலன்-கூற்றுவங் ஊரனை என்புழி உருபுமயக்கம்.

14 - 18; எங்கையர்......................................நரி

     (இ-ள்) எமக்குத் தங்கையை-எமக்குத் தங்கை முறையாய் வந்த பரத்தையை; பாண்தொழில் புல்லன்-இசைபாடும் தொழிலையுடைய கீழ்மகனாகிய பாணன்; புணர்த்தினன் என்று-சேர்த்துவைத்தான் என்பது கருதி; எங்கையர் குழுமி-நந் தோழிமார் எல்லோரும் கூடி; இவனை-இப்பாணனை; கோலில் கரத்தில் தோலில் புடைப்ப-கோலினாலும் கைகளாலும் வாரினாலும் அடித்தமையாலே; கிளை முள் செறித்த வேலி அம்படப்பை- கிளைத்த முட்கள் நெருங்கிய மூங்கில்கள் அடர்ந்த வேலியையுடைய அழகிய தோட்டத்துன்கண்; படர்காய்க்கு அணைந்த-படர்ந்த கொடிகள் காய்த்த காய்களைக் கவர்தற்கு வண்ட; புன் கூழை குறுநரி-புல்லிய வாலையுடைய குள்ளநரி என்க.

     (வி-ம்.) எமக்குத் தங்கையை என்றது பரத்தையை. பாண் தொழில்-பண்பாடும் தொழில். புல்லன்-கீழ்மகன்; என்றது பாணனை. எங்கையர் என்றது தோழிமாரை. கோல்-தடி. தோல்-வார். கிளைமுள்: வினைத்தொகை. படப்பை-தோட்டம். படர்காய்-படர்ந்த கொடி காய்த்த காய் என்க. கூழை-வால். குறுநரி-குள்ளநரி. கூழையம் குறுநரி என்புழி, அம்: சாரியை.

19 - 22: உடையோர்....................நடந்தது

     (இ-ள்) உடையோர் திமிர்ப்ப-அத்தோட்டத்திற்குரியவர் புடைத்தபொழுது; வரும் உயிர்ப்பு ஒடுக்கி உயிர் பிரிவுற்றமை காட்டி-அந்த நரி வெளியே வருகின்ற மூச்சை அடக்கிக்கொண்டு கிடந்து உயிர் போனது போலக் காட்டி; அவர் நீங்க-அந்நரி இறந்ததாகக் கருதி அவ்வுரிமையாளர் போக; ஓட்டம் கொண்டன கடுக்கும்-எழுந்து ஓடிப்போனதை ஒக்குங் காண்; நாட்டவர் தடைய-இவ்வூரார் தடுகவும்; உதிர்த்து நடந்தது-அவர்களை விலக்கிக்கொண்டு அப் பானன் ஓடிப்போன செயல் என்க.

     (வி-ம்.) உடையோர்-தோட்டத்தையுடயவர். திமிர்த்தல்- புடைத்தல். உயிர்ப்பு-மூச்சு. ஒடுக்குதல்-அடக்கிக் கொள்ளுதல். அவர்-அவ்வுரியவர். கொண்டன என்புழி ஒருமை பன்மை மயக்கமாகக் கொள்க. கடுத்தல்-ஒத்தல். தடைய-தடுக்க.

     இதனை, தாமரை குவித்த காமர் சேவடித் திருவினளே ஒருநகை அரிதினிற் கேண்மோ, கூடற்கிறைவன் நடங்குறித்த நம் பொருபுனலூரனை எமக்குத் தங்கையைப் பாண்டொழிற் புல்லன் புணர்த்தினனென்று எங்கையர் குழுமி யிவனைக் கோலிற் கரத்திற் றோலிற் புடைப்பப் படர்காய்க் கணைந்த குறுநரி யுடையோர் திமிர்ப்ப உயிர்ப்பொடுக்கி யுயிர் பிரிவுற்றமை காட்டி அவர் நீங்க ஓட்டங் கொண்டன. கடுக்கும் நாட்டவர் தடைய உதிர்த்து நடந்த தென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு-நகை. பயன்-பாணனை இகழ்தல்.