பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 93

நேரிசையாசிரியப்பா

 
   
5
  முதுக்குறை பெண்டிர் வரத்தியல் குறிப்ப
வழிமுதற் றெய்வதம் வரைந்துமற் றதற்குப்
பருக்கா டுறுத்திப் பலிமுடற் பராவக்
கிழமையவ் வயலினர் நாவுடன் றேத்தப்
பக்கஞ் சூழுநர் குரங்க மண்படப்
10
  பெற்றுயிர்த் தவரும் பொற்றொடி மடந்தைதன்
னிருவிழி பொலியத் திருநகர்ப் புறத்துக்
கரியுட னுண்ணார் பழியுள மொத்த
விருளுடைப் பெருமுகில் வழிதெரிந் தேகன்மி
னரிமா னுறுத்த நூற்றுவர் மதித்த
15
  புடைமனச் சகுனி புள்ளியங் கவற்றி
லைந்தொழிற் கமைந்த வைவரும் புறகிட்
டொலிவர வோதிம மெரிமலர்த் தவிசிருந்
தூடுகள் சிரலை பச்சிற வருத்தும்
பழனக் குருநா டளிபதி தோற்று
20
  முன்னுறு முழுவயிற் பன்னிரு வருடங்
கண்டீ ரவத்தொடு கறையடி வளருங்
குளிர்நிழ லடவி யுறைகொண் டகன்றபி
னனைத்துள வஞ்சமு மழித்துநிரை மீட்சி
முடித்துத் தமது முடியாப் பதிபுக
25
  வூடிமுறை யேவெமக் குளமண் கருதிச்
சேறியென் றிசைப்பச் செல்பணித் தூதினர்க்
கொருகா லளித்த திருமா மிடற்றோன்
பாடல் சான்ற தெய்வக்
கூடல் கூடார் குணங்குறித் தெனவே.

(உரை)
கைகோள்: களவு. தோழிகூற்று.

துறை: வழியருமைகூறி மறுத்தல்.

     (இ-ம்.) இதற்கு, “நாற்றமும் தோற்றமும்” (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண்,

களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக்
காதன் மிகுதி யுளப்படப் பிறவு
நாடு மூரு மில்லுங் குடியும்
பிறப்புஞ் சிரப்பு மிறப்ப நோக்கி
யவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ
யனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’

என்னும் விதிகொள்க.

1 - 7: முதுக்குறை..............................புறத்து

     (இ-ள்) முதுக்குறை பெண்டிர் வரத்து இயல் குறிப்ப-பேரறிவு படைத்த மகளிர் வரம் கேட்கவும்; வழிமுதல் தெய்வதம் வரைந்து-தங்கள் மரபின்முதலாகிய குலதெய்வத்தை அழைத்து; அத்ற்கு பரு காடு பலி உறுத்தி பராவ-பெரிய காட்டின்கண் பலிகொடுத்து வழிபடா நிற்பவும்; அக்கிழமை அயலினர்- அவ்வழிபாட்டிற்குரிய அயலோர்; நா உடன்று ஏத்த-நாக்குழறி வாழ்த்தவும்; பக்கம் குழுநர்-நார்புறத்தினின்றும் வந்து சூழ்கின்றார் ஆக; குரங்கம் மண்டபப் பெற்று உயிர்த்த-ஒரு மானானது நிலத்திற்படும்படி கருக்கொண்டு ஈன்ற; அரும் பொற்கொடி மடந்தை தன்-அருமையான வள்ளியம்மையை நிகர்த்த எம்பெருமாட்டியினது; இருவிழி பொலி அ திருநகர்ப்புறத்து- காண்போருடைய இரண்டு விழிகளும் நிரம்பப்பொலியாநின்ற அந்த அழகிய நகரிடத்தினின்றும் என்க.

     (வி-ம்.) முதுக்குறை-பேரறிவுடைமை. வழி-தம்மரபு. தெய்வதம் தெய்வம். வரைதல்-அழைத்தல். பராவல்-வழிபடுதல். கிழமை- உரிமை. சூழுநர்-சூழ்கின்றவர். குரங்கம்-மான். உயிர்த்தல்-ஈனுதல். மான் ஈன்ற பொற்கொடி என்றது வள்ளியம்மையை. மடந்தை என்றது தலைவியை. பொற்கொடியை நிகர்த்த மடந்தை என்க.

8 - 9: கரி...........................ஏகன்மின்

     (இ-ள்) கரியுடன் உண்ணார் பழியுளம் ஒத்த-விருந்தினருடன் உண்டு வாழாத மடவோர்களுடைய பழிபடு நெஞ்சத்தை ஒத்த; இருள் உடை பெருமுகில்-இருளையுடைய பெரிய மேகங்க சூழ்ந்த இரவின்கண்; வழிதெரிந்து ஏகன்மின்-வழிகண்டு வருதல் அருமை ஆதலின் நீவிர் வாராதொழிவீராக! என்க.

     (வி-ம்.) கரி-சான்று. உண்ணுதற்கு உடனிருந்து உண்போராகிய விருந்தினரே சான்றாதலின் கரி என்றது ஈண்டு விருந்தினரை உணர்த்தி நின்றது. இல்லறத்தார்க்கு விருந்தோம்பாமையே பெரும் பழியாதலின் கரியுடன் உண்ணார் பழியுளம் என்றார். இருளையுடைய பெருமுகில் என்றாரேனும் பெருமுகிலையுடைய இருள் என்பது கருத்தாகக்கொள்க. வழி தெரிந்து ஏகன் மின் என்றது வழிதெரிந்து வருதல் அரிதாகலின் வராதொழிக என்பதுபட நின்றது.

10 - 15: அரிமான்........................................தோற்று

     (இ-ள்) அரிமான் உறுத்த நூற்றுவர்-சிங்கம்போல் சினந்த துரியோதனன் முதலிய நூற்றுவரால்; மதித்த புடைமனச் சகுனி-நன்கு மதிக்கப்பட்ட அறத்திற்குப் புறம்போய நெஞ்சையுடைய சகுனி என்பவனால்; புள்ளி அம் கவற்றில்- புள்ளிகளையுடைய காய்களையுடைய சூதாட்டத்தின்கண்; ஐந்தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு-ஐவேறு தொழில்களுக்குப் பொருந்திய தருமன் முதலிய பாண்டவர் ஐவரும் தோற்று; ஓதிமம் எரிமலர் தவிசு இருந்து-அன்னப்பறவைகள் செந்தாமரை மலராகிய இருக்கைகளில் இருந்து ஆரவாரியாநிற்பவும்; ஊடு உகள் சிரலை பச்சிறவு அருந்தும்-அவ்விடத்திற் பாய்ந்து மீன்கொத்திப் பறவை பசிய இறாமீனைக் குத்தித் தின்றற்கிடமான; பழனம் குருநாடு அளிபதி தோற்று-கழனிகளையுடைய குருநாடு என்னும் தம்மாற் பாதுகாக்கப்பட்ட நாட்டை இழந்து என்க.

     (வி-ம்.) அரிமான்: இருபெயரிட்டு; சிங்கம். உறுத்தல்- சினத்தல். புடைமனம்-அரத்திர்குப் புறம்பாய மனம். கவறு- சூதாடுகருவி. அரசாளல் தருமனுக்கும், மற்போர் வீமனுக்கும், விற்போர் விசயனுக்கும், புரவியோம்பல் நகுலனுக்கும், ஆனிரையோம்பல் சகதேவனுக்கும் தனித்தனியே உரிமையுடைய தொழிலாகலின் ஐந்தொழிற்கமைந்த ஐவர் என்றார். புறகிடல்- தோற்றல். ஓதிமம்-அன்னம். எரிமலர்-தாமரைமலர். சிரலை- மீன்கொத்திப் பறவை. பச்சிறவு-பசிய இறாமீங் பழனம்-கழனி. குருநாடு-குரு என்னும் அரசனால் ஆளப்பட்ட நாடு. அளிபதி: வினைத்தொகை.

16 - 22: முன்னுறும்...........................................தூதினர்க்கு

     (இ-ள்) முன்னுறும் உழுவயின் பன்னிரு வருடம்-முன் செய்த வினை காரணமாகப் பன்னிரண்டு ஆண்டுவரை; கண்டீரவத்தொடு கறையடி வளரும் குளிர் நிழல் அடவி உறை கொண்டு-சிங்கமும் யானையும் வளருகின்ற குளிர்ந்த நிழலையுடைய காட்டின்கண் உறைந்து; அகன்றபின்-கழிந்தபின்னர்; அனைத்துள் வஞ்சமும் அழித்து-இடையில் நூற்றுவரால் செய்யப்பட்ட வஞ்சனைகள் எல்லாவற்றையும் கெடுத்து; நிரை மீட்சி முடித்து-விராடனுடைய பசுக்களைப் போரின்கண் மீட்டு; தமது முடியாப் பதிபுக- அவ்வைவரும் தம்முடைய கேடில்லாத நாட்டினைக் கைக்கொள்ளும் பொருட்டு; ஊடி-துரியோதனனுடன் பகைத்துக்கொண்டு; முறையே எமக்கு உளமண் கருதிச் சேறி என்று இசைப்ப-அறநூன் முறைப்படி எமக்கு உளவாகிய நாடுகளைப் பெறக்கருதிப் பெருமான்! தூது செல்வாயாக! என்று வேண்டிக் கொள்ளுதலால் அவ்வேண்டுகோட்கிணங்கி; செல்பண்ணித் தூதினர்க்கு-செல்லுந் தொழிலாகிய தூதையுடைய திருமாலுக்கு என்க.

     (வி-ம்.) ஊழ் உழு என நின்றது. கண்டீரவம்-சிங்கம். கறையடி-யானை. அடவி-காடு. உறை கொண்டு-தங்கியிருந்து. நிரை-ஆனிரை. முடியாப்பதி-கேடில்லாத நாடு. ஊடுதல்-பகைத்தல். முறை-அறநூன்முறை. தூதினர்-துதுத் தொழிலையுடையயோர் என்றது திருமாலை.

23 - 25: ஒருகால்.....................................எனவே

     (இ-ள்) ஒருகால் அளித்த-ஒரு திருவடி தந்தருளிய; திருமா மிடற்றோன்-அழகிய கரிய மிடற்றினையுடைய சிவபெருமானுடைய; பாடல் சான்ற தெய்வக் கூடல்-பெருமை நிறைந்த தெய்வத் தன்மையுள்ள மதுரை நகரத்தை; கூடார் குணங் குறித்து என-அடையாதார் குணத்தைக் குறித்தாற் போல என்க.

     (வி-ம்.) கால்-திருவடி. மிடறு-கழுத்து. மா-கருமை. கூடல் கூடார் குணங்குறித்தாற்போல ஏகன்மின் என இயையும்.

     இதனை, தெய்வக் கூடல் கூடார் குணங்குறித்தென்ன, குரங்கம் மண்படப் பெற்றுயிர்த்த மடந்தை, தன்னிருவிழி பொலியத், திருநகர்ப்புறத்து, கரியுடனுண்ணார் பழியுளமொத்த இருளுடைப் பெருமுகில், வழிதெரிந்து என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.