பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 91

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வாய்வலங் கொண்ட வயிற்றெழு தழலுக்
காற்றா தலைந்து காற்றெனக் கொட்புற்
றுடைதிரை யருவி யொளிமணி காலுஞ்
சேயோன் குன்றகத் திருப்பெறு கூடற்
கொழுஞ்சுடர் கிளைத்தல் நெடுஞ்சடைப் புயங்கன்
10
  பவளந் தழைத்த பதமலர் சுமந்தநம்
பொருபுன லூரனைப் பொதுவென வமைத்த
வக்கடி குடிமனை யவர்மனை புகுத்தி
யறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவெனச்
சுரைதலை கிடைத்த விசையுளர் தண்டெடுத்
15
  தளிதார் பாடுங் குரனீர் வறந்த
மலைப்புட் போல நிலைக்குர லணந்தாங்
குணவுளங் கருதி யொளியிசை பாட
முட்டாண் மறுத்த முண்டகந் தலையமைத்
தொருபா லணைந்தவிவ் வுயர்மதிப் பாணற்
  கடுத்தனை யுதவ வேண்டுங்
கடுத்திகழ் கண்ணியக் கல்லையிக் கணமே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று.

     (இதுவும் கோவையார்ச் செய்யுளுக்குக் கூற்றுவகையால் மாறுபட்டிருத்தல் உணர்க.)

துறை: பாணன் வரவுரைத்தல்.

     (இ-ம்.) இதற்கு, “அவனறிவு ஆற்ற அறியும்” (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண், ‘வாயிலின் வரும் வகை’ என்னும் விதி கொள்க.

3 - 10: உடைதிரை......................எடுத்து

     (இ-ள்) உடைதிரை யருவி ஒளி மணி காலும் சேயோன் குன்று அகம்-சிதறி வீழ்கின்ற அலைகளையுடைய அருவிநீர் ஒளியுள்ள மணிகளைக் கொழிக்கின்ற செவ்வேள் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றத்தைத் தன் பாற் கொண்டுள்ள; திருப்பெறு கூடல்-தெய்வத்தன்மை பெற்ற மதுரையின்கண் எழுந்தருளியுள்ள; கொழுஞ்சுடர் கிளைத்த நெடுஞ்சடைப் புயங்கன்-கொழுவிய தீயானது கொழுந்து விட்டாற்போன்ற நெடிய சடையையுடைய சிவபெருமானது; பவளம் தழைத்த பதமலர் சுமந்த-பவளநிறமுள்ள திருவடிமலர்களைத் தலைமேற் கொண்ட; நம் பொருபுனல் ஊரனை-நம்முடைய கரையை மோதுகின்ற நீரையுடைய ஊரையுடைய தலைவனை; பொது என அமைத்த- யாவர்க்கும் பொதுவாக அமைக்கப்பட்ட; கடி குடி அ மனையவர் மனைபுகுத்தி- சான்றோரால் விலக்கப்பட்ட குடிவாழ்க்கையையுடைய அப்பரத்தை மகளிருடைய வீட்டிலே சேர்த்துப் பின்னர்; அறுவாய் நிறைந்த மதிப்புறத்தோ என சுரைதலை கிடைத்த-அரியப்பட்ட தன்னுடைய ஒரு நுனி முழுத் திங்களிடத்து அமைந்துள்ளதோ என்று கருதும்படி சுரைக்குடுவையைத் தலையிலே தாங்கப்பெற்ற; இசையுளர் தண்டு எடுத்து-இசை நரம்புகளைத் தடவுகின்ற யாழைக் கையிலெடுத்து என்க.

     (வி-ம்.) உடைதிரை: வினைத்தொகை. சேயோன்- முருகப்பெருமான். குன்று-திருப்பரங்குன்றம். சுடர்-தீ. சுடர் கிளைத்தாற் போன்ற சடை என்க. பொருபுனல்-கரையை மோதுகின்ற நீர். ஊரன்-தலைவங் கடிகுடி-விலக்கப்பட்ட குடிவாழ்க்கை. கடிகுடி அம் மனையர் என்றது பரத்தையரை. அறுவாய்- அரியப்பட்ட இடம். சுரைக்குடுவையில் பொருந்தியிருக்கும் யாழ்த்தண்டின் நுனி முழுத்திங்களைப் பொருந்தியிருத்தல் போலத் தோன்றுகின்றது என்பது கருத்து. சுரை-சுரைக்குடுவை. தண்டு: ஆகுபெயர்; யாழ்.

1 - 2: வாய்............................கொட்புற்று

     (இ-ள்) வாய் வலம் கொண்ட-வாயாற் பாடும் வன்மை கொண்டதால்; வயிற்று எழு தழலுக்கு ஆற்றாது-வயிற்றில் மூளுகின்ற நெருப்பினைத் தாங்கமாட்டாமல்; அலைந்து காற்று எனக் கொட்புற்று-யாண்டும் அலைந்து காற்றைப் போலச் சுழன்று என்க.

     (வி-ம்.) வயிற்றில் தழல் எழுதற்கு வாயாற்பாடுதல் காரணமாகலின் வாய்வலம் கொண்ட தழலுக்கு என்றாள். தழல் என்றது ஈண்டுப் பசிப்பிணியை. கொட்புறுதல்-சுழலுதல்.

11 - 15: அளி..........................பாணற்கு

     (இ-ள்) அளிதார் பாடும்-வண்டு பூவிற் பாடுவது போலப் பாடுகின்ற; குரல் நீர் வறந்த-தொண்டை நீர் வற்றிய; மலைப்புள் போல நிலை குரல் அணந்து-மலைப்பறவை போன்ற நிலைமையையுடைய தன் குரலைத் திறந்து; உணவு உளம் கருதி- உள்ளத்தில் உணவு பெறுதலை நினைத்து; ஒளி இசை பாட-ஒள்ளிய பாட்டைப் பாட; முள்தாள் மறுத்த முண்டகம் தலையமைத்து- முள்ளுள்ள காம்பை அகற்றிய தாமரை மலரைத் தலையிலே சூடிக்கொண்டு; ஒருபால் அணைந்த-நம் முன்றிலிலே ஒரு பக்கத்தில் வந்து நிற்கின்ற; இ உயர்மதி பாணற்கு-இந்தப் பேரறிவினையுடைய பாண்மகனுக்கு என்க.

     (வி-ம்.) அளி-வண்டு. தார்-மலர். வண்டு பாடுவது போற் பாடுகின்ற என்க. குரல்-குரல்வளை. மலைப்புள்-மலையிலே வாழும் இயல்புடைய ஒருவகைப் பறவை. முண்டகம்-தாமரை. உயர்மதிப் பாணன் என்றது இகழ்ச்சி.

16 - 17: அடுத்தனை........................கணமே

     (இ-ள்) கடுத்திகழ் கண்ணி-நஞ்சின் தன்மை திகழுகின்ற கண்ணையுடைய தோழி; அடுத்தனை-நீ என்னை அணுகி; இக்கணமே அ கல்லை உதவ வேண்டும்-இப்பொழுதே அதோ கிடக்கின்ற கல்லை என்பாற் கொடுத்தல் வேண்டும் என்க.

     (வி-ம்.) பாணனை எறிதற் பொருட்டு நீ அந்தக் கல்லை எடுத்துத் தரவேண்டும் என்றவாறு. அடுத்ததனை: முற்றெச்சம். இச்செய்யுட் கருத்திற்கும் இதற்கென எடுத்துக் காட்டும் திருக்கோவையார் செய்யுட் கருத்திற்கும் வேற்றுமையுண்மை யுணர்க. நெம்பெருமானைப் பாணன் சேரியில் சேர்த்துவிட்டு அறியாதான் போல அவனுக்குத் துயிலெழுமங்கலம் பாடவும் வந்துவிட்டான். ஆதலால் இவனைக் கல்லால் அடித்தல் வேண்டும்; அக் கல்லை எடு எனத் தலைவி தொழியை நோக்கிக் கூறியவாறாகக் கொள்க.

     இதனை, கூடல் நெடுஞ்சடைப் புரங்கன் பதமலர் சுமந்த நம்மூரனை. அக்கடி குடிமகனை யவர்மனை புகுத்தி, இசையுளர் தண்டெடுத்து, குரநீர் வறந்த மலைப்புட்போல உணவுளங் கருதி, இசைபாட ஒருபாலணைந்த இவ்வுயர்மதிப் பாணற்கு, கடுத்திகழ் கண்ணி! அடுத்தனை; இக்கணமே, அக்கல்லை யுதவ வேண்டுமென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு-வெகுளி. பயன்-பாணனை வெருட்டுதல்.